அங்கம் 1 களம் 8 (தொடர்கிறது)
சீதை:-- நாதா! தங்கள் மொழியினும் கொடியதா அக்காடு? பிராணபதீ!
பரிவிகந்த மனத்தொடு பற்றிலா
தொருவு கின்றனை யூழிய ருக்கனும்
எரியு மென்பதி யாண்டைய தீண்டுநின்
பிரிவி னுஞ்சுடு மோபெருங் காடன்பா
என்னைச் சிறிதும் பற்றின்றி ஒதுக்குவதற்குக் காரணமாக, காட்டின் கொடுமையைப் பலவாறு விரித்துக் கூறினீர்கள். ஊழித்தீயும் வேகும்படியான அந்தக்காடு, சுடுமென்கிறீர்கள். தங்கள் பிரிவைப் பார்க்கிலும் அதிகமாகவா அது சுடும்? நாதா! தாங்கள் செல்லும் காடு, மகா கொடியதென்ற அந்தக் காரணத்தாலேயே நான் தங்களை அவசியம் பின்பற்றி வருவேன். அங்கேதான் தங்களுக்கு நான் பணிவிடை செய்வதவசியமாகும். நான் புற்களையும், முட்களையும், கற்களையும் மிதித்துக்கொண்டு தங்களுக்கு முன்னாகச் சென்று தாங்கள் செல்வதற்கு வழியைச் சுத்தப்படுத்தி வைப்பேன். தங்களுக்கு தாகமுண்டாகிய காலத்து, நான் நீர் தேடிக் கொண்டுவந்து கொடுத்து தங்கள் தாகத்தைச் சாந்தி செய்வேன். தாங்கள் கண்ணுறங்கும்போது, நான் தங்கள் அருகிருந்து, விஷ ஜந்துக்கள் முதலியவற்றால் தங்களுக்கு இடையூறு நேரிடாது பாதுகாப்பேன். தங்கள் உணவுக்கு வேண்டிய காய், கனி, கிழங்குகளைத் தேடிக் கொண்டுவந்து கொடுப்பேன். என் பிராணபதீ! ‘இவ்வகையான பணிவிடைகளையெல்லாம் செய்து, இவள் கிருதார்த்தையாய் விடுவாளே’ என்ற பொறாமையும், ‘நம் வார்த்தையைத் தட்டிப் பேசுகிறாளே’ என்ற கோபமும் கொள்ளாது, என்னையும் தங்களோடு அழைத்துச் செல்லுங்கள்.
இராமர்:-- சீதா! நீ உயர்குலத்திற் பிறந்த உத்தமி. மனம் போன போக்கெல்லாம் போகாதே. அரண்மனை வாசத்திற்கே நீ பிறந்தவள். எனக்குப் பணிவிடை செய்ய வேண்டுமென்ற ஆவல் உனக்கிருந்தபோதிலும், காட்டிற் சென்றபிறகு நேரும் கஷ்டங்களை நீ சகிக்க மாட்டாய். நான் உன்னுடைய நன்மையை நாடியே இவ்வளவு தூரம் சொல்லுகிறேன். என் பேச்சைத் தட்டாதே.
சீதை:-- அன்பா! தங்களுடனிருக்கும்வரையில் எனக்கு யாதொரு கஷ்டமும் நேராது. அன்றியும், நான் என் பிறந்தகத்திலிருந்தபொழுது, ‘நான் வாழ்க்கைப்பட்டபிறகு, கொஞ்ச காலம் வனத்தில் வசிக்க நேரும்’ என்று சோதிடர் என் தந்தைக்குச் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதை நான் என்று கேட்டேனோ, அன்று முதல் ‘காட்டிற்குப் போகவேண்டும்’ என்ற ஆசையுடையவளாகவே இருக்கிறேன். சோதிடம் பொய்க்குமா? வனஞ் செல்ல வேண்டுமென்று விதியிருந்தால் அதை வெல்ல முடியுமா? நான் அவ்விதிப்படி தனியாகச் செல்வதினும் தங்களுடன் சேர்ந்தே செல்வேன். வனவாசத்திற் கஷ்டங்கள் பலவுள வென்பதை நான் அறிவேன். அவை யெல்லாம் திருத்தம் பெறாத மனத்தினர்க்கும், பொறுமையில்லாதவர்க்குமன்றோ? சோதிடர்கள் சொன்னது மாத்திரமல்ல, என் தாயாரிடத்தில், பிச்சையெடுக்க வந்த ஒரு குறிகாரி, என்னைச் சுட்டி, ‘இவள் சிறிது காலம் காட்டில் வசிப்பாள்’ என்று சொன்னதையும் நான் கேட்டிருக்கிறேன். ஆதலால், நான் அவசியம் தங்களுடன் காட்டுக்கு வருவேன். ஒருத்தி, ஒழுக்கம் தவறாதவளாயிருப்பின், ‘இவ்வுலகத்தில் எந்தப் புருஷன் கையில் தகப்பனாதியோர் தீர்த்தத்தை வார்த்துக் கன்னிகாதானம் பண்ணிக் கொடுத்து விடுகின்றனரோ, அவனுக்கே அவள் மேலுலகத்திலும் மனைவியாவாள்’ என்று வேதங்கூறுவதாக பிராமணர்கள் சொல்லுகிறார்களன்றோ? அவ்வாறாக, ஒழுக்கந் தவறாதவளாயும், பதிவிரதையாயும், தங்களுக்குப் பணிவிடை செய்தலையே பெரும் பாக்கியமும் கடமையுமாகக் கொண்டிருப்பவளாயும், தங்களையே தஞ்சமாக எண்ணித் தங்களைத் தவிர வேறு சரணில்லாதவளாயும், தங்களுக்கு வரும் சுகதுக்கங்களைத் தனக்கு வரும் சுகதுக்கங்களாகக் கருதியிருப்ப வளாயும் இருக்கும் என்னை வெறுத்து, இங்கே விட்டுப் போகக் காரணமென்ன? என் காதலா! நான் காட்டில் தங்களோடு மாத்திரம் இருப்பேனாயின், முள்ளில் மிதிப்பது பஞ்சில் மிதிப்பது போலவும், காற்றில் புழுதி பறந்து மேனியிற் படிவது சந்தனம் பூசுவது போலவும் எனக்குத் தோற்றும். தங்களோடு வன மத்தியில் புல்லின் மீது படுத்து உறங்கினால் அதில் உண்டாகும் சுகம், அரண்மனைப் பள்ளியறையில், அம்சதூளிகா மஞ்சத்தின்மீது சயனிப்பதில் உண்டாகுமோ? தங்களோடு சேர்ந்து இருப்பதே எனக்குச் சுவர்க்கம். தங்களைப் பிரிந்திருப்பதே நரகம். தாங்கள் என்னைத் தங்களுடன் அழைத்துச் செல்லாவிடில், இன்றைத் தினமே உயிர் துறப்பேன். தாங்கள் என்னை விட்டுப் போனவுடன் என் உயிரும் என்னைவிட்டுப் போய்விடும். இத்துயரை ஒரு முகூர்த்தகாலம் சகிக்க என்னால் முடியவில்லையே, அப்படியிருக்க, பத்து வருஷம், அப்பால் ஒரு மூன்று வருஷம், அப்பாலும் ஒரு ஒரு வருஷமும் சகித்தல் முடியாதென்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இராமர்:-- சீதா! உன்னை அழைத்துப் போவதற்கு வேறோர் இடையூறு மிருக்கிறதே. நான் செல்வது தவஞ்செய்வதற்கு. தவசிகளுக்கு சம்சார பந்தங்கள் கூடாதென்பதை நீ அறியாயோ? சம்சார பந்தம்,
புத்தமிர்த போகம் புசித்துவிழி யிமையாத
பொன்னாட்டும் வந்த தென்றால்
போராட்ட மல்லவோ பேரின்ப முத்தியிப்
பூமியி லிருந்துகாண
எத்தனைவி காதம்வரு மென்றுசுகர் சென்றநெறி
யிவ்வுலக மறியா ததோ?
என்றபடி சம்சாரபந்தம் என்று ஒன்று வந்துவிட்டால், தேவர்களுக்கும் தவஞ்செய்து பேறு பெறுதல் அரிது. அந்த ஒரு பந்தம் காரணமாக தவத்துக்குப் பல இடையூறுகளும் வந்து சேரும். தேவர்களுக்கே அங்ஙனமானால், மனிதர்களுக்குச் சொல்லவேண்டுமா? அதனாலல்லவா, சுகமுனிவர் பிறந்தவுடன் துறவடைந்து நிடதமலை மேலேறினார். அதை உலகமெல்லாம் அறியுமே. அவ்வாறாக, சிலகாலந் தவஞ் செய்வதற்கு உன்னை அழைத்துச் செல்லுதல் நியாயமாகுமா?
சீதை:-- ஒவ்வொருவரும் தங்களுக்கனுகூலமான பிரமாணங்களையே எடுத்துக் கூறுவது வழக்கம். அதனால் மற்றவைகளை மறந்து விடுகிறார்கள். சுகபிரமரிஷி உலகத்துக்கஞ்சி வனத்துக்கோடியதை மட்டும் எடுத்துச் சொன்னீர்களே யொழிய, மனைவியருடன் வனத்திலிருந்து மாதவஞ் செய்தோரைத் தாங்கள் மறைத்து விடுகிறீர்கள் அல்லது மறந்து விடுகிறீர்கள் போலிருக்கிறது. நால்வகை ஆச்சிரமங்களுள் வானப்பிரஸ்தமும் ஒன்றென்பது தங்களுக்கு நன்கு தெரியும். அவ்வாச்சிரம தர்மப்படி மனைவியுடனுந் தவஞ் செய்யலாமல்லவா? அதுவும் வேண்டாம். மகா தவசிரேஷ்டராகிய, காசியபர், கௌதமர், கண்வர் முதலியோர், தமது மனைவிகளோடு காட்டிலிருந்து தவஞ் செய்யவில்லையா? அந்த மனைவியர்களால் அவர்களுக்கு என்ன துன்பம் உண்டானது? தங்களுடைய வைதீக காரியங்களுக்கு நான் ஒரு நாளும் இடையூறா யிரேன். தங்களைப் போலவே நானும் விரதநெறிகளைப் பூண்டு, தாங்கள் செய்யும் தவத்திற்கு உதவியாகத் தங்களுக்குப் பணிவிடை செய்துகொண்டிருப்பேன்.
இராமர்:-- என் கண்மணீ! நான் சொல்வதைக் கேள்.
சீதை:-- நாதா! என்னை அழைத்துப் போவதானால் எதுவும் சொல்லுங்கள். வேறு விஷயமானால் அதைச் சொல்லுந்துணையும் உயிர் வைத்திருப்பார்க்குச் சொல்லுங்கள்.
இராமர்:-- சீதா! உன் இஷ்டப்படியே உன்னையுமழைத்துப் போகிறேன். உனக்குத் துயரம் விளைவிப்பதாயின் நான் சொர்க்கத்தையும் விரும்பேன்.
(இராமர் சீதையை அழைத்துக்கொண்டு செல்கின்றனர்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக