14. ஸாத்துவிகத் தியாகம் பாதுகையளவும் செல்லல்
எந்தக் கடமையைச் செய்தாலும் ஸாத்துவிகத் தியாகம் மிக அவசியமானது. ‘எம்பெருமான் தான் கொடுத்த சரீர. இந்த்ரியங்களைக் கொண்டு தான் கொடுத்த அறிவின் துணை கொண்டு தன் உகப்புக்காகத் தானே முன் நின்று செய்விக்கின்றான்' என்ற உணர்ச்சியே ஸாத்துவிகத் தியாகமெனப்படுகின்றது. இதை எம்பெருமானுடனும் அவன் திருவடியுடனும் நில்லாது அவன் பாதுகை வரையில் செய்தால்தான் நிறைவு பெறுமென்றும் இதுவே உச்சநிலையென்றும் காட்டுகின்றார். இல்லையேல் யாகம் முதலிய கருமங்களுக்குப் பசுவதமும் வேள்வி செய்ததாய்ப் பெயர் பெறுவதுமே பலனாய் முடியுமென்று விளக்குகின்றார் தேசிகன்.
15. வனம் புகவும் பாதுகையே துணை
பாதுகையைத் திருவரங்கன் தொடர்புடன் அனுபவிப்பதில் இனிமை ஒரு புறம் இருக்க, இராமபிரானோடு சேர்த்து அனுபவிக்கும்போது நமதுஉள்ளம் பறிபோகின்றது. தந்தை சொற்கொண்டு இராமபிரான் வனத்துக்குப் புறப்படுகின்றான். குல முறையாக வந்த அரசைத் துறந்தான். அவனிடமே உயிரை வைத்திருந்த நகர மக்களை விட்டான். தன் நாட்டை விட்டான். யானை குதிரை தேர் முதலியவற்றை விட்டான். பிராட்டியையும் தம்பியையும் கூட வரவேண்டாமென்று மறுத்தான். பாதுகையை அவ்வாறு விடமுடிந்ததா? அதையே துணையாகக் கொண்டு புறப்பட்டானே! கல்லிலும் முள்ளிலும் அவனுடைய மெல்லிய திருவடி நடக்காமல் பாதுகாக்கப் பாதுகைதானே துணை புரிந்தது? அவ்வாறே அடியார்கள் இராமனை விட்டாலும் அவன் திருவடியை விட்டாலும் தங்கள் பாதுகாப்புக்குப் பாதுகையை விட முடியாதென்ற உண்மையை விளக்குகின்றார் தேசிகர் பெருமான்.
16. இராமனிலும் பாதுகை சிறந்தது
நன்கு சிந்திக்கும்போது மூவுலகுக்கும் பெருந்தலைவனான இராம பிரானைக் காட்டிலும் விஞ்சிய பெருமையுடையது அவன் பாதுகை என்று உணர்தல் எளிது. எப்படி? சித்திர கூடத்துக்குப் பரதன் வந்தது எதற்காக? இராமனை வனம் செல்லவிடாது அயோத்திக்கு மீட்டு வருவதற்காக. இராமன் செய்தது என்ன? பரதனிடம் பாதுகையைப் பணயமாக வைத்துத் தான் நாட்டுக்குத் திரும்பாது தன்னை மீட்டுக்கொண்டான். இதிலிருந்தே இராமனிலும் பாதுகை உயர்ந்து விடவில்லையா? பணயம் (அடகு) வைக்கும் பொருள் உயர்ந்ததாயிருந்தால்தானே அதனிலும் மதிப்புக் குறைந்த பொருளைப் பெற முடியும்! செல்வ நிலையங்களில் விலைமிக்க பொன் பொருளை வைத்துக் குறைந்த தொகையைப் பெறுவதை உலகில் காண்கின்றோமே! இக்கருத்தைக் கொண்டுதானே பெரியாழ்வாரும் மரவடியைத் தம்பிக்கு வான் பணயம் வைத்துப்போய்' என்று சிறந்த பணயமென்கின்றார். இவ் வம்சத்தை மிக அழகாகச் சித்தரிக்கின்றார் நம் தேசிகன்.
17. பாதுகையின் கருணை
இராமபிரான் வனம் சென்று விட்டான். தசரதன் வானுலகம் சேர்ந்துவிட்டான். வஸிஷ்டர் முதலியவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் மூத்தவன் இருக்க இளையவன் அரசை ஏற்பதில் வரும் உலகப் பழிச்சொல்லுக்கு அஞ்சிப் பரதன் முடிசூட மறுத்துவிட்டான். நாட்டுக்கு அராஜக நிலை. பின் பரதன் சித்திர கூடம் சென்று இராமனை நாடு திரும்புமாறு வேண்டுகின்றான். அப்பொழுது பாதுகையை நாட்டை ஆள்வதற்கு அனுப்புகின்றான் இராமபிரான். பரதனுடன் வந்து பாதுகாதேவி அரசை ஏற்கின்றாள். மக்கள் மனம் தேறுகின்றனர். சீதையைப்போல் பாதுகையும் வனம் வந்தே தீருவேனென்று பிடிவாதம் செய்திருந்தால் கோசல நாட்டு மக்களின் கதி என்ன? மக்கள் துடிப்புத் தீர என்ன வழி? என்று கூறிப் பாதுகா தேவியின் கருணைக்கு வியக்கின்றார் தேசிகன்.
18. பாதுகையின் பொறுமை
பொறுமையென்பது இராமபிரானிடம் சிறந்து விளங்கும் உயர்ந்த குணம். பாதுகா தேவியை நோக்கும்போது இராமனுடைய பொறுமையே பாதுகை வடிவு கொண்டதாய்க் கூறலாம். பாதுகாதேவியும் இராமனுடன் முழுதும் சென்றல் மஹாபாபியான இராவணனைக் கூடக் கொல்ல இடம் தந்திருக்கமாட்டாள். தேவர் முனிவர்களின் துன்பம் நீங்கியாக வேண்டுமே! அதற்காகப் பாதுகையைப் பரதனுடன் அனுப்பிவிட்டான் இராமபிரான். அவன் பொறுமையும் அவனை விட்டு அகன்றது. இராவணன் முதலிய எதிரிகளை ஒழித்து உலகைக் காத்தருளினான் இராமன். இவ்வாறு பாதுகா தேவி உலக நலத்துக்காகப் பெருமாளைப் பிரிந்தாள். இப்படி ஓர் அநுபவம் தேசிகனுக்கு.
19. பாதுகை இராமன் திருவடியோடு ஒன்றிய காரணம்
பாதுகா தேவி முதலில் இராமபிரான் திருவடியின் பெருமையையும் அத்திருவடி பல அவதாரங்களிலும் செய்த திவ்ய லீலைகளையும் சிந்திக்கின்றாள். கணவருக்குத் துரோகம் செய்து சாபத்தால் கல்லுருவில் கிடந்த அகலிகைக்குப் பெண்ணுருவம் கொடுத்துக் காத்தது அவன் திருவடிதானே! கிருஷ்ணாவதாரத்தில் சகட வடிவு கொண்டு வந்த அசுரனை மெல்லிய இந்தத் திருவடிதானே உதைத்து ஒழித்தது! த்ரிவிக்ரம அவதாரத்தில் பிரமன் சேர்த்த தீர்த்தத்தைப் புனித கங்கையாக்கித் தந்தது இந்தத் திருவடிதானே! கரியுருவில் கிடந்த பரீக்ஷித்தை மஹாராஜ வடிவு கொடுத்துக் காத்ததும் இந்தத் திருவடி தானே! மேலும் இந்த மெல்லிய திருவடிதானே பாண்டவர்க்காகத் தூது சென்று "பாண்டவ தூதன்' என்ற திருநாமத்தையும் வாங்கித் தந்தது! உள்ளம் கவரவல்ல, திருவடியின் இந்த லீலகளையெல்லாம் சிந்தித்துப் பாதுகா தேவி இத்தகைய திருவடியை எந்நாளும் பிரியக் கூடாதென்றே துணிந்து திருவடியோடு ஒன்றியிருந்தாள்.
20. பின் பாதுகை திருவடியைப் பிரிந்தது ஏன்?
பின் பாதுகை திருவடியைப் பிரிந்த காரணம் கேண்மின். இராமனது பிரிவைத் தாங்க முடியாத குடிமக்கள் திரண்டு பரதனை முன்னிட்டுக் கொண்டு சித்திர கூடம் வந்துவிட்டார்கள். பரதன் இராமனை மீண்டு வந்து அரசை ஏற்குமாறு வலியுறுத்துகின்றான் இராமன் உடன்படவில்லை. பரதன் மனம் நொந்து பழி கிடக்க முற்படுகின்றான். இத்துணைப் பரிவுடனும் மனநோவுடனும் பிரார்த்தித்த பரதன் விரும்பியபடி நாடு திரும்புதற்கு இராமனது திருவடி உடன்படவில்லை. பரதனது ஆர்த்தியைப் பொருட்படுத்தாது அவன் விருப்பத்தை மறுத்துத் தான்றோன்றியாய் யதேச்சாதிகாரம் செலுத்தத் திருவடி முற்பட்டதாய்ப் பாதுகை எண்ணுகின்றது. திருவடியின்மீது வெறுப்பும் சீற்றமும் பாதுகைக்கு. கீழ்க் கூறிய திருவடியின் பெருமையெல்லாம் மறந்து போகின்றன. பரதனது வேண்டுகோளைப் புறக்கணித்துக் காட்டுக்கே செல்லும் இந்தத் திருவடியால் தனக்கு என்ன ஆகவேண்டும்? என்று கருதுகின்றது பாதுகை. இனி அத்திருவடியுடன் வாழக் கூடாதென்று நினைத்துப் பரதனைத் தேற்றி அழைத்துக் கொண்டுபோய் இராமனிலும் பன்மடங்கு சிறப்புடன் ஆட்சியை நடத்தினாள் பாதுகாதேவி. இப்படி ஒர் அதிசயக் கற்பனை தேசிகன் திருவுள்ளத்தில் உதிக்கின்றது.
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக