முப்பத்தைந்தாவது ஸர்க்கம்
(கட்டுண்ட இந்திரனை விடுவிக்க தேவர்கள் ப்ரம்மாவை வேண்டுதல்,
பிரம்மா இராவணனிடம் சென்று இந்திரனை விடுவிக்கக் கோருவது,
அதற்காக மேகநாதன் வரம் வேண்டுவது,
இந்திரன் கட்டுண்டதற்கான காரணம்,
விஷ்ணு யாகம் செய்து இந்திரன் பரிசுத்தனாகி
மீண்டும் தேவலோகாதிபதியாதல்)
மேகநாதனால், தேவேந்திரன் கட்டுண்டு இலங்கைக்கு இழுத்துச் செல்லப்பட்டவுடன் தேவலோகமானது சூன்யமாயிற்று. இதைக் கண்டு துக்கிதர்களான தேவர்கள் பிரமனை அடைந்து, 'பிரம்ம தேவரே! உமது வரபலத்தினால் இராவணன் கொல்லப்படாதவனாக உள்ளான். ஈச்வானுடைய அநுக்ரஹத்தால், அவனுடைய குமாரனான மேகநாதனும் அனேக சக்திகளைப் பெற்றுள்ளான் இப்பொழுது மாயையினால் இந்திரன் ஜயிக்கப்பட்டுக் கட்டுண்டு இலங்கைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். போரிட்டு அவனை மீட்க முடியாது. எனவே ஏதேனும் செய்து இந்திரனை மீட்க வேண்டும்" எண வேண்டிக் கொண்டனர்.
இதைக் கேட்ட பிரம்மதேவர், தேவர்களுடன் இலங்கைக்குச் சென்றார். தன் இனத்தவர்களுடன் ஸபா மண்டபத்தில் அமர்ந்திருந்த இராவணனைக் கண்டு"ராவணா! உனது குமாரன் இந்திரனை வெற்றிகண்டது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். உனக்கும் மேற்பட்டவனாக அவன் விளங்குகிறன். இந்திரனை அவன் ஜயித்தபடியால் இனி அவன் 'இந்திரஜித்' என்று புகழப்படுவான். இணையற்ற வீரனாக இவன் விளங்குவான். இம் மூவுலகமும் உனக்கு வசமாகியுள்ளது. இந்திரனும் உனது வசமாயினான். இவ்வளவே போதுமானது. இனியும் நீ இந்திரனைக் கட்டி வைப்பதனால் என்ன பயன்? இவனை விட்டுவிடவும். இவனை விடுவிக்கும் விஷயத்தில் நீ ஏதேனும் பிரதிபலனை விரும்புவாயாகில் சொல், அதைக் கொடுக்கிறோம்.' என்றார்.
இதைக் கேட்ட மேகநாதன், "பிதாமஹரே! இந்திரனை விடுவிக்க வேண்டுமாயின், நான் என்றும் அமரனாக (மரணமில்லாதவனாக) இருக்க வரம் தரவேண்டும்" என்றான். இதைக் கேட்ட பிரம்மா, "குழந்தாய்! இவ்வுலகினில் ஸ்ருஷ்டிக்கப்பட்ட அனைத்தும் என்றேனும் ஒரு நாள் மடிந்தேயாகவேண்டும், எதுவுமே அமரமாக (அழிவற்றதாக) ஆக முடியாது" என்றார். இப்படிச் சொல்லக் கேட்ட மேகநாதன், மறுபடியும் பிரம்மாவைப் பார்த்து, ''அங்ஙனமாயின் மற்றெரு வரம் வேண்டுகிறேன். அதையாயினும் அளித்திடுக. அஃது யாதெனில்-- நான் சத்ருக்களை வெல்ல வேண்டிப் போரிடுவதற்காக ஒரு யாகம் செய்கிறேன். அதில் மந்திரங்களுடன் ஹோமம் செய்து அக்னி பகவானை ஆராதிக்கப்போகிறேன். அது தடையின்றி முடியுமாகில் அதிலிருந்து (அந்த ஹோமகுண்டத்திலிருந்து) உயர்ந்த குதிரைகள் பூட்டப்பட்ட ரதமொன்று மேலெழுந்து வரக்கடவது. அந்த ரதத்தின் மீது அமர்ந்து நான் போரிடுவேனாயின் அப்பொழுது எனக்கு மரணமில்லாமை வரக்கடவது. அப்படியின்றி அந்த யாகம் இடையூறு உண்டாகப் பெறுமாயின், அப்பொழுதே எனக்கு மரணம் உண்டாகக் கடவது. இதுவே எனது முக்கியமான மனோரதம்" என வேண்டினான். அதைக் கேட்ட பிரம்மா 'அப்படியே ஆகுக' என அருளிச்செய்து அமரர்களுடன் தன்னிருப்பிடமேகினார். இந்திரஜித்தும், அகமகிழ்ந்தவனாகி, இந்திரனைச் சிறையிலிருந்து விடுவித்தனன்.
“ஸ்ரீராமசந்திர! தேவராஜனான இந்திரன் மேகநாதனிடம் தோல்வியுற்று அவன் வசப்பட்டுக் கலங்கியிருந்தபடியால். தன்னொளி இழந்து, முயற்சி குன்றிச் சோகமுற்றுச் சிந்திக்கலானான். இதை அறிந்த பிரஜாபதியான பிரம்மதேவர் இந்திரனைப் பார்த்து, "தேவேந்திரா! நீ ஏன் சோகிக்கின்றாய், முன்செய்த தீவினையின் பயனையே நீ இப்பொழுது அநுபவித்தாய், அதன் விவரத்தைக் கூறுகிறேன்'' கேள் - முன்பு நான் அனேக மனிதர்களைப் படைத்தேன். அவர்கள் எல்லோரும், ஒரே விதமான உருவம், வர்ணம், பேச்சு இவற்றை உடையவர்களாகவே விளங்கினார்கள். அவர்களுள் ஒரு விதமான வ்யத்யாஸமும் காணப்படவில்லை. பிறகு நான் மிகவும் நன்கு தியானித்து விசேஷமாக ஒரு ஸ்திரீயை ஸ்ருஷ்டித்தேன். அவள் ஒவ்வொரு அவயவங்களிலும் வேறுபாட்டை உடையவளாக ஸ்ருஷ்டிக்கப்பட்டாள். 'ஹலம்' என்றால், உருவத்தில் மாறுபாடுகள். 'ஹல்யம்‘ அதனால் உண்டாவது, அதாவது மற்றவற்றைக் காட்டிலும், அவயன வேறுபாடுகளினால் உண்டுபண்ணப்பட்டது. இதற்கு ஸமமான மற்றொன்றையுடைத்தானதன்று என்பதனால், அதற்கு அந்த ஸ்திரீக்கு 'அஹல்யா' என்ற பெயர் வைக்கப்பட்டது• அந்த அழகிய ஸ்த்ரீயை நீ விரும்பினாய், காரணம் நீ இந்த மூன்று உலகிற்கும் அதிபதி என்கிற கர்வத்தினால். நான், மிக்க தபோ நிஷ்டரான கௌதம மஹரிஷியின் பொருட்டு அவளை அர்ப்பணித்தேன். இதனால் உனக்குக் கோபம் உண்டாயிற்று. அவளிடத்தில் கொண்ட காமத்தினால், ஒரு ஸமயம் கௌதமர் ஆசிரமத்தில் இல்லாதபொழுது, நீ அவளைப் புணர்ந்தாய். அது ஸமயம் அங்கு வந்து சேர்ந்த முனிவர் உன்னையும் உன்னுடைய செய்கையையும் கண்டு கோபம் அடைந்து 'இந்திரா! நீ இப்படிப்பட்ட கெட்ட காரியத்தை செய்தபடியால், உனது ஸ்வய நிலையில் மாற்றத்தை அடையக்கடவாய். மேலும் ஒரு ஸமயத்தில் போரில் சத்ருவின் பிடியில் சிக்குண்டு அவமானப்படுவாய்.’ என்று சபித்தார், அத்துடன். ‘இப்படிப்பட்ட துஷ்ட கார்யத்தைச் செய்பவர் அனைவரும் இதே நிலையை அடையக் கடவர்’என்றும் கூறினார். பிறகு அஹல்யையைப் பார்த்து- “கெட்ட நடத்தையுள்ளவளே! நீ நாசமாகக்கடவாய். (தர்மத்தை இழந்தவளாகக்கடவாய்).. அதன்பின் பல பல ஆண்டுகள் அக்கினி பகவானையும் ஸ்ரீராமசந்திரனையும் பூஜித்து இந்தப் பாவத்திலிருந்து விடுபடுவாய்”என்று சாபமிட்டு மேலும், அவளைப் பார்த்து, “எந்த உன் ஒருத்தியிடமே இருக்கும் அவயவ அழகு இப்படிப்பட்ட துஷ்ட செய்கைக்குக் காரணமாக இருந்ததோ. அந்த வடிவழகு பலரிடத்திலும் பிரிந்து குடிகொள்ளட்டும்” என்றும் கூறிச் சென்றார். அதுமுதல்தான் பலரிடம் பல வகையான உடலழகு காண்கிறது.
கௌதமரின் சாபத்தைக் கேட்ட அஹல்யை தானறியாமல் செய்ததை க்ஷமித்து அநுக்ரஹிக்குமாறு பிரார்த்தித்தாள். கௌதமரும். அவனிடம் கருணை கொண்டு "மஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் ஸ்ரீராமனாக அவதரிக்கப் போகிறார். அவர் இங்கு வரும் பொழுது அவரை தரிசித்தவுடன் உனது பாவம் நீங்கும். அவரைப் பூஜித்து என்னை வந்தடைவாய்; என்று கூறிச் சென்றார்.
“தேவேந்திர ! அதனாலேயே உனக்கு இந்த அவமானம் நேர்ந்தது. தசாவிபர்யயம் மேஷ விருஷணனாகவும் ஆனாய். இப்பொழுது நீ வைஷ்ணவமான யாகமொன்று செய்வாயாகில், அதனால் இந்தப் பாவம் நீங்கிப் பரிசுத்தனாகிப் பிறகு தேவலோகம் சேர்வாய்”என்று கூறினார்.
அதன்படியே இந்திரன் விஷ்ணுயாகம் செய்து பரிசுத்தனாகிப் பொன்னுலகம் போய்ச் சேர்ந்தனன். அங்கே சென்றதும், தனது குமாரன் அரக்கர்களுடன் நேர்ந்த போரில் மரணமடையவில்லை என்பதையும், காப்பாற்றப்பட்டு ஸமுத்திரத்தில் மறைந்து இருந்தான் என்பதையும் அறிந்து மேலும் ஸந்தோஷமடைந்தாள்.
அகஸ்தியர் - "ஹே ஸ்ரீராமசந்திர! நீ கேட்டபடியே - என்னால் இந்திரஜித்தின் பெருமையும் பலமும் கூறப்பட்டன. அதே போல் அவன் இந்திரனை ஜயித்தப் பிரகாரமும் கூறப்பட்டது'' என்றார்.
இதைக் கேட்ட ஸ்ரீராமன், லக்ஷ்மணன், மற்றும் அங்குள்ள ராக்ஷஸர்களும், வானரர்களும் ஆச்சரியம் ஆச்சரியமென்று கூறினர்.
விபீஷணனும் பல வருஷங்களுக்கு முன்பு நடந்த கதையை மீண்டும் கேட்டு ஸந்தோஷமடைந்தான்.
அருமை. நன்றி
பதிலளிநீக்கு