திருப்புல்லாணி சித்திரை உத்ஸவத்தின் 7ம் நாள் (5 ம் 6ம் எங்கே என்று கேட்க வேண்டாம். அவையெல்லாம் சென்ற வருடங்களைப் போலவே சிறப்பாக நடந்தன) அன்றைய மண்டகப்படி வைகுந்தவாசி ஸ்ரீ பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தார் நடத்துவது. இந்த வருடம் அவர் குமாரர் ஸ்ரீ ரங்கராஜனின் புதல்வி திருமணம் சமீபத்தில் நடந்தது. அப்போது மாப்பிள்ளை அழைப்பின்போது நடந்த அட்டகாசமான ஆட்டமும் பாட்டமும் அவர் மனதில் இந்த வருட மண்டகப்படியின்போது ஸ்ரீ இராமனையும் அப்படிக் கொண்டாடி மகிழ்விக்க வேண்டும் என்று தோன்றியிருக்க வேண்டும். அதற்காக, இராமநாதபுரம் சமஸ்தானத்தில் சிறப்பு அனுமதி பெற்று , வழக்கமாக சகடையில் நடைபெறும் திருவீதிப் புறப்பாட்டுக்கு பதிலாக , ஸ்ரீபாதந்தாங்கிகளைக் கொண்டு திருவீதிப் புறப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து, அதற்காக சென்னை நங்கநல்லூரி லிருந்து ஸ்ரீபாதந்தாங்கிகளை அழைத்து வந்திருந்தார். 20 ஆண்டுகளுக்கு முன் பெருமாள் ஸ்ரீபாதந்தாங்கிகளாலேயே இங்கு எழுந்தருளப் பட்டு வந்திருந்தாலும், நடை என்பது இங்கு தெரியாத ஒன்று.
அழைத்து வந்திருந்த ஸ்ரீபாதந்தாங்கிகள் இந்த வருடம் சக்கரத்தாழ்வார் புறப்பாட்டிலிருந்து, மாலை மஞ்சள் நீராட்டப் புறப்பாடு, இரவு ஹம்ஸ வாகனப் புறப்பாடு எல்லாவற்றையும் ஸ்ரீவைஷ்ணவப் புறப்பாடாகவே செய்து மகிழ்வித்தனர். மாலையில் மஞ்சள் நீராட்டத்தின்போது எடுத்த ஒரு சிறு வீடியோவை இங்கு காணலாம்.
அப்படி இதுவரை எங்களூர் பெருமாளோ, இராமனோ அனுபவித்த தில்லயோ என்னவோ, புறப்பாடு முடிந்து திருமஞ்சனத்திற்கு எழுந்தருளிய மூவரின் திருமுகங்களிலும் ஒரு அசாதாரண சந்தோஷத்தை, அற்புதமான புன்முறுவலை எங்களால் அனுபவிக்க முடிந்தது. ஆனந்தமான திருமஞ்சனம். கைங்கர்யபரர்கள் கையெல்லாம் வலியெடுக்கும் அளவு ஏராளமான திரவியங்கள்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அந்த திருமஞ்சன வீடியோ இருந்த மெமரி கார்டு துரதிர்ஷ்டவசமாக, ஸிஸ்டம் திடீரென க்ராஷ் ஆனதால், பழுதுபட்டு எல்லாம் மறைந்து போயிற்று. நண்பர் ஒருவர் மீட்டுத் தருவதாகச் சொல்லியிருக்கிறார். நாங்களெல்லாம் பார்த்து ரசித்த இராமனின் அந்த ஆனந்தப் புன்முறுவல் அலங்கரித்த தன் திருமுகத்தை எல்லாரும் கண்டு களிக்கட்டும் என்று அந்த இராமன்தான் அனுக்ரஹிக்க வேண்டும்.
மாலை 5 மணி அளவில் மஞ்சள் நீராட்டப் புறப்பாடு, அதன் பின்னே திருமஞ்சனம், அதற்கப்புறம் சாயரக்ஷை பூஜைகள், அதன்பின்னே உபயதாரரை அழைத்து வந்து
(உபயதாரர் ஜாகைக்கு கோவில் மரியாதைகளுடன் வந்து அழைத்துச் செல்வதும், எல்லாம் முடிந்த பிறகு மறுபடி மரியாதைகளுடன் கொண்டு வந்து விடுவதும் இன்றளவும் இங்கு நடந்து வருகிற ஒன்று) சாற்றுமுறை ஆகி என்று வரிசையாகக் காரியங்கள் இருந்ததால் ஹம்ஸ வாகனப் புறப்பாடு கோவிலை விட்டுக் கிளம்பும்போது மணி 12. அருமையான சாத்துப் படி, வாண வேடிக்கைகள் ஸ்பெஷல் மேளம் (மூன்று செட்) என அமர்க்களமாகத் தான் அவர் புறப்பட்டார்.
ஊர்க்காரர்கள்தான் நம்மூர்ப் பெருமாள்தானே நாளைக்கும் இங்குதானே இருக்கப் போகிறார் விடிந்து பார்த்துக் கொள்ளலாம் தூக்கம் முழித்தால் ஆகாது என்று உறங்கப் போய்விட, நாங்கள் ஒரு ஐந்தாறு அசடுகளும், உபயதாரரும், கோவில் கைங்கர்யபரர்களும் மட்டுமே அனுபவிக்க புறப்பாடு நடந்தது. நிச்சயமாக வந்திருந்த ஸ்ரீபாதந்தாங்கிகள் இப்படி ஒரு திவ்ய தேசத்தைப் பார்த்திருக்கவே மாட்டார்கள்.
இங்கு இட்டிருக்கும் வீடியோ இன்னொரு காமிராவில் எடுத்ததால் இதுவாவது இங்கு இட முடிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக