வெள்ளி, 17 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் 4 --- இறுதிப் பகுதி.


 நம் தேஶிகன் திருநாட்டுக்கு எழுந்தருளின பின்பு ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் முதலான முதலிகளோடே நைனாராசார்யர் திவ்ய தேஶ மங்களா ஶாஸனமும் திக் விஜயமும் செய்தருளி, கோயிலேற எழுந்தருளி, ஒரு புரட்டாசித் திருவோணத் திருநாளில் ஸ்ரீரங்க நாச்சியார் ஸந்நிதி முன்பே அர்ச்சையாக எழுந்தருளியிருக்கிற நம் தேஶிகனுக்கு திருமாலை பரியட்டம் முதலானதுகளை அழகிய மணவாளர் ப்ரஸாதித்தருளின போது ப்ரபந்தானுஸந்தானம் முடிந்தவாறே அத்திருவோலக்கப் பெருமையைக் கண்டு அத்தலைக்கு மங்களாஶாஸனமாய்,



வாழி அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன்

வாழி அவன் பாதாரவிந்த மலர் – வாழி அவன்

கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்

தீதிலா நல்லோர் திரள்

என்கிற பாட்டை ப்ரும்ம தந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் விண்ணப்பம் செய்ய, நைனாராசார்யரும் திருநக்ஷத்திரத் திருநாள் பெருமையை

வாதாசனவரரிவரென வரு மா பாஷியம் வகை பெறு நாள்

வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசி அறிந்திடு நாள்

பேதாபேதம் பிரமமெனா வகை பிரமம் தெளிவித்திடு நாள்

பேச்சொன்றுக்குச் சத தூஷணியைப் பேசிய தேசிய [க] நாள்

தீதாகிய பல மாயக் கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்

திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்

ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள்

உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனு நாளே.

என்கிற பாட்டால்  அருளிச் செய்ய, அத்தைக் கேட்ட வெண்ணைக் கூத்த ஜீயரும் அப்படியே

செங்கமலத்தயனன்னவரென்று புகழ்ந்து மகிழ்ந்திடு நாள்

சீர் கொளிராமானுசவெனு மந்திரம் பதிகளில் வாழ்ந்திடு நாள்

செங்கயல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த வரங்கர் சிறந்திடு நாள்

சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடு நாள்

தெங்கொடு மாங்கனி தேன் சுனை வேங்கடத்தீசர் பிறந்திடு நாள்

சீர் மதி யாகம மௌலிதந் தேசிகர் பிறந்து வளர்ந்திடு நாள்

பங்கய மாமலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள்

பார் புகழ் பாத்திரபதத் திருவோணமெனும் திருநன்னாளே

என்கிற பாட்டை அருளிச் செய்தார். அங்குள்ள பெரியோர்கள் இம்மூன்று பாட்டுக்களையும் வாழித் திருநாமத்தின் முடிவில் அனுஸந்திக்கும்படி ப்ரார்த்திக்க, நைனாராசார்யரும் திருநக்ஷத்திரத் திருநாளில்  இம்மூன்று பாட்டுக்களையும் முடிவில் அனுஸந்திக்கும்படி நியமித்தருளினார்.

        பின்பு ப்ரும்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயருடனே திக் விஜயமும் அந்தந்த திவ்ய தேஶங்களில் ஸ்ரீதேஶிகனுடைய திவ்யார்ச்சா ப்ரதிஷ்டையும் செய்துகொண்டு தஞ்சை மா நகரில் எழுந்தருளியிருக்கும்பொழுது அங்கு ஒரு ஸ்ரீவைஷ்ணவர் திருக்கார்த்திகைக்குப் பின்பும் திருவத்யயனோத்ஸவம் முடிவதற்கு முன்பும் அதாவது அனத்யயனம்  எனப்படும் காலத்தில் திருநாட்டுக்கு எழுந்தருள, அது குறித்து என் செய்யக் கடவது என்று அந்த திவ்ய தேஶத்து எம்பெருமானான நீலமேகப் பெருமாள் ஸந்நிதியில் எழுந்தருளியிருந்த நைனாராசார்யரிடம் விண்ணப்பம் செய்ய , அந்த எம்பெருமான் நியமனத்தாலும் அங்குள்ளார் ப்ரார்த்தனையினாலும் நாலாயிர திவ்ய ப்ரபந்த தனியன்களை முதலில் அனுஸந்தித்து, பிறகு ஸ்ரீ தேஶிகன் விஷயமாகப் பிள்ளை லோகாசார்யர் அனுஸந்தித்த

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்

பாரொன்றச் சொன்ன  பழமொழியுள் --  ஓரொன்று

தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு

வானேறப்  போமளவும் வாழ்வு

என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு, திவ்ய ப்ரபந்தத்திலுள்ள இருபத்தி நாலு ப்ரபந்தங்களுக்கு ஸத்ருஶமாயிருக்கிற ஸ்ரீ தேஶிக ப்ரபந்தங்கள் இருபத்தி நான்கையும் அனுஸந்தித்து, முன்பு ஸ்ரீமந் நாத முனிகள் ஆழ்வார் விஷயமான கண்ணி நுண் சிறுத்தாம்பை முதலாயிரத்தின் முடிவில் சேர்த்தாப் போலே ஸ்வாமி தேஶிகன் விஷயமான  பிள்ளையந்தாதியை  ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்துடன் சேர்த்து, இதைக் கொண்டு இயல் ஸேவையை நடத்தி, முடிவில் “பொய்கை முனி பூதத்தார்” என்றா ரம்பிக்கும்  பாசுரம் முதலாக ‘ஆளும் அடைக்கலம்’ என்னுமளவாக உள்ள ஏழு பாசுரங்களையும், ’விண்ணவர்  வேண்டி’ என்கிற பாசுரத்தையும் ஸேவித்து முடித்து, இதற்கு இயல் சாற்று என்று திருநாமம் என்று நியமித்தருளினார். ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தில் அதிகார ஸங்க்ரஹம், ப்ரபந்தஸாரம், பிள்ளையந்தாதி இவைகள் ஒவ்வொன்றிலும் கடைசி இரண்டு பாட்டுக்களையும் சாற்றுமுறைப் பாட்டுக்கள் என்று நியமித்தார்.

      பிறகு ப்ரதி ஸம்வத்ஸரம் இயற்பா சாற்றுமுறைக்கு மறுநாள் ஸ்ரீ தேஶிகனுக்கு அருளுப்பாடிட்டருளி, ஸ்ரீ தேஶிக ப்ரபந்தங்களை  முழுமையும் ஸேவித்து சாற்றுமுறை செய்யும்படிக்கும், அதற்குப் பிறகு பெரிய பிராட்டியார் ஸந்நிதியில் தினம் ஒரு பத்தாக திருவாய்மொழியை ஸேவித்து சாற்றுமுறை செய்யவேண்டும் என்றும் நியமித்தருளினார். இதற்கு சிறிய திருவத்யயனோத்ஸவம் என்று திருநாமம். இது முடியும் வரையிலும் அனத்யயன  நியமமுண்டு. சில திவ்ய தேஶங்களில்  தை மாதம் ஹஸ்த நக்ஷத்திரம் வரையில் அனத்யயனம் கொண்டாடுகிறார்கள். சில திவ்ய தேஶங்களில் தை மாதப் பிறப்போ சிறிய திருவத்யயனோத்ஸவத்தின் முடிவோ இவற்றில் எது பின்னால் வருகிறதோ அது வரையில் அனத்யயன நியமம் கொண்டாடுகிறார்கள். நாலாயிர ப்ரபந்தானுஸந்தானம் செய்யும் ஸந்தர்ப்பங்களில் ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தையும் ஸேவித்து, நாலாயிர ப்ரபந்தத்தைச் சாற்றுமுறை செய்து, ‘அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே’ என்றனுஸந்தித்த பிறகு ஸ்ரீதேஶிக ப்ரபந்தத்தை சாற்றுமுறை செய்து, பிறகு வாழித் திருநாமத்தை ஸேவிக்க வேண்டும் என்று நியமித்தருளினார். அனத்யயன காலங்களில் கீழ் நிரூபித்தபடியே நடத்த வேண்டும் என்றும், ஆழ்வார்கள் திருநக்ஷத்திர தினங்களில் ப்ரபந்தானு ஸந்தானத்திற்குப் பிறகு ப்ரபந்தஸாரத்திலுள்ள அந்தந்த ஆழ்வார் விஷயமான பாசுரங்களை ஸேவிக்க வேண்டும் என்று நியமித்தருளினார்.
       எந்நாளும் காலையிலும் மாலையிலும் ப்ரபந்தஸாரத்தையும், பிள்ளை யந்தாதியையும் அனுஸந்திக்க வேண்டும் என்றும், அனத்யயன காலத்தில் மட்டும் சீர்பாடல் வரும்பொழுது ‘ராமானுஜ தயாபாத்ரம்’ என்று துடங்கி பொதுத் தனியன்களை அனுஸந்தித்து, ஆண்டாள் விஷயமான ‘ அல்லி நாள் தாமரை மேல்’ என்கிற தனியனை அனுஸந்தித்து, பிறகு யதா க்ரமம் ஸம்பந்திகளின் சீர் பாடுகிறது என்றும், ஸ்ரீசூர்ண பரிபாலனத்தில் திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருவாய்மொழி, நூற்றந்தாதி, இவைகளின் தனியன்களை ஸேவித்து, ஸ்ரீ தேஶிக ப்ரபந்தத்தில் ஸ்ரீபரமபத ஸோபானத்தையும், பிள்ளையந்தாதியையும் ஸேவிக்கும்படி நியமித்தார். ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் திருமாளிகைகளில் திவ்ய ப்ரபந்தானுஸந்தானம் செய்யும் காலங்களில் ஆழ்வார், எம்பெருமானார் ஸ்ரீதேஶிகன் இவர்களுக்கு ஸம்பாவனை பண்ண வேண்டும் என்றும், சீர் பாடலில் ஆண்டாள் விஷயமாகிய ‘ வாரணமாயிரம்’ என்னும் திருமொழியை சாற்றுமுறை செய்யும் பொழுது ஆண்டாள் ஸம்பாவனையும், பின்பு பெருமாள், பிராட்டியார் ஆழ்வார், எம்பெருமானார்  ஸ்ரீதேஶிகன் இவர்களுடைய ஸம்பாவனையும் செய்ய வேண்டும். இயல் ஸேவை பண்ணும்பொழுது நூற்றந்தாதியில் எம்பெருமானார் ஸம்பாவனை யும், பிள்ளையந்தாதியில் ஸ்ரீதேஶிகன் ஸம்பாவனையும் செய்ய வேண்டும். ப்ரபந்தங்களைச் சாற்றும்பொழுது ஆழ்வார் எம்பெருமானார் ஸ்ரீ தேஶிகன் இவர்கள் ஸம்பாவனையைச் செய்து பிறகு அவரவர்கள் ஆசார்யர்களுக்கு ஸம்பாவனையும் செய்ய வேண்டும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக