புதன், 15 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 2


பிறகு ஸ்ரீமந் நாத முனிகள் அவதரித்து  திவ்ய தேஶ யாத்திரை செய்துகொண்டு வரும் காலத்தில் திருக்குடந்தையில் ஆராவமுதனை மங்களாஶாஸனம் செய்தபொழுது, அங்கு அந்த எம்பெருமான் விஷயமான ஆராவமுதே என்கிற திருவாய்மொழி மட்டும் அனுஸந்திக்கப்பட, அதின் நிகமனப் பாட்டிலிருந்து அப்படிப்பட்ட பாட்டுக்கள் ஆயிரம் உண்டு என்று அறிந்து, அவற்றைத் தெரிந்து கொள்ளுவதற்காக அனேகம் திவ்ய தேஶங்கள் சென்று விசாரித்தும் பயன்படவில்லை. கடைசியில், ஆழ்வாருடைய திருவவதார ஸ்தலத்தை அடைந்து, அங்கும் அகப்படாமல் ஶோகித்துக்கொண்டிருக்கிற பொழுது ஸ்ரீ மதுரகவி வம்ஶஸ்தரான ஒரு பெரிய வ்ருத்தரிடம் இருந்து ஆழ்வார் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பு ப்ரபந்தத்தை  உபதேஶிக்கப் பெற்று, அதை ஆழ்வார் முன்பு பல காலம் ஆவ்ருத்தி செய்து கொண்டு வந்தார். அப்பொழுது ஒரு நாள் பகவானுடைய நியமனத்தினால் ஆழ்வார் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு ஸகல ஶாஸ்திரார்த்தங்களையும் த்ரமிட வேதங்களான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களையும் உபதேஶித்து அவற்றை ப்ரவசனம் செய்யும்படி நியமித்தருளினார். ஸ்ரீமந்நாத முனிகளும் அதி ஸந்துஷ்டராய், முன்பு வ்யாஸர் ஸம்ஸ்க்ருத வேதங்களை வகுத்து ப்ரவசனம் செய்ததோ பாதி தாமும் த்ரவிட வேதங்களை முதலாயிரம், திருமொழி, திருவாய்மொழி, இயற்பா  என நான்கு பாகங்களாகப் பிரித்து , இவைகள் பண்ணமர்ந்து நிற்பதைக் கடாக்ஷித்து இவைகளுக்கு ராக தாளாதிகளை வகுத்து ப்ரவசனம் செய்து கொண்டு வந்தார். “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த வள்ளல்என்று ஆசார்யனும் இந்த ஏற்றத்தை அனுஸந்தித்தார்.

              இப்படி இவற்றை ப்ரவசனம் செய்துகொண்டு ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருக்கும்பொழுது மறுபடியும் ஆழ்வார் விக்ரஹத்தைத் திருக்குருகாபுரி யிலிருந்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து, மார்கழி ௴ சுக்ல பக்ஷ ஏகாதஶிக்கு முந்திய பத்து நாள்களில் முதல் ஐந்து நாள்களில் முதலாயிரத்தையும், பின் ஐந்து நாள்களில் திருமொழியையும், திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் இவைகளையும் , ஏகாதஶி முதல் பத்து நாள்களில் திருவாய்மொழியில் தினம் ஒரு பத்தையும், கடைசியில் திருவடி தொழுகையையும் , மறு நாள் இயற்பாவையும் ஸேவிக்கும்படிக்கும், இப்படியே ப்ரதி ஸம்வத்ஸரம் நடக்கும்படிக்கும் ஏற்பாடு செய்தருளினார்.

         இப்படித் திருக்கார்த்திகை முதல் திவ்ய ப்ரபந்தானுஸந்தானம் இல்லாமையினால் இந்தக் காலத்திற்கு அனத்யயனம் என்று திருநாமம். இக்காலத்தில் திவ்ய ப்ரபந்தத்தை ஸேவிப்பதில்லை. இயற்பா சாற்று முறையான பிறகு திருப்பல்லாண்டு துடங்கி அப்புறம் யதாக்ரமம் ப்ரபந்தங்களை அனுஸந்திக்க வேண்டும். மார்கழி மாதத்தில் ப்ரதி தினமும் அதி காலையில் திருப்பள்ளியெழுச்சியையும், திருப்பாவையையும் ஸேவித்து, பிறகு திருப்பாவையில் அந்நாள் பாட்டை  மறுபடியும் ஸேவிக்க வேண்டும். திருவத்யயனோத்ஸவம்  மார்கழி மாதத்திற்குள்ளேயே  முடிந்து விட்டால் மார்கழி மாதம் முடியும் வரையில் அனத்யயன நியமம் உண்டு.

          இப்படி இந்தத் திவ்ய ப்ரபந்தம் மறுபடியும் இந்தப் பூலோகத்தில் பரவுவதற்குக் காரணமாயிருந்த ஆராவமுதன் ஸந்நிதியில் மார்கழி ௴ முதல் தேதி துடங்கி இருபத்தோரு நாள்கள் இந்த  திருவத்யயனோத்ஸவத்தை  நட்த்தி வைத்தார். இதற்காக இந்த க்ஷேத்திரத்தில் ஆழ்வாருடைய அர்ச்சை ஒன்றை திருப்ரதிஷ்டை செய்வித்தருளினார். திவ்ய தேஶங்கள் தோறும் ப்ரதி தினமும் காலையில் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை இவைகளையும், மாலையில் திருப்பல்லாண்டு, பூச்சூடு, காப்பீடு, சென்னியோங்கு, அமலனாதிப்பிரான், கண்ணி நுண் சிறுத்தாம்பு, அந்தந்த திவ்ய தேஶ விஷயமான திருமொழி, திருவாய்மொழி இவைகளை அனுஸந்திக்க வேண்டும் என்று நியமித்தருளினார். இதற்கு  நித்யானுஸந்தானம்  என்று திருநாமம். எம்பெருமான் ஆஸ்தானத்தை விட்டு வெளியே எழுந்தருளி ஸேவை ஸாதிக்கும் காலங்களில் திருவாய்மொழியைத் தவிர மற்ற மூவாயிரங்களை க்ரமமாக  அனுஸந்திக்க வேண்டும்.  ப்ரும்மோத்ஸவத்தில்  ஸந்நிதியில் பகவான் எழுந்தருளியிருக்கும்பொழுது  தினம் ஒரு பத்தாகத் திருவாய்மொழியை ஸேவித்து, புஷ்ப யாகத்தில் (பத்தாவது தினத்தில்)  கடைசி பத்தை ஸேவித்து சாற்றுமுறை செய்ய வேண்டும்.

           ஸ்ரீ வைஷ்ணவர்கள் திருமாளிகைகளில் விவாஹ மஹோத்ஸவத்தில் நாச்சியாருக்கு ஸம்பாவனை செய்து, வாரணமாயிரம்  என்னும் திருமொழியை ஸேவித்து பிறகு சீர் பாடலை ந்டத்த வேண்டும் என்று நியமித்தருளினார்.

         ஸ்ரீவைஷ்ணவர்களுடைய நிர்யாணாநந்தாம் ஸ்ரீ சூர்ண பரிபால்னம் நடத்த வேண்டும். அதாவது அந்த ஸமயத்தில் திருப்பல்லாண்டு, கண்ணி நுண் சிறுத்தாம்பு, சூழ் விசும்பணி முகில், முனியே நான்முகனே, இவைகளை அனுஸந்தித்து , திருவிருத்த த்தைக் கொண்டு ப்ரும்ம ரதம் நடத்த வேண்டும் என்று நியமித்தார்.
       பிறகு எம்பெருமானார் திக்விஜயம் செய்துகொண்டு எழுந்தருளியிருக்கும் பொழுது சோழ ராஜனுடைய உபத்திரவம் தீர்ந்ததும் கால வைஷம்யத்தாலே முன்போல ஆழ்வாரைத் திருநகரியில் நின்றும் எழுந்தருளப் பண்ண முடியாமல் இருப்பதைப் பார்த்து, அவருடையவும் மற்றைய ஆழ்வார்களுடையவும் விக்ரஹங்களை  திருப்ரதிஷ்டை செய்வித்து முன்பு ஸ்ரீமந் நாதமுனிகள் நடத்தினாப் போலே திருவத்யயனோத்ஸவத்தை யதா க்ரமம் நடத்தி வைத்தார்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக