புதன், 15 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

(மந்தரை வந்தாளே)

அங்கம் 1

மூன்றாங்களம்

இடம்: அயோத்தி நகர் வீதி

காலம் : மாலை

பாத்திரங்கள் : மந்தரை, சில மனிதர்கள்

(வீதிகள் புஷ்பம், தோரணம், கொடி, இலை முதலியவைகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. ஜனங்கள் ஸ்நானம் பண்ணி விபூதி திருமண்கள் தரித்துத், தட்டில் மாலைகளையும் பலவிதப் பலகாரங்களையும் வைத்து ஏந்திக்கொண்டு போகின்றனர். பிராமணர்கள் வேதம் ஓதிக் கொண்டு நடக்கின்றனர். நானாவித வாத்தியங்கள் முழங்குகின்றன. மந்தரை வருகிறாள்.)

மந்தரை: என்ன விசேஷம்? அரண்மனையில்தான் ஒருநாளும் இல்லாத திருநாளாயிருக்கிற தென்றிருந்தேன். எங்கும் அப்படியே இருக்கிறதே. வீதிகளெல்லாம் அலங்கரிக்கப் பட்டிருக்கின்றன. எங்குப் பார்த்தாலும் சந்தோஷ முழக்கம் மிகுதியாயிருக்கிறது. ஜனங்கள் ஸ்நானம் செய்து வெண்பட்டு உடுத்தி வெகு ஆசாரமாகப் போகின்றனர். புஷ்பமாலை முதலிய புனிதப் பதார்த்தங்களைக் கொண்டு செல்கின்றனர். வாத்தியகோஷம் எங்கும் நிறைந்திருக்கிறது. அரண்மனையில் கோசலை வெகு ஆனந்தத்துடன் ஜனங்களுக்குப் பணத்தைப் பிடிபிடியாக அள்ளி வீசுகிறாள். அவள் எப்பொழுதும் பணத்தை இறுகப் பிடிக்கிறவள். அப்படிப்பட்டவள் இன்று இப்படிச் செய்வதற்குக் காரணம் தெரிய வில்லை. நல்லது, யாரோ இருவர் பேசிக்கொள்கிறார்கள். அதைக் கவனிப்போம்.

(ஒருவன் அதிவேகமாகப் போகிறான். மற்றொருவன் அவனை வழிமறித்துப் பேசுகிறான்.)

ஒருவன்: -- என்னையா ஓடுகிறீர்; எங்கே இவ்வளவு வேகமாய்?

மற்றவன்:-- போகவேண்டியிருக்கிறது.

முன்னவன்:-- எங்கே?

மற்றவன்:-- அடுத்த கிராமத்தில் நம்முடைய பெண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை அழைத்துவரப் போகிறேன்.

முன்னவன்:-- அதற்கென்ன இவ்வளவு அவசரம்?

மற்றவன்:-- என்னைய்யா? அயல்நாட்டிலிருந்து இப்பொழுதுதான் வந்தவர்போல் பேசுகிறீர். நாளைக் காரியமாயிருக்கிறது. அந்தக் காட்சியை அவர்களும் பார்க்க வேண்டாமா?

முன்னவன்:-- ஓகோ, இராம பட்டாபிஷேகத்துக்கா? அது நாளை எந்நேரத்தில் நடைபெறும்?

மற்றவன்:-- அதிகாலையில்

முன்னவன்:-- ஏது இவ்வளவு அவசரத்தில் வைத்துக் கொண்டார்கள்?

மற்றவன்:-- அந்த விவரமெல்லாம் பேசிக்கொண்டிருக்க இதுதானோ சமயம்? எல்லாம் நாளைமறுதினம் பேசிக்கொள்வோம். இப்பொழுது என்னை விடும். (போகிறான். மற்றவன் வேறுவழியாகப் போகிறான்)

மந்தரை:-- அப்படியா செய்தி! ஓகோ, இதற்குத்தானா வீதிகளில் இவ்வளவு விமரிசை! இதற்குத்தானா அரண்மனையில் இவ்வளவு கொண்டாட்டம்! கோசலையின் பூரிப்பு இதனால்தானா! சக்கரவர்த்தியின் வஞ்சம் இப்படியா இருக்கிறது? அடி கோசலை! உன் மகன் பட்டத்துக்கு வரப்போகிறானென்ற செருக்கா? சந்தோஷப்பெருக்கா? அடி, அரண்மனைச் சேடியர்களுக்கெல்லாம் வாரிவாரி இறைத்தையே! அப்பொழுது நான் அங்கு வந்து நின்றது உன் கண்ணுக்குத் தெரியாமலா போயிற்று! நாளைக்கு உன் மகனுக்குப் பட்டமானால் இன்றைக்கே உனக்குக் கண் குருடாகவா போய்விட்டது! அடி! அற்பமதியினளே! இதுவொரு வாழ்வா?

சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம்வந் துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுள்ளார் மூக ராவர்
பறியணி செவியு ளாரும் பயிறரு செவிட ராவர்
குறிபெறு கண்ணு ளாருங் குருடராய் முடிவ ரன்றே.

வாழ்வுந்தாழ்வும் ஒருநிலையல்லவடி. “செல்வம் சகடக்கால் போல வரும்” என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? அற்பர்தாம் இந்தச் செல்வத்தைப் பெரிதாக மதிப்பர். ‘இந்தச் செல்வம் வந்தடைந்தால் வாயுள்ளவரும் ஊமையராவர்; காதுள்ளவருஞ் செவிடராவர்; கண்ணுள்ளவருங் குருடராவர்’ என்று பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை இன்று பிரத்தியக்ஷமாக உன்னிடத்தில் தானடி கண்டேன். அடி இந்த செல்வம் உனக்கு நிலைக்குமா? இதை நிலையென் றெண்ணி உன்னைப்போல் மயங்கும் பேதையர் எத்தனை பெயரோ?

அம்பொற் கலத்து ளடுபா லமர்ந்துண்ணா வரிவை யந்தோ
வெம்பிப் பசிநலிய வெவ்வினையின் வேறாயோ ரகல்கை யேந்திக்
கொம்பிற் கொளவொசிந்து பிச்சையெனக்கூறி நிற்பாட் கண்டும்
நம்பன்மின் செல்வ நமரங்கா ணல்லறமே நினைமின் கண்டீர்.

என்றபடி இந்த அற்பமதி படைத்த கோசலையைப்போல பொற்கிண்ணத்திற் பாலுஞ்சோறும் உண்டு களித்த ஒருத்தி காலகதியினால் உடல்வாடி, பசியால் வருந்தி மட்சட்டிக் கையிலேந்தி பிச்சையெனக் கூவித் திரியும்படியும் நேரும். அடி கோசலை! ஏன் இப்படிக் கெட்டுப் போகிறாய்? திடீரென்று அதிர்ஷ்டம் வந்துவிட்டதால் உனக்குத் தலைகால் தெரியவில்லை போலிருக்கிறது! அடிமதியில்லாதவளே! அடி அற்ப சந்தோஷி! சக்களத்தியின் தாதியாயிருந்தா லென்னடி? அவளண்டை வைத்திருக்கும் மாற்சரியத்தை என்னிடத்துமா காட்டவேண்டும்? மகனுக்கு மகுடாபிஷேகமென்று கேள்விப்பட்ட மாத்திரத்தில் இவ்வளவு துவேஷத்தைக் காட்டி விட்டாயே! அபிஷேகமாகித் தேசம் உன் மகனுக்குச் சுவாதீனப்பட்டு விட்டால் என்ன செய்யமாட்டாய்? உன் சக்களத்தியையும் அவள் உற்றார் உறவினர்களையும் உடனே கொன்று விட்டுத்தானே மறுவேலை பார்ப்பாய். அடி, நான் இருக்கும் வரையில் உன்னை அவ்வளவு தூரம் மிஞ்ச விடமாட்டேன். உனக்கு வந்த செல்வம் நிலைத்துவிட்டதாக எண்ணாதே! அந்த நினைப்பால் பல பல யோசனைகள் பண்ணாதே!

பல்கதிர் விரித்துத்தோன்றிப் பாடுசெய் கதிரே போல
மல்லனீ ருலகிற் றோன்றி மறைந்திடு நும்மை விட்டுச்
செல்வமென் றுறுவதற்குஞ் செல்வமென் றுரைக்கும்பேர்நன்
றல்லலை விளைப்ப தாகா தரும்பெறற் செல்வம் பாவாய்.

அடிபாவாய்! ஜகஜோதியாய்த் தோன்றுகின்றானே சூரியன், அவன் என்றும் அப்படியே இருக்கின்றானா? முப்பது நாழிகையில் மறைந்து போகின்றானில்லையா? உன் வாழ்வும் அவனைப் போன்றதுதான். முப்பது நாழிகைக்குள் உனக்கு வந்த செல்வம் ஒழிந்தாலும் ஒழிந்துவிடும். செல்வம் என்று பெரியோர் இதற்கு ஏன் பெயரிட்டார்கள் தெரியுமா? இது யாரைப்போய் அடைகிறதோ, அவர்களிடத்து ‘நாங்கள் செல்வம், போய்விடுவோம், உன்னிடத்தில் தங்கமாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டே போய் அடைகிறது. ஆதலால்தான் இதைச் ‘செல்வம்’ என்று பெரியோர்கள் சொல்கிறார்கள். இதனால் மக்களுக்கு வருந்துன்பங்களுக்குக் கணக்கில்லை. ஆனதால் இதை நிலையாக எண்ணி இறுமாப்படையாதே. உன் மகன் இராமனுக்குப் பட்டந் தகுமா? அவனுக்கு அரசகாரியங்கள் என்ன தெரியும்? அந்தச் சித்திராங்கி சீதையோடு நாளெல்லாம் கொஞ்சிக் கொண்டிருக்கத் தெரியும். என்னைப்போல் ஒரு கூன்விழுந்த கிழவியகப்பட்டால் அவளை வில்லுண்டையால் அடித்துப் பரிகசிக்கத் தெரியும். அவன் வில்லாண்மைகளெல்லாம் பெண்களிடத்தில்தான்; தாதியாகிய என்னை வில்லாலடித்தான்; தாடகை யென்னும் ஒரு பெண்ணை வில் வளைத்து அம்பெய்து கொன்றான். சிவன் தனக்கு உபயோகமில்லையென்று எறிந்த சொத்தை வில்லைப் பக்குவமாய் வளைக்கத் தெரியாமல் முறித்தெறிந்தான். ஞானப் பைத்தியங் கொண்ட ஜனகன் வயலிற் கண்டெடுத்த ஒரு நாதியற்ற பெண்ணை விவாகஞ் செய்து கொண்டான். இவனுக்குப் பட்டம் ஒரு கேடா? பட்டாபிஷேகத்துக்குக் குறித்த லக்கினம் நல்ல லக்கினம் போலிருக்கிறது! அதுமுதல் இராமனுக்கு வரும் இடையூறுகள் பல; அதுமுதல் நானும் என் உதவியைக் கோரினவர்களும் பெறும் லாபங்கள் பல. சரி, இனி நான் அலக்ஷியமாய் இருப்பது தவறு; திரும்பவும் அரண்மனை செல்லுகிறேன். கைகேயியைக் கண்டு அவள் மனதைக் கரைத்துக் காரியத்தை முடிக்கிறேன். (போகிறாள்)

கைகேயியின் மனதை மந்தரை கரைக்கும் நாலாவது களம் 17-06-2016  முதல் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக