3. திருவரங்கனிடம் தேசிகன் ஈடுபாடு
ஸ்ரீதேசிகனுக்கு விபவவதாரத்தில் இராமபிரானிடமும் கண்ணனிடமும் அர்ச்சாமூர்த்திகளில் திருவரங்கன் திருவேங்கடமுடையான் --- பேரருளாளன் -- தெய்வநாயகன் ஆகிய திருமேனிகளிலும் அளவற்ற ஈடுபாடு உண்டென்பது புதிதாய்க் கூறவேண்டியதன்று. ஆனாலும் திருவரங்கனைப் பற்றிச் சிந்திக்கும்போதும் பேசும்போதும் மற்ற திருமேனிகள் எல்லாம் திருவரங்கனிடமே ஒன்றிவிடுவதாய் ஒரு தோற்றம் ஸ்வாமிக்கு வந்து விடுகிறது. அவன்தானே பெருமாளாகிய இராமபிரானால் ஆராதிக்கப்பெற்றுப் "பெரிய பெருமாள்" என்று அழைக்கப் பெற்றவன்! தேசிகனுக்கு அவனிடம் உள்ள ஈடுபாடு, திருவரங்கனுக்கென்று தாம் பாடிய அபீதிஸ்தவம், பகவத் த்யாந ஸோபாநம், தசாவதார ஸ்தோத்ரம் ஆகியவை தவிர மற்றும் பல ஸூக்திகளில்கூட, திருவரங்கனைப் பற்றிப் பேசியே தொடங்குவதும் முடிப்பதாயுமுள்ள அளவுக்கு ஆர்வத்தை எழுவித்துவிட்டது. ப்ரபத்தியை விளக்கும் ந்யாஸதிலகம், ஸ்ரீபாஷ்ய ஸாரார்த்தத்தைக் குறிக்கும் அதிகரண ஸாராவளி, திருவாய்மொழியின் ஸாரத்தைக் காட்டும் தாத்பர்ய ரத்நாவளி முதலிய ஸ்ரீஸூக்திகளில் கூடத் தொடக்கத்திலும் முடிவிலும் திருவரங்கனையே போற்றுவதைக் கொண்டே அவன்பால் தேசிகனுக்கு உள்ள ஈடுபாட்டை உணரலாம். தம்முடைய ஸூக்திகள் மட்டுமின்றி ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்ரீஸூக்திகள் அனைத்தையுமே தமக்கு உரிமை இருந்தால் திருவரங்கனுக்கே வாரி வழங்கிவிடும் திருவுள்ளப் பாங்கு நம் தேசிகனுக்கு. திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான் பிரபந்தத்துக்கு ரஹஸ்ய வடிவில் உரையிட்டருளிய நம் தேசிகன், பரமபதநாதன் திருப்பாற்கடலில் உள்ள வியூகத் திருமேனிகள் -- ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்கள் -- அந்தர்யாமி உருவம் -- மற்ற அர்ச்சாமூர்த்திகள் ஆகிய அனைத்துருவங்களையுமே இவ்வாழ்வார் பெரிய பெருமாள் திருமேனி ஒன்றிலேயே கண்டுவிட்டதாயும் அவன் மற்ற எந்த வடிவைக் கண்முன் காட்டினாலும் தாய்ப்பாலையே கொண்டு வளரும் (பழைய காலத்துக்) குழந்தைகளுக்கு மற்ற உணவு ருசியாததுபோல் ஆழ்வாருக்கு ருசியாதென்றும் உறுதியாய் விளக்கியுள்ளார். ஆழ்வாருக்கே அந்தத் திருவுள்ளமோ, தேசிகனது திருவுள்ளமோ, தேசிகனது திருவுள்ளப் பாங்குதான் அவ்வாறு பேசவைத்ததோ அறியோம். ஆழ்வார் திருவுள்ளத்தில் ஊடுருவிச் சென்று உண்மை காணும் திறன் தேசிகனுக்கு உண்டே!
4. திருவரங்கனது பேராசை
ஸ்ரீ தேசிகன் திருவாக்கினின்று பல ஸ்தோத்ரங்களையும் பல்வகைப் புகழ்ச்சிகளையும் பெற்றும் திருவரங்கன் திருவுள்ளத்தில் திருப்தி ஏற்படவில்லை. ஸ்வாமியின் ஒப்பற்ற ஞானத்துக்கும் பெருமைக்கும் வியந்தே பெரிய பெருமாளும் பெரிய பிராட்டியும் "வேதாந்தாசார்யன்", ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர்" என்ற மிகப் பெரிய விருதுகளை அளித்து மகிழ்ந்தனர். திருவரங்கன் திருவுள்ளத்தில் ஓர் ஆசை உதித்தது. ஆசைக்குத்தான் அளவுண்டோ? தேசிகன் திருவாக்கினின்று தனக்காக ஆயிரக்கணக்கான கவிகள் கொண்ட ஒரு ஸ்தோத்ரத்தைப் பெறவேண்டுமென்பதே அந்த ஆசை. ஸ்வாமியின் திருவவதாரத்துக்குக் காரணமாயிருந்த திருவேங்கடமுடையானே 108 சுலோகம் கொண்ட தயாசதகத்தால் முழுத்திருப்தியை அடைந்திருக்கும்போது திருவரங்கன் கொண்டது பேராசைதானே! தேசிகனது தகுதியை உணர்ந்து கடமையுணர்ச்சியோடு தானும் பிராட்டியும் அளித்த விருதுகளைப் பெற்ற ஸ்வாமியின் நீண்ட திருவாக்கைப் பெற அவன் ஆசை கொண்டதும் உசிதமே. தானே தேசிகன் உள்ளத்துப் புகுந்து ஸங்கல்பித்தான். அமுத வெள்ளம் ஸ்வாமியின் திருவாக்கினின்று பெருகியோடுகின்றது. ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரம் அவதரித்தது. உலகினர்க்கு மஹாபாக்யம்! இந்த ஸூக்தியையே உயிர் நாடியாகக் கொள்ளுதற்குப் பாங்காக ஸ்ரீமதாண்டவன் ஸம்ப்ரதாயத்துக்குத் தனித்த ஒரு வரப்ரஸாதம் இந்த ஸ்ரீஸூக்தி.
5. பாதுகையே தேசிகன் குறிக்கோள்.
திருவரங்கன் விரும்பியது தேசிகனிடமிருந்து புகழ்மாலை. அவதரித்ததோ பாதுகையின் புகழ்த்திருமாலை. எப்படி? அதனைச் சிந்திப்போம். ஸ்வாமி கொண்ட முதல் தெய்வம் திருவரங்கன். ஸ்ரீபாதுகா ஸஹஸ்ரத்தில் அவனை நேரடியாகப் பாடவில்லையே! உண்மைதான். உட்புகுந்து பார்க்கவேண்டும். எம்பெருமானிடம் பக்தி கொண்டவன் நலம் பெறுவதற்கு அவன் திருவடியையே பற்றுவதே பொருந்தும். ஏன்? திருமேனியைக் காட்டிலும் திருவடியே மனத்தில் சிந்திக்க எளியது. திருவடியைப் பற்றினால்தான் அவனுக்கு இவன்மீது கருணை பெருகும். உலகிலும் ஒரு மனிதனது கருணையைப் பெறுதற்கு அவன் பாதத்தையன்றிக் கையையோ தோளையோ கழுத்தையோ பற்றுவதில்லையே! மேலும் எம்பெருமான் திருவடியின் அமைப்பே அனுபவிக்க இன்பம் தரும். அவன் திருவடியையே புகழ்ந்து பாடியிருக்கலாமே! இவ்வாறு திருவரங்கனையும் அவனிலும் முக்கியமான திருவடியையும் விட்டுத் திருவடிகள் அணியும் பாதுகையைப் பற்றிக்கொண்டார் தேசிகன். அந்தத் திருவடிகளையும் காத்துத் தரவல்லதாகவன்றோ விளங்குகின்றது திருப்பாதுகம். அவனைவிட்டு அவனது திருவடியைப் பற்றுவது அடிமையின் சிறப்புநிலை. திருவடியையும் விட்டுப் பாதுகையைப் பற்றுவது அவனுக்கு அடியனார் தன்மையின் உச்சநிலை. அதில்நின்று தேசிகன் பாதுகைக்குப் புகழ்மாலையைச் சூடி அலங்கரித்து அழகு பார்த்துப் பேரின்பத்தை நுகர்ந்தருளினார்.
6. பாதுகையைப் பற்றியே பேசுதல்
பாதுகையைப் பற்றியே அவதரித்த இந்நூலில் திருவரங்கன் கதி என்ன? அவன் திருவடியின் கதிதான் யாது? அரங்கனது பாதுகை அவன் திருவடிக்குப் பாதுகாவல் புரியும் பாதுகை என்று அவ்விருவரது தொடர்பைக் கூறியது கொண்டே அவ்விருவரும் திருப்தியடைய வேண்டுமோ? ஆம். தேசிகன் பாதுகையின் பெருமையை அனுபவித்துப் பேசும் சூழ்நிலையில் வேறொன்றுமே ஸ்வாமியின் திருக்கண்ணுக்கோ திருவுள்ளத்துக்கோ புலப்படுவதில்லையே! இந்தப் பாதுகா ஸஹஸ்ரத்தை அனுபவிப்பதற்கும் வழி தெரியவேண்டும். அரங்கனை இராமபிரான் வழிபட்ட தெய்வ மென்கிறார்களே! அவ்விருவரும் வெவ்வேறு என்று ஆகிவிடுமா? ஆகாது. பரமபுருஷன் ஒருவனே இராமன் வடிவில் நின்று ஆராதிப்பவனாகவும், அர்ச்சைத் திருவரங்கன் வடிவில் நின்று ஆராதிக்கப் படுமவனாகவும் உள்ள உண்மையை அறிந்து அநுபவித்தால் உள்ளம் தேனூறித் தித்திக்கும்.
7. பாதுகைக்கு வந்த அரிய வாய்ப்பு
இதுவரை எத்தனையோ கவிகளும் ஆசார்யர்களும் பல்வகைக் காவ்யங்களையும் ஸ்தோத்ரங்களையும் நாடகங்களையும் இயற்றியுள்ளார்கள். அவர்களது உள்ளத்தில் எழாத ஓர் அற்புதச் சிந்தை தேசிகன் திருவுள்ளத்தில் தோன்றியதால் வந்தது, இந்த நூலின் படைப்பு. பெருமாளுக்கோ அவனிலும் விஞ்சிய அவன் திருவடிக்கோ பெறமுடியாத ஒரு பேறு --- ஆயிரத்தெட்டு திவ்யஸூக்திகளைப் பெறும் பெருமை அவன் திருப்பாதுகத்துக்குக் கிடைத்தது. நம்மாழ்வார் எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களைத் தமது திருவாய்மொழியில் ஒரு குழந்தை கர்ப்பத்துள் அடங்குவதுபோல் அடக்கிவிட்டதாய்க் கூறுகிறார். ஆனால் அவன் பாதுகையின் பெருமைகளைத் தம் நூலில் அடக்கமுடியவில்லையே என்று ஏங்குகிறார் நம் தேசிகன். பாதுகைக்கு அவன் திருவடிகளைத் தாங்கி ஸஞ்சரிப்பதே பணியாதலின் அதற்குப் பாங்காக முப்பத்திரண்டு வழிகளை (பத்ததிகளைக்) கொண்ட பாதுகா ஸஹஸ்ரம் அவதரித்தது நம் பாக்ய விசேஷம்.
…..தொடரும்…..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக