ஶ்ரீ மஹாபாரத வினா விடை 4
ஶ்ரீ மஹா பாரத வினா விடை
51 முதல் 100 வரை
வினா 49.- சந்தனுவை கங்கை எப்பொழுது எவ்வாறு விவாஹம் செய்துகொண்டாள்?
விடை... சந்தனு ஒருநாள் வேட்டைமார்க்கமாக கங்கைக்கரையில் வந்தகாலத்தில், தகப்பன் சொன்னபடி கங்கையைக் கண்டான். உடனே தனக்கு பத்னியாக வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவளும் பின்வருமாறு சொன்னாள். “நான் உங்களைக் கணவனாக ஒப்புக்கொள்ளுகிறேன். அனால் நான் செய்யும் சில விஷயம் தங்களுக்குத் தகாதனவாய்த் தோன்றிய போதிலும் என்னைத் தடுக்கக் கூடாது. நீங்கள் சொல்லியபடி யான் நடக்கக் காத்திருக்கிறேன். என்னைச் சிலவிஷயங்களில் தடுப்பீர்களானால், உடனே தங்களைவிட்டுப் போய்விடுவேன்"என்றாள். இதற்கு அரசன் இசைந்து அப்பெண்ணை விவாஹம் செய்துகொண்டான்.
வினா 50.. அப்படித் தகாதனவாய்த் தோன்றும்படியாக என்ன காரியங்கள் இப்பெண் செய்துகொண்டு வந்தாள்?
விடை.- ஸகல விதத்திலும் அரசனுக்கு விதத்திலும் அரசனுக்கு ஹிதத்தையே இவள் செய்துகொண்டு வந்தாள். ஆயினும், அவளிடத்தில் பிறக்கும் பிள்ளைகளை மாத்திரம் உடனே அவள் கங்காநதியில் தூக்கி எறிந்துகொண்டு வந்தாள். இந்தக் கொடிய காரியத்தை மாத்திரம் இப்பெண் தவறாது செய்துவந்தாள்.
வினா 51.- எவ்வளவு காலம் இப்படி இவள் செய்து வந்தாள்? சந்தனு எவ்வாறு இதைப் பொறுத்து வந்தான்?
விடை- ஏழுபிள்ளைகள் வரையில் இவள் இப்படிக் குரூரமாய்க் கங்கையில் எறிந்து விட்டாள். இதுவரையில் "இப்பெண், எங்கே தடுத்துப் பேசினால் கோபித்துக்கொண்டு போய்விடுவாளோ, நமக்கு ஸுகம் கெட்டுப் போகுமே" என்று நிரம்பவும் சந்தனு பொறுத்துப் பார்த்தான். அப்பொழுது எட்டாவது பிள்ளை பிறந்தது. முன்போலவே இதையும் கங்கையில் எறியப் போனாள்.
வினா 52.- கங்கையில் எறிந்தாளா? எறியவில்லையா? பின்பு இவள் என்ன செய்தாள்?
விடை.- இவ்வளவு நாளும் மிகுந்த கஷ்டத்தோடு பொறுத்த இந்த அரசனுக்கு இப்பொழுது ஸகிக்கமுடியாத துக்கமுண்டாய் விட்டது. "நமது வம்சத்திற்கு ஒரு பிள்ளை கூடவா இருக்கக்கூடாது" என்று எண்ணிக்கொண்டு அவளை "கங்கையில் எறியாதே' என்று தடுத்தான். உடனே அவள் அதை நதியில் எறியாது, “ஆனால் எனக்கு நீர் கொடுத்த வாக்குப்படி நான் உம்மை இப்பொழுது விட்டுப் போகவேண்டியது தான். இப்பிள்ளையை நான் வைத்து வளர்த்து கொஞ்ச காலத்திற்கெல்லாம் உம்மிடத்தில் கொண்டுவந்து சேர்க்கிறேன்" என்று சொல்லிட்டுக் கங்கைநதிக்குள் மறைந்துவிட்டாள்.
வினா 53- கங்கை ஏழு பிள்ளைகளையும் கொல்லுவானேன்? எட்டாவது பிள்ளையை மாத்திரம் இப்படி வளர்ப்பானேன்?
விடை.- மஹாவிசுவனுக்குச் சாபம் கிடைத்தபின்பு, கங்கை திரும்பிவரும் வழியில், அஷ்டவஸுக்களைக் கண்டாள். அவர்கள் முகம் வாட்டமா யிருப்பது கண்டு, அதற்குக் காரணம் அவர்களுக்கு பூமியில் மனிதராய்ப் பிறக்கும்படி வஸிஷ்ட சாபம் வந்திருப்பதாகத் தெரிந்துகொண்டாள். அப்பொழுது வஸுக்கள் கங்கைக்குள்ள லோக ஸம்பந்தத்தையும் தெரிந்துகொண்டு, தாங்கள் எட்டுப் பேர்களும் எட்டுப் பிள்ளைகளாக கங்கைக்கே பிறப்பதாக ஒத்துப் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஏழு வஸுக்கள் குற்றங்குறைவாயிருந்ததால் தாங்கள் பிறந்ததும் தங்களைக் கங்கையில் எறிந்து விடும்படி அவளைப் பிரார்த்தித்தார்கள். “எட்டாவது வஸு மாத்திரம் பூலோகத்தில் இருக்கட்டும், அவனே இக்குற்றங்களுக்குக் காரணம். ஆனால் அவன் ஸம்ஸார விருத்தி செய்யமாட்டான். தான் இருக்கவேண்டிய காலம் உலகத்திலிருந்து, எங்களிடம் திரும்பி வருவான்" என்றார்கள்; அதற்குக் கங்கை இசைந்து முன்சொன்னபடி ஏழுபேரை கங்கையில் எறிந்து, எட்டாவது பிள்ளையை வளர்த்து வந்தாள்.
வினா 54.- அஷ்டவஸுக்களுக்கு என்ன காரணத்தால் இச்சாபம் வந்தது?
விடை... அந்த அஷ்டவஸுக்களில் ஒருவன் தனது பெண்சாதியைத் திருப்தி செய்ய, மற்றைய வஸுக்களுடைய ஸஹாயத்தால், வஸிஷ்டரது காமதேனுவைக் கன்றோடு திருடி விட்டான். இதை அறிந்த வஸிஷ்டர் முன்சொன்ன சாபத்தைக் கொடுத்தார்.
வினா 55.- சந்தனுவின் பிள்ளையின் பெயர் என்ன?
விடை - அப்பிள்ளைக்குக் காங்கேயன் என்றும்,தேவவிருதன் என்றும் பெயர். இவன் தகப்பனைவிட மிகச் சிறந்தவனாய் விளங்கக்கூடியவனாய் இருந்தான்.
வினா 56.- சந்தனு பின்பு எவ்வாறு தனது குமாரனை அடைந்தான்?
விடை.- தனது திவ்ய இராஜ்யத்தில் மனுநெறி தவறாது செங்கோல் செலுத்தும் ஒருநாள், சந்தனு ஒரு கரடியை வேட்டையாடும்படி நேரிட, அதைத் துரத்திக் கொண்டு கங்கைக்கரை வரைசென்று, அங்கு அதை சங்கரித்தான். அப்பொழுது கங்கையில் மிகவும் ஜலம் குறைந்திருப்பதை நோக்கி "இதென்ன அற்புதம்! கங்கையில் கூட இப்படி நீர் குறையும்படி வந்ததே!" என்று ஆச்சரியத்தோடு சுற்றிலும் பார்த்தான். அங்கு திவ்ய தேஜஸ்ஸோடு ஒருபிள்ளை, கங்கைக்குக் குறுக்கே பாண அணை போட்டுக்கொண் டிருப்பதைக் கண்டான். அப்பொழுது கங்கை வெளியில் வந்து பிள்ளையை அரசனிடம் ஒப்புவித்தாள்.
வினா 57.- சந்தனு மறுபடியும் விவாஹம் செய்துகொண்டாரா? யாரை? எப்படி?
விடை. - ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது காட்டில் யோஜனகந்தி அல்லது ஸத்தியவதி என்ற பெயருடைய ஒரு செம்படவக் கன்னிகையைப் பார்த்து மிகுந்த கஷ்டத்தின்பேரில் இவர் அவளை விவாஹம் செய்துகொண்டார்.
வினா 58.- இந்த ஸத்தியவதி என்பவள் யார்? அழகான கன்னிகை எப்படி செம்படவனுக்குப் பெண்ணானாள்?
விடை. - இவள் உபரிசிரவஸு என்ற அரசனுடைய அம்சத்தால் மீனின் வயிற்றில் தங்கும்படி நேரிட்டுப் பிறந்தவள். இவளை ஒரு செம்படவன் மீனின் வயிற்றைப் பிளந்து எடுத்தமையால் இவள் செம்படவர் அகத்தில் அவரது பெண்போல் வளர்ந்தனள்.
வினா 59.- இவளுக்குத் துர்நாற்றமல்லவா இருக்க வேண்டும், அப்படி இருக்க இவளுக்கு யோஜனகந்தி என்ற பெயர் எப்படிவந்தது?
விடை.- இவள் சிறு கன்னிகையாய் யமுனாநதியில் ஓடம் ஓட்டிக் கொண்டிருக்கும் போது பராசர மஹாமுனி அங்கு வர அவரது அநுக்ரஹத்தால் இவளுக்கு இந்த நற்கந்தம் வந்தது.
வினா 60.- பராசரர் எதற்காக இந்த வரனைக் கொடுத்தார்?
விடை.:-- லோக உபகாரார்த்தம் ஒரு சுப லக்கினத்தில் ஒரு பிள்ளையை உண்டாக்க எண்ணிப் பராசரர் வரும்பொழுது யமுனா நதியைத் தாண்ட இங்கு வந்தார். யமுனா நதி மத்தியில் போகும்பொழுது அவர் உத்தேசித்த லக்கினம் வந்தது கண்டு, இப்பெண்ணைத் தம் அநுக்ரஹத்திற்குப் பாத்திரமாகும்படி கேட்க, அவள் ஒப்புக்கொண்ட தால் அங்கேயே ஒரு திட்டில் வியாஸ பகவான் உண்டானார். இப்படி அந்த ஸமயத்தில் அவருக்கு இசைந்ததற்காக இவ்வரனை இந்தமுனி அவளுக்குக் கொடுத்தார்.
வினா 61.- இப்படி இவளுக்கு ஒரு பிள்ளை முன்னமேயே பிறந்திருக்குமானால் எப்படி இவளைச் சந்தனு விவாஹம் செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணினார்?
விடை... பராசரது அநுக்ரஹத்தால் முன் இருந்ததுபோல இவள் கன்னிகையாய் விட்டபடியால் இவளுக்கு ஒரு தோஷமும் இல்லாமற் போய் ஸாதாரணமான கன்னிகை யாகவே இருந்தாள். ஆகையால் தான் ஸன்மார்க்கரான அரசரும் இவளை விவாஹம் செய்து கொள்ள எண்ணினார்.
வினா 62.- இவளை விவாஹம் செய்துகொள்வதற்குமுன் அரசனுக்கு என்ன கஷ்டமுண்டாயிற்று?
விடை.- அரசன் ஸத்தியவதியின் பிதாவை விவாஹ விஷயமாய்க் கேட்க, அவன் "என் பெண்ணின் வயிற்றில் பிறக்கும் பிள்ளைக்கு நீ முடிசூட்டுவாயானால், நான் இந்தப் பெண்ணை உனக்கு விவாஹம் செய்து கொடுக்கிறேன்" என்று சொன்னான். அரசனால் இதற்கு எப்படி இசைய முடியும்? காங்கேயனுக்கல்லவோ இராஜ்யம் நியாயமாய்க் கொடுக்கவேண்டும்? ஆதலால் மிக துக்கத்தோடு அரசன் தனது அரண்மனைக்குப் போகும்படி நேரிட்டது.
வினா 63.- இந்தக்கஷ்டம் எப்படி நிவர்த்தியாய் சந்தனு ஸத்தியவதியை கல்யாணம் செய்துகொண்டார்?
விடை... இப்படித் தகப்பன் துக்கத்தோடு வந்தான் என்பதைக் கேட்ட காங்கேயன் ஸத்தியவதியின் பிதாவிடம் சென்று “நான் ராஜ்யத்தை விரும்புவதில்லை. ஸத்திய வதிக்குப் பிறக்கும் பிள்ளைக்கே கொடுக்கிறேன்” என்று சபதம் செய்தார். அப்பொழுது அந்தச் செம்படவன், “நீ விரும்பாவிட்டால், உனது புத்திரர்கள் விரும்புவார்களே, அப்பொழுது கலஹம் நேருமே, அதனால் எனக்கு என்ன லாபம்” என்றான். அப்பொழுது காங்கேயன் மஹா கோரமான பிரதிக்ஞையைச் செய்தான். "நான் இராஜ்யத்தை யும் விரும்புவதில்லை. விவாஹத்தையும் செய்து கொள்ளுவதில்லை. இப்படியே ஆயுள் முழுவதும் பிரம்மசாரியாகவே இருப்பேன்” என்றான். இதனால் இவருக்கு பீஷ்மர் என்ற பெயர் வந்தது. இதன் பின்பு ஸத்தியவதியை செம்படவன் அரசனுக்கு விவாஹம் செய்து கொடுத்தான்.
வினா 64.- சந்தனுவிற்கு ஸத்தியவதியிடம் எத்தனை புத்திரர்கள் பிறந்தார்கள்? அவர்களின் பெயர் என்ன? அவர் எப்படி வாழ்ந்தார்கள்?
விடை.- இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களுக்கு முறையே சித்ராங்கதன் என்றும் விசித்திரவீர்யன் என்றும் பெயர். அவர்களில் முதல்பிள்ளையைச் சித்ராங்கதன் என்ற கந்தர்வன், தன்பெயரை வஹித்த மனிதன் பூலோகத்தில் உயிரோடிருக்கலாமா வென்று அஹங்காரம் கொண்டு ஸம்ஹாரம் செய்தான். ஆதலால் ஒரு பிள்ளை மாத்திரம் உயிரோடிருந்தான்.
வினா 65... இவனுக்கு விவாஹம் நடந்ததா? அப்பொழுது நடந்த விசேஷம் என்ன?
விடை... பீஷ்மர் காசி ராஜன் புத்திரிகளது ஸ்வயம்வரத்தில் சென்று அவனது புத்திரிகளாகிய அம்பிகை, அம்பாலிகை, அம்பை என்பவர்களை, வீரர்கள் மத்தியில் இரதத்தில் ஏற்றிக்கொண்டு விசித்திரவீர்யனுக்குப் பார்யைகளாகச் செய்ய வேண்டுமென்று கொண்டுவர, அப்பொழுது தன்னை எதிர்த்த அரசர்களை வென்றார். வரும் வழியில் அம்பை, தான் வேறொரு ராஜனை மனதில் பர்த்தாவாக வரித்ததாகச்சொல்ல பீஷ்மர் அவளுக்குப் போகும்படி அநுமதிகொடுத்தார். (இவளால் நடந்த கலஹத்தை உத்தியோக பர்வத்தில் சொல்லப்போகிறோம்.) அம்பாலிகை, அம்பிகை ஆகிய இவர்களை விசித்திரவீர்யனுக்குப் பீஷ்மர் விவாஹம் செய்வித்தார்.
வினா 66.- விசித்திரவீர்யன் எவ்வளவு காலம் ஸுகமாய் வாழ்ந்தான்? அவனுக்கு எத்தனை பிள்ளைகள்?
விடை.- அவன் விவாஹமாகி ஏழு வருஷகாலம் ஜீவித்திருந்து பின்பு க்ஷய ரோகத்தால் இறந்தான். அவனுக்கு ஒரு பிள்ளை கூட இல்லை.
வினா 67.- அப்பொழுது குல விருத்திக்கு என்ன ஏற்பாடு செய்தார்கள்?
விடை... ஸத்யவதி முதலில் பீஷ்மரை விவாஹம் செய்து கொண்டு குலவிருத்தி செய்யும்படி அனுமதி கொடுத்தும், "என் பிரம்மசரிய விருதத்திற்கு விரோதமாய் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று அவர் மறுத்து விட்டார். பின்பு இம்மாதிரியான ஆபத்துக்காலங்களில் நல்ல சிறந்த மஹான்கள் அநுக்ரஹத்தால் இராஜபத்தினி குழந்தைகளை அடையலாம் என்று பீஷ்மர் நியாயத்தை எடுத்துக் காட்டத் தனது புத்திரனாகிய வியாஸரை ஸத்யவதி தியானித்தாள். மாதாவினது வேண்டுகோளிற் கிசைந்து வியாஸரும் அநுக்கிரஹிப்பதாக ஒப்புக்கொண்டார்.
வினா 68.- வியாஸர் அனுக்ரஹத்தால் யார் யாருக்கு எவ்விதமான புத்திரர்கள் உண்டானார்கள்? ஏன் அப்படி உண்டானார்கள்?
விடை... முதலில் அம்பிகைக்கு அநுக்ரஹிக்கும்பொழுது அவள் பயத்தால் கண்ணை மூடிக்கொண்டமையால் அவளிடத்தில் அந்தகனாகிய திருதராஷ்டிரன் பிறந்தான். பின்பு அம்பாலிகைக்கு அநுக்ரஹிக்கும் பொழுது அவள் பயத்தால் வெளுத்துப் போனமையால் அவளுக்குப் பாண்டு என்னும் வெளுத்த தேகமுடைய புத்திரன் உண்டானான். 'கடைசியாய் நல்ல புத்திரன் ஒருவனை அம்பிகையிடத்தில் உண்டாக்கவேண்டும்' என்று ஸ்த்யவதி வியாஸரைப் பிரார்த்திக்க, அவர் அப்படியே ஒப்புக் கொண்டு வந்தார். அம்பிகை, தான் வராது தனது தாதியை அனுப்ப, அவளிடத்தில் மஹாதர்மாத்மாவாயும், புத்திமானாயும், யமதர்மரது அம்சாவதார மாயும் உள்ள விதுரர் உண்டானார்.
வினா 69.- யமதர்ம ராஜா சூத்திர ஸ்திரீ வயிற்றில் அம்சாவதாரம் செய்ய வேண்டிய காரணம் என்ன?
விடை.- யமதர்மனுக்கு இவ்வாறு பிறக்கவேண்டும் என்று மாண்டவ்ய ரிஷி சாபம் நேர்ந்தமையால், இப்படி அவதாரம் செய்யும்படி நேரிட்டது.
வினா 70.- மாண்டவ்ய ரிஷி யமதர்மனைச் சபிப்பானேன்?
விடை... இவரை ஒருகாரணத்தால் அரசன் கழுவேற்ற, அதிலிருந்து பின்பு அரசனே அவரை வெளியி லெடுத்து விட முடியாமல் கழுமரத்தை மேலேயும், கீழேயும் அறுத்து விடச் செய்தான். இவர் தேகத்துள் இந்த இரும்பாணி இருந்தமையால் ஆணிமாண்டவ்யர் என்று பெயர்பெற்ற ரிஷி, தாம் செய்த எந்தப் பாபத்திற்காக இப்படி கழுவேறும் படி வந்ததென்று யமனைப் போய்க் கேட்டார். அதற்கு அவன் “நீர் ஏழு வயதில் தட்டாரப் பூச்சி முதலியவைகளை முட்களால் குத்தி வேடிக்கை பார்த்து வந்தீர். ஆகையால் இந்தக்கஷ்டம் உமக்கு வந்தது" என்றான். "சிறுவர் செய்த பாபம், தாய் தகப்பனுக்கென்று அறியாமல் என்னை வீணாய் கஷ்டப்படுத்தினாயே, ஆதலால் நீ சூத்திரனாய்ப் பிறக்கக் கடவாய்" என்று இவர் சாபங் கொடுத்தார்?
வினா 71.- ரிஷியை யாது காரணத்தால் அரசன் கழுவேற்றினான்?
விடை... ஒருநாள் மாண்டவ்ய ரிஷி தமது ஆசிரமத்தில் ஸமாதியிலிருக்கும்பொழுது சில திருடர்கள் ஸேவகரால் துரத்தப்பட்டு ரிஷி யிருக்குமிடம் வந்து ஸாமான்களை எறிந்து விட்டு அங்கேயே ஓரிடத்தில் ஒளிந்தார்கள். ஸேவகர்கள் வந்து ரிஷியை கேள்விகேட்க ரிஷி மெளனமாய் இருந்ததையும், பக்கத்தில் திருட்டுப்போன வஸ்துக்கள் இருப்பதையும் கண்டு, ஆச்ரமத்தை சோதிக்க ஆரம்பிக்க, திருடர்கள் அகப்பட்டார்கள். உடனே ரிஷியை ஒரு திருடனாக வெண்ணி அரசனிடம் அவர்கள் கொண்டுபோய்விட்டு அவன் ஆக்ஞையின் பேரில் எல்லோரையும் கழுவேற்றி விட்டார்கள்.
வினா 72.- திருதராஷ்டிரன் முதலியவர்களுக்கு யார் யார் பெண்சாதிகளாய் அமைந்தார்கள்?
விடை. - திருதராஷ்டிரனுக்குக் காந்தார தேசத்தரசன் பெண்ணும், சகுனி என்பவனது தங்கையுமாகிய காந்தாரி என்பனவளும், பாண்டு விற்கு குந்திபோஜராஜனது தத்துப் பெண்ணாகிய குந்தியும், மத்திர தேசாதிபதியாகிய சல்லியனது ஸஹோதரியாகிய மாத்ரியும், பெண்சாதிகளாய் அமைந்தார்கள்.
வினா 73.- இம்மூன்று பெண்களுள் யாரிடத்தில் என்ன முக்கிய விசேஷம் இருந்தது?
விடை... குந்தி யிடத்தில் ஒரு மந்திர மிருந்தது. அதை எந்த தேவதையை உத்தேசித்து உச்சரித்தாலும் அந்த தேவதை வந்து விடும். அவனது அநுக்ரஹத்தால் அவள் பிள்ளையை அடையும் சக்தி உடையவளாக இருந்தாள்.
வினா 74.- இது இவளிடம் இருப்பதற்குக் காரணம் என்ன?
விடை.- இவள் கன்னிகையாய் தனது தத்துப் பிதா விட்டிலிருக்கும்போது ஒருநாள் தூர்வாஸ மஹரிஷி சாதுர்மாஸ்ய விருதத்திற்கு அங்கே வந்தார். அப்பொழுது குந்தியைச் சிச்ரூஷை செய்யும்படி அரசன் ஏவ, அவள் இந்த மஹா கோபிஷ்டருக்கு பூரண திருப்தி வரும்படி நடந்துகொண்டாள். அந்த ரிஷி ஸந்தோஷத்தால் இந்த மந்திரத்தை குந்திக்கு உபதேசித்தார்.
வினா 75.- குந்தி இந்த மந்திரம் கிடைத்ததும் என்ன செய்தாள்?
விடை.- அது சக்தி உடையதா அல்லவா என்று பரீக்ஷை பார்க்க ஸூர்யனை உத்தேசித்து ஜபிக்க, அவர் அநுக்ரஹத்தால் இவளுக்குக் கன்னியாப் பருவத்திலேயே கர்ணன் என்ற ஒரு பிள்ளை பிறந்தது. ஸூர்யன் சொல் லியபடி அந்தப் பிள்ளையை ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டுவிட்டாள். பின்பு ஸூர்யன் அநுக்ரஹித்ததால் இவளுக்குக் கன்னியாப் பருவம் வந்துவிட்டது. (இந்தக் கர்ணன் கதையை சாந்தி பர்வத்தில் விஸ்தாரமாய்ச் சொல்லப்போகிறோம்.)
வினா 76.- இவளுக்குக் குந்திபோஜன் தத்துப் பிதாவென்று சொல்லி யிருக்கிறதே, இவள் சொந்த பிதா யார்?
விடை.- இவள் யயாதி பிள்ளையாகிய யதுவின் வம்சத்தில் பிறந்த சூரராஜன் பெண்ணும், ஜகந்நாதரான கிருஷ்ண பகவான் பிதாவாகிய வஸுதேவரது ஸஹோதரியுமாம்.
வினா 77.- குந்திக்கு இம்மந்திரங்களை உபயோகிக்கும் ஸமயம் வந்ததா? எப்படி?
விடை- வந்தது. கிந்தம ரிஷி சாபத்தால் பாண்டுவுக்குத் தனது பெண்சாதிகளைத் தொட முடியாமல் போய்விட்டது. அப்பொழுது வம்ச விருத்திக்கு இந்த மந்திரத்தைப் பாண்டுவின் வேண்டுகோளின்படி குந்தி உபயோகித்தாள்.
வினா 78.- கிந்தம ரிஷி ஏன் பாண்டுவை சபித்தார்? எப்பொழுது?
விடை... மூன்று பிள்ளைகளுள் பாண்டுவே இராஜனாகி திக் விஜயம் செய்தபின்பு ஒருநாள் வேட்டைக்குப் போன விடத்தில் ஓர் ஆண்மானும், பெண்மானும் விளையாடுவதைக் கண்டு அவைகளை அம்பெய்து கொன்றான். அவை நிஜ மான்கள் அல்ல. ஒரு ரிஷியும் ரிஷி பத்தினியும் அந்த ரூபத்தோடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாம் விளையாடிக்கொண்டிருக்கும்போது தம்மைத் தெரியாது பாண்டு அடித்ததால் “நீயும் உன் மனைவியோடு இப்படி விளையாடினால் உனக்கும் மரணம் வரட்டும்” என்று அந்த ரிஷி சபித்தார்.
வினா 79.- இந்தச் சாபம் கிடைத்தவுடன் பாண்டு என்ன செய்தான்?
விடை.- உடனே ராஜ்யத்திற்குத் திரும்பி வராமல் வானப்பிரஸ்தாசிரமியாய் பெண்சாதிகளோடு காட்டிலேயே இருந்து விட்டான்.
வினா 80.- இவன் குந்தியை மந்திரம் உபயோகிக்கும்படி சொல்லக் காரணமென்ன?
விடை.- பாண்டு காட்டில் வாஸம் செய்யுங்கால் அங்கு அநேக ரிஷிகள் மேருமலையில் இருக்கும் பிரம்மஸபைக்குப் போகும் வழியில் வந்து தங்கினார்கள். அவர்களோடு கூடப் பாண்டுவும் போக யத்தனிக்கையில், பிள்ளையில்லாதவர்கள் அங்கு வரக்கூடாதெனச் சொல்லி அவர்கள் பாண்டுவைத் தடுத்து விட்டுப் போயினர். உடனே பாண்டுவிற்குப் பிள்ளை வேண்டுமென்று ஆசைவர, குந்தியோடு ஆலோசித்து அவளை மந்திரத்தை உபயோகிக்கும்படி செய்தான்.
வினா 81- குந்தியின் மந்திரபலத்தால் எவ்வெப்பிள்ளைகளைப் பாண்டு
அடைந்தான்?
விடை.- குந்தியின் மந்திர பலத்தால் அவளிடத்தில் தர்மபுத்திரர், பீமன், அர்ஜுனன் என்பவர்கள் முறையே தர்மராஜன், வாயு, இந்திரன் என்பவர்களுடைய அநுக்ரஹத்தால் உண்டானார்கள். பின்பு குந்தி பாண்டுவின் வேண்டுகோளின்படி மாத்ரிக்கு இதை யுபதேசித்து அவளிடத்தில் நகுல ஸஹாதேவர் என்ற இரட்டைப் பிள்ளைகள் அசுவனி தேவதைகள் அநுக்ரஹத்தால் உண்டாகும்படி செய்தாள்.
வினா 82.- திருதராஷ்டிரனுக்கு எத்தனை குழந்தைகள்?
விடை... துர்யோதனன் முதலிய 100-பிள்ளைகளும், துச்சலை என்னும் கடைசிப் பெண்ணும் ஆகிய 101-குழந்தைகள் திருதராஷ்டிரனுக்கு உண்டானார்கள்.
வினா 83.- இவ்வாறு அநேக குழந்தைகள் காந்தாரிக்குப் பிறக்கக் காரணமென்ன? விடை.- வியாஸர் ஒருநாள் மிகப்பசியோடு அரண்மனைக்கு வர அவருக்குத் தாமதிக்காமல் காந்தாரி உணவளித்தாள். உடனே வியாஸர் 'உனக்கு 100- குழந்தைகள் உண்டாகட்டும் என்று அநுக்ரஹித்தார். இதனால் இவள் இவ்வளவு குழந்தைகளை அடைந்தாள்.
வினா 84.- இவளுக்குக் குழந்தைகள் பிறந்த விதம் எப்படி? 100-குழந்தைகள் உண்டாக வேண்டி யிருக்க 101-குழந்தைகள் உண்டாவானேன்?
விடை. - கொஞ்ச காலத்திற்கெல்லாம் காந்தாரி கர்ப்பம் தரித்தாள். ஆனால் இரண்டு வருஷம் வரையில் குழந்தை ஒன்றும் வெளி வரவில்லை. இதற்குள் காட்டில் தேவானுக்ரஹத்தால் குந்திக்கு ஒரு குழந்தை பிறந்ததெனக் கேள்விப்பட்டதும், பொறாமையால் ஒருவருக்கும் தெரியாமல் தனது வயிற்றை இடித்துக்கொள்ள, உடனே அவளது கர்ப்பம் ஒரு பெரிய மாம்ஸபிண்டமாய் வெளியில் வந்து விழுந்தது. இதை வியாஸர் 100 பிரிவாகப் பிரித்து 100 பாத்திரத்திலிட்டு மந்திரித்து வைத்துக் கொண்டு வருகையில், காந்தாரிக்கு 101-வது ஒரு பெண் உண்டானால் நலமாயிருக்கும் என்ற எண்ணம்வர வியாஸர் இதை உணர்ந்து 101-வது ஒரு சிறு துண்டு மீதி வரும்படி பிரித்து 101-பாத்திரங்களி லிட்டார். காலத்திற்கெல்லாம் இவைகள் 100-பிள்ளைகளும், ஒரு பெண்ணுமாக மாறின.
வினா 85.- இவர்கள் உண்டாகும் காலத்தில் என்ன குறிகள் காணப்பட்டன? இவர்களில் முக்கியமானவர்கள் பெயர்களைக் கூறுக? இவர்களுக்குக் கெளரவர் எனப் பெயர்வரக் காரணமென்ன?
விடை.- முதற்பிள்ளை உண்டாகுங்கால் அநேக அபசகுனங்கள் உண்டாயின. இவைகளைக் கண்டதும் விதுரர் முதலிய மஹான்கள் இம்முதல்பிள்ளையை ஸமுத்திரத்தில் எறிந்து விட்டால், பரதவம்சத்திற்கு க்ஷேமமுண்டாகுமெனப் புத்திகூற, திருதராஷ்டிரனுக்கு இப்படிச் செய்ய மனம் வரவில்லை. இதுபோலவே, இந்த 101-பிள்ளைகள் உண்டாகும் பொழுதும் அபசகுனங்கள் உண்டாயின. இவர்களில் முக்கியமானவர்களின் பெயர்கள்: துர்யோதனன் முதல்பிள்ளை, துச்சாஸனன் இரண்டாவது பிள்ளை, விகர்ணன், துச்சலை (கடைசிப்பெண்), ஆகிய இவர்களே. பரதவம்சத்தில் குரு என்ற ஒரு அரசனிருந்தான். இவர்கள் அவன் வம்சத்திற் பிறந்தவராகையால் இவர்களுக்கு கெளரவர் எனக் காரண விடுகுறிப் பெயர் கிடைத்தது.
வினா 86.- திருதராஷ்டிரனுக்கு வேறு பிள்ளைகளுண்டா?
விடை.- இவனுக்கு ஒரு வைசியப் பெண்ணிடத்தில் பிறந்த யுயுத்ஸு என்றொரு பிள்ளை உண்டு.
வினா 87.- பாண்டவர்கள் பிறக்குங்கால் என்ன விசேஷங்கள் நடந்தன?
விடை... தர்மபுத்திரர் பிறந்ததும் உலகமே ஸந்தோஷிப்பது போல் நற்சகுனங்கள் காணப்பட்டன. அசரீரிவாணி தர்மபுத்திரரது நற்குண விசேஷங்களைப் புகழ்ந்து கூறியது. பீமன் பிறந்ததும் அசரீரிவாணி அவனது பலத்தைப் புகழ்ந்து பேசியது. இவன் பிறந்தவுடன் காட்டில் ஒரு வேங்கை உறும, தன்மடியில் இருக்கும் குழந்தையை மறந்தவளாய், குந்தி அதிக பயத்தோடு எழுந்திருந்தாள். குழந்தை பீமன் கற்பாறையில் விழுந்தான். அவன் விழுந்ததும் கற்பாறை பொடிப் பொடியாக சிதறிப்போக, இந்த சப்தத்தைக் கேட்டு வந்த வேங்கை பயந்தோடி விட்டது. உடனே பீமனது பலம் எத்தன்மையது என்று பாண்டுவிற்கு விளங்கியது. அர்ஜுனன் பிறந்ததும் ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி சொரிந்தன. தேவதுந்துபி ஆர்த்தன. அசரீரிவாணி அர்ஜுனனது பிரதாபத்தைப் புகழ்ந்து கூறியது. நகுலஸஹாதேவர்கள் பிறந்தபொழுதும் இதுபோன்ற அசரீரிவாணி உண்டாயிற்று.
வினா 88.- இப்பஞ்ச பாண்டவர்கள் உண்டானபிறகு பாண்டுவின் கதி என்ன வாயிற்று?
விடை.- வஸந்தகாலம் வர, குந்தி குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியே போயிருந்த காலத்தில், பாண்டுவும், மாத்ரியும் உல்லாஸமாய் விளையாடி வந்தார்கள். மாத்ரி பாண்டுவிற்குக் கிந்தமரிஷியின் சாபத்தைப்பற்றி ஞாபகப் படுத்தியும், பாண்டு அதிக ஸந்தோஷமாய் இருந்தபடியால் ஒன்றுந்தோன்றாது தனது மனைவியோடு ஸுகமாய் விளையாடி வந்தான். கொஞ்ச நாழிகைக் கெல்லாம் ரிஷியின் சாபப்படி பாண்டு மரணமடைந்தான்.
வினா 89.- பின்பு பாண்டுவின் பெண்சாதிகள் என்ன செய்தார்கள்? பின் என்ன நடந்தது?
விடை.- குந்தி தான் உடன்கட்டை ஏறுவதற்கு வேண்டிய ஆதாரங்களை எடுத்துக் காட்ட, மாத்ரியும் தான் அவ்வாறு செய்வதற்குத் தகுந்த ஆதாரங்களை எடுத்துக் காட்டினாள். கடைசியில் மாத்ரிசொல்வதே நியாயமென்று தோன்ற குந்தி அவளுக்கு உடன்கட்டை ஏற அனுமதி கொடுத்தாள். உடனே மாத்ரி பாண்டுவின் தேகத்தோடு ஸஹகமனஞ்செய்து இறந்தாள். உடனே குந்தியையும் அவளது பிள்ளைகளாகிய பாண்டவர்களையும் அங்கு வஸித்துக்கொண்டிருந்த ரிஷிகள் தேற்றி ஹஸ்தினாபுரம் என்ற திருதராஷ்டிரன் ராஜ்யமாளும் பட்டணத்திற்குக் கொண்டுபோய் விட்டார்கள். அங்கு பாண்டுவிற்கும் மாத்ரிக்கும் அபரக் கிரியைகள் கிரமப்படி நடந்தேறின.
வினா 90.- பாண்டுவின் மரணத்தால் துக்கக்கடலில் ஆழ்ந்திருக்கும் ஸத்யவதியை வியாஸர் எவ்வாறு தேற்றினார்? பின் என்ன நடந்தது?
விடை... “ஸுககாலம் யாவும் முடிந்துவிட்டன. இனிமேல் உங்களுக்குப் பாண்டவ கெளரவரது சண்டையால் துக்கம் அதிகரிக்குமே ஒழிய, ஸுகத்திற்கு இடமில்லை" என்று வியாஸர் ஸத்யவதிக்கு எடுத்துரைத்தார். உடனே இவள் இதைத் தனது மருமகள் இருவருக்கும் உரைக்க, மூவரும் வனம்சென்று, துறவுபூண்டு, கடவுளைத் த்யானித்து, தமது தேகங்களை நழுவவிட்டு, ஸ்வர்க்கமடைக்தனர்.
வினா 91- கெளரவ பாண்டவர்கள் சிறுவர்களாய் இருக்கும் பொழுது எவ்வாறிருந்தனர்? இதனால் என்ன பிரமாதம் விளைந்தது?
விடை. - குழந்தைகள் அனேக அற்புத விளையாட்டுக்களை விளையாடிவந்தன. இவர்களில் பீமன் ஒருவன் மாத்திரம் கெளரவர் 100-பெயர்களை தனது பல விசேஷத்தால் ஸதா தோல்வி யடையும்படி செய்து வந்தான். மேலும் இவன் வேகமாய் நடந்து வந்தால் கெளரவரில் சிலர் கீழே விழுந்துவிடுவார்கள். இவைகளால் துர்யோதனாதியருக்கு பீமனிடம் பொறாமை உண்டாக, அவனை எப்படியாவது ஒழிக்க வேண்டுமெனத் தீர்மானித்தார்கள். இதற்காகவே துர்யோதனாதியர் கங்கையில் பிரமாண கோடி என்ற ஆழமான மடுவின் கரையில் ஜலக்ரீடா மண்டபம் ஒன்று கட்டி, அதில் விதம் விதமான போஜன விஷயங்களைத் தயார் செய்யச்சொல்லி, பாண்டவர்களை அங்குவந்து ஆனந்திக்க அழைத்தனர். யாவரும் அங்கு சென்று ஆனந்தமாய் விளையாடிக் கடைசியில் சாப்பிட உட்கார்ந்தார்கள். உடனே துர்யோதனனே பீமஸேனன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அவனுக்காகத் தயார் செய்திருந்த நஞ்சிட்ட சோற்றை திருப்திகரமாக பீமன் உண்ணும்படி செய்தான். எழுந்தவுடன் யாவரும் ஜலக்ரீடைசெய்து கொஞ்ச நாழிகைக்கெல்லாம் களைப்பாய் வந்து லதாக்ரஹங்களில் படுத்தார்கள். பீமன் விஷத்தின் வேகத்தால் மெய்மறந்து தூங்கத்தொடங்கினான். யாவரும் தூங்குகையில் துர்யோதனன் முதலியோர் பீமனைக் கொடிகளால் கட்டிப் பிரமாணகோடியில் தள்ளி விட்டார்கள்.
வினா 92.- பீமன் கதி என்ன ஆயிற்று? என்ன விசேஷங்கள் ஸம்பவித்தன?
விடை... பீமன் விழுந்ததும் அங்கிருந்த பாதாள லோகத்திற்குப்போகும் சுரங்கத்தின் வழியாய் நாகலோகத்திற்குப் போய்ச்சேர்ந்தான். அங்குள்ள பாம்புகள் இவனைக்கடிக்க பாம்பின் விஷத்தால் உணவின் விஷவேகம் குறைந்தது. பீமனுக்கு மயக்கம் தெளிந்தது. தன்னை சுற்றிக் கட்டியிருந்த கொடிகளை அறுத்துக் கொண்டு பாம்புகளை அடிக்க ஆரம்பித்தான். இந்த ஆச்சரியத்தை பீமனிடம் இருந்து தப்பிவந்த பாம்புகள் வாஸுகியாகிய ஸர்ப்பராஜனிடம் சொல்ல, அவன் வந்து பார்த்து, ஸர்ப்பங்களது அபிப்பிராயப்படி பீமனுக்கு 10,000 யானை பலம் வரும்படியான அமிருத ரஸம் கொடுக்க, பீமன் 8-கலசம் குடித்துத் திருப்தியடைந்து ஒரு படுக்கையில் படுத்தான்.
வினா 93.- இங்கு பாண்டவர்கள் குந்தி இவர்களது ஸ்திதி என்னமாயிற்று?
விடை.- பீமன் முன்னமே ஊருக்குப் போயிருப்பான் என்று சொன்ன துர்யோதனனது சொல்லை நம்பிப் பாண்டவர் முதலியோர் ஹஸ்தினாபுரஞ்செல்ல அங்கு பீமனைக் காணாது கவலை யுற்றனர். இதை யறிந்ததும் குந்திக்கு அடங்காத் துயரமுண்டாக, பீமனைத்தேட ஏற்பாடுகள் செய்துவிட்டு விதுரரை யழைப்பித்து அவரோடு அவள் ஆலோசனை செய்து பார்த்தாள். இது துர்யோதனனது செயலாகவே இருக்கவேண்டு மென்றும், பீமனை அவர்கள் கொன்றிருப்பார்கள் என்றும் குந்தி சொல்ல, விதுரர் மற்றப் பிள்ளைகளது க்ஷேமத்திற்காக குந்தியை பொறுமையோ டிருக்கச்செய்து, மஹரிஷிகளது ஆசீர்வாத பலத்தால் பீமன் திரும்பிவராமல் போக மாட்டான் என்று தேறுதல் சொல்லிப்போனார்.
வினா 94.- பீமன் எவ்வாறு திரும்பி வந்தான்? பின் நடந்தது என்ன?
விடை.- எட்டுநாள் முடிந்து பீமன் எழுந்ததும் அவனுக்கு 10,000 யானை பலம் உண்டாக, மங்களஸ்நாநம் செய்து பரிசுத்தனானான். நாகர்கள் உடனே பீமனைத் தூக்கி வந்து பிரமாணகோடியின் கரையில் விட்டுப்போயினர். உடனே பீமன் தனது தாய், ஸஹோதரர் இவர்களிடம் சென்று, தனக்கு வந்த ஆபத்துக்களையும் அவைகளால் தான் அடைந்த நன்மைகளையும் பற்றிச் சொன்னான். தர்மபுத்திரர் பீமனை ஒன்றுஞ் சொல்லாதிருக்கும்படி அடக்கிவிட்டார். விதுரர், யுயுத்ஸு இவர்கள் அன்று முதல் அடிக்கடி பாண்டவர்களுக்கு நல்ல புத்தி சொல்லிக் கொண்டு வந்தனர். இதன் பின்பு துர்யோதனாதியர் பீமனை அனேகந்தடவை விஷம் வைத்துக்கொல்ல யத்தனித்தும் பயன்படாமல் போயிற்று. விதுரர், யுயுத்ஸு இவர்கள் புத்தி சொன்னபடி ஒன்றும் வெளியிட்டுச் சொல்லாது பாண்டவர்கள் எல்லாவற்றையும் பொறுத்து வந்தனர்.
வினா 95.- பாண்டவர்கள், கெளரவர்கள் இவ்வாறு வளர்ந்து வருகையில் முதலில் யாரிடத்தில் வில் வித்தை பயின்றனர்?
விடை.- கெளதம ரிஷியின் புத்திரராயும், ஸதா வில் வித்தையிலேயே கவனமுடையவராயு முள்ள சாரத்வதர் புத்திரராகிய கிருபாசாரியரிடம் இவர்கள் முதலில் வில் வித்தை பயின்றனர்.
வினா 96.- இவ்வாசிரியருக்கு கிருபர் என்று பெயர் வரக்காரணமென்ன? இவர் யாரிடம் வில்வித்தை கற்றனர்?
விடை - இவரது தகப்பனாரான சாரத்வதர் வில்லுங்கையுமாய்த் தமக்கு தனுர் வேதத்தில் தேர்ச்சி வரவேண்டுமென்று தபஸுு செய்யுங்கால், அவர் தபஸைக் கலைக்க இந்திரனது உத்தரவால் ஒரு தேவதாஸி அங்கு வந்தாள். அவளைக் கண்டு மயங்கி அவளிடம் ஒரு பிள்ளையையும், ஒரு பெண்ணையும் பெற்றவுடன், தம் தபஸு பங்கமானது தமக்கு ஞாபகம் வந்துவிட்டது. உடனே வெட்கத்தாலும், கோபத்தாலும் அவ்விடம் விட்டு சாரத்வதர் இக்குழந்தைகளைக் கவனியாது வேறோரிடம் சென்றனர். சற்று நாழிகைக்கெல்லாம் அங்கு சந்தனு மஹாராஜனது ஸேவகன் வந்து, தனிமையாய் வில்லின் அருகே கிடக்கும் இவ்விரு குழந்தை களையுங் கண்டு இவைகள்மேல் கிருபை கூர்ந்து எடுத்துக்கொண்டு, தனது இராஜன் ஆளும் ஹஸ்தினாபுரி சென்று அரசனிடம் காட்ட, அவர் இக்குழந்தை களுக்கு முறையே கிருபன், கிருபி எனப்பெயரிட்டு ஜாக்கிரதையாய் வளர்த்து வரும்படி கட்டளை யிட்டார். இவ்வாறு குழந்தைகள் வளர்ந்து வருவதை கெளதம ரிஷி ஞானதிருஷ்டியால் அறிந்துவந்து இக்குழந்தைகளது பிறப்பை ஸேவகன் முதலியவர்களுக்குத் தெரிவித்துத் தாமே கிருபருக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தனர். இதைக்கண்டு பீஷ்மர் பாண்டவ கெளரவர்களுக்கு கிருபரையே தனுர்வேத ஆசிரியராக முதலில் நியமித்தார்.
வினா 97.- இதன்பின்பு யாரிடம் இவர்கள் தனுர்வேதம் பயின்றனர்?
விடை.- கிருபியினது கணவரும், பாரத்வாஜரது துரோண கும்பத்தில் உண்டான வருமான துரோணாசாரியரிடம் இவர்கள் வில்வித்தை பயின்றனர்.
வினா 98.- துரோணர் ஹஸ்தினாபுரம் வரக் காரணமென்ன? இவ்வூருக்கு வந்தவுடன் துரோணர் எவ்வாறிருந்தார்?
விடை... தமது பால்ய ஸ்நேஹிதனான துருபதனிட மிருந்து அவன் ஸபையார் முன்னிலையில் இவர் மிகுந்த அவமானத்தை அடைய, அதை ஸஹிக்காமல் அப்பொழுதே அச்சபையில் நான் சிறந்த சிஷ்யர்களுக்கு எனது வில்வித்தையைக் கற்றுக்கொடுத்து, ஏ மஹா கர்வங்கொண்ட அரசனே! அவர்கள் உன்னைத் தேரோடு தேராய்க்கட்டி என்முன் கொண்டுவரும்படி செய்கிறேன் கொடிய சபதத்தைச்செய்து, சிஷ்யர்களை அடைதற் பொருட்டு தனது மைத்துனர் இருக்கும் ஹஸ்தினாபுரம் வந்து அங்கு கிருபரோடு இடை இடையே பாண்டவ கெளரவர்களுக்கு வில்வித்தை யை சொல்லிக்கொடுத்து வந்தனர். துரோணர் தமது ஸாமர்த்தியம் யாவையும் கொஞ்சநாள்வரையில் ஒருவருக்கும் தெரியாமலிருக்கும்படி மறைத்துவந்தார்.
வினா 99.- இவர் துருபதனிடம் போகக் காரணம் என்ன? அவன் எவ்வாறு இவரை அவமானித்தான்?
விடை. - துரோணர் சிறுவரா யிருக்கும்கால், அக்னி விச்வ ரிஷியிடம் வில்வித்தைகள் கற்றுக்கொண்டிருக்கையில், இவரோடு துருபதனும் வில்வித்தை கற்கவந்தான். அவர்கள் இருவருக்கும் ஸ்நேஹம் உண்டாக அதில் துருபதன் 'எனக்கு பாஞ்சால தேசாதிபத்யம் கிடைத்தால் இராஜ்யம் முதலியவைகள் எல்லாவற்றையும் நீங்களும் என்னோடு ஸுகமாய் அனுபவிக்கலாம் என்று அடிக்கடி வாக்களிப்பது வழக்கம். கொஞ்ச காலத்திற்கெல்லாம் துருபதனுக்கு இராஜ்யம்வர துரோணருடைய ஞாபகமே அவனுக்கில்லாமல் போய்விட்டது. இதன் இதன் இடையில் துரோணர் கிருபியை மணந்து அசுவத்தாமன் என்ற ஒரு குழந்தையை யடைந்து, இக்குழந்தைக்குப் பாலில்லாது வருந்துங்கால், துருபதனது வார்த்தை இவருக்கு ஞாபகம் வந்தது. உடனே துருபதன் ஸபைக்குச் சென்று தனக்கும் அரசனுக்கும் உள்ள பால்ய ஸ்நேஹத்தை எடுத்துச் சொல்லி ஒரு பசு வேண்டுமென யாசித்தார். அரசன் மிகுந்த கர்வத்தோடு “என் நிலை என்ன உமது நிலை என்ன ? நமக்கு ஸ்நேஹம் எப்படி இருந்திருக்கக் கூடும்? என்று சொல்லி ஸபை நடுவில் துரோணரை அவமதித்தான்.
வினா 100.- இந்த துரோணர் வேறு யாரிடம் வில்வித்தை கற்றார்?
விடை - தனது ராஜ்யம் யாவையும் காசியபருக்குத் தானம் செய்து திருப்தியடைந்திருந்த பரசுராமரிடம் மிகுதியாய் இருந்த தனுர் வித்தையை அவரது அநுக்ரஹத்தால் துரோணர் பூர்ணமாய்த் தெரிந்து கொண்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக