வெள்ளி, 1 ஜனவரி, 2010

அம்பரமே!தண்ணீரே!சோறே!

17. தந்தையும் தாயும் அண்ணனும் தம்பியும்

வாசல் காப்போரின் அனுமதி பெற்று உள்ளே புகுந்த பெண்கள் கண்ணபிரானைத் துயிலுணர்த்துவதற்கு முன் நந்தகோபனைத் துயில் உணர்த்துகிறார்கள்.; யசோதைப் பிராட்டியையும் துயில் உணர்த்துகிறார்கள். பிறகு கண்ணனையும் பலராமனையும் எழுப்புகிறார்கள்.

மாளிகையின் முதல் பகுதியில் நந்தகோபன் படுத்திருக்கிறான் என்றும், அடுத்த பகுதியில் யசோதை படுத்திருக்கிறாள்என்றும்,மூன்றாம் பகுதியில் கண்ணன் பள்ளிகொண்டிருக்கிறான் என்றும், நான்காம் பகுதியில் அண்ணனாகிய பலதேவன் பள்ளிகொண்டிருக்கிறான் என்றும் கருதலாம்.இந்த முறையிலே ஆய்க்குலப் பெண்கள் துயில் உணர்த்திக் கொண்டே பொவதைக் காணலாம்.

முதல் முதல் நந்தகோபனைத் துயில் உணர்த்தும்போது அவனைப் புகழ்ந்து பேசவேண்டுமல்லவா? அவனது கொடைப் புகழை இவர்கள் பேசுகிறார்கள். அவன் ஆடைகள் விரும்புவோருக்கு ஆடைகளைக் கொடுக்கிறானாம். தாகமுள்ளவர்களுக்குத் தண்ணீரை உதவுகிறானாம். பசித்தவர்களுக்குச் சோற்றுத் தருமம் (அன்னதானம்) செய்தவண்ணமாய் இருக்கிறானாம். புகழைப் பயனாகக் கருதாமல் கொடையையே பயனாகக் கருதிக் கொடுத்தவண்ணமாய் இருக்கிறானாம்.

ஒரு யாசகன் ஏதாவது பெற்றுக்கொள்ளாமல் போக விரும்ப மாட்டான். நந்தகோபனோ கொடுக்காமல் வீடு திரும்புவதில்லை. இவன் ஆடைகளைத் தானம் செய்வதைப் பார்ப்பவர்கள் 'வஸ்திரதானமே செய்து கொண்டிருக்கிறான் இவன்!' என்று நினைப்பார்களாம். பேசுவார்களாம். இவள் பருகும் நீரை வழங்கும்போது 'தண்ணீர் கொடுப்பதே இவன் கொடை' என்று தோன்றுமாம். சோறு கொடுக்கும்போது 'அன்னதானமே இவன் மேற்கொண்டிருக்கும் தருமம்' என்று தோன்றுமாம்.

நீதிபதி ரானடே ஒரு சமயம் கிறிஸ்து மதம் குறித்துப் பேசினார். கேட்டவர்கள், இவர் கிறிஸ்தவர்தாம் அல்லது கிறிஸ்தவர் ஆகிவிடுவார் என்று பேசிக் கொண்டார்கள். மறு வாரத்திலோ, வேறொரு சமயத்திலோ, நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினார். இவரை முஸ்லிம் அறிஞர் என்றே நினைத்தார்கள் இந்த சொற்பொழிவைக் கேட்டவர்கள். பிறகு பௌத்த சமயம் குறித்துச் சொற்பொழிவு செய்தார். இந்தச் சொற்பொழிவைக் கேட்டவர்கள் இவரைப் பௌத்தர் என்றே கருதினார்கள். கடைசியாகக் கண்ணபிரானின் கீதை குறித்துப் பேசினார். இவரே உத்தம ஹிந்து என்று தீர்மானித்தார்கள் இந்தப் பேருரை கேட்டவர்கள். அப்படியே நந்தகோபனையும் வஸ்திரதானமே செய்பவன், அன்னதானமே செய்பவன், தண்ணீரே வழங்குபவன் என்றெல்லாம் பாராட்டுப் பேசிக் கொண்டார்களாம். இத்தகைய கொடைச் சிறப்பை எடுத்துரைத்துப் புகழ் மலர்கள் தூவி நந்தகோபனைத் துயில் உணர்த்தியவர்கள் அடுத்தபடியாக கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே! என்று யசோதைப் பிராட்டிக்குப் புகழுரை கூறி இவளையும் துயிலுணர்த்துகிறார்கள். எம்பெருமான் நந்தகோ பாலா! எழுந்திராய் என்றவர்கள் எம்பெரு மாட்டி யசோதாய்! அறிவுறாய் என்று கூறித் துயில் உணர்த்துகிறார்கள் யசோதையை.

இந்த ஆய்ச்சியருக்கோ 'உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்!' என்றே இருப்பதால் 'எங்களுக்கு அம்பரமும்(ஆடையும்), தண்ணீரும் சோறுமாய் உள்ள கண்ணனை எங்களுக்குத் தந்தருள வேணும்' என்ற பிரார்த்தனையை உள்ளத்தில் கொண்டுதான் 'நந்தகோபாலா! எழுந்திராய்' என்றார்கள்.

செடிக்கோ மரத்திற்கோ வேரில் ஒரு தீங்கு நேர்ந்தாலும் கொழுந்திலேதான் முதலில் வாட்டம் காணப் படும். அப்படியே பெண்களில் தாழ்ந்தபடியில் உள்ளவர்களுக்கு ஒரு கேடு வந்தாலும் யசோதை முகத்தில் வாட்டம் காணப்படுகிறதாம். இத்தகைய 'கொழுந்தே! ....... யசோதாய்! அறிவுறாய்!' என்கிறார்கள்.அறிவுறாய் என்பதற்குத் துயில் உணர்ந்து எழுந்திராய் என்பது பொருள். எனினும், 'இவள் அறிய அமையும்; பின்பு தங்களுக்கு ஒரு குறை இல்லை என்று இருக்கிறார்கள்' என்பது குறிப்பு.

நந்தகோபனும் யசோதையும் இவர்கள் உள்ளே புகுவதற்கு இசையவே, இவர்கள் மாளிகையின் மூன்றாம் பகுதியில் புகுந்து கண்ணனைத் துயில் உணர்த்துகிறார்கள். கண்ணனை ஏற்கனவே 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று குறிப்பிட்டவர்கள் இப்போது,

அம்பரம் ஊடுஅறுத்து
        ஓங்கிஉலகு அளந்த

உம்பர்கோ மானே!
        உறங்காது எழுந்திராய்

என்று பள்ளியெழுச்சி பாடுகிறார்கள்.

அப்பால் கண்ணனின் அண்ணனாகிய பலதேவனைச் 'செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!' என்று கூப்பிட்டு எழுப்புகிறார்கள். கண்ணன் பின்னே பிறக்க முன்னே பிறந்த செல்வன் அல்லவா? லட்சுமணன் இராமனுக்குப் பின்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்றுச் சீமானாகத் திகழ்ந்ததுபோல், பலதேவன் கண்ணனுக்கு முன்னே பிறந்து கைங்கரியச் செல்வம் பெற்ற சீமானாகப் பொலிந்தான்.

நால்வரை எழுப்புதல்

அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பரம் ஊடுஅறுத்து ஓங்கிஉலகு அளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழல்அடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோர் எம்பாவாய்

விளக்கம்

நந்தகோபனின் கொடைச் சிறப்பைக் கூறி, அத்தகைய வள்ளல் தங்கள் வேண்டுகோளையும் அளிக்க உதவி செய்வான் என்ற குறிப்புடன் பேசுகிறார்கள். பிறகு யசோதையை அழைக்கிறார்கள். பிறகு கண்ணனை அழைக்கிறார்கள். கடைசியாகப் பலதேவனைக் கூவி அழைத்து, அண்ணனும் தம்பியும் உறங்காமல் எழுந்திருந்து அருள் புரிய வேண்டும் என்கிறார்கள்.

'உறங்கேல் ஓர் எம்பாவாய்' என்று இருப்பது தவறு என்றே துணியலாம். 'ஏலோர் எம்பாவாய்' என்ற மகுடத்திற்குப் பொருள் கூறாது இதை அடி நிறைக்க வந்த சொற்றொடராகக் கருதி அல்லவா பாடல்களுக் கெல்லாம் பொருள் கூறி வருகிறோம்? அப்படி இந்தப் பாட்டுக்குப் பொருள் கூறும்போது 'உறங்கு' என்றல்லவா எடுத்துக் கொள்ள வேண்டும்? எனவே 'உணர்ந்து' என்று இருக்கவேண்டும் என்பர் ஆராய்ச்சிப் பேரறிஞர் திரு மு. இராகவைய்யங்கார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக