ஶ்ரீ மஹா பாரதம் முதல் பாகம்
சபா பர்வம்
கேள்விகள் 21 முதல் 32 வரை
வினா 21.- இவ்வாறு இராஜஸூய யாகத்திற்கு முக்கிய தடையாகிய ஜராஸந்த னைக் கொன்ற பிறகு பாண்டவர்கள் யாகவிஷயமாக என்ன ஏற்பாடு செய்தார்கள்?
விடை... தர்மபுத்திரரது தம்பிமார்கள் நால்வரும் மற்றைய அரசர்களை ஜயித்து இராஜஸூய யாகத்திற்கு வரும்படியாக அழைக்க நான்கு திக்கிலும் திக்கு விஜயம் செய்யப் புறப்பட்டார்கள். இதில் அர்ஜுனன் வடக்கு திக்கையும், பீமன் கிழக்கு திக்கையும், ஸ்ஹாதேவன் தெற்குதிக்கையும், நகுலன் மேற்கு திக்கையும் நோக்கி, தர்மபுத்திரரது அனுமதியின்பேரில் சென்றார்கள்.
வினா 22.- அர்ஜுனனது திக்கு விஜயத்தில் நடந்த விசேஷங்கள் என்ன?
விடை.- போகும் வழியில் அனேக சிற்றரசர்களை ஜயித்துக் கொண்டு அர்ஜுனன் நரகாஸுரனது பிள்ளை பகதத்தன் அரசாளும் பட்டணம் வர, அவன் இவனோடு சிலகாலம் சண்டை செய்து இவனது பராக்கிரமத்தைக் கண்டு இவன் இஷ்டப்படி செய்வதாக ஒப்புக்கொண்டான். இதன் பின்பு வடக்கே மலைப் பிரதேசத்தரசர்களைத் தன் வசப் படுத்திக் கொண்டு, கிம்புருஷலோகம் சென்று அவர்களை வென்று, உத்தரகுருகண்டம் சென்றான். அது சிறந்த கண்டமாதலால் அதில் மனிதர் சென்றால் உயிர் தரிப்பதரிது. அப்படி யிருக்க அர்ஜுனன் அங்கு செல்ல, வாயில் காப்பவர் அக்கண்டத்தின் ஸ்வபாவத்தைச் சொல்லி அர்ஜுனனைத் திரும்பிப் போகும்படி சொன்னார்கள். பின்பு அர்ஜுனன் வந்த காரியத்தைச் சொல்ல, தர்மபுத்திரரது நன்னடத்தைக்காக அக்கண்டத்தார் அநேக தெய்வீகமான ஆடையா பரணங்கள் கொடுக்க, அவைகளைப் பெற்றுக்கொண்டு வரும் வழியில் பாக்கியிருந்த சில காட்டு ராஜாக்களை வென்று, தர்மபுத்திரரிடம் தான் கொண்டுவந்தவைகளை ஸமர்ப்பித்தான்.
வினா 23.. பீமஸேனனது திக்கு விஜயத்தில் நடந்த விஷயம் என்ன?
விடை... முதலில் பீமன் பாஞ்சால தேசம் சென்று, ஸமாதான வழியால் அரசர்களை வசப்படுத்தி, சில சிற்றரசர்களை வென்று, கடைசியில் சேதிதேசத்தரசன் சிசுபாலனிடம் வர, அவனும் ஸமாதானமாய் தர்மபுத்ரருக்கு வேண்டியது செய்வ தாக வாக்களிக்க, பீமனும் 30 நாள் அவனிடம் ஸுகமாய் இருந்தான். இதன் பின்பு போகும் வழியில் இருந்த சிறு தேசாதிபதிகளை வென்று ஜராஸந்தன் பிள்ளையிடம் வந்து அவனிடமிருந்து மரியாதைகளைப் பெற்று அங்கதேசாதிபதியாகிய கர்ணனை வென்றான். இவ்வாறு அனேக இராஜாக்களை ஜயித்து, அவர்களிடமிருந்து தான் பெற்று வந்த பரிசுகளைத் தர்மபுத்திரர் பாதங்களில் பீமன் ஸமர்ப்பித்து விட்டான்.
வினா 24.. ஸஹாதேவனது திக்கு விஜயத்தில் விசேஷமென்ன?
விடை... முதலில் தந்தவக்கிரன், குந்திபோஜன், அவந்தி நகரத்திலிருந்த விந்தானுவிந்தாள், பீஷ்மகராஜா, கிஷ்கிந்தா நகரத்தில் அரசாண்டு வந்த மைந்தத்துவிதாள், முதலிய இராஜாக்களை எளிதில் மஹாதேவன் வென்றான். இதன் பின்பு இவன் மாஹிஷ்மதீ பட்டணம் போனான். அங்கு அரசாண்டு வந்த நீலராஜனுக்கு அக்கினி பகவான் ஸஹாயமாக வர ஸஹாதேவனது ஸேனைகளுக்குத் தாபம் அதிகரித்துவிட்டது. இதைக்கண்டு அவன். அக்கினியைத் துதிசெய்ய அவர் இவனிடம் வந்து தான் பரீக்ஷை செய்ததாகவும் தர்மபுத்திரரது நல்ல எண்ணம் தனக்குத் தெரியும் என்பதாகவும், தான் அப்பட்டணத்தைக் காக்கும்வரை அதை ஒருவராலும் ஜயிக்க முடியாதென்பதாகவும் சொல்லி, அக்கினிபகவான் ஸஹாதேவனுக்கும், நீல ராஜாவுக்கும் ஸ்நேஹம் செய்துவைக்க, பின்பு ருக்மி முதலிய அரசர்களை ஸஹாதேவன் வென்றான். இதன் பின்பு தெற்கு ஸமுத்திரக்கரையை அடைந்து இலங்கையில் அரசாண்டு வந்த விபீஷணருக்குத் தூதரை அனுப்ப, மிகுந்த ஸந்தோஷமாய் அவர் பரிசுகள் அனுப்பினார். இவ்வாறு தெற்கிலுள்ளவர்கள் யாவரையும் வென்று ஸஹாதேவன் இந்திரப்ரஸ்தம் சென்று தர்மபுத்திரர் அடி பணிந்து நின்றான்.
வினா 25.- மாஹிஷ்மதீ பட்டணத்தில் அக்கினி பகவான் பிருந்ததற்குக் காரணம் என்ன?
விடை... நீலராஜனது பெண்ணைக் கண்டு அக்கினி பகவானுக்கு ஆசை வர, அந்த அரசன் அரண்மனையில் யார் என்ன செய்தாலும் ஹோமகுண்ட நெருப்புப் பற்றாதிருந்தது. தற்செயலாய் நீலராஜன் பெண் வந்து அக்கினியை ஊதிப் பார்த்தாள். உடனே அக்கினி பற்றிக் கொண்டது. அதைக் கண்டதும், அக்கினி பகவானை இப்பெண் கல்பாணம் செய்துகொள்ள ஒத்துக்கொள்ளவே, அக்கினி பகவான் பிராம்மண வடிவங் கொண்டு இப்பெண்ணோடு விளையாடி வந்தார். இப்படி யிருக்கையில் அரசன் கண்டு இப் பிராம்மணனை தண்டிக்க யத்தனிக்க, உடனே அக்கினி பகவான் தன் ரூபத்தைக் காட்டினார். அரசன் வியந்து தன் பெண்ணை அக்கினி பகவானுக்கு விவாஹம் செய்துகொடுக்க, அன்று முதல் அரசனது வேண்டுகோளின்படி அப்பட்டணத்தை அக்கினி பகவான் காத்துவந்தார். இதை அறியாது அங்கு படையெடுத்துச் சென்றவர்கள் நெருப்பால் எரிக்கப்பட்டு மாளுவது வழக்கம். தெரிந்தவர்கள் அப்பட்டணத்தருகில்கூட வருவதில்லை.
வினா 26.- நகுலனது திக்கு விஜயத்தில் நடந்த விசேஷம் என்ன?
விடை.- அநேக சிற்றரசர்களை ஜயித்துக்கொண்டு, நகுலன் மேற்கே துவாரகை அருகில் வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்குத் தூதரை அனுப்ப, அவர் யாதவ பரிவாரங்களோடு எதிர் கொண்டு வந்து நகுலனுக்குத் தகுந்த மரியாதைகள் செய்த னுப்பினார். இவன் பின்பு மந்திர தேசாதிபதியும், தனது மாமனுமான சல்லிய ராஜனை தன் வசப்படுத்திக் கொண்டு, அநேக மிலேச்ச ராஜாக்களை ஜயித்து இவன் இந்திரப்ரஸ்தம் வந்து சேர்ந்தான்.
வினா 27.- இவர்கள் இவ்வாறு வந்த பின்பு என்ன நடந்தது?
விடை... கொஞ்சகாலம் கழிந்தபின்பு மந்திரிமார் முதலிய பெரியோர்கள் இராஜஸூயயாகஞ்செய்யவேண்டியகாலம் வந்ததென்று தர்மபுத்திரருக்குச் சொன் னார்கள். இப்படியிருக்கையில் அநேக பரிசுகளை எடுத்துக்கொண்டு கிருஷ்ண பகவான் இந்திரப்ரஸ்தம் வந்துசேர்ந்து இராஜஸூய யாகத்தைத் தொடங்கும்படி உத்தரவு கொடுத்தார். உடனே பாண்டவர்கள் யாகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்க ளைச் சேகரித்தார்கள். அவர் அழைத்துவிட்டு வந்திருந்த அரசர்கள் யாவரும் யாக வைபவத்தைக் கண்டு களிக்க இந்திரப்ரஸ்தம் வந்து கூடினார்கள். அவரவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைத் தர்மபுத்திரர் செய்து அவரவர்களுக்குத் தகுந்த விடுதிகளை நியமித்தார். துர்யோதனாதியர், பீஷ்மர், விதுரர் முதலியவர்கள், யாதவாள் எல்லோரும் வந்து கூடிவிட்டார்கள். இவர்கள் ஸந்நிதானத்தில் தர்மபுத்திரர் யாகத்தை ஆரம்பித்தார்.
வினா 28.- இவ்வாறு யாகம் ஆர்ம்பித்து நடந்து வருங்கால் விக்கினம் போன்றது என்ன நடந்தது?
விடை... சேதி தேசாதிபதியான சிசுபாலனுக்குக் கடைசி நாள் கிருஷ்ண பகவானிடம் கோபம் உண்டாக, அவன் அவரை பலவிதமாக வைதான். இது நிரம்பவும் அதிகமாய்ப் போகும் வரையில் பொறுத்திருந்து, கடைசியில் சிசுபாலன் வரம்புகடந்து போனவுடன், பகவான் தமது சக்கிரத்தை எடுத்து சிசுபாலனது தலையை அறுத்தார். உடனே சிசுபாலனது தேகத்திலிருந்து ஒரு திவ்ய தேஜஸ் புறப்பட்டு கிருஷ்ண பரமாத்மாவின் தேகத்துட் பிரவேசித்தது. அப்பொழுது தர்மபுத்திராதிகள் சிசுபாலனது பிள்ளையைச் சேதி தேசாதிபதியாகப் பட்டாபிஷேகம் செய்து, இராஜஸூய யாகத்தை மேல் நடத்த ஆரம்பித்து நிர்விக்கினமாய் செய்து முடித்தார்கள்.
வினா 29.- இம்மாதிரியாய் இச்சிசுபாலனுக்கு கிருஷ்ண பகவானிடம் கோபம் உண்டாவானேன்?
விடை... கடைசி நாள் ஸபையோருக்கு அக்ர பூஜை செய்ய வேண்டி வர, யாருக்கு ஸபையில் முதலில் அர்க்கியத்தை ஸமர்ப்பிப்பது என்கிற ஸந்தேகம் தர்மபுத்திரருக்கு வந்தது. கிருஷ்ண பகவானே அதை வாங்கத் தகுந்தவர் என்று பீஷ்மர் சொல்ல, அதன்படி அவர் முதல் முதலில் அர்க்கியத்தைப் பகவானுக்கு ஸமர்ப்பித்தார். கிருஷ்ணபகவானை இடையன் என்று எண்ணியிருந்த சிசுபாலனுக்கு இது அதிக கோபத்தை உண்டாக்கியது. மேலும் இவன் கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்த ருக்மணிதேவியை, அவள் இஷ்டத்தின்படி கிருஷ்ணபகவான் தூக்கிகொண்டு நடந்து விட்டார் என்ற கோபம் இவனுக்கு முன்னமேயே இருந்தது. ஆகவே அதிககோபத்தோடு பகவானைச் சிசுபாலன் நாக்கில் நரம்பில்லாது வையத் தொடங்கினான்.
வினா 30:- சிசுபாலன் வசவுகளை வெகுநாழிகை வரையில் கிருஷ்ண பகவான் ஏன் பொறுத்திருந்தார்? பின்பு ஏன் அவனைக் கொன்றார்?
விடை... சிசுபாலனது தாயார் கிருஷ்ண பரமாத்மாவே தன் பிள்ளையைக் கொல்லப் போகிறவர் என்று அறிந்து, அவரிடம் “என் பிள்ளை உமக்கு என்ன அபராதம் செய்தாலும் நீர் பொறுத்தருள வேண்டும்" என்று வரங்கேட்டிருந்தாள். இதற்குக் கிருஷ்ண பகவான், "ஸம்ஹரிப்பதே தகுதி என்று சொல்லத்தகுந்த குற்றங்கள் 100 இவன் செய்கிறவரையில் நான் இவனை பொறுத்துக் கொள்ளுகிறேன்" என்று வாக்களித்திருந்தார். இதன்படி வரம்பு கடந்து சிசுபாலன் போகிற வரையில் பொறுத்திருந்த பகவான், அவனுக்குச் சீக்கிரத்தில் நற்கதி அளிக்கவேண்டுமென்று அவன் வரம்புகடந்ததும் அவனைக் கொன்றார்.
வினா 31.- சிசுபாலனது தாயாருக்குக் கிருஷ்ண பரமாத்மா தன் பிள்ளையைக் கொல்லப்போகிறார் என்று எப்படித் தெரிய வந்தது?
விடை.- சிசுபாலன் பிறந்தவுடன் அவனுக்கு மூன்று கண்ணும் நான்கு கையும் ஏற்பட்டது. அவன் கழுதை கத்துவதுபோல்கத்த, தாயார் தகப்பனாருக்கு அடங்காத் துக்கமுண்டாய் விட்டது. உடனே ஒரு அசரீரி வாக்கு “இவன் சீக்கிரத்தில் சாகமாட்டான், ஆனால் இவனைக் கொல்ல ஒரு பலவானான புருஷன் வளருகிறான்” என்று சொல்ல, தாயார் "என்பிள்ளையைக் கொல்லுகிறவனை அறியும் வழி என்ன?” என்று கேட்டாள். அதற்கு அசரீரி “நீ யாருடைய மடியில் இப்பிள்ளையை வைத்தவுடன், இவனது அதிக கைகளும், கண்களும் மறைந்து போகின்றனவோ அவனே இவனைக் கொல்லுகிறவன்” என்று சொல்லி மெளனமாய் விட்டது. இதுமுதல் தாயார் யார் வந்தாலும் அவர்களது மடியில் எல்லாம் இக் குழந்தையை வைப்பது வழக்கம். இம்படி யிருக்கையில் கிருஷ்ணபகவான் சேதி தேசம்வர, அவரது மடியிலும் இக்குழந்தை வைக்கப்பட்டது. உடனே குழந்தையின் அதிகமான கண்களும், கைகளும் மறைய, பகவானே தன் பிள்ளைக்கு விரோதி என்று சிசுபாலன் தாயார் அறிந்து கொண்டாள்.
வினா 32.- இந்த துராத்மாவான சிசுபாலனுக்குப் பகவானது தேகத்துள் புகும்படியான பாக்கியம் எப்படி வந்தது?
விடை. - இச்சிசுபாலனது நிஜரூபம் வைகுண்டத்திலிருக்கும் துவாரபாலக ரூபம். இவனுக்கும் இவனது ஸஹாவுக்கும் ஸனகாதியோகிகள் சாபத்தால் பூமியில் மூன்று ஜன்மம் ஹரித் துவேஷிகளாய் பிறக்கவேண்டிவர, இவர்கள் ஹிரண்யக்ஷன், ஹிரண்ய கசிபு, இராவணன், கும்பகர்ணன், சிசுபாலன் தந்தவக்கிரனாக வரிசையாய்ப் பிறந்து ஒவ்வொரு ஜன்மத்திலும் பகவானிடம் துவேஷ ரூப பக்தியைச் செய்தார்கள். ஆகையால் இவர்கள் பகவானாலேயே கொல்லப்பட்டுக் கடைசியில் சிசுபால தந்த வக்கிரர்களாகி கிருஷ்ணனால் உயிரிழந்து அவருட் பிரவேசித்தார்கள். (இவ்விஷயத்தின் விஸ்தாரத்தைப் பாகவத வினா விடையில் காண்க.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக