அங்கம் 1
களம் 4
தொடர்கிறது
மந்தரை:-- மேல் நடத்தவேண்டிய விஷயமென்ன? இந்தப் பட்டாபிஷேகத்தைத் தடுத்துவிட வேண்டியதுதான்.
கைகேயி:-- அது எனக்கும் தெரிகிறது. அதை எப்படித் தடுப்பதென்பதல்லவோ யோசனை?
மந்தரை:-- அம்மா, என் யோசனையைப் பெரிதாக மதித்துக் கேட்க ஒருப்பட்டீர்களே, இதுவே போதும். இனித் தங்களுக்கு ஆபத்தொன்றும் வராது. கவலைப்படவேண்டாம். தங்கள் கணவர் தாமாக, பரதனுக்குப் பட்டங்கட்டத் தவறினால், அவனுக்கு எப்படிப் பட்டங்கட்டுவதென்பதைப் பற்றி, இப்பொழுதல்ல, பரதன் பிறந்தது முதல் நான் யோசித்து வைத்திருக்கிறேன். அந்த யோசனை இப்பொழுது பயன்பட்டது.
கைகேயி:-- என்னடி அது?
மந்தரை:-- தங்கள் கணவர் சம்பராசுரனோடு யுத்தஞ் செய்தாரல்லவா?
கைகேயி:-- ஆம்
மந்தரை:-- அப்பொழுது நீங்கள் அவருக்கு ஒரு பேருதவி புரிந்திருக்கிறீர்களல்லவா?
கைகேயி:-- ஆம்.
மந்தரை:-- அவ்வுதவிக்குப் பிரதியாக அவர் தங்களுக்கு இரண்டு வரங்களளித்தாரல்லவா?
கைகேயி:-- ஆம், ஞாபகமிருக்கிறது.
மந்தரை:-- அவ்வரங்களிரண்டையும் பெற்றுக் கொண்டீர்களா?
கைகேயி:-- இல்லை
மந்தரை:-- ஏன்?
கைகேயி:-- அவைகளை நான் வேண்டியபோது பெற்றுக்கொள்ளலாமென்று அவர் கூறினார். நானும் அதற்குச் சம்மதித்தேன். அப்புறம், அவைகளைப் பெறத்தக்க சமயம் ஒன்றும் நேரவில்லை, ஆதலால் பேசாமல் இருந்துவிட்டேன்.
மந்தரை:-- அம்மா, அந்தச் சமயம் இதோ வந்துவிட்டது. அவ்வரங்களை இப்பொழுது உபயோகப்படுத்தாமல் வேறெப்பொழுது உபயோகப்படுத்தலா மென்றிருக்கிறீர்கள்?
கைகேயி:-- அது வாஸ்தவந்தான். அவைகளை எப்படி உபயோகப் படுத்தலாமென்கிறாய்?
மந்தரை:-- இது கூடவா கேட்கவேண்டும்? நமக்கு ஆகவேண்டிய காரியங்கள் இரண்டு. ஒன்று இராம பட்டாபிஷேகத்தைத் தடுப்பது. மற்றொன்று பரத பட்டாபிஷேகத்தை முடிப்பது. இரண்டுக்கும் இரண்டு வரங்கள் சரியாய்ப் போய்விட்டன. முதல் வரம் பரதன் நாடாள வேண்டுமென்பது. இரண்டாவது வரம் இராமன் காடேக வேண்டுமென்பது.
கைகேயி:-- என்னடி மந்தரை! இராமன் நமக்கென்ன செய்தான்? அவன் நாட்டிலிருந்தால் நமக்கென்ன? நாம் வேண்டுவது பரதனுக்குப் பட்டம். அது முடிந்துவிட்டால் அப்புறம் நமக்கென்ன கஷ்டம்? இராமன் இங்கிருப்பதாலென்ன நஷ்டம்? அவனை அனுப்புவதில் இஷ்டமில்லை எனக்கு. இந்த துஷ்ட புத்தி ஏன் உனக்கு?
மந்தரை:-- அம்மா! நீங்கள் பின் வருவதொன்றையும் யோசியாமற் பேசுகிறீர்கள். இராமன் நாட்டிலிருந்தால் பரதனுக்குப் பட்டமென்று வாயாற்கூடச் சொல்லலாமா? இராமன் சக்கரவர்த்திக்கு மூத்த குமாரனென்பதை எல்லாரும் அறிவர். இராமனுக்கென்று பட்டம் குறித்திருப்பதும் எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் பரதனுக்குப் பட்டம் நிலைக்குமா? பரதனுக்குப் பட்டமாகும்போது இராமன் நாட்டிலிருந்தால், அவனுடைய முயற்சியில்லாமலேயே ஜனங்களால் கலகமும் அராஜகமும் நேரிடும். ஜனங்கள் கண்ணுக்கு மறைவாய் அவன் காட்டிலிருந்தால் தேசம் அமைதியாயிருக்கும். இது ஒரு ராஜதந்திரம். அரசியாயிருக்கும் தாங்கள் இதை அறியாது பேசுகிறீர்களே!
கைகேயி:-- மந்தரை! நீ சொல்வது சரி. இராமன் சக்களத்தி மகனாயிருந்தாலும் சிறுவனாயிற்றே. அவனைக் காட்டுக்கனுப்பிக் கஷ்டப்படச்செய்வது என் மனதுக்கு அவ்வளவு உசிதமாகத் தோன்ற வில்லை.
மந்தரை:-- கஷ்டமா? காட்டுக்குப் போவதில் கஷ்டமென்னம்மா? ஆழ்ந்து பார்த்தால் அதில் அவனுக்கு அநேக நன்மைகள் உள்ளன. புண்ணிய நதிகளில் நீராடலாம். மகரிஷிகளைத் தரிசிக்கலாம். அவர்களால் அநேக நன்மைகளைப் பெறலாம்; நிச்சிந்தையாய்க் காலங் கழிக்கலாம். இதில் உங்களுக்கு என்னம்மா கவலை? முன் விசுவாமித்திரர் யாகத்தை முற்றுவிக்க வனத்திற்குச் சென்றானே, அப்பொழுது அவனுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தது? ஒன்றுமில்லையே! அப்பொழுது அவன் அடைந்த இலாபங்கள் எவ்வளவு? விசுவாமித்திரரிடம் அநேக அஸ்திர மந்திரங்களைக் கற்றுக் கொண்டான்; அகல்யைக்குச் சாப விமோசனம் செய்து கௌதமர் அனுக்கிரகத்தை அடைந்தான். ஜனகன் மகளை மனைவியாகப் பெற்றான். பரசுராமரைப் பங்கப்படுத்திப் புகழ் பெற்றான். சிறிது காலம் வனவாசஞ் செய்ததால் இவ்வளவு நன்மைகளைப் பெற்றானே, இன்னும் கொஞ்சம் நீடித்த காலம் வனத்தில் வாசம் செய்வானானால் எவ்வளவு இலாபங்களை அடைவான் தெரியுமா?
கைகேயி:-- மந்தரை, நீ சொல்வதும் ஒருவகையில் நியாயமாய்த் தானிருக்கிறது. எனக்கும் மனச்சம்மதமாகிவிட்டது. சக்கரவர்த்தி அதற்கு ஒப்ப வேண்டுமே?
மந்தரை:-- அதுவா ஒரு பெரிய காரியம்! முன்னம் விசுவாமித்திரர் வந்து இராமனைக் காட்டுக்கனுப்பும்படி கேட்டபோதும் தங்கள் கணவர் வெகுவாகத்தான் மனங்கலங்கினார். பிறகு வசிஷ்டரால் மனந்தேறி அவனை அனுப்பவில்லையா? ஒரு கிழவரால் முடிந்த காரியம், யௌவன ஸ்திரீ, அதிலும் பட்டஸ்திரீ, பட்ட ஸ்திரீயிலும் இஷ்டஸ்திரீயாகிய தங்களால் ஆகாதா?
கைகேயி:-- உண்மை.
நன்று சொல்வினை நம்பியை நளிர்முடி சூட்டல்
துன்று கானத்தி லிராமனைத் துரத்தலிவ் விரண்டும்
அன்ற தாமெனில் அரசன்முன் னாருயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென்யான் போதிநீ தோழி.
மந்தரை! நன்றாய்ச் சொன்னாய். நீ இவ்வளவு யோசனை கூற அதற்கு மேலாக வேண்டிய அற்ப விஷயம் என்னால் முடியா விட்டால் அப்புறம் எனக்குப் பெண்ணென்ற பெயரேன்? அரசரை நான் கேட்கவேண்டிய வரங்கள் இரண்டு; ஒன்று என் மகன் பரதனுக்கு முடி சூட்டல், மற்றொன்று இராமனைக் காட்டுக்குத் துரத்தல். இந்த இரண்டு வரங்களையும் அவர் கொடுக்காவிட்டால் அவரெதிரிலேயே நான் தற்கொலை செய்து கொண்டு உயிர் துறப்பேன். இனி நீ போகலாம்.
மந்தரை:-- அம்மா, அப்படிப் பதஷ்டமாக ஒன்றும் செய்து விடாதீர்கள். உயிர்துறப்பது போல நடிக்கவேண்டுமே யொழிய உயிரைத் துறந்து விடக்கூடாது. சுவரை வைத்துக்கொண்டுதானே சித்திரமெழுத வேண்டும்!
கைகேயி:-- மந்தரை! என்மேல் உனக்குள்ள பிரியத்திற்குப் பிரதி நான் என்ன செய்யப் போகிறேன்? உலகத்தில் அனேக கூனிகளிருக்கிறார்கள். அவர்களெல்லாம் வெகு துர்க்குணமும் மிக அவலக்ஷணமும் பொருந்தியவர்கள். நீயோ, கண்ணுக்கினிய கமலமொன்று காற்றால் ஒருபுறம் வளைந்து நிற்பது போல, உனது கூனால் வளைந்து அழகாய் நிற்கிறாய். நீ வெண்பட்டொன்றை விசித்திரமாய் உடுத்து அழகாக என் முன்னே நடக்கும் போதெல்லாம் ஒரு சிறந்த இராஜஹம்ஸப்பேடுபோல் தோற்றுகிறாய். சக்கரவர்த்திக்குச் சாரதியாய்ச் சென்றபொழுது சம்பராசுரன் மாயைகளைப் பார்த்துள்ளேன். அவ்வசுரர் தலைவனைக் காட்டிலும் நீ மாயையில் வல்லவள். தேரின் கோணம்போல் உயர்ந்து தோன்றும் உனது கூன் எவ்வளவு புத்திகளையும் யுக்திகளையும் அரச வித்தைகளையும் மாயைகளையும் அடக்கிக் கொண்டிருக்கிறது! எனக்கு நீ செய்த உதவியை நான் என்றும் மறவேன். இராமன் காட்டுக்குப்போய் பரதன் பட்டத்துக்கு வந்தவுடன் நான் ஆணிப்பொன் மாலையொன்று உன் கூனிற் பொலியச் சூட்டுகிறேன். என் காரியம் கைகூடினதும் களிப்போடு உனது கூனுக்குச் சந்தனம் பூசுகிறேன். எனது மனோரதம் முற்றினால், குற்றமற்ற பொற்றிலக மொன்று, உனது நெற்றிக்கிடுவேன்; கழுத்திற்குப் பல அணிகலன்களும் தருவேன். அவைகளையெல்லாம் அணிந்துகொண்டு, விலையுயர்ந்த பட்டாடைகளை உடுத்துக்கொண்டு ஒரு தேவதைபோல் நீ என்கண் முன்பாக உலாவிக் கொண்டிருப்பாய். அந்தரத்துள்ள சந்திர பிம்பமோ என்று யாரும் ஐயுறும்படியான முகத்துடன் விளங்கி சத்துருக்களைப் பார்த்துச் செருக்குற்று நீ நடக்கப் போகிறாய். எனக்கு நீ பணிபுரிவதுபோல, பல கூனிகள் பட்டாடையும் பலப்பலவாபரணங்களும் பூண்டு உனக்குப் பணிவிடை செய்வார்கள்.
மந்தரை:-- எனக்குப் பட்டாடையும் வேண்டாம், பணிப்பெண்களும் வேண்டாம். என் கண்மணி பரதனுக்குப் பட்டமானால் அதுவே போதும். நேரமாயிற்று, நான் போய் வரட்டுமா?
கைகேயி:-- சற்றுப்பொறு, சக்கரவர்த்தி வரும்பொழுது நான் இருக்கும் கோலத்தையும் பார்த்து விட்டுப்போ.
(கைகேயி படுக்கையைவிட்டு வந்து கோபக்கிரகத்திற் புகுந்து தரையிற் படுக்கிறாள்; மாலையைக் கழற்றி ஒரு மூலையிலெறிகிறாள்; ஆபரணங்களைக் கழற்றி அங்குமிங்கும் போடுகிறாள்; கண்ணிலிட்ட மையைக் கலைக்கிறாள்; நெற்றியிலணிந்த திலகத்தை அழிக்கிறாள்; அழகாய் உடுத்திருந்த ஆடையை அலங்கோலப்படுத்திக் கொள்ளுகிறாள்; பூமுடித்த கூந்தலை அவிழ்த்து பூமியிற் புரள விடுகிறாள்; பிறகு மந்தரையைப் பார்த்து) தோழீ! கொண்டகோலத்தில் ஏதும் குறையுண்டோ?
மந்தரை:-- ஒன்றுமில்லை; எல்லாம் சரியாயிருக்கிறது. இன்னும் இரண்டு விஷயம் மறந்துவிட்டீர்கள். முகம் வாடவேண்டும்; கண்ணீர் ஆறாய் ஓடவேண்டும். ஆனால் அவைகளை நான் போனபிறகு செய்துகொள்ளுங்கள், பொய்யாகவேனும் தங்கள் சந்திரவதனம் வாட நான் சகிக்கமாட்டேன்; தங்கள் கண்ணில் நீர்புரள நான் பொறுக்க மாட்டேன். போய் வருகிறேனம்மா.
கைகேயி:-- நல்லது போய்வா.
[ மந்தரை போகிறாள். கைகேயி முகம் வாடிக் கண்ணீர் சிந்தித் தரையிற் படுத்தபடியே கிடக்கிறாள். தசரதர் வருகிறார். படுக்கையிற் கைகேயியைக் காணாமல், கோப அறையிற் சென்று பார்க்கிறார். அங்கே அவள் தரையில் தலைவிரி கோலமாய்க் கிடைப்பதைப் பார்த்துத் திகைத்து நிற்கிறார்; பிறகு முழங்காலிட்டு உட்கார்ந்து அவளை வாரி எடுக்கிறார். கைகேயி அவர் பிடியைத் திமிறி உதறிவிட்டுப் பெருமூச்செறிந்து வேறு புறமாகத் திரும்பிப் படுத்துக்கொள்ளுகிறாள். தசரதர் மறுபடியும் அவள் கையைப் பிடித்துக்கொண்டு]
தசரதர்:-- என் காதற் கனியே! கேகயன் மகளே! ஏன் இந்த அலங்கோலம்? உனக்கு வந்ததென்ன வியாகூலம்? உன் மதிமுகங் கருகுவானேன்? மலர்க்கூந்தல் அவிழ்ந்து சோர்வானேன்? மலர்க்கண் திறந்து உன் பதிமுகத்தைப் பாராயா? என்னோடின்னுரையாட வாராயா? வேர் களைந்தெறியப்பட்ட கொடிபோலவும், தெய்வலோகத்திலிருந்து கீழே விழுந்த தேவகன்னி போலவும், நீர்நீத்த பொய்கையின் நடுப்பூத்த கமலம் போலவும், கணைபட்டுச் சோர்ந்த பிணைமான்போலவும் நீ கிடப்பதைப் பார்த்து என் மனம் பதைக்கிறதே! பெண்மணியே! பெண்கள் சிகாமணியே! விண்ணோர் சிந்தாமணியே! என்னாவியே! அருமைச் சஞ்சீவியே! உனக்கேதும் பிழையிழைத்தேனோ பாவியேன்? என்மேல் ஏதும் கோபமோ? வேறு யார் மீதேனும் மனஸ்தாபமோ? ஏதேனும் நோயால் வருந்துகிறாயா? அடி மட அன்னமே! மாற்றுயர்ந்த சொன்னமே! வாய்விட்டுச் சொன்னால் உன் நோய் விட்டுப்போக நான் மார்க்கம் தேடேனோ? உனக்கித்தனை பாடேனோ? உனக்குத் தீங்கிழைத்தவர் யார்? சொல், இந்த க்ஷணமே அவர்களைத் தண்டிக்கிறேன். யாரையாவது சிரச்சேதம் செய்யவேண்டுமா? மரணதண்டனை விதிக்கப் பெற்றவர் எவரையேனும் மன்னிக்க வேண்டுமா? இந்த நிமிஷமே நீ விரும்புவதை முடிக்கின்றேன். நீ உன் பவளவாய் திறந்து உன் குறையை மொழியடி பெண்ணே! கொண்ட துன்பம் ஒழியடி கண்ணே! உன் மனதிற்கு மாறாக நடப்பவர் எவருளர்? ஏன் வீணாக வருந்துகிறாய்? என் கட்டிக் கரும்பே! உன் முகத்தில் ஏன் இப்படி வியர்வை அரும்புகிறது? (அவள் முகத்தை வஸ்திரத்தால் துடைக்கிறார்)
பட்ட ஸ்திரீயிலும் இஷ்ட ஸ்திரீயிடம் மாட்டிக்கொண்ட
தசரதன் அவஸ்தையை
(அடுத்த வாரம் தொடர்வோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக