செவ்வாய், 20 மார்ச், 2012

வைத்தமாநிதி 18

“பிண்டத் திரளையும் பேய்க்கு இட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஓடித் திரியாதே !
அக்காக்காய் அண்டத்து அமரர் பெருமான் அழகு அமர்
வண்டு ஒத்து இருண்ட குழல் வார வாராய்!
உற்றன பேசி நீ ஓடித் திரியாதே!
அற்றைக்கு வந்து குழல் வாராய்!
பொன்னின் முடியினைப் பூஅணைமேல் வைத்து
பின்னே இருந்து கண்ணன் கருங்குழல் தூய்து ஆக வந்து
தந்தத்தின் சீப்பால் குழல் வார வாராய்!


வெண்ணெய் விழுங்கி உறங்கிடும்
விரைய வந்து குழல் வாராய்!
மின்னு முடியற்கு, தேவர்பிரானுக்கு
ஓர் கோல் கொண்டு வா!
நெறித்த குழல்களை நீங்க முன்ஓடிச் சிறுக்கன்று மேய்ப்பாற்கு
அரக்கு வழித்தது ஓர் கோல் கொண்டு வா!
பொற்றிகழ் சித்திரகூடப் பொருப்பினில்
உற்ற வடிவில் ஒரு கண்ணும் கொண்ட
அக்கற்றை குழலன் கடியன் விரைந்து,
உன்னை மற்றைக்கண் கொள்ளாமே,
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல் கொண்டு வா!
கண்டார் பழியாமே அக்காக்காய்!
கார்வண்ணன் வண்டுஆர் குழல்வார வா!
நம்பிக்கு கோல் கொண்டு வா!”
என்று ஆய்ச்சியரில் மிக்காள் உரைத்தாள்.
”தேனில் இனிய பிரானே!
செண்பகப்பூச் சூட்ட வாராய்!
என்னையும் எங்கள் குடி முழுது
ஆட்கொண்ட மன்னனே!மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச்சூட்ட வாராய்!
தெருவின் கண் நின்று இள ஆய்ச்சிமார்களைத்
தீமை செய்யாதே! பச்சைத் தமனகத்தொடு
பாதிரிப்பூவும் தெள்ளிய நீரில் எழுந்த
செங்கழுநீர்ப்பூவும் சூட்ட வாராய்!
புன்னைப்பூ, குருக்கத்திப்பூ, இருவாட்சிப்பூ
கண்டு நான் உன்னை உகக்க
கருமுகைப்பூச் சூட்ட வாராய்!”
என்று ஆய்ச்சியும்
புருவம் கருங்குழல் நெற்றி பொலிந்த முகிற் கன்றுபோலே
உருவம் அழகிய நம்பியை அழைத்து
எண்பகர் பூவும் சூட்டினாள்.

“அந்தியம்போது இது ஆகும்,
கஞ்சன் கறுக்கொண்டு நின்பால்
விடுத்த கம்பக் கபாலி காண் அங்கு;
அஞ்சுவன் நீ அங்கு நிற்க!
பள்ளிகொள் போது இது ஆகும்,
அழகனே காப்பிட வாராய்!
நன்று கண்டாய் என்தன் சொல்லு!
செப்பு ஓது மென்முலையார்கள்
சிறுசோறும் இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப்போய்
அடிசிலும் உண்டிலை ஆள்வாய்;
கண்ணில் மணல்கொடுதூவிக்
காலினால் பாய்ந்தனை என்றும்,
கன்றுகள் ஓடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டாய் என்றும்
எண்அரும் பிள்ளைகள் வந்திட்டு முறைப்படுகின்றார்
கண்ணனே! கண்டாரோடே தீமை செய்வாய்
வண்ணமே வேலையது ஒப்பாய்!
வள்ளலே காப்பிட வாராய்!
கன்றுகள் இல்லம் புகுந்து கதறுகின்றன பசு எல்லாம்;
மன்றில் நில்லேல், அந்திப்போது;
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி,
நேசமேல் ஒன்றும் இலாதாய்!
பல்லாயிரவர் இவ்வூரில் பிள்ளைகள் தீமை செய்வார்,
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது.
தருக்கேல் நம்பி சந்தி நின்று
தாய்ச்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்;
நுங்கள் தம் ஆநிரை எல்லாம் வந்து புகுதரும்போது
அந்தி அம்போது அங்கு நில்லேல்;
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்று ஒளிகொள்ள ஏற்றுகேன்!
செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
இன்பம் அதனை உயர்த்தாய்!
இமையவர்க்கு என்றும் அரியாய்!
திருக்காப்பு நான் உன்னைச் சாத்த
சொப்பட வாராய்!” என்று
மாதர்க்கு உயர்ந்த யசோதை
மகன் தன்னை அழைத்துக் காப்பிட்டாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக