வியாழன், 21 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 10

ஶ்ரீ மஹாபாரத வினா விடை
சபா பர்வம்

வினாக்கள்  33 -- 50

 

வினா33.- யாகம்‌ முடிந்தவுடன்‌ தர்மபுத்திராது மனம்‌ எவ்வாறிருந்தது? ஏன்‌?

விடை- தர்மபுத்திரரது மனம்‌ சிசுபாலவதத்தை நினைந்து குழம்பிக்‌ கொண்டிருந்தது. நாரதர்‌ முன்னமே இந்த யாகத்தைப்பற்றி சொல்லி முடிக்குங்கால்‌, இதற்கு ஏதாவது நடுவில்‌ தடைகள்‌ வந்தால்‌ ஸகல க்ஷத்திரியர்களும்‌ நாசமடையும்படியான யுத்தமுண்டாகும்‌ என்று சொல்லியிருந்த வார்த்தை ஞாபகத்தில்வர, தர்மபுத்திரரது கஷ்டம்‌ அதிகரித்து விட்டது. இதைப்பற்றி வியாஸரிடம்‌ கேட்டதில்‌, அவர்‌ “இந்தச்‌ சின்னங்களுடைய பலன்‌ 13-வருஷம்‌ இருக்கும்‌, அதன்‌ கடைசியில்‌ க்ஷத்திரியருக்‌கே உனது மூலமாய்‌ நாசம்‌ வந்தாலும்வரும்‌. இதற்காக நீ துக்கப்பட்டு பிரயோஜனமில்லை" என்று சொல்லிப்போனார்‌. இதைக்கேட்டு தர்மபுத்திரருக்குத்‌ துக்கமதிகரித்‌தது. கடைசியாக இதைத்‌ தடுப்பதற்குத்தான்‌ யாருக்கும்‌ ஹிதத்தையே செய்வதாக இவர்‌ சபதம்‌ செய்து கொண்டார்‌.

வினா 34.- இந்த யாகம்‌ முடிந்ததும்‌ யார்யார்‌ ஊருக்குச்‌ சென்றார்கள்‌? யார்‌ யார்இந்திரப்ரஸ்தத்திலேயே இருந்தார்கள்‌?

விடை...  கிருஷ்ண பகவான்‌, பீஷ்மர்‌ முதலிய ஸகல இராஜாக்கள்‌ தர்மபுத்திரரால்‌ தகுந்த மரியாதை செய்யப்பட்டுத்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ சென்றார்கள்‌. ஆனால்‌ துர்யோதனன்‌, சகுனி இவ்விருவர்‌ மாத்திரம்‌ இந்திரப்ரஸ்தத்தில்‌ சிலகாலம்‌ தங்கி இருந்தார்கள்‌.

வினா 35.- இவர்கள்‌ இங்கு இருக்கையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... துர்யோதனனும்‌, சகுனியும்‌ ஒருவரது ஸஹாயமுமின்றி மயஸபையைச்‌ சுற்றிப்பார்க்கப்‌ போனார்கள்‌. போனவிடத்தில்‌ இவர்கள்‌ தண்ணீரில்லாத விடங்களில்‌ துணிகளைத்‌ தூக்கிக்கொண்டும்‌, தண்ணீர்‌ நிறைந்த தடாகங்களில்‌ தெரியாது விழுந்தும்‌, கதவில்லா விடங்களில்‌ பிரமித்து முட்டிக்கொண்டும்‌ தத்தளித்தார்கள்‌. இந்நிலையைக்கண்ட பீமன்‌ முதலிய ஸாதாரண ஜனங்களும்‌ ஸ்திரீகளும்‌ வயிறு வெடிக்கச்‌ சிரித்தார்கள்‌. ஆனால்‌ தர்மாத்மாவான தர்மராஜர்‌ மாத்திரம்‌ சிரிக்காது இவர்கள்‌ படுந்துயரத்திற்கு இரங்கி இவர்களுக்குப்‌ புதிய வஸ்திரங்களையும்‌ அழைப்பித்துக்‌ கொடுத்தார்‌. இதைக்கூட வாங்கிக்கொள்ளாது அதிக கோபத்தோடும்‌ வெட்கத்தோடும்‌ ஒருவரோடும்‌ சொல்லிக்‌ கொள்ளாது, இவ்விருவரும்‌ ஹஸ்தினா புரம்‌ போய்ச்சேர்ந்தனர்‌.

வினா 36.- இவர்கள்‌ ஊர்போய்ச்‌ சேர்ந்ததும்‌ என்ன ஆலோசனை செய்தார்கள்‌?

விடை.- தர்மபுத்திரரது இராஜஸூய வைபவத்தைக்கண்டு வயிற்றெரிச்சல்‌ துர்யோதனனுக்கு அதிகரிக்க, தர்மபுத்திரரது வைபவங்களை அபகரியாது தான்‌ உயிர்‌ தரிப்பது அஸாத்திய மென்று சகுனி, கர்ணன்‌ முதலிய துராத்மாக்களோடு இவன்‌ கலந்து பேசினான்‌. சகுனி தனது மருமகன்‌ படுங்கஷ்டத்தைக்‌ கண்டு தான்‌ தர்மபுத்திரரைச்‌ சூதாட்டத்தில்‌ வென்று அவரது வைபவங்களைத்‌ துர்யோதனனுக்‌ குக்‌ கொடுப்பதாகச்‌ சொன்னான்‌. இதன்பின்பு தர்மபுத்திரரை சூதாட அழைக்க வேண்டியதற்குத்‌ தகுந்த உபாயங்களைச்‌ செய்யத்‌ தொடங்கினார்கள்‌. வினா 37.- இவர்கள்‌ என்னென்ன செய்தார்கள்‌? அவைகள்‌ எவ்வாறு முடிந்தன? விடை- புதிதாய்‌ ஸபை நிர்மாணம்‌ செய்து அதைப்பார்ப்பதற்குப்‌ பாண்டவரை அழைப்பது போல்‌ அழைத்து அவர்களைச்‌ சூதாடும்படி செய்து இராஜ்யம்‌ முதலிய வைபவங்களைப்‌ பறித்துக்கொள்ளவேண்டுமென்று ஒரு ஸபையைத்‌ திருதிராஷ்டிர னது அனுமதியின்‌ பேரில்‌ கட்டத்தொடங்கினார்கள்‌. விதுரர்‌ துர்யோதனாதியரது எண்ணப்படி விடக்கூடாதென்று தடுத்துச்‌ சொல்லியும்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ பிள்ளைகளது வார்த்தை ஹிதமாகப்பட, ஸுபைகூடிய சீக்கிரத்தில்‌ கட்டிமுடிந்தது. உடனே விதுரரையே திருதிராஷ்டிரன்‌ பாண்டவரை அழைக்கும்படி ஏவினான்‌.

வினா 38.- விதுரர்‌ இந்திரப்ரஸ்தம்‌ சென்று என்ன செய்தார்‌? கடைசியில்‌ என்ன நேரிட்டது?

விடை.-  பாண்டவரிடம்‌ உண்மையை உள்ளபடி விதுரர்‌ சொல்ல தர்மபுத்திரர்‌ "யார்‌ யார்‌ என்னோடு சூதாடப்‌ போகிறார்கள்‌" என்று கேட்டார்‌. விதுரர்‌, சகுனி முதலிய மோசக்காரர்களே என்றும்‌, அவர்கள்‌ சதியாலோசனை செய்திருக்கிறார்கள்‌ என்றும்‌ வெளியிட்டார்‌. தர்மராஜர்‌ இப்பொழுது திருதிராஷ்டிராது உத்தரவுப்படி நான்‌ ஹஸ்தினாபுரி வரவேண்டியது தான்‌. நானாக புரட்டான சூதாட ஒருநாளும்‌ விரும்ப மாட்டேன்‌. என்னை யாராவது சூதாட அழைத்தால்‌, என்‌ விரதப்படி தடுத்துப்‌ பேசவும்‌ மனம்‌ வராது. கடவுள்‌ விடும்‌ வழிப்படியே யாகட்டும்‌" என்று கடவுளிடம்‌ பாரத்தைப்‌ போட்டு தனது தம்பிமார்‌ திரெளபதி, உறவினர்‌ முதலியவர்களோடு ஹஸ்தினாபுரிக்கு விதுரரை முன்னிட்டுக்கொண்டு புறப்பட்டார்‌.

வினா 39.- பாண்டவர்கள்‌ ஹஸ்தினாபுரி வந்ததும்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... இங்குப்‌ பாண்டவர்கள்‌ வந்ததும்‌ தமது உறவினர்‌ எல்லோரையும்‌ கண்டு தண்டனிட்டு மரியாதைகள்‌ செய்து விட்டுத்‌ தமக்கு விட்டிருந்த விடுதிகளில்‌ சென்று அன்று இரவை ஸுகமாய்க்‌ கழித்தனர்‌. மறுநாட்‌ காலையில்‌ ஸகல அரசர்களும்‌ நிறைந்திருக்கும்‌ புதிய ஸபையில்‌ பாண்டவர்கள்‌ வந்து பெரியோர்களுக்கு மரியாதை செய்துவிட்டு உட்கார்ந்தார்கள்‌.

வினா 40.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ வந்து உட்கார்ந்ததும்‌, சகுனி என்ன செய்தான்‌? தர்மபுத்திரர்‌, கடைசியில்‌ என்ன செய்தார்‌?

விடை. - தர்மபுத்திரர்‌ தம்மால்‌ இயன்றமட்டும்‌ சொல்லிப்‌ பார்த்தும்‌ சகுனி விடாமல்‌ சூதாட அழைப்பதைக்‌ கண்டு, அதற்கு இசைந்தார்‌. உடனே துர்யோதனன்‌ தான்‌ பந்தயம்‌ வைப்பதாகவும்‌, சகுனி தனக்காகச்‌ சூதாடுவதாகவும்‌ சொல்ல, இது நியாயமில்லை என்று முதலில்‌ தடுத்தபோதிலும்‌, தர்மபுத்திரர்‌ கடைசியில்‌ ஒப்புக்‌ கொண்டார்‌. சூதாட்டம்‌ ஆரம்பித்தது.

வினா 41.- சூதாட்டம்‌ எவ்வாறு நடந்தது? யார்‌ யார்‌ என்ன அபிப்பிராயப்‌ பட்டார்கள்‌?

விடை.  சகுனி மோசக்காரனாதலால்‌, எல்லா ஆட்டங்களிலும்‌ தானே ஜயித்து வந்தான்‌. இதில்‌ தர்மபுத்திரர்‌ ஸொத்துக்களையும்‌ இழந்துகொண்டு வந்தார்‌. இதைக்‌ கண்டு துர்யோதனாதியர்‌, திருதிராஷ்டிரன்‌, கர்ணன்‌ முதலிய துராத்மாக்கள்‌ ஆனந்தித்தனர்‌. பீஷ்மர்‌, துரோணர்‌, கிருபர்‌, விதுரர்‌, விகர்ணன்‌ முதலிய சுத்தாத்மாக்‌கள்‌ இதிலிருந்து ஏதாவது பிரமாதம்‌ உண்டாய்‌ விடுமோ என மனங்குழம்பினார்கள்‌.

வினா 42.- இவர்களில்‌ யார்‌ முதலில்‌ தமது அபிப்பிராயத்தைப்‌ பயப்படாது எப்படி வெளியிட்டார்‌? இவரது புத்திமதி பிரயோசனப்‌ பட்டதா?

விடை. விதுரர்‌ ஒருவர்‌ தான்‌ இந்த ஆபத்துக்காலத்தில்‌ தன்‌ மனத்தில்‌ உள்ளவற்றை ஒளிக்காது வெளிக்காட்டினார்‌. சூது முதலியவைகள்‌ போன்றவை அபாயகரமானவை என்றும்‌, அப்பொழுது ஆடும்‌ சூதால்‌ மிகுந்த பிரமாதம்‌ விளையலாம்‌ என்றும்‌, அதற்கு முக்கியகாரணம்‌ துர்யோதனன்‌ என்றும்‌, அவனால்‌ உண்டாகப்‌ போகிற பிரமாதத்தை தடுக்க அவனை அவசியம்‌ கொல்லவேண்டும்‌ என்றும்‌, பலர்‌ ஸுகம்‌ அடைய ஒருவனைக்‌ கொல்லுவது சாஸ்திர விருத்தமல்ல வென்றும்‌, இச்சூதாட்டத்தால்‌ பாண்டவர்களைச்‌ சகுனி முதலியோர்‌ அவமரியாதை செய்து அவர்களைக்‌ கோப மூட்டிவிட்டால்‌ பாண்டவர்களை வெல்லவல்லார்‌ ஸபையில்‌ ஒருவரும்‌ இல்லை என்றும்‌, விதுரர்‌ தமது அபிப்பிராயத்தை நன்றாக வெளியிட்டார்‌. உடனே துர்யோதனன்‌ எழுந்து, விதுரரை நம்பிக்கைத்‌ துரோகி, அவரைக்காப்பாற்றுவது பாம்பிற்கு பாலிட்டு வளர்ப்பதுபோலத்‌ தமக்கே விபரீதமாய்‌ முடியும்‌ என்று சொல்லி விதுரரை வெகுவாகத்‌ தூஷித்தான்‌. தம்‌ சொல்‌ பயன்‌ படாதது கண்டு விதுரர்‌ திருதிராஷ்டிரனை நோக்கித்‌ தமது அபிப்பிராயத்தை வற்புறுத்திச்‌ சொல்லிவிட்டு மெளனமாய்‌ இருந்தார்‌.

வினா 43.- இதன்‌ பின்பு சூதாட்டம்‌ என்னமாய்‌ விருத்தியடைந்தது? எப்படி முடிந்தது?

விடை. - சகுனி ஸகலத்தையும்‌ தர்மபுத்திரரிடம்‌ இருந்து வெகு தந்திரமாய்‌ வென்றான்‌. உடனே அவர்‌ சூதாட்ட ஆவேசத்தில்‌ முதலில்‌ தனது தம்பிமாரையும்‌, கடைசியில்‌ தன்னையும்‌ பந்தயம்‌ வைத்துப்‌ பார்த்தார்‌. அப்பொழுதும்‌ சகுனியே வென்றான்‌. இதன்‌ பின்பு ஒன்றையும்‌ பந்தயம்‌ வைக்கத்‌ தோன்றாது தருமபுத்திரர்‌ விழித்துக்கொண்டிருக்கையில்‌, சகுனி, திரெளபதி ஒருத்தி யிருக்கிறாளே என்று ஞாபகப்படுத்த, அவர்‌. திரெளபதியையும்‌ பந்தயம்‌ வைத்தாடித்‌ தோற்றார்‌.

வினா 44.- இப்படி திரெளபதியைத்‌ தர்மபுத்திரர்‌ தோற்றதும்‌ துர்யோதனாதியர்‌ என்ன செய்ய முயன்றனர்‌?

விடை. - துர்யோதனன்‌ விதுரரை நோக்கி "திரெளபதியை ஸபைக்குக்‌ அடிமைத்தொழில்‌ அவள்‌ செய்ய வேண்டும்‌ என்று கட்டுப்பாடு செய்யுங்கள்‌” என்று சொல்ல, விதுரர்‌ "திரெளபதி அடிமையாவதற்குக்‌ காரணமில்லை; ஏனெனில்‌ தர்மபுத்திரர்‌ தாம்‌ தோற்ற பின்புதான்‌ அவளைப்‌ பந்தயம்‌ வைத்தார்‌" என்று சொல்லி, துர்யோதனாதியரைத்‌ தூஷித்து விட்டு, வாயை மூடிக்கொண்டு ஸபையிலேயே உட்கார்ந்துவிட்டார்‌. பின்பு துர்யோதனன்‌ பிரதிகாமி என்ற ஸூதஜாதி வேலைக்காரனை ஏவவே அவன்‌ சென்று திரெளபதியை ஸபைக்கு வரும்படி அழைத்தான்‌. அவள்‌ தீண்டத்தகாத நிலையிலிருப்பதாகவும்‌, தான்‌ உண்மையில்‌ தோல்வியடைந்தவளா இல்லையா என்பதை அறியவேண்டும்‌ என்பதாகவும்‌, இவனிடம்‌ சொல்லி யனுப்பினாள்‌. துர்புத்திகளான தூர்யோதனாதியர்‌ இவ்வாறு திரெளபதியை அவமானப்படுத்த வேண்டுமென்று எண்ணங்‌ கொண்டார்கள்‌.

வினா 45.- இந்தக்‌ கெட்ட எண்ணத்தை இவர்களுக்கு எவ்வாறு யார்‌ பூர்த்தி செய்வித்தது?

விடை... முன்‌ சொல்லியவைகளை பிரதிகாமி சபையில்‌ வந்து சொல்லத்‌ துர்யோதனன்‌ தனது தம்பியான துச்சாஸனனை ஏவினான்‌. அவன்‌ விரைவில்‌ சென்று திரெளபதியின்‌ தலைமயிரைப்‌ பற்றி அவளை ஸபைக்கு இழுத்து வந்து, யாவரும்‌ பார்த்துப்‌ பரிதபிக்கும்படியான நிலையில்‌ நிறுத்தி வைத்தான்‌.

வினா 46.- ஸபைக்கு வந்ததும்‌, திரெளபதி ஸபையோரை என்ன கேள்வி கேட்டாள்‌? அங்கிருந்தவர்கள்‌ அப்பொழுது என்ன பதில்‌ உரைத்தனர்‌?

விடை...  “தர்மபுத்திரர்‌ முன்பு என்னைப்‌ பந்தயம்‌ வைத்துப்‌ பின்பு தம்மை பந்தயம்‌ வைத்துக்கொண்டாரா, அல்லது தம்மை வைத்துத்‌ தோற்றபின்பு என்னை வைத்துத்‌ தோற்றாரா? அப்படி முன்பு வைத்துத்‌ தோற்றது உண்மையாகில்‌ நான்‌ அடிமைதான்‌, இல்லாவிடில்‌ என்னை அடிமைப்படுத்த துர்யோதனாதியருக்கு என்ன அதிகாரம்‌?” ஸபையோரை நோக்கித்‌ திரெளபதி கேட்டாள்‌. விதுரர்‌, விகர்ணன்‌ முதலிய தர்மாத்மாக்கள்‌ திரெளபதி அடிமையாகவில்லை யென்று உரக்கத்‌ தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள்‌. கர்ணன்‌ முதலிய துராத்மாக்கள்‌ திரெளபதி எப்படியானாலும்‌ தமக்கு ஊழியக்காரி என்றனர்‌. பீஷ்மர்‌ முதலிய சிலர்‌ இவ்விஷயத்தில்‌ தர்மாதர்ம விவேகமின்றித்தமது அபிப்பிராய குழப்பங்களை வெளியிட்டனர்‌. தர்மபுத்திரர்‌ மாத்திரம்‌ எல்லாவற்றையும்‌ பொறுத்துக்‌ கொண்டு மெளனமா யிருந்தார்‌.

வினா 47.- இப்படி யிருக்க பாண்டவர்களுள்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பீமன்‌ முதலிய தம்பிமார்களுக்குக்‌ கோபம்‌ அதிகரித்த போதிலும்‌, தமயன்‌ இருக்கும்‌ பொறுமையை நோக்கித்‌ தாமும்‌ அவருக்கு உட்பட்டு அடங்கியிருந்தனர்‌. திரெளபதி அடிக்கடி கேள்விகேட்க ஸபையோர்‌ அவளைக்‌ கவனியாது இருக்கக்‌ கண்டு பீமனுக்குக்‌ கோபம்‌ அதிகரித்தது. தர்மபுத்திரரது கையை எரித்து விட ஸஹாதேவனை நெருப்பு எடுத்து வரும்படி பீமன்‌ கட்டளையிட, அர்ஜுனன்‌ இதை யறிந்து பீமஸேனனது. கோபம்‌ அடங்கும்படி செய்தான்‌.

வினா 48.. இப்படி ஸபை முழுவதும்‌ திரெளபதியினது கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லமுடியாது தத்தளிக்குங்கால்‌ துச்சாஸனன்‌ என்ன விபரீத காரியத்தைச்‌ செய்ய யத்தனித்தான்‌? அவன்‌ யத்தனம்‌ எவ்வாறு முடிந்தது?

விடை.-  தான்‌ இதுவரை செய்த அவமானம்‌ போதாதென்று துச்சாஸனன்‌ திரெளபதியை ஸபையில்‌ நிர்வாணமாய்‌ நிறுத்தி வேடிக்கை பார்க்கவேண்டுமென்று துராக்கிரகம்‌ கொண்டு அவளது புடவையை வெகு அவஸரமாய்‌ அவிழ்க்கலா யினன்‌. இவன்‌ எவ்வளவு தான்‌ புடவையை இழுத்து மலைபோல்‌ குவித்தபோதிலும்‌ மேல்மேலும்‌ திரெளபதிக்கு விசேஷப்புடவைகள்‌ உண்டாகிவரக்‌ கடைசியில்‌ கை ஓய்ந்து துச்சாஸனன்‌ கீழேவிழுந்தான்‌. இதை நோக்கியதும்‌ ஸபையோர்‌ எல்லோருக்கும்‌, திரெளபதி அடிமை யல்லவென்றும்‌, துரியோதனாதியர்‌ துராத்மாக்கள்‌ என்றும்‌ நன்றாய்‌ விளங்கியது.

வினா 49.- இவ்விசித்திர விஷயம்‌ நடக்கக்‌ காரணம்‌ என்ன? இதனால்‌ என்ன விளங்குகிறது?

விடை...   துச்சாஸனன்‌, தனது புடவையை அவிழ்க்க இழுக்கும்‌ பொழுது, தன்மானம்‌ கெட்டுப்போகிறதே என்ற எண்ணத்துடன்‌ திரெளபதி தனது புடவையைக்‌ கெட்டியாகப்‌ பிடித்து பார்த்தாள்‌. கடைசியில்‌ தன்னால்‌ முடியாதென்பது கண்டு தனது இருகைகளையும்‌ தலைமேல்‌ வைத்துக்கொண்டு தெய்வத்தின்‌ மேல்‌ பாரத்தைப்‌ போட்டு மனதுருகி கிருஷ்ண பரமாத்மாவைத்‌ துதித்தாள்‌. இந்த உண்மையான பக்தியின்‌ விசேஷத்தால்‌ இவளது மானங்‌ கெடாத வண்ணம்‌ விசித்திரப்‌ புடவைகள்‌ கிருஷ்ண பரமாத்மாவால்‌ அளிக்கப்பட்டு துச்சாஸனன்‌ முக்க இழுக்க வந்துகொண்டேயிருந்தன. இதனால்‌ ஸர்வம்‌ கடவுளது அதீனம்‌ என்ற உள்ளத்துறவுவாய்ந்த மஹான்களுக்கும்‌ வரும்‌ மலைபோன்ற துக்கங்கள்‌ கடவுளது அருளால்‌ ஸுூரியனைக்‌ கண்ட பனிபோல்‌ பறந்தோடிப்போம்‌ என்பது எளிதில்‌ விளங்கும்‌.

வினா 50.- இவ்வாறு திரெளபதியைத்‌ துச்சாஸனன்‌ துகிலுரியுங்கால்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை. - தருமபுத்திரர்‌ முன்போலப்‌ பொறுமையோடு மெளனமாய்‌ இருந்தார்‌. பீமன்‌,துரியோதனன்‌, துச்சாஸனன்‌ முதலிய தம்பிமார்‌ 100-பேர்களைக்‌ கொல்லுவதாகவும்‌, அர்ஜுனன்‌ கர்ணனைக்‌ கொல்லுவதாகவும்‌, நகுலன்‌ செளபாலர்களைக்‌ கொல்லுவதாகவும்‌, ஸஹாதேவன்‌ சகுனியைக்‌ கொல்லுவதாகவும்‌ கொடிய சபதம்‌ செய்தார்‌கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக