ஞாயிறு, 19 ஜூன், 2016

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 1

களம் 4

(மந்தரை கைகேயி மனம் கெடுத்தலைத் தொடர்கிறாள்)

மந்தரை:-- அம்மா! இராமனுக்குப் பட்டமானால் அது பரதனுக்குப் பட்டமானதுபோலத்தான் என்கிறீர்களே. அவ்வளவு வித்தியாசமில்லாதபோது உங்கள் கணவர் பரதனுக்குப் பட்டங்கட்டி அதை இராமனுக்குக் கட்டியதுபோலவே பாவித்துக் கொண்டாலாகாதோ?

கைகேயி:--அடி பாதகி! சூரியகுலத்தில் அவ்விதம் முறையற்ற ஒரு காரியத்தைச் செய்ததாரடி, எப்பொழுதடி?

வெயின்மு றைக்குலக் கதிரவன் முதலிய மேலோர்
உயிர்மு தற்பொருள் திறம்பினு முறை திறம்பாதோர்
மயின்மு றைக்குலத் துரிமையை மனுமுதல் மரபைச்
செயிரு றப்புலச் சிந்தையா லென்சொனாய் தீயோய்!

அடி கொடியவளே, சூரியன் முதலாக வரும் இக்குலத்து அரசர் தமது உயிருக்கே கேடு வரினும் முறை தவறாதவர். இவ்வாறு குற்றமற்ற முறைமையையுடைய எங்கள் குலத்து வழக்கத்திற்கும், மனு முதலிய மேலோர் வழி வந்த எங்குலத்திற்கும் குற்றம் வரத்தக்கதாக என்ன காரியத்தைச் சொல்லவந்தாயடி? தகாத காரியத்தை நினைத்ததுமல்லாமல் அதை வாய்விட்டுச் சொல்லவுந் துணிந்துவிட்டாயல்லவா? விஷஜந்துக்களுக்கு வயதேற ஏற விஷம் அதிகப்படுவதுபோல வயதேற ஏற உனக்கு விஷமகுணம் அதிகமாகிறது போலிருக்கிறது. எனது பெற்றோர் எனக்குத் துணையாகக் கேகய நாட்டிலிருந்து உன்னை அனுப்பியது இதற்குத் தானோ?

எனக்கு நல்லையு மல்லைநீ யென்மகன் பரதன்
தனக்கு நல்லையு மல்லையத் தருமமே நோக்கில்
உனக்கு நல்லையு மல்லைவந் தூழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தாய்!

அடி அறிவற்றவளே! நீ எனக்கு நல்லவளுமல்ல; என் மகன் பரதனுக்கும் நல்லவளுமல்ல; எல்லார்க்கும் ஒன்றாகிய நீதியைப் பார்த்தால் உனக்கும் நீ நல்லவளல்ல; நீ செய்த தீவினை வந்து உன்னைத் தூண்ட உன் மனத்துக்குத் தோன்றுவனவற்றை யெல்லாம் பேசுகிறாய். அடி உனக்கு உணர்வழிந்து விட்டதா? பித்தம் மேலிட்டு விட்டதா? நீதி நியாயம் ஒன்றுமே நீ அறியாயா?

பிறந்திறந்துபோய்ப் பெறுவதுமிழப்பதும் புகழேல்
நிறந்திறம்பினு நியாயமே திறம்பினு நெறியின்
திறந்திறம்பினுஞ் செய்தவந் திறம்பினுஞ் செயிர்தீர்
மறந்திறம்பினும் வரன்முறை திறம்புதல் வழக்கோ?

உலகத்தில் மக்கள் பிறந்தும் இறந்தும் அடைவதும் அல்லது இழப்பதும் எதுவென்றால் பழுதற்ற புகழ். அவ்வாறிருக்க, குணம் மாறினாலும், நியாயம் மாறினாலும், நன்னெறியின் வகை மாறினாலும், செய்யுந் தவம் கெட்டாலும், குற்றமற்ற வீரம் கெடுவதானாலும் தொன்றுதொட்டு வரும் ஒரு முறைமையை மாற்றத்தகுமா? உணர்வு கெட்டவளே! உன் தீய எண்ணங்களை என்னிடம் தெரிவித்ததுபோல் என் மகன் பரதனிடம் தெரிவித்திருப்பாயானால் உன்னை இதுவரையில் என்ன செய்திருப்பான் தெரியுமா? உன்னுடைய நாவை இரண்டு துண்டாக வெட்டி எறிந்திருப்பான். பேதைமதியினளே!

போதி யென்னெதிர் நின்றுநின் புன்போறி நாவைச்
சேதி யாதிது பொறுத்தனன் புறஞ்சில ரறியின்
நீதி யல்லவு நெறிமுறை யல்லவு நினைந்தாய்
ஆதி யாதலின் அறிவிலி அடங்குதி நீயே

என் எதிரே நில்லாதே போ. தீயது சொன்ன உன் நாவைத் துண்டியாது விடுத்தேன். ஏனெனில் இது முதன்முறை. வெளியில் யாரேனும் இதை அறிந்தால் என்னாகும்? நீதிமுறையில்லாத காரியத்தை நினைத்தாய். அறிவில்லாதவளே! உன் அதிகப் பிரசங்கித்தனத்தை இம்மட்டோடு அடக்கு! இனி இவ்வித விஷயங்களை என்னிடத்திலாயினும் வேறு யாரிடத்திலாயினும் தெரிவிப்பதற்குமுன் அதன் பலாபலங்களை யோசித்துத் தெரிவி. இவ்வித துர்நடத்தைகளை இனி உன்னிடத்திற் காண்பேனாயின், அன்றையதினமே உன்னைக் கேகய நாட்டிற்கு அனுப்பி விடுவேன். அப்புறம் நீ இந்த அரண்மனையில் அடி வைப்பதற்குத் தகுதியுள்ளவளல்லை. துராலோசனை கற்றவளே! என் எதிரே இராதே. உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம் அதிகரிக்கிறது. எழுந்து எங்கேனும் தொலை.

மந்தரை:-- அம்மா, உங்களுக்கு துராலோசனை சொல்லித் தங்களைக் கெடுத்து, நான் தங்க மாளிகை கட்டிக்கொள்ளப் போகிறதில்லை. தங்கள் தாய்தந்தையர் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்குத் துரோகம் செய்யக்கூடாது, அவர்கள் என்னை நம்பித் தங்களுக்குத் துணையாயனுப்பியிருக்கத் தங்களை நட்டாற்றில் கைநழுவ விட்டுவிடக் கூடாது என்றெண்ணியே இவ்வளவு தூரம் சொல்லவந்தது. தாங்கள் இப்படி எடுத்தெறிந்து பேசியமாதிரிக்கு என்னையன்றி வேறொரு தாதியாயிருந்தால் நமக்கென்ன என்று போய்விடுவாள். எனக்கு அவ்விதம் போக மனமில்லை. என் மனச்சாட்சி இடங்கொடுக்கவில்லை. தங்கள் தந்தையாரிட்ட சோற்றை உண்டு வளர்ந்தவள் நான். அவர்கள் சோற்றை உண்டு அவர்கள் புத்திரியாகிய தாங்கள் கெட்டுப்போவதைப் பார்த்திருக்க என் மனம் சகியாது. கேகய தேசத் தரண்மனையில் எத்தனையோ தாதிகள் இருக்க, அவர்களையெல்லாம் விட்டு விட்டு என்னைத் தங்களுடன் இங்கு அனுப்புவானேன்? நான் தங்களைப்போலப் பெண்ணாயிருந்தாலும் மந்திரிபோல் யோசனையில் வல்லவளென்பதற்காக வல்லவா? அதனாலல்லவா எனக்கு மந்தரை யென்று பெயருமிட்டார்கள்? அம்மா! ஒருவருக்கு இரண்டாம் தாரமாய் வாழ்க்கைப்படுவதில் அநேக கெடுதிகளுண்டு. அதிலும் இராஜகுடும்பத்தில் இரண்டாவது பட்ட ஸ்திரீயாய் வருவதில் அநேக கஷ்டங்களுள்ளன. அவைகளை உங்கள் தந்தை அறியாதவரல்ல. அறிந்தும் தங்களை இரண்டாம் தாரமாகக் கொடுத்தது எதனாலென்றால், நான் தங்களுக்குத் துணையாயிருக்கும் வரையில் தங்களுக்கு ஒரு கெடுதியும் வராதென்ற நிச்சயத்தால்தான். தாங்கள் இப்படி என்னுடைய துணையை உபேக்ஷை செய்வீர்களென்று தங்கள் தாய்தந்தையர் அறிந்திருந்தால், தங்களை இங்கு இரண்டாந் தாரமாகக் கொடுத்திருக்க மாட்டார்கள்.

கைகேயி:-- மந்தரை! நீ யூகசாலி என்பதையும், சாமர்த்தியசாலி என்பதையும் நான் மறுக்கவில்லை; உன்னுடைய துணையும் யோசனையும் வேண்டாமென்றும் சொல்லவில்லை. உள்ளபடி எனக்குக் கெடுதல் நேரிட்டாலல்லவோ உனது துணை வேண்டும்? அவ்விதம் ஒன்றுமில்லையே?

மந்தரை:-- அம்மா! மனிதர்கள் தமக்கு வரும் இடையூறுகளைத் தாமே அறிந்துகொள்ளக்கூடுமானால், அவர்களுக்குத் துணை எதற்கு? தங்களுக்கு வந்திருக்கும் இடையூறு தங்களுக்கே தெரியாதது சகஜந்தான். அதற்காகத்தான் என்னைப்போல் ஒருவர் துணையாய் இருப்பது. இதையறியாமல் தாதியென்று என்னை எடுத்தெறிந்து பேசித் துரத்திவிடுவதா அழகு?

கைகேயி:-- தாதியென்று உன்னை நான் உபேக்ஷிக்கவில்லை. இடையூறு இடையூறு என்று கூறுகிறாயே ஒழிய அது இன்னதென்று விளங்கக் கூறமாட்டேனென்கிறாயே. இராமன் பட்டத்துக்கு வரப்போகிறான் என்கிறாய். வந்தாலென்ன? அதனால் எனக்கு நேரும் கெடுதலென்ன? வேறு யாருக்குத்தான் என்ன கெடுதல் நேரும்? அதைச் சற்று விளக்கமாகக் கூறலாகாதா?

(19-06-2016ல் தொடரப்போகும் பகுதியில்
விளக்கமாகக் கூறலாகாதா? என்று கேட்டுத்
தன் நோக்கம் நிறைவேற வழிவைத்த
கைகேயியின் புத்தியைக் கெடுத்த
மந்தரை வாதங்கள் தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக