புதன், 15 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

(மந்தரை வந்தாளே)

அங்கம் 1

மூன்றாங்களம்

இடம்: அயோத்தி நகர் வீதி

காலம் : மாலை

பாத்திரங்கள் : மந்தரை, சில மனிதர்கள்

(வீதிகள் புஷ்பம், தோரணம், கொடி, இலை முதலியவைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. ஜனங்கள் ஸ்நானம் பண்ணி விபூதி திருமண்கள் தரித்துத், தட்டில் மாலைகளையும் பலவிதப் பலகாரங்களையும் வைத்து ஏந்திக்கொண்டு போகின்றனர். பிராமணர்கள் வேதம் ஓதிக் கொண்டு நடக்கின்றனர். நானாவித வாத்தியங்கள் முழங்குகின்றன. மந்தரை வருகிறாள்.)

மந்தரை: என்ன விசேஷம்? அரண்மனையில்தான் ஒருநாளும் இல்லாத திருநாளாயிருக்கிற தென்றிருந்தேன். எங்கும் அப்படியே இருக்கிறதே. வீதிகளெல்லாம் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் சந்தோஷ முழக்கம் மிகுதியாயிருக்கிறது. ஜனங்கள் ஸ்நானம் செய்து வெண்பட்டு உடுத்தி வெகு ஆசாரமாகப் போகின்றனர். புஷ்பமாலை முதலிய புனிதப் பதார்த்தங்களைக் கொண்டு செல்கின்றனர். வாத்தியகோஷம் எங்கும் நிறைந்திருக்கிறது. அரண்மனையில் கோசலை வெகு ஆனந்தத்துடன் ஜனங்களுக்குப் பணத்தைப் பிடிபிடியாக அள்ளி வீசுகிறாள். அவள் எப்பொழுதும் பணத்தை இறுகப் பிடிக்கிறவள். அப்படிப்பட்டவள் இன்று இப்படிச் செய்வதற்குக் காரணம் தெரிய வில்லை. நல்லது, யாரோ இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதைக் கவனிப்போம்.

(ஒருவன் அதிவேகமாகப் போகிறான். மற்றொருவன் அவனை வழிமறித்துப் பேசுகிறான்.)

ஒருவன்: -- என்னையா ஓடுகிறீர்; எங்கே இவ்வளவு வேகமாய்?

மற்றவன்:-- போகவேண்டியிருக்கிறது.

முன்னவன்:-- எங்கே?

மற்றவன்:-- அடுத்த கிராமத்தில் நம்முடைய பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துவரப் போகிறேன்.

முன்னவன்:-- அதற்கென்ன இவ்வளவு அவசரம்?

மற்றவன்:-- என்னைய்யா? அயல்நாட்டிலிருந்து இப்பொழுதுதான் வந்தவர்போல் பேசுகிறீர். நாளைக் காரியமாயிருக்கிறது. அந்தக் காட்சியை அவர்களும் பார்க்க வேண்டாமா?

முன்னவன்:-- ஓகோ, இராம பட்டாபிஷேகத்துக்கா? அது நாளை எந்நேரத்தில் நடைபெறும்?

மற்றவன்:-- அதிகாலையில்

முன்னவன்:-- ஏது இவ்வளவு அவசரத்தில் வைத்துக் கொண்டார்கள்?

மற்றவன்:-- அந்த விவரமெல்லாம் பேசிக்கொண்டிருக்க இதுதானோ சமயம்? எல்லாம் நாளைமறுதினம் பேசிக்கொள்வோம். இப்பொழுது என்னை விடும். (போகிறான். மற்றவன் வேறுவழியாகப் போகிறான்)

மந்தரை:-- அப்படியா செய்தி! ஓகோ, இதற்குத்தானா வீதிகளில் இவ்வளவு விமரிசை! இதற்குத்தானா அரண்மனையில் இவ்வளவு கொண்டாட்டம்! கோசலையின் பூரிப்பு இதனால்தானா! சக்கரவர்த்தியின் வஞ்சம் இப்படியா இருக்கிறது? அடி கோசலை! உன் மகன் பட்டத்துக்கு வரப்போகிறானென்ற செருக்கா? சந்தோஷப்பெருக்கா? அடி, அரண்மனைச் சேடியர்களுக்கெல்லாம் வாரிவாரி இறைத்தையே! அப்பொழுது நான் அங்கு வந்து நின்றது உன் கண்ணுக்குத் தெரியாமலா போயிற்று! நாளைக்கு உன் மகனுக்குப் பட்டமானால் இன்றைக்கே உனக்குக் கண் குருடாகவா போய்விட்டது! அடி! அற்பமதியினளே! இதுவொரு வாழ்வா?

சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுள்ளார் மூக ராவர்
பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்
குறிபெறு கண்ணு ளாருங் குருடராய் முடிவ ரன்றே.

வாழ்வுந்தாழ்வும் ஒருநிலையல்லவடி. “செல்வம் சகடக்கால் போல வரும்” என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? அற்பர்தாம் இந்தச் செல்வத்தைப் பெரிதாக மதிப்பர். ‘இந்தச் செல்வம் வந்தடைந்தால் வாயுள்ளவரும் ஊமையராவர்; காதுள்ளவருஞ் செவிடராவர்; கண்ணுள்ளவருங் குருடராவர்’ என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இன்று பிரத்தியக்ஷமாக உன்னிடத்தில் தானடி கண்டேன். அடி இந்த செல்வம் உனக்கு நிலைக்குமா? இதை நிலையென் றெண்ணி உன்னைப்போல் மயங்கும் பேதையர் எத்தனை பெயரோ?

அம்பொற் கலத்து ளடுபா லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின் வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சையெனக்கூறி நிற்பாட் கண்டும்
நம்பன்மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர்.

என்றபடி இந்த அற்பமதி படைத்த கோசலையைப்போல பொற்கிண்ணத்திற் பாலுஞ்சோறும் உண்டு களித்த ஒருத்தி காலகதியினால் உடல்வாடி, பசியால் வருந்தி மட்சட்டிக் கையிலேந்தி பிச்சையெனக் கூவித் திரியும்படியும் நேரும். அடி கோசலை! ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்? திடீரென்று அதிர்ஷ்டம் வந்துவிட்டதால் உனக்குத் தலைகால் தெரியவில்லை போலிருக்கிறது! அடிமதியில்லாதவளே! அடி அற்ப சந்தோஷி! சக்களத்தியின் தாதியாயிருந்தா லென்னடி? அவளண்டை வைத்திருக்கும் மாற்சரியத்தை என்னிடத்துமா காட்டவேண்டும்? மகனுக்கு மகுடாபிஷேகமென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் இவ்வளவு துவேஷத்தைக் காட்டி விட்டாயே! அபிஷேகமாகித் தேசம் உன் மகனுக்குச் சுவாதீனப்பட்டு விட்டால் என்ன செய்யமாட்டாய்? உன் சக்களத்தியையும் அவள் உற்றார் உறவினர்களையும் உடனே கொன்று விட்டுத்தானே மறுவேலை பார்ப்பாய். அடி, நான் இருக்கும் வரையில் உன்னை அவ்வளவு தூரம் மிஞ்ச விடமாட்டேன். உனக்கு வந்த செல்வம் நிலைத்துவிட்டதாக எண்ணாதே! அந்த நினைப்பால் பல பல யோசனைகள் பண்ணாதே!

பல்கதிர் விரித்துத்தோன்றிப் பாடுசெய் கதிரே போல
மல்லனீ ருலகிற் றோன்றி மறைந்திடு நும்மை விட்டுச்
செல்வமென் றுறுவதற்குஞ் செல்வமென் றுரைக்கும்பேர்நன்
றல்லலை விளைப்ப தாகா தரும்பெறற் செல்வம் பாவாய்.

அடிபாவாய்! ஜகஜோதியாய்த் தோன்றுகின்றானே சூரியன், அவன் என்றும் அப்படியே இருக்கின்றானா? முப்பது நாழிகையில் மறைந்து போகின்றானில்லையா? உன் வாழ்வும் அவனைப் போன்றதுதான். முப்பது நாழிகைக்குள் உனக்கு வந்த செல்வம் ஒழிந்தாலும் ஒழிந்துவிடும். செல்வம் என்று பெரியோர் இதற்கு ஏன் பெயரிட்டார்கள் தெரியுமா? இது யாரைப்போய் அடைகிறதோ, அவர்களிடத்து ‘நாங்கள் செல்வம், போய்விடுவோம், உன்னிடத்தில் தங்கமாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே போய் அடைகிறது. ஆதலால்தான் இதைச் ‘செல்வம்’ என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். இதனால் மக்களுக்கு வருந்துன்பங்களுக்குக் கணக்கில்லை. ஆனதால் இதை நிலையாக எண்ணி இறுமாப்படையாதே. உன் மகன் இராமனுக்குப் பட்டந் தகுமா? அவனுக்கு அரசகாரியங்கள் என்ன தெரியும்? அந்தச் சித்திராங்கி சீதையோடு நாளெல்லாம் கொஞ்சிக் கொண்டிருக்கத் தெரியும். என்னைப்போல் ஒரு கூன்விழுந்த கிழவியகப்பட்டால் அவளை வில்லுண்டையால் அடித்துப் பரிகசிக்கத் தெரியும். அவன் வில்லாண்மைகளெல்லாம் பெண்களிடத்தில்தான்; தாதியாகிய என்னை வில்லாலடித்தான்; தாடகை யென்னும் ஒரு பெண்ணை வில் வளைத்து அம்பெய்து கொன்றான். சிவன் தனக்கு உபயோகமில்லையென்று எறிந்த சொத்தை வில்லைப் பக்குவமாய் வளைக்கத் தெரியாமல் முறித்தெறிந்தான். ஞானப் பைத்தியங் கொண்ட ஜனகன் வயலிற் கண்டெடுத்த ஒரு நாதியற்ற பெண்ணை விவாகஞ் செய்து கொண்டான். இவனுக்குப் பட்டம் ஒரு கேடா? பட்டாபிஷேகத்துக்குக் குறித்த லக்கினம் நல்ல லக்கினம் போலிருக்கிறது! அதுமுதல் இராமனுக்கு வரும் இடையூறுகள் பல; அதுமுதல் நானும் என் உதவியைக் கோரினவர்களும் பெறும் லாபங்கள் பல. சரி, இனி நான் அலக்ஷியமாய் இருப்பது தவறு; திரும்பவும் அரண்மனை செல்லுகிறேன். கைகேயியைக் கண்டு அவள் மனதைக் கரைத்துக் காரியத்தை முடிக்கிறேன். (போகிறாள்)

கைகேயியின் மனதை மந்தரை கரைக்கும் நாலாவது களம் 17-06-2016  முதல் தொடரும்.

திங்கள், 13 ஜூன், 2016

சொல்லாமல் சொன்ன இராமாயணம்

இன்று (13-06-2016) அன்று நடந்த சொல்லாமல் சொன்ன இராமாயணம் டெலி உபந்யாஸம் (40ஆவது உபந்யாஸம்)

https://onedrive.live.com/redir?resid=2456CFA4D0388E16!2166&authkey=!AJ_ZbsQxRgHoKl4&ithint=file%2cmp3

அல்லது

http://www.mediafire.com/download/v8iky4u6oh1vogd/040_SSR_%2813-06-2016%29.mp3

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1 களம் 2

 

இரண்டாங்களம்

இடம்;-- சீதையின் அந்தப்புரம்

காலம் ;-- பிற்பகல்

பாத்திரங்கள்;-- இராமர், சீதை, தோழி மாணிக்கமாலை.

மாணிக்கமாலை :-- (சீதையைப் பார்த்து) அம்மா, என்ன ஏதோ யோசனையிலிருக்கிறீர்களே?

சீதை:-- மாணிக்கமாலை! சில நாழிகைகளாக என் இடது கண் துடித்துக் கொண்டிருக்கிறது. என்ன காரணமாயிருக்கு மென்று யோசித்தேன். வேறொன்றுமில்லை.

மாணிக்கமாலை:-- இடதுகண் துடிப்பது நற்சகுனமாயிற்றே! கூடிய சீக்கிரத்தில் ஏதேனும் சுபசமாசாரம் கேட்பீர்கள். இதைப்பற்றித்தானே யோசித்தீர்கள்?

சீதை :-- ஆம்

மாணிக்கமாலை :-- வேறு மனக்குறை ஒன்றுமில்லையே?

சீதை;-- தோழீ! நீ கேட்பது அதிசயமாயிருக்கிறதே. எனக்கு மனக்குறை எப்படி வரும்? பெண்ணாய்ப் பிறந்தவர்களுள் என்னைப்போற் பாக்கியவதியும் உண்டோ? நலமுங் குலமுங் குணமும் ஒருங்கமைந்த உத்தம ரொருவரைப் புருஷராகப் பெற்றேன். அவர்க்கு என்மீதுள்ள அன்பினும் நான் விரும்பத்தக்க பொருள் எது? அவ்வன்பு மாறாதிருக்கும் வரை எனக்கு மனக்குறை ஏதடி, தோழீ!

மாணிக்கமாலை:-- அம்மணீ! தாங்கள் கூறுவது உண்மையே. தங்கள் நலங்களுக்கேற்ற நாயகரைப் பெற்றீர்கள். அழகிலுங் குணத்திலும் அவருக்குச் சமானமேனும் உயர்வேனும் உள்ள புருஷர் பிறர் ஒருவரை நான் இதுவரையிற் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.

சீதை:-- அடி மாணிக்கமாலை! மிதிலையிற் கன்னிமாடத் தருகே அவரை முதன்முதற் கண்டபொழுது, அவர் அழகு ஒன்றையுமே கண்டு கரைகடந்த காதல் கொண்டேன். ஆனால் அப்பொழுது அவ்வழகுக் கேற்ற குணமுடையவராயிருப்பா ரென்று அநுமானித்திருந்தேன். இப்பொழுது இவரிடத்து நான் பிரத்தியக்ஷத்திற் காணும் குணாதிசயங்கள் அப்பொழுது அறிந்திருப்பேனாயின் வில்லை முறிக்குந் துணையுங்கூட அவரைப் பிரிந்து ஆற்றியிருந்திருப்பேனோ? தோழீ! அவர் என் ஆருயிரென்பேனோ, உலகைப் படைத்துண்டு உமிழ்ந்து வாமனனாகி ஈரடியாலதை யளந்த மாயவரென்பேனோ, பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமரென்பேனோ, அன்றி மனிதர்க்கும் தேவர்க்குந் தேவரென்பேனோ,

பங்கயக் கண்ண னென்கோ பவளச்செவ் வாய னென்கோ
அங்கதி ரடிய னென்கோ அஞ்சன வண்ண னென்கோ
செங்கதிர் முடிய னென்கோ திருமறு மார்ப னென்கோ
சங்குசக் கரத்த னென்கோ சாதி மாணிக் கத்தையே.

மதித்தற்கரிய மாணிக்கம் போன்ற அவரை, தாமரைக்கண்ண ரென்பேனோ, செம்பவள வாயரென் பேனோ, செந்திருவடிய ரென்பேனோ, கார்நிற வண்ணரென்பேனோ, அன்றி என் கண்ணுக்கினிய கதிர்முடியுடையரென்பேனோ, அல்லது சங்குசக்கர பாணியாய்த் திருமகள் தங்கிய மார்பினராகிய நெடுமாலென்பேனோ! அவரை எவரென்றெண்ணி எவ்வாறு புகழ்வேன்! ஆ, என் மனங்கொண்ட மணவாளரைத் தினங்கண்டு உரையாடி உடனிருந்து பணிவிடை செய்யும் பெரும்பாக்கியத்தைப் புண்ணிய வசத்தால் எய்தப் பெற்றேன். என் ஆயுளளவும் இவ்வின்பம் மாறாதிருக்க இறைவன் திருவருள் புரிய வேண்டும்.

மாணிக்கமாலை ;-- அம்மணீ! இறைவன் அங்ஙனமே திருவருள் புரிவாரென்பதிற் சந்தேகமில்லை. அம்மா, நாயகர் இப்பொழுது எங்குச் சென்றுள்ளார், தெரியுமோ?

சீதை:-- தெரியாது. என்னுடன் இன்னுரையாடி யிருந்தவரை மந்திரி சுமந்திரர் வந்து அழைத்துச் சென்றார். சென்று நாலைந்து நாழிகை யாய்விட்டது. இன்னும் திரும்பி வரவில்லை.

மாணிக்கமாலை :-- எதற்காக மந்திரி வந்து அழைத்துச் சென்றிருப்பார்?

சீதை;-- ஏதாவது இராஜாங்க காரியமாயிருக்கும். தோழீ! இந்த நாலைந்து நாழிகையும் எனக்கு நாலைந்து வருஷங்களாகத் தோன்றுகின்றன. வருகிறாராவென்று எழுந்து பார்த்து வா.

மாணிக்கமாலை :-- (எழுந்து சென்று வழியைப் பார்த்து விட்டு வந்து) இல்லையம்மா, அவர் வரவில்லை.

சீதை:-- என் கண்ணாளருக்குச் சகல நலங்களும் பொருந்தியிருக்கின்றன. ஆனால் ஒரு குறை மட்டுமிருக்கிறது.

மாணிக்கமாலை:-- அதென்ன குறையம்மா?

சீதை:-- சக்கரவர்த்திக்கு மூத்த குமாரராய்ப் பிறந்திருக்கின்றாரே, அந்த ஒரு குறைதான்.

மாணிக்கமாலை: -- அம்மணீ! அதுவும் ஒரு குறையோ?

சீதை:-- தடையென்னடி தோழீ! அதனாலல்லவோ இராஜாங்க விஷயமாய்ச் சில சமயங்களில் என்னைவிட்டு அவர் பிரியும்படி நேரிடுகிறது? இல்லாவிட்டால் என்றும் என் உடனிருப்பாரன்றோ? இந்த ஒரு குறைதான் சில சமயங்களில் என் மனத்தை வருத்துகிறது. ஆ, இதோ அவர் வருகிறார் போலிருக்கிறதே தோழீ! நீ சற்றே வெளியே சென்றிரு. (மாணிக்கமாலை போகிறாள். இராமர் வருகிறார். சீதை அவரை எதிர்கொண்டு அழைக்கிறாள். இருவரும் ஆசனத்தில் அமருகின்றனர்.) நாதா! ஏன் இவ்வளவு நாழிகை தாமதித்து விட்டீர்கள்? சென்ற காரியமென்ன? அடியாள் அறியக் கூடியதாயிருக்குமோ? தங்கள் முகத்தில் மகிழ்ச்சியும் விசனமும் கலந்து காணப்படுகின்றனவே.

இராமர்:-- கண்மணி! சீதா! உனக்கு அதிஉன்னத பதவியொன்று வந்தால் என்மனம் மகிழாதா?

சீதை:-- காதல! இதுவரை எனக்கில்லாத பதவி இனி என்ன வரப்போகிறது?

இராமர்:-- சீதா! இதுவரை நீ சக்கரவர்த்தியின் முதல் மருகியாய் இருந்தாய். நாளைமுதல் நீ சக்கரவர்த்தினியாகப் போகின்றாய்.

சீதை;-- பிராணபதி! அடியாளுக்கு ஒன்றும் விளங்கவில்லையே

இராமர்:-- காதலீ! நாளையதினம் உன் கொழுநனுக்கும் உனக்கும் பட்டாபிஷேகமாகப் போகின்றது.

சீதை:-- தங்களுக்குப் பட்டாபிஷேகமா? மாமா அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

இராமர்:-- உன் மாமனார் மூப்படைந்து விட்டாராதலால் தவஞ் செய்யக் காட்டிற்குச் செல்லப் போகிறார்.

சீதை:-- நாதா! தாங்கள் சொல்வது நூதனமாயிருக்கிறதே! நம்மைப்போல் இளம்பருவத்தினரல்லவா காட்டின் வனப்பைக் கண்டு களித்து அதில் ஆனந்தமாய் உலாவித் திரிந்து காலங்கழித்தற்குரியவர்! மாமா அவர்கள் மூப்புக் காலத்தில் தம் மனைவியரும் மருகியரும் உடனிருந்து உபசரிக்க நாட்டிலிருந்து சுகமாகக் காலங்கழிக்க வேண்டியவரன்றோ?

இராமர் (புன்னகையுடன்):-- என் உயிரே! ஆசிரமத் தருமங்களையே மாற்றப் பார்க்கின்றாயே!

சீதை:-- நாயக! நான் என் சிறுமதிக்குத் தோற்றியதைத் தங்களிடம் தெரிவித்தேனே யொழிய வேறில்லை. நாதா! தங்களுக்குப் பட்டாபிஷேகம் ஆனபிறகு நான் அடிக்கடி தங்களைவிட்டுப் பிரிந்திருக்கும்படி நேருமல்லவா?

இராமர் :-- காதலீ! குடிகளுடைய க்ஷேமத்தைக் கருதி அடிக்கடி வெளியே சென்று இராஜாங்க விஷயங்களைக் கவனிக்கும்படி நீயே என்னைத் தூண்டமாட்டாயோ?

சீதை:-- (சற்று யோசித்துவிட்டு) என் காதலா! குடிகள் குறை தீர்ப்பதற்குத்தானே தங்களை அரசராக நியமிப்பது! அதற்கு நான் சிறிதும் இடையூறாயிரேன். தங்கள்மீதுள்ள பிரியத்தால் தங்களைப் பிரிந்திருப்பதற்கு நான் வருந்தினாலும், குடிகள் க்ஷேமத்தை எண்ணி அவ்வருத்தம் ஒழிவேன். அன்றியும் இராஜாங்க காரியங்களில் உழைத்துத் தாங்கள் அயர்வடையுங் காலத்தில் அடியாள் தங்கள் உடனிருந்து என்னாலான பணிவிடைகளைச் செய்து தங்கள் அயர்வை ஆற்றுவேன்.

இராமர்:-- ஜானகி! உன் உத்தமக் குணமல்லவோ என்னை இவ்வில்லறத்தில் இழுத்தது! நான் ஜன்மாந்தரத்திற் செய்த நல்வினையின் பயனாலல்லவோ நின்னை மனைவியாகப் பெற்றேன்.

சீதை:-- பிராணேசா! பட்டாபிஷேகத்தைக் குறித்து மகிழ்ச்சி ஒருபுறமிருக்கத், தங்கள் முகத்தில் சிறிது விசனக்குறியும் தோற்றுகிறதே?

இராமர்:-- காதலீ! ஒரு தேசத்தை அரசாள்வதென்றால் சாமானியக் காரியமல்ல

கோனிலை திரிந்திடிற் கோணிலை திரியுங்
கோணிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை
மன்னுயி ரெல்லா மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்.

அரசன் நியாயந் தவறுவானாகில் கிரகங்கள் நெறி நில்லா; கிரகங்கள் தவறுமாயின் மழை வளங்குன்றும்; மழை வளங்குன்றினால் உலகத்துயிர்களுக்குக் கெடுதியுண்டாகும்; அவ்வாறானால் உலகத்துயிர்களெல்லாம் அரசன் உயிரென்னும் தன்மை கெட்டுவிடும். ஆதலால் இதைவிட தாங்கற்கரிய பாரமெது? சீதா, அரசநீதி செலுத்துவதில் ஒருகால் தவறி விடுவோமானால் அதனால் வரும் பாபங்களுக்கெல்லாம் ஆளாக வேண்டுமே என்ற விசனந்தான் எனக்குச் சிறிதுள்ளது.

சீதை:-- நாயகா! தங்கள் அறிவையும் ஆற்றலையும் தாங்களே அறியாதிருக்கின்றீர்கள். நீதிக்கிருப்பிடமான தங்களால் செவ்வையாய் நீதி செலுத்த முடியாதென்றால், வேறு எவராலாகும்? அதைப்பற்றிச் சிறிதும் யோசனை வேண்டாம். காதல! இனி என் கிளிகளுக்குத் தங்களைச் சக்கரவர்த்தி என்று கூப்பிடக் கற்றுக் கொடுக்கட்டுமா?

இராமர்:-- உன் இஷ்டம்போற் செய். இனி நான் உன்னைச் சக்கரவர்த்தினீ என்றழைக்கட்டுமா?

சீதை:-- பிராணபதீ! தங்கள் திருவாக்கால் என்னைச் சீதா என்று அழைப்பதைவிட எனக்கு வேறொன்று இனிதாகத் தோற்ற வில்லை.

இராமர்:-- ஆனால் சரி; அப்படியே அழைக்கிறேன், சீதா!

சீதை:-- நாதா!

இராமர்:-- இன்று உனக்குச் சொல்லவேண்டிய விஷயம் வேறொன்றுள்ளது.

சீதை:-- அது என்னவோ?

இராமர்:-- நாளைய தினம் பட்டாபிஷேகமாதலால் இன்றைய தினம் நாம் இருவரும் உபவாசமாயிருந்து, இரவு, தருப்பை புல்லிற் சயனித்திருக்க வேண்டும்.

சீதை:-- அடியாள் உபவாசமிருக்கவும் தருப்பைப்புல்லில் சயனித்திருக்கவும் ஆக்ஷேபமில்லை. தாங்கள் பட்டினியிருக்க எவ்வாறு ஆற்றுவீர்கள்? தங்கள் அருமைத் திருமேனி தருப்பையில் படுக்கலுற்றால் வருந்தாதோ!

இராமர்:-- மாந்தளிரினும் மெல்லியளாகிய நீ இவ்விரதங்களை எவ்வாறு அநுஷ்டிப்பாய் என்றெண்ணி யல்லவோ நான் இதுவரை இதை உனக்குச் சொல்லத் தாமதித்தது. எனக்கு இவ்விரதங்களை அநுஷ்டிப்பது எளிதே யாகும். எவ்வாறானாலும் சற்காரியங்களுக்கு தம்பதிகள் விரதமனுஷ்டிக்க வேண்டுமென்பது பெரியோர் கொள்கை யாதலால் நாம் அவைகளை அநுஷ்டித்தே தீரவேண்டும்.

சீதை:-- நல்லது, ஆனால் அப்படியே செய்வோம். பிராணேசா! தங்களை விவாகக் காலத்திற் கண்டதுபோல், சர்வாபரணலங்கிருதராய் நாளைய தினமும் காண்பேன். இயற்கையாகவே மனோகரமான தங்கள் திருவுருவம், ஆடையணிகளால் சிறப்புற்றால் கண்ணுக்கு எவ்வளவு இன்பமாக விருக்கும் !

இராமர்:-- நாயகி ! நீயும் நாளையதினம் சர்வாபரணலங்கிருதையாய்க் காணப்படுவையல்லவா?

சீதை:-- ஆம்; நாதா ! இப்பொழுது எனக்கொன்று ஞாபகம் வருகிறது. (கழுத்திலணிந்திருந்த கற்களிழைத்த பதக்கார மொன்றினைக் கழற்றிக் கையில் வைத்துக்கொண்டு) இந்தப் பதக்கம் என் தந்தை எனக்கு விவாகக் காலத்தில் கொடுத்தது. இதில் அருமையான பலவகைக் கற்கள் அமைந்திருந்தாலும் தங்கள் நிறத்துக்கீடாக ஒரு நீலக்கல் இல்லாதது என் மனத்திற்கொரு குறையாயிருக்கிறது. நாளைய தினத்திற்குள் இதின் நடுவே ஒரு நீலக்கல் வைக்கமுடிந்து வைத்தால், பட்டாபிஷேகச் சமயத்தில் அணிந்து கொள்வதற்கேற்றதா யிருக்கும்.

இராமர்:-- ஆனால் சரி. அதை இங்கே கொடு. இன்றைய தினமே உன் விருப்பப்படி அதில் நீலக்கல் ஒன்று வைத்துப் பதித்து வரச் செய்கிறேன். (பதக்கத்தை வாங்கக் கையை நீட்டுகிறார்)

சீதை:-- (சற்றுப் பின்வாங்கிக்கொண்டு) பதக்கத்தைத் தங்கள் கையில் தரமாட்டேன்.

இராமர்:-- சீதா ! நீயே தருவதாகச் சொல்லிவிட்டு இப்பொழுது ஏன் மறுக்கிறாய்?

சீதை:-- என் பிராணேசா ! இப்பதக்கத்தில் பல கற்கள் அமைந்துள்ளனவே !

இராமர்:-- இருந்தாலென்ன?

சீதை:-- நன்றாய் சொன்னீர்கள் ! மிதிலைக்கு வரும் வழியில் தங்கள் பாதம் பட்டுக் கல்லொன்று பெண்ணுருவாய் விட்டதே ! இங்கே தங்கள் அஸ்தம்பட்டு இப்பதக்கத்துள்ள கற்களெல்லாம் பெண்ணுருவடைந்து விட்டால் என்ன செய்கிறது !

இராமர் :-- (சிரித்துக்கொண்டு) அதற்கா அஞ்சுகிறாய் ! ஆனால் அப்பதக்கத்தை நீயே வைத்துக்கொள். மந்திரியிடம் சொல்லி உன் விருப்பப்படி செய்விக்கிறேன். (எழுந்து போகின்றனர்)

மூன்றாம் களம் 15-06-2016 அன்று தொடரும்

சனி, 11 ஜூன், 2016

இராமநாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

தசரதர் :-- (இராமரைப் பார்த்து) இராமச்சந்திரா! எனக்கு மூப்பு மேவிவிட்டது. இனி இப்பூபாரத்தைச் சுமக்கச் சக்தியற்றவனாயிருக்கிறேன். ஆதலால் இந்த பந்தத்தினின்றும் நீ என்னை விடுவிக்க வேண்டும்.

உரிமை மைந்தரைப் பெறுகின்ற துறுதுயர் நீங்கி
யிருமை யும்பெறற் கென்பது முன்பினோ ரியற்கை
தரும மன்னநிற் றந்தயான் றளர்வது தகவோ
கரும மென்வயிற் செய்யிலென் கட்டுரை கோடி

உலகத்தில் பெரியோர்கள் தமக்கு உரிமையுள்ள புத்திரர்களைப் பெற விரும்புவது அவர்களால் தமது துயரங்கள் நீங்கி இம்மை மறுமைப் பயன்களைப் பெறுதற் பொருட்டாகும். அவ்வாறாக, தருமமே ஓர் உருவெடுத்து வந்தாலொத்த உன்னை மகனாகப் பெறப்பெற்ற நான் மனந்தளர்வது தகுமோ? என் சொல்வழி நிற்பது உனக்கு முறைமையானால் நான் சொல்வதொன்றுள்ளது. அதைக்கேள்.

இராமர்:-- பிதா! தங்கள் உள்ளத்துள்ளதைப் பணித்தருள் புரியப் பிரார்த்திக்கிறேன்.

தசரதர்:-- குழந்தாய்! சீதை மணவாளா!

முன்னை யூழ்வினைப் பயத்தினு முற்றிய வேள்விப்
பின்னை யெய்திய நலத்தினு மரிதினிற் பெற்றேன்
இன்னும் யானிந்த வரசிய லிடும்பையே னென்றால்
நின்னை யீன்றுள பயத்தினி னிரம்புவ தியாதோ

முன் செய்த நல்வினைப் பயனாலும், பின்செய்த புத்திர காமேஷ்டியாலும் உன்னை மகனாகப் பெற்றேன். பெற்றும் நான் இந்த இராச்சிய பாரத்தைத் தாங்கி வருந்துவதானால் உன்னைப் பெற்றதனால் அடைந்த பயன் யாது? அப்பயனை நான் நுகரும் காலம் நெருங்கி விட்டது. இராஜ்ஜியலக்ஷ்மி உன்னை அபேக்ஷிக்கிறாள். பிரஜானுகூலத்திற்கு நாடு உன்னை நாடுகிறது. உன் ஆதரவின் கீழிருக்க தேசம் உன்னைத் தேடுகிறது. தேசாதிகாரிகளுக்கு உன் அபிமானம் சித்திக்கத் தக்க அதிஷ்ட காலம் வந்துவிட்டது. இந்தச் சிம்மாசனம் உனக்கு இடமாக இச்சிக்கிறது. (சுட்டுவிரலைச் சிரசின் உச்சி வரையில் உயர்த்தி) இந்த மணிமுடி உன் சிரசிலிருந்து பிரகாசிக்கப் பிரியப்படுகிறது. செங்கோல் உன் அங்கையை அடைய அவாவுகிறது. நாளைய தினம் உனக்கு மஞ்சன நீராட்டி மணிமகுட முடிக்கத் தீர்மானித்துள்ளோம். குடிகள் எல்லோரும் முழுமனத்தோடும் உன்னை அங்கீகரிக்கின்றனர். நீ அரசற்குரிய உத்தம குணங்களெல்லாம் பொருந்தியவனா யிருக்கிறாய். ஆயினும் உன்மேல் வைத்த அன்பினால் உனது க்ஷேமத்தை நாடி நான் உனக்கு சில புத்திமதிகளைச் சொல்லுகிறேன், கேள்:--

“ என் உயிரினுஞ் சிறந்த மைந்தா! உலகத்தவர்கள் யாவரும் ஒழுகி உய்தற்காக வருணாச்சிரமங்களும் தருமங்களும் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகள் ஒவ்வொன்றும் அளவில்லாதன வாயிருக்கின்றன. ஆதலால் அவைகளை இப்பொழுது சொல்லாது விடுத்து உனக்குரிய அரசியலுக்குரிய தருமத்தை மாத்திரங் கூறுகின்றேன்.

அரசர்க்கரசனாய், அடியார்க்கு எளியனாய், அநாதி மலமுத்தனாய் ஒரு கடவுள் உண்டென்பதை உள்ளத்தில் உறுதியாகக் கொள்க. அக்கடவுளை வழிபடுவதற்கு ஒரு நாளும் மறவாதே. அவருடைய திருவருளாகிய பெருந்துணை கொண்டே எதையும் முயலுவாயானால் முயன்றது முட்டின்றி முடியும். துறவிகள் கோபிப்பாரானால் கடவுளரும் கலக்க முறுவர். ஆதலால் அவர்களை வழிபடுவதன்றி ஒருகாலும் இகழற்க. கடுஞ்சொல், பொறாமை, கோபம் முதலிய குற்றங்களில்லாமல் தருமத்தைச் செய்க. அதனால் உயிர்களிடத்து அன்புண்டாகும். அன்பினால் வருமின்பமே இன்பம். மற்றவற்றால் வரும் இன்பமெல்லாம் துன்பத்தையும் பழியையும் தோற்றுவிக்கும். இடம் பொருள் ஏவல் என்னுமிவைகளிருந்தாலும், அன்பில்லாதவிடத்து அவை யாவும் எலும்பில்லாத உடம்பு போல இருத்தலால் ஒவ்வோருயிர்களிடத்தும் அன்புடைமை அவசியம் வேண்டும். பிரமச்சாரி, வானப் பிரஸ்தன், சந்யாசி, தென்புலத்தார், குரவர், தேவர், விருந்தினர், சுற்றத்தார், பசுக்கள், பிராமணர், கூனர், குருடர், செவிடர், முடவர் முதலிய அங்கஹீனர்கள், நோயாளர், வயோதிகர், குழந்தைகள், தம்மையடுத்தார் என்னும் இவர்களைப் பாதுகாக்க வேண்டும். எந்நன்றி மறக்கினும் செய்ந் நன்றி மறவாதே. மறந்தும் புறங்கூறாதே. அறிவினருக்கு வெறுப்பை யுண்டாக்கி, நகையை விளைத்து, வெளிற்றறிவை யுணர்த்தி, நன்கு மதிப்பைக் கெடுத்து, சிறப்பைச் சிதைத்து, தருமம் முதலியவற்றைப்போற் பயன்களையுங் கொடுக்காது நிற்கும் பயனில்லாத சொற்களைச் சொல்லற்க.

தரும நூலிற் சொல்லியபடி உலகத்தை யரசாள வேண்டுமானால், அமைச்சு, நாடு, அரண், பொருள், படை, நட்பு ஆகிய ஆறும் இன்றியமையாத அங்கங்களாம். ஆதலால் என்றும் இவ்வங்கங்களோடு விளங்கியிரு. அரசர்கள் ஒரு தொழிலைச் செய்யுங் காலத்துப் பயப்படாமையும், அதனைச் செய்வார்க்குப் பொருள் கொடுத்தலும், செய்யுங்காரியத்தில் மனத்தைச் செலுத்தலும், அறிவு கொண்டதனை முடித்தலும், ஆண்மையுடைமையும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். இவைகளோடு கொலை முதலிய பாவங்களை நீக்குதலும், மானம் முதலிய குணங்களை யுடைமையும் அவசியமாகும். பிரஜைகள் வருத்தமுற்ற காலத்து ஆறிலொரு பங்கு இறையை வாங்காது விட வேண்டும். தங்கள் குறையை வந்து முறையிடுவார்க்குத் தடையின்றி வெளிப்பட்டு அவர்கள் குறையைத் தெளிவுறக் கேட்டு, இனிய சொற்களைச சொல்லிக் குற்றமுள்ளாரைத் தண்டித்துத் தீர்ப்புச் சொல்லக் கடவாய். யுத்தகளத்தில் பகை அரசரைக் கொன்றும், அரசரிடத்தில் திறை வாங்கியும், நாட்டைக் காத்துக் குடிகளிடத்து இறை வாங்கியும் பொருள் சேகரிக்க வேண்டும். திருடர் முதலியவர்களால் நாட்டுக்குக் கெடுதியுண்டாகாமற் காத்து, உயிர்கள் அறம் முதலிய உறுதிப் பொருள்கள் அடையும் வண்ணம் ஆட்சி செலுத்துதலே செங்கோலுக்குரிய மாட்சியாகும்.

மைந்தா! தவத்தர், ஆசாரியர், அந்தணர், உயர்ந்தோர், இவர்களிடத்து வணக்கமில்லாமையும், அகங்காரமும், செலவு செய்யவேண்டிய விடத்து செலவு செய்யாமையும், காமமும், கோபமும், கண்ணோட்டமும், ஆகிய இத்தீக் குணங்களைக் கொள்ளற்க. குற்றஞ் செய்யாமலிருந்து பிறர் குற்றங்களைக் கடியவேண்டும். சிறிதாயினுங் குற்றஞ் செய்யின் சிறுநெருப்பு மலைபோன்ற வைக்கோற் போர்களை அழிக்குமாறு போல பெருவாழ்வையும் அழிக்கும். பகைவர்களுக்குச் செல்வத்தைக் கொடுக்கும். பெருநோயில் வருந்தச் செய்யும். கோபமுறாத பெரியோரையுங் கோபிக்கச் செய்யும். ஆதலால் குற்றமற்றவனாய் நடந்து வருக. நன்மை பயக்காத தொழிலைச் செய்யாதே. மழை மிகுதியினாலும், மழைக் குறைவாலும், காற்றினாலும், நெருப்பினாலும், நோயினாலும் உலகிற்கு வருந் துன்பங்களை யெல்லாம் தவர்களைக் குறித்தும் உயர்ந்தோரைக் குறித்தும் செய்யுஞ் சாந்திக் கிரியைகளினால் நீக்குக. பகைவர்களாலும், தீவினை செய்யுங் கூட்டத்தாராலும் வருகின்ற தீமைகளைச் சதுர்வித உபாயங்களினாற் போக்குக. உனக்கு வருகின்ற தீவினைகளை உற்பாதங்களினாலறிந்து அவற்றால் வருத்தப்படாது நடக்க வேண்டும்.

பகைவர்களுடைய வலியையும், அவரை வெல்லுங் காலத்தையும், வெல்வதற்கு வேண்டிய வினையையும், அது தொடங்குந் தன்மையினையும், அவ்வினைக்கு வருகின்ற இடையூறுகளையும், அவைகளை விலக்கும் வழியையும், வெற்றி கொள்ளுந் தன்மையினையும், வெற்றியால் வரும் பிரயோசனத்தையும், இன்னும் உனக்கும் பகைவர்க்கும் உள்ள பல நிலைகளையும் அறிந்து யோசித்துத் தெளிந்து வினை செய்ய வேண்டும். பகைவனை வெல்லுங்காலம் வருமளவும் புலியைப்போற் பதுங்கியிருந்து வினை முடிக்க. பகையரசன் செய்யத்தகாத குற்றங்களைச் செய்யினும் வெல்லுங்காலம் வரும் வரையும் அப்பகையை வெளியிற் காட்டாமல் நல்ல குணத்தோடு அளவளாவி சிரித்து உவகை கொள்ளுஞ் சுற்றத்தார்போல ஒழுகவேண்டும். காலம் வந்துவிட்டால் கருதிய வினை யவ்வளவையுஞ் சிறிதுந் தவறாது முடிக்கக் கடவை. நமது மந்திரிகளோ,

உற்றது கொண்டு மேல்வந் துறுபொரு ளுணருங் கோளார்
மற்றது வினையின் வந்த தாயினும் மாற்ற லாற்றும்
பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவ ரரிய நூலுங்
கற்றவர் மான நோக்கிற் கவரிமா வனைய நீரார்.

கண்டதொன்றனைக் கொண்டு இனிவருவதறியு மியல்பினர். விதியையும் வெல்லும் மதியுடையார். நற்குடிப் பிறந்தவர். அரிய நூல்கள் பலவும் கற்றுத் தெளிந்தவர்கள். மயிரொழிந்தால் வாழ்வொழிக்கும் கவரிமானைப்போல மானம் கெட்டவிடத்து உயிர் வாழாதார். அன்றியும்,

தம்முயிர்க் குறுதி யெண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையிற் றிறம்பல் சொல்லாத் தேற்றத்தார் தெரியுங் கால
மும்மையு முணர வல்லா ரொருமையே மொழியு நீரார்.

அரசன் தம்மைக் கோபித்த காலத்திலும், அவன் கோபத்தைப் பொறுத்துத் தமக்கு நன்மையைக் கருதாது, நீதியைக் கைவிடாமல் எதிர்நின்று கூறும் வீரத்தன்மை யுடையவர். நடுவுநிலை மாறா நெறியுடையவர். முக்காலமும் உணர்ந்து சொல்லத் தக்கவர். எல்லார் மனத்துக்கும் ஒற்றுமையான மொழிகளையே உரைப்பவர். ஆதலால் எக்காலத்து எதைச் செய்யினும் இம்மந்திரிகளைக் கலந்து ஆராய்ந்து தெளிந்து செய்க. அதர்ம நெறி நிற்கும் அரசன் ஒருவனை அரசாட்சியினின்றும் விலக்க வேண்டுமானால், முனிவரையும், புரோகிதரையுந் தூதாக அனுப்பி “இந்த அரசன் தருமவழியில் நிற்பவனல்லன்; இவனை நீக்கி தரும வழியில் நிற்கும் வேறோர் அரசனை நியமிக்க நினைத்துள்ளோம். இது எவர்க்குமொப்பா யுள்ளது. நும்முடைய கருத்தென்ன?’’ என்று மற்ற சிற்றரசர் ஒவ்வொருவரையும் வினாவி அவருட் பலர் சம்மதப்படி அதனைச் செய்க.

பெருமிதம், பெருஞ்செல்வம், பேரழகு, மிக்க களிப்பு இவைகளில் முழுகியிருக்கின், குழந்தாய், இராமச்சந்திரா! பொச்சாப்பு, சோம்பல் முதலியவற்றால் உன்னைக் காத்துப் பகையை வெல்லுதல் அரிதரிது. குற்றஞ் செய்தோர் யாவரா யிருந்தாலும் கண்ணோட்டம் பாராது, நீதியையறிந்து தருமந் தப்பாமல் தண்டஞ் செய்தலே செங்கோலெனப்படும். களவாடுவோர், ஆறலைப்போர், பிறன்மனை நயப்போர், உயிர்க்கொலை செய்வோர் முதலியவர்களைத் தக்கபடி தண்டித்தல் பாவமன்று. அது பயிர் வளர்ச்சிக் கிடையூறாய் நிற்கும் களைகளைக் களைதல் போலாம். நியாயந் திறம்பி நடப்பாரைத் தண்டித்து அவர்களிடத்துள்ள பொருளையுங் கவர்ந்து கொள்ளுதல் அரசர்க்குத் தருமமேயாகும்.

இங்ஙனம் அரச தருமங்கடவாது ஆட்சி புரியும் அரசனை அவன் செங்கோலே காக்கும். முறைப்படி அரசு புரியாதவனை அப்பாவமே கெடுக்கும். அளவுகடந்த தண்டனை , நடுநிலையில்லாமை, முகமலர்ச்சியின்மை, மந்திரி பிரதானிகளோடு ஆலோசித்துச் செய்யாமை இவைகள் தீங்கை விளைக்கும். அதிகாரத்தை வெவ்வேறாகப் பிரித்து இராஜாங்க உத்தியோகஸ்தர்கள் பலர்க்கும் கொடுக்க வேண்டும். நீயே நேராக அதிகாரம் நடத்த வேண்டிய விஷயங்களில் அவ்வாறு நடத்தியும், அமைச்சர் முதலான மற்ற அதிகாரிகள் மூலமாக நடத்த வேண்டியவைகளை அவர்கள் மூலமாக நடத்தியும் எல்லா வகை உபாயங்களினாலும் உனது குடிகளைச் சந்தோஷப்படுத்தும் வழிகளை எப்பொழுதும் தேடிக் கொண்டே யிருக்க வேண்டும். ஆயுதசாலையையும், பொக்கிஷத்தையும் மிகவும் ஜாக்கிரதையாகப் பாதுகாக்க வேண்டும். புத்திரா! அரசியற் குரிய இலக்கணங்கள் இவைபோலப் பலவுள. அவற்றை விரித்துரைக்கின் மிகப்பெருகு மாதலின் மநுஸ்மிருதி முதலிய நூல்களிற் கண்டு தெளிக. குலக்குமரா! நான் இதுகாறும் கூறிய நீதிகளையும், உன் நுட்ப மதியையும் கலந்து அநுஷ்டித்து இச்செங்கோலைத் தாங்குவாயானால் நாட்டின் க்ஷேமம் நாளும் ஓங்கும். என் துயரமும் நாளையே நீங்கும். இராமச்சந்திரா! இனி நாளை மகுடாபிஷேகத்திற்கு நீ அனுசரிக்கவேண்டிய விரதங்களை நம் குலகுரு வசிஷ்டரிடம் கேட்டுத் தெளிக.

வசிஷ்டர்:-- இராமா, இன்றிரவு உனது பத்தினியுடன் தருப்பைப் படுக்கையில் படுத்து நித்திரை செய்யவேண்டும்; இருவரும் ஒன்றும் புசியாமல் உபவாசமாயிருக்க வேண்டும். நாளைக் காலையில் மங்களாபிஷேகத்திற்கு மந்திரி முதலானவர்கள் உன்னை உபசாரத்தோடு அழைக்க வருவார்கள் . போய் வா.

(இராமர் வணங்கிப் போகிறார். சபை கலைகிறது)

 

……. இரண்டாம் களம் தொடரும்……..

வியாழன், 9 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

வசிஷ்டர்:-- (சபையோரைப் பார்த்து) ஜனங்களுடைய திருப்தியை நிச்சயப்படுத்துவதற்காகவே சக்கரவர்த்தி இப்படிக் கேட்பதே யொழிய அவர்களுடைய கருத்தையறியாமலல்ல. (தசரதரைப் பார்த்து) சக்கரவர்த்தீ! உமக்கோ வயதாய் விட்டது. இனி நீர் வீட்டிலிருந்தேனும் வனத்திற்குச் சென்றேனும் ஆத்மலாபத்திற்குரிய தவத்தைச் செய்யவேண்டுவது அவசியம். எல்லோரும் அதை அச்சமின்றிச் சொல்லலாம். உம்முடைய புத்திரன் இராமனோ சகல சற்குணங்களும் கூடி ஓர் உருவெடுத்து வந்ததுபோல் விளங்குபவன்.

மண்ணி னுநல்லண் மலர்மகள் கலைமகள் கலையூர்
பெண்ணி னுநல்லள் பெரும்புகழ்ச் சனகியு நல்லள்
கண்ணி னுநல்லன் கற்றவர் கற்றிலா தவரு
முண்ணு நீரினும் முயிரினு மவனையே யுவப்பார்.

அவன் தர்ம்பத்தினி ஜானகியோ பொறுமையில் நிலமகளினும் மேம்பட்டவள். அழகில் இலக்ஷ்மி தேவியினுஞ் சிறந்தவள். அறிவிற் கலைமகளினும் மிக்கவள். கற்பிற் பார்வதி போன்றவள். இத்தகைய அருங்குணங்கள் அமையப் பெற்ற சீதாபிராட்டியின் கண்ணுக்கு மிகவும் இனியவன் நம் இராமன். கற்றவரும் மற்றவரும் அவனைத் தாம் பருகு நீரினும், தமக்குரிய உயிரினும் மேலாகக் கருதியிருக்கின்றனர்.

மனிதர் வானவர் மற்றுளா ரறங்கள் காத்தளிப்பார்
இனியிம் மன்னுயிர்க் கிராமனிற் சிறந்தவரில்லை
அனைய தாதலி னரச்சிற் குறுபொரு ளறியிற்
புனித மாதவ மல்லதொன்றில்லையீ துண்மை.

மனிதர் தேவர் நாகராகிய உயிர்களனைவருக்கும் சீராமனைக் காட்டிலும் தரும நெறிகளைக் காப்பதிற் சிறந்தவர் வேறொருவருமில்லை. ஆதலால், சக்கரவர்த்தீ! யோசித்துப் பார்க்கும்போது உமக்கு உறுதிப் பொருளாவது தூய தவமேயன்றி வேறொன்றில்லை. இதனை நீர் அறிய வேண்டும். சற்றும் கவலை வேண்டாம். உம்முடைய உத்திராகிய இராமச்சந்திரன் சத்திய பராக்கிரமம் உடையவன். தருமத்தைக் கைக்கொண்டவன். ஜனங்களைக் களிக்கச் செய்வதில் சந்திரன் போன்றவன். வித்தையில் பிரஹஸ்பதி என்றே அவனைச் சொல்லலாம். நல்ல சீலமுள்ளவன். எதற்குங் கலங்காதவன். எளியருக்கும் எளியனாய் உலாவி எல்லோருடைய க்ஷேமத்தையும் உசாவுகிறவன். ஒரு பொழுதும் பழுதுபடாத சாந்தத்தையும், அனுக்கிரஹத்தையும் உடையவன். இந்தத் தகுதியெல்லாம் அமைந்த புத்திரனை அரசனாகக் கொண்டு வாழவேண்டு மென்னும் ஆசையினாலேயே அவ்வளவு துருதமாக ஜனங்கள் உம் விருப்பத்தை அங்கீகரித்தது. உம்முடைய அரசாட்சியில் அசூயை கொண்டன்று. சக்கரவர்த்தியின் சந்தேகத்தை நீக்கும்பொருட்டு ஜனங்களும் தங்கள் கருத்தை வாய்விட்டுச் சொல்லலாம்.

நகரமாந்தர் :-- (அனைவரும் ஒருகுரலாய்) வசிஷ்ட மகாரிஷி கூறியதே எங்கள் எல்லோருடைய உண்மைக் கருத்தாகும்.

தசரதர்:-- நீங்கள் யாவரும் ஒருமித்த மனதோடு என் மகன் இராமனுக்கு முடிசூட்டச் சம்மதித்ததைக் கேட்டு மிகவும் களிகூர்ந்தேன். எப்பொழுது நமது இராமச்சந்திரனை இராச்சியத்தில் பட்டாபிஷேகம் செய்து வைத்துக் கண்ணால் பார்ப்போ மென்று நான் நினைத்தது கைகூடிற்று.இராம பட்டாபிஷேகத்தை உங்களுடைய கோரிக்கையின்படி வெகு விரைவாகவும் விமரிசையாகவும் நடத்தத் தீர்மானிக்கிறேன். (வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ!

முற்று மாதவநின் வாசகங் கேட்டலு மகனைப்
பெற்ற வன்றினும் பிஞ்ஞகன் பிடித்தவப் பொருவில்
இற்ற வன்றினு மெறிமழு வாளவ னிழுக்கம்
உற்ற வன்றினும் பெரியதோ ருவகைய னானேன்.

முனிபுங்கவ! என் மகன் ஸ்ரீராமனைப் பற்றித் தாங்கள் வெளியிட்ட பொதுஜன அபிப்பிராயத்தைக் கேட்டு மிகவும் மனம் பூரித்தேன். இராமனை மகனாகப் பெற்றபொழுதும், ருத்திர தனுசை அவன் முறித்த அப்பொழுதும், பரசுராமனைப் பங்கப்படுத்திய அப்பொழுதும் யான் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் இப்பொழுது அதிக மகிழ்ச்சி யடைகிறேன். என் மனோரதம் நிறைவேறிற்று. முனிசிரேஷ்ட! இனிக் கால தாமதம் வேண்டாம். சித்திரை மாதம் மனோகரமான காலம். இன்றைய தினம் புனர்பூசம். நாளைய தினம் பூச நக்ஷத்திரம், பட்டாபிஷேகத்திற்கு உகந்த நாள். இதைப்போல் சிறந்த நாள் கிடைப்பது அரிது. ஆதலால் நாளைய தினமே பட்டாபி ஷேகத்தை வைத்துக் கொள்ளலாம். (ஜனங்களுக்குள் கலகலவென்று ஒரு சத்தம் உண்டாகிறது) அதுதான் சரி. என் மனம் உறுதியாயிருக்கும் பொழுதே பட்டாபிஷேகத்தை நிறைவேற்றிவிட வேண்டும். மனிதர் எண்ணம் மாறுதலுள்ளது. இன்றைக்குள்ள எண்ணம் நாளைக்கும் இப்படியே இருக்கு மென்று சொல்ல முடியாது. ஆதலால் நாளைய தினமே என் மகன் இராமச்சந்திரனுக்கு முடி சூட்டி விடுவது நல்லது. (சபையோர் கரகோஷம் செய்கின்றனர். தசரதர் வசிஷ்டரைப் பார்த்து) சுவாமீ! பட்டாபிஷேகத்திற்கு என்னென்ன வேண்டுமோ அவைகள் எல்லாவற்றையும் கொண்டுவந்து சேர்க்க உடனே மந்திரிகளுக்கு கட்டளையிடுங்கள். (சுமந்திரரைப் பார்த்து) மந்திரி! எல்லாம் வெகு துரிதமாகவும் ஒழுங்காகவும் நடைபெற வேண்டும். இப்பொழுது நமது இராமனைச் சீக்கிரம் இங்கு அழைத்து வாரும்.

சுமந்திரர் :-- அப்படியே (போகிறார்)

வசிஷ்டர்:-- (மற்ற மந்திரிகளைப் பார்த்து) மந்திரிகாள்! நீங்கள் அனைவரும் நாளைய தினம் சூரியோதயத்துக்குள் நமது அரசருடைய அக்கினிஹோத்திர சாலையில் பொன் முதலான பொருள்கள், இரத்தினங்கள், பூஜைக்குரிய பண்டங்கள், அநேகவிதமான மூலிகைகள், வெள்ளைப் புஷ்பங்களால் தொடுக்கப்பட்ட மாலைகள், பொரி, தேன், நெய், இவைகளைத் தனித்தனியாகக் கொண்டுவந்து சேர்க்க வேண்டும். மிகப் பரிசுத்தமான வஸ்திரங்கள், இரதம், ஆயுதங்கள், நால்வகைச் சேனைகள், எல்லாச் சுபலக்ஷணங்க ளுடனும் பொருந்திய பட்டத்து யானை, இரட்டை வெண்சாமரம், துவஜம், வெண்கொற்றக்குடை, நெருப்புப்போல் பிரகாசிக்கின்ற நூறு பொற்குடங்கள், பொற்பூண் பூண்ட கொம்புகளையுடைய ரிஷபம், ஊனமில்லாத புலித்தோல், இன்னும் என்னென்ன வேண்டுமோ அவைகளையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்தப்புர வாயில்களும் நகரத்து வாயில்களும் சந்தனத்தாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்பட்டு நல்ல வாசனை பொருந்திய தூபங்களாற் பூசிக்கப்பட வேண்டும். நாளைக் காலையில் தயிர் பால் ஆகிய இவைகள் மிகுதியாகக் கலந்த திவ்வியான்னங்களைக் கொண்டு நூறாயிரக் கணக்கான அந்தணர்களைத் திருப்தி யுண்டாக உண்பிக்க வேண்டும். அவர்கள் உள்ளங் குளிர, அவர்கள் இஷ்டப்படி நெய், தயிர், பொரி, பூர்ணமான தக்ஷிணை ஆகிய இவற்றைச் சற்காரஞ் செய்து கொடுக்க வேண்டும். சூரியோதயமாகும்போது ஸ்வஸ்திவாசனம் சொல்ல வேண்டும். ஆகையால் வேதியர் அனைவரையும் அழைத்து வாருங்கள். எல்லோரும் வந்து அமருவதற்கு ஆசனங்கள் அமைத்து வையுங்கள். நகரம் முழுவதும் கொடிகள் கட்டுங்கள். வீதிகளெல்லாம் ஜலம் தெளியுங்கள். வாத்தியக்காரர்களும், நன்றாக அலங்கரித்துள்ள கணிகையர்களும் இராஜ கிரகத்தின் இரண்டாங் கட்டில் சித்தமாக இருக்க வேண்டும். கோவில்களிலெல்லாம் அபிஷேக அலங்கார நிவேதனங்கள் நடக்க வேண்டும். அவ்விடங்களில் யாவருக்கும் தக்ஷணை சகிதமாகப் போஜனம் நடக்க வேண்டும். நமது சைனியங்களுள் ஒவ்வொரு போர் வீரனும் நன்றாக ஆடையாபரண மணிந்து, ஆயுதமேந்தி, அரண்மனை முற்றத்தில் வரிசை வரிசையாகக் காத்துக் கொண்டிருக்க வேண்டும்.

(சுமந்திரர் வருகிறார். அவருக்குப் பின்னாக இராமர் வருகிறார். தந்தையை முதலில் வணங்குகிறார். பின்பு வசிஷ்டர், விசுவாமித்திரர் முதலிய முனிவர்களை வணங்குகிறார். மற்றையோர் இராமனை வணங்குகின்றனர். இராமர் அவரவர் வணக்கங்களை அவரவர் தகுதிக்குத் தக்கபடி தலையைத் தாழ்த்தலாலும், “ஆஹா’ என வாயாற் சொல்லலாலும், கண்ணாற் பார்த்துத் தலையை அசைத்தலாலும் அங்கீகரிக்கிறார். “இராமச்சந்திரா! என் அருகில் வந்து அமர்’ என்று தசரதர் சொல்லுகிறார். இராமர் “வேண்டாம், நான் இங்கேயே அமருகின்றேன்’ என்று கூறி ஓர் ஆசனத்தில் உட்காருகிறார்)

தொடரும்……