வினா 51.- இவைகள் எவ்வாறு முடிந்தன? ஏன்?
விடை- அப்பொழுது திருதிராஷ்டிரனது ஸபை முதலிய இடங்களில் அபசகுனங்கள் உண்டாக, விதுரரும், காந்தாரியும் திருதிராஷ்டிரனுக்குப் புத்திமதிகள் சொன்னார்கள். அப்பொழுது அவனுக்குப் புத்தி தெளிந்திருந்தமையால் தனது பிள்ளைகளை வெகுவாகத் திட்டித் திரெளபதியை அருகிலழைத்து வேண்டிய வரங்களைக் கேட்டுக் கொள்ளும்படி இடங்கொடுத்தான். திரெளபதி தனது பதிகளாகிய பாண்டவர் ஐவரும் அடிமைத்தனத்திலிருந்து நீங்கி ஸுகம் அடையும் படி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு எல்லாரையும் மீட்க, திருதிராஷ்டிர னது அனுமதியின் பேரில் இந்திரப்ரஸ்தத்தை நோக்கி பாண்டவர்கள் தமது இரதங்களில் ஏறிச்சென்றார்கள்.
வினா 52.- திருதிராஷ்டிரனுக்கு எவ்வளவு நாழிகை இந்தப் புத்தி இருந்தது? புத்திமாறியதும் இவன் என்ன செய்தான்?
விடை.- துரியோதனனோடு கொஞ்சநாழிகை திருதிராஷ்டிரனுக்குப் புத்திமாறித் தனது பிள்ளைகளிடம் அபிமானம் விருத்தியாக, ஊருக்குப் போய்க்கொண்டிருக்கும் பாண்டவரைத் திரும்ப அழைத்து மறுபடியும் சகுனியோடு சூதாடும்படி ஏவினான். காந்தாரி, விதுரர் முதலியவர்கள் என்ன சொல்லியும் இச் சமயத்தில் இவன் காதில் ஏறவில்லை
வினா 53.- இம்மறு சூதாட்டத்தில் பந்தயம் என்ன வைத்தார்கள்? அது என்னமாய் முடிந்தது?
விடை... இந்தச் சூதாட்டதில் தோற்றவர்கள் 12-வருஷம் வனவாஸமும், 1-வருஷம் அஜ்ஞாதவாஸமும் (ஜனங்கள் நிறைந்த பட்டணத்தில் உருமாறி வஸித்தலும்) செய்து திரும்பிவரவேண்டுமென்றும், 13ம்வருஷத்தில் எப்பொழுதாவது அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டால் மறுபடியும் வனவாஸ அஜ்ஞாதவாஸாதிகள் ஒழுங்காய்ப் பூர்த்தி யாகிற வரையில் செய்தே தீரவேண்டும் என்றும் தீர்மானித்து மறு சூதாட ஆரம்பித்தார்கள். இதிலும் சகுனி ஜயிக்கப் பாண்டவர்கள் முன்செய்த நிபந்தனைக்குட்பட வேண்டி வந்தது.
வினா 54.- பாண்டவர்கள் வனவாஸம் செல்லுங்கால் நடந்த விஷயங்கள் என்ன?
விடை. பாண்டவர்கள் தமது இராஜ உடமைகளை உதறி எறிந்துவிட்டு ரிஷி உருக்கொண்டு மிகுந்த வணக்கத்தோடு புறப்பட்டார்கள். திரெளபதியும் ரிஷி பத்தினி உருக் கொண்டு இவர்கள் பின்னே தொடர்ந்து சென்றாள்; குந்தியைப் பாண்டவர்கள் விதுரரிடம் ஒப்புவித்துவிட்டு அவளது துக்கத்தை ஒருவாறு ஆற்றிவிட்டு வனம் நோக்கிச் செல்ல, அநேகம் பிராம்மணோத்தமர்களும், நகரவாஸிகளும் பாண்டவர்களை விட்டு நகரத்திலிருக்கப் பொறுக்காது அவர்கள் பின்னே சென்றார்கள். அப்பொழுது ஹஸ்தினாபுரம், புருஷனை இழந்த பூவைபோல ஒளி மழுங்கிக் கிடந்தது.
வினா 55.- இவ்வாறு பாண்டவர்கள் மனங்கொதிக்க வனம் சென்றதும், யார் திருதிராஷ்டிரரிடம் வந்து என்ன சொன்னார்? அவர் பின்பு என்ன செய்தார்?
விடை. நாரதமகாமுனி வந்து திருதிராஷ்டிரரிடம் அவரது பிள்ளைகள் பதிநான்காவது வருஷம் இருந்தவிடம் தெரியாது பாண்டவர்களால் நாசமடையப் போகிறார்கள் என, திருதிராஷ்டிரரும் அப்பொழுது மாத்திரம், தாம் செய்தது தப்பிதம் என்று எண்ணித் துக்கிக்கத் தொடங்கினார்.
---- சபா பர்வம் நிறைவு பெற்றது. தொடர்வது ஆரண்ய பர்வம் ------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக