செவ்வாய், 30 ஜூன், 2009

அன்பில் ஸ்வாமி கவிதைகள்

யாஹூ குழுமத்தில் வைணவம் சம்பந்தமான அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமான பெரியவர் டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. அவரது வைணவ சித்தாந்த நூல்கள் சில ஸ்ரீ Dr. சடகோபன் ஸ்வாமியால் மின்புத்தகங்களாகவும் வந்துள்ளன. ஆனால் பலருக்குத் தெரியாதது அவர் ஒரு பெரிய கவிஞர் என்பது. அவருடைய "தயா சதகம்' ஒரு தேன் சொட்டும் அருமையான தமிழாக்கம். அதை சில ஆண்டுகளுக்கு முன் மின்புத்தகமாக இணையத்தில் வெளியிடும் பாக்யம் அடியேனுக்குக் கிடைத்தது. எனக்காக அவரிடம் உள்ள பழைய புத்தகங்களை அனுப்பும்போது அவரது இளவயதில் அவர் எழுதிய கவிதைகளிலிருந்து சிலவற்றைத் தொலைபேசியில் படித்துப் பரவசப் படுத்தினார். அவற்றுள் ஓரிரண்டை இங்கே மற்றவர்களும் படித்து மகிழ இட்டுள்ளேன். "சரணாகதி" மேன்மை பற்றிப் படித்துக் கொண்டு வருகையில் அவன் பெருமை போற்றும் கவிதைகள் நமக்குக் கிடைத்ததும் பொருத்தம்தானே!

(அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன் (புதுதில்லி) பள்ளி, கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் “பத்மம்” என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள்)
---
கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!

வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!

குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!


திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----

எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!

(தொடரலாம் ! ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி அனுமதித்தால்)

ந்யாஸதசகம் 4 தொடர்ச்சி


தன்னினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்துத் தான்விளைத்தும் விலக்குநாத
னெந்நினைவை யிப்பவத்தி லின்று மாற்றி
யிணையடிக்கீ ழடைக்கலமென் றெம்மை வைத்து
முன்னினைவால் யாமுயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி
நன்னினைவா
னாமிசையுங்க கால மின்றோ
நாளையோஓ
வென்றுநகை செய்கின் றானே.
---- (
தேசிகமாலை, அதிகாரச்சுருக்கு 49)

[ஸர்வேச்வரன் ஸங்கல்பித்த விஷயத்தை எவரும் தடை செய்ய இயலாது. அவன், தன்னை அடையாத நாஸ்திகர்களுக்குச் சகலவித ஆசைகளையும் உண்டாக்கி அவர்கள் அந்தப் போகங்களை அடைய முடியாது தானே தடை செய்கின்றான். இத்தகைய எம்பெருமான் நம்மீது அருள்புரிந்து நமக்கு ஸம்ஸாரத்தில் உள்ள நசையைத் தீர்த்தான் ; தன் திருவடிகளின் கீழே நம்மைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டான். முன்பு அகங்கார மமகாரங்களால் நமக்கு ஏற்பட்ட கர்மங்களால் தனக்கு உண்டான கோபம் தீர்ந்தான் ; நமக்கு மோக்ஷத்தை அளிக்க முற்பட்டுப் பல அவதாரங்களையும் செய்து நம்மோடு கலந்து பரிமாறினான். இப்படி யிருந்தும் இந்த அருமையை அறியாத நாம் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்றைக்கு நாளைக்கு' என்று காலம் தாழ்த்துவதைக் கண்டு அவன் பரிஹஸிக்கின்றான். என்னே நம் அறியாமை ! 'நான் மோக்ஷம்கொடுப்பதற்கு விரைந்தாலும் சேதநன் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்று ஆகட்டும், நாளை ஆகட்டும்' என்று காலம் தாழ்க்கின்றான். என்னே இவன் அறியாமை !' என்று பகவான் பரிஹஸிக்கின்றான் என்க] என்றும் ;

ஒன்றே புகலென் றுணர்ந்தவர் காட்டத் திருவருளா
லன்றே யடைக்கலங் கொண்டநம் மத்தி கிரித்திருமா
லின்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம்
நன்றே வருவதெல் லாநமக் குப்பர மொன்றிலதே.
(தேசிகமாலை அமிருதரஞ்சனி 18)

[ ஐம்பொருளையும் சரீராத்மபாவம் முதலிய ஸம்பந்தத்தையும் அறிந்த ஆசார்யர்கள் 'ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே உபாயம்' என்று உபதேசிக்க, அல்லது, எம்பெருமானே உபாயம் என்று அறிந்த ஆசார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை ஸமர்ப்பிக்க, பிரதி உபகாரத்தை எதிர்பாராத, சிறந்த அவனுடைய கிருபையினால், அப்பொழுதே ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய அத்திகிரி நாதனான பேரருளாளர், இப்பொழுதே முத்தியைப் பெற நாம் ஸம்மதித்தால் தம்முடைய இரண்டு திருவடிகளில் சேர்த்துக் கொள்வார். இனி மறுபடியும் இக்கர்ம பூமியில் பிறக்க மாட்டோம். இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே. இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றும் இல்லை.] என்றும் இந்ந்யாஸதசகவாசிரியர் தாமே கூறி யருளியுள்ளார்.

இப்பாசுரத்துக்கு நம் ஸ்வாமியே வியாக்கியானம் இட்டுள்ளார். அதிற்சில பங்க்திகள் தருவாம் இங்கு.

'நம்மத்திகிரித் திருமால்' என்றது --- 'வேகவத்யுத்தரேதீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம், வரதஸ் ஸர்வபூதாநாமத்யாபி பரித்ருச்யதே', 'நிகரில் புகழாயுலகு மூன்றுடையாயென்னை யாள்வானே' இத்யாதிகளிற்படியே ஆச்ரித ஸம்ரக்ஷணோப யுக்த ஸௌசீல்யஸ் ஸ்வாமித்வ விசிஷ்டனாய், நண்ணினவர்களுக்கு விண்ணுலகந்தர விரைந்து ரக்ஷாபேக்ஷாப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதா நோந்முகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

'இன்றே யிசையிலிணையடி சேர்ப்பர்' என்றது -- 'க்வாஹ மத்யந்துர்புத்தி:க்வ சாத்ம ஹிதவீக்ஷணம், யத்தி தம் மம தேவேச ததாஜ்ஞாபய மாதவ, த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ்நே நாந்யா க்வாபி கதிர் மம, அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத்பதாம் புஜே.' இத்யாதிகள்படியே பரமபுருஷார்த்தைக நமஸ்காரமளவில் அப்போதே கொடுவுலகு காட்டாதே கொழுஞ்சோதி யுயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.
(ஸ்ரீமத்ரஹஸ்யரத்நாவளீ ஹ்ருதயம்)

இச்சுலோகத்தில் த்வய மந்திரத்தின் கிரமத்தை அநுஸரித்துச் சரணாகதி செய்ததின் பின் பலனைப் பிரார்த்திக்கிறார்.

திங்கள், 29 ஜூன், 2009

எழுத்துரு விடுபட்ட ஒரு தகவல்


எழுத்துரு பற்றிய எனது முந்தைய பதிவில் ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போயிற்று. Firefox உபயோகிப்பவர்கள் allow pages to choose their own fonts என்பதில் உள்ள டிக் குறியை எடுத்து விடுங்கள்.

Internet Explorerல் fonts அருகில் உள்ள accesibilityல் க்ளிக் செய்து விரியும் விண்டோவில் ignore website font என்பதை டிக் பண்ணி ok கொடுத்து வெளியேறுங்கள்.

ந்யாஸதசகம் 4


ஸ்ரீமந் அபீஷ்டவரத
த்வாம் அஸ்மி சரணம் கத:
ஏதத் தேஹாவஸாநே மாம்
த்வத்பாதம் ப்ராப்ய ஸ்வயம். (4)

[ஸ்ரீமந் -- திருமாமகளுடன் கூடிய ஸ்ரீமந்நாராயணனே ! இறையும் அகலகில்லாத பெரியபிராட்டியார் உறை மார்ப ! அபீஷ்டவரத ! -- ஆச்ரிதர்களுக்கு இஷ்டமான பலன்களை அளித்துக் காக்கின்றதனால் வரதன் என்று அஸாதாரமான திருநாமத்தையுடைய பேரருளாளரே ! த்வம் -- தேவரீரை சரணம் -- உபாயமாக கத;அஸ்மி -- (அடியேன்) அடைந்தவனாக இருக்கின்றேன், ஆகின்றேன் ; ஏதத் தேஹா வஸாநே -- சரீரத்தின் இறுதிக் காலத்திலே; த்வத் பாதம் -- தேவரீருடைய திருவடிகளை, வைகுந்தநாதனான தேவரீர் திருவடிகளை ; ஸ்வயம் -- தேவரீரே; ப்ராப்ய -- (வேறோர் உதவியின்றி) அடைவிக்க வேண்டும் ]

பெருந்தேவிநாதனே ! கருதவரந்தருந் தெய்வப் பெருமாளே ! தேவரீரை அடைக்கலமாக அடைந்திருக்கிறேன். இச்சரீரம் விழும்பொழுது அடியேனுக்குத் தேவரீர் திருவடிகளைத் தேவரீரே சேர்ப்பிக்க வேண்டும்.

வேண்டுவார் வேண்டுவன நல்கி அளிக்கும் திருநாரணனே ! அடியேன் தேவரீரையே சரணமாகப் பற்றினேன். தேவரீர் வேறொரு உதவியை எதிர்பாராமல் இந்தச் சரீரத்தின் முடிவிலே தேவரீர் திருவடிகளை அடைவிக்க வேண்டும்.

ஸ்ரீய: பதியான நாராயணனே உபாயமாகவும் உபேயமாகவும் இருக்கின்றான் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றதாயிற்று.

ஏதத் தேஹா வஸாநே -- என்பதனால் ஆர்த்தனாய் இப்பொழுதே மோக்ஷம் தந்து அருள வேண்டும் என்று கோரிப் பிரபத்தி பண்ணினாலும் உடனே சரீரத்தின் முடிவைச் செய்து மோக்ஷத்தைக் கொடுப்பன் என்று ஏற்படும். பிரபத்தி இருவகைப் படும். அவையாவன :-- (1)த்ருப்த ப்ரபத்தி (2) ஆர்த்தப் ப்ரபத்தி. இச்சரீரம் உள்ள வரையில் கர்ம பலன்களை அனுபவித்து, இறுதியில் மோக்ஷத்தைப் பெற விரும்பிச் செய்யும் சரணாகதி த்ருப்த ப்ரபத்தி. இச்சரீரம் உள்ளவரையிலும் கூடப் பொறுக்காது இந்த க்ஷணமே மோக்ஷம் பெறவேண்டும் என்று விரும்பிச் செய்யும் சரணாகதி ஆர்த்தப்ரபத்தி.

புகலுலகி லில்லாது பொன்னருள்கண் டுற்றவர்க்கு
மகலகிலா வன்பர்க்கு மன்றேதன் னருள்கொடுத்துப்
பகலதனாற் பழங்கங்குல் விடிவிக்கும் பங்கயத்தா
னகலகிலே னென்றுறையு மத்திகிரி யருண்முகிலே.
(தேசிகமாலை, அருத்தபஞ்சகம் 8.)

[திருமகள் க்ஷணகாலமும் பிரியமாட்டேன் என்று நித்யவாஸம் செய்யப் பெற்றவனும், திருவத்திமாமலையில் நின்று கருணையாகிய நீரைப் பொழியும் மேகம் போன்றவனுமான பேரருளாளன், உலகத்தில் வேறு உபாயம் அநுட்டிக்க முடியாமல், பெரிய பிராட்டியின் திருவருளைப் புருஷகாரப் பிரபத்தியாகப் பெற்று, தன்னைச் சரணம் அடைந்தவருக்கும், தனது அநுபவத்தை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரிந்து இருக்கமுடியாத காதல் உள்ள பாகவதர்கட்கும் அவர்கள் பிரார்த்தித்த காலத்திலே தன் பரமகிருபையை வைத்து மோக்ஷாநுபவம் ஆகிய பகலால் அநாதியான ஸம்ஸாரம் ஆகிய காளராத்திரியை நீக்கி பொழுது விடியச் செய்வான்] என்று இவ்வேதாந்தவாரியனே விளம்புதல் காண்க.

நம்மாழ்வார்

சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
(திருவாய்மொழி 9-10-5)

[ஈடு - அஞ்சாம் பாட்டு . இப்படி பக்தியோகத்தால் ஆச்ரயிக்க க்ஷமரமன்றிக்கே தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்தருளும்படியை அருளிச் செய்கிறார்.]

(சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்) ஜந்ம்வ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றேராயாகிலும், தன் திருவடிகளையே உஉபாயமாகப் பற்றினார்க்கெல்லாம் ரக்ஷகனாம். கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன ப்தி யோகம் அதிக்ருதாதிகாரம், இதில் சொல்லுகிற ப்ரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது; "ஸமோஹம் ஸர்வபூதேஷு" என்னக்கடவதிறே. பகவத் விஷயந்தான் ஸ்பர்ச வேதியாயிருக்குமிறே; கைசிகத்தில் பகவத் ஸம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராஹ்மணனுடைய ஆசாரவைகல்யத்துக்குப் பரிஹாரமாய்த்து; அவ்விடத்திலெல்லாம் சொல்லுகிற அர்த்தம் இதுவே யாய்த்து.

(மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்) -- இவன் தன் பக்கலிலே பரந்யாஸம் பண்ணின அன்று தொடங்கி இவனையொழியத் தனக்குச் செல்லாமை யுண்டாயிருக்கச் செய்தேயும் , இவனுடைய ருசியை அநுவர்த்தித்து, சரீரவிச்லேஷத்தளவும்அவரைப்ரதீக்ஷனாய் நின்று, பிள்ளையதுண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன். தன் திருவடிகளைப் பற்றினவன்றே தானிருக்கிற விடத்திலே இவனைக் கொடுபோய்ச் சேரவைத்துக் கொள்ளவேண்டியிருக்கச் செய்தேயும், நடுவு இவனிருக்கும் நாலு நாளும் அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாயிருக்கையாலே, "மரணமானால்" என்கிறது. "மரணமானால்" என்கிறது -- தனக்கு அசக்தியில்லை, இவனுக்குக் கர்த்தவ்யமில்லை, இவன் ருசியைக் கடாக்ஷித்து நிற்கிற வித்தனை. இப்பாட்டில் "மரணமானால்" என்றத்தைக் கொண்டிறே கீழ்ச்சொன்ன நிரூபரணமெல்லாம் என்றிறே அருளிச் செய்தார்.

இன்னும் வரும்

எழுத்துரு



















நண்பர் ஒருவர் வந்திருந்தார். என்னுடைய கணிணியில் தமிழ் அழகாக, படிப்பதற்கு சுகமாக இருப்பதாகவும் ஆனால் அவருடையதிலோ மொச்சைக் கொட்டை போல் பெரிதாய் அழகில்லாமல் இருப்பதாகவும், சற்று நீளமான தமிழ் அஞ்சல்களைப் படிப்பது அலுப்பூட்டுகிறது என்றும் குறைப் பட்டுக் கொண்டார். அவர் எப்போதும் வ்ண்டோஸுடன் வரும் லதா எழுத்துருவையே உபயோகப் படுத்துவது தெரியவந்தது. Arial unicode MSக்கு மாற்றிக் கொடுத்தேன். இதுவரை லதாவையே உபயோகப் படுத்துபவர்களும் ஏரியலுக்கு மாறிப் பாருங்களேன். MSoffice 2003 or 2007 உங்களிடம் இருந்தால் அதனுடனேயே Arial unicode MS font இருக்கும். Tools -- internet options போய் திறக்கும் விண்டோவில் fonts க்ளிக் செய்து latin bases fontsல் Arial unicode Ms என மாற்றிக் கொள்ளுங்கள். Firefox உபயோகிப்பவர்கள் tools-options-content-fonts-advanced வழியாக இதைப் பண்ணிக் கொள்ளலாம். Arial unicode MS போல இன்னொரு அழகான எழுத்துரு e-TamilOT. ஒருவேளை இவை உங்கள் கணிணியில் இல்லையென்றால் http://tinyurl.com/mtwqre சென்று இறக்கி c:/windows/fonts folderல் நிறுவிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிலருக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட்கள் உதவியாக இருக்கலாம்.