ஞாயிறு, 27 டிசம்பர், 2009

மூவகை வெள்ளம்

12. நற்செல்வன் தங்காய், ஈதென்ன பேருறக்கம்?




இவள் தமையன் கண்ணனை விட்டுப் பிரிவதில்லை. எருமைகளைச் செல்வமாக உடைய இவன் கிருஷ்ண பக்திச் செல்வமும் பெற்று இருப்பதால் 'நற்செல்வன்' என்று கொண்டாடப் பெறுகின்றான். நாட்டிலும் காட்டிலும் இராமனைப் பின்தொடர்ந்து திரிந்த லட்சுமணன் போல், கண்ணபிரானை அன்றி வேறொருவரையும் அறியாதவனாய் அவனையே பின்தொடர்ந்து அவனிடத்திலேயே அன்பு பூண்டு திரிகின்றான் இவன்.

அப்பேர்ப்பட்ட நற்செல்வன் தங்கையைக் கூவி அழைக்கிறார்கள் இவர்கள்.

கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைந்து இல்லம் சேறுஆக்கும் நற்செல்வன் தங்காய்!

பாலைக் கறவாததால் இளங்கன்றையுடைய எருமைகள் கனைத்துக் கதறிக் கொண்டு, கன்றை நினைத்துப் பால் சோர நிற்கின்றனவாம். அதனால் இல்லம் நனைந்து சேறாவதாகக் கற்பனை செய்து இந்த வீட்டின் பால் வளத்தைச் சிறப்பித்துப் பேசுகிறார்கள் பெண்கள். 'இத்தகைய உன் வீட்டு வாசலில் நாங்கள் வந்து நிற்கும் போது, பனியும் வெள்ளம்போல் எங்கள் தலைமீது விழுகிறதே!' என்கிறார்கள். பனித்தலை வீழநின் வாசல்கடை பற்றி என்கிறார்கள்.

எனினும் இந்தப் பனியையும் லட்சியம் செய்யாமல் 'மனத்துக்கு இனியானை' (இராமபிரானை)ப் பாடிக் கொண்டிருக்கிறார்களாம். விரைவில் இவளை அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்பது நோக்கம். இவளோ வாய் திறக்கவில்லை.

பெண்களோ 'நாங்கள் இராமனைப் பாடியும் நீ வாய் திறக்கவில்லையே!' என்கிறார்கள். இராமனை மனத்துக்கு இனியான் என்று கூறுகிறவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் கிருஷ்ண பக்தி தங்களைப் படுத்தும் பாட்டை உள்ளத்தில் கொண்டு பேசுவது போலத் தோன்றுகிறது.

மனத்துக்கு இனியானுக்கும் சினம் வருவதுண்டா? இராவணன் சாது ஜனங்களை ஹிம்சித்தபோது இராமனுக்கும் தர்மாவேசமாகிய சினம் பொங்கி விட்டதாம். சீதையைக் கவர்ந்தான் என்பதை வியாஜமாகக் கொண்டு இராவண வதம் செய்து உலகத்திற்கு தலம் விளைத்தான் இராமபிரான். இவர்கள் பாடுகிறார்கள்:

சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற

மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்!

'எங்களுடைய விருப்பத்திற்கு இணங்க நீ எழுந்திராவிட்டாலும், மனத்துக்கு இனியானுடைய பாடல்களைக் கேட்க விருப்பம் கொண்டாவது துயில் உணர்ந்து எழுந்து வரலாமே' என்ற பொருள்பட இனித்தான் எழுந்திராய் என்கிறார்கள்.

இப்படிச் சொல்லியும் இந்த 'நற்செல்வன்' தங்கை எழுந்து வரவில்லை என்று அறிந்ததும் ஆத்திரமாக, ஈதுஎன்ன பேருறக்கம்? என்று கேட்கிறார்கள்.

எல்லா வீடுகளிலும் உள்ளவர்கள் துயில் உணர்ந்த பின்பும் இவள் இப்படிப் பெருந் தூக்கம் மேற்கொண்டிருப்பது கண்டு அதிசயப்படுகிறார்கள் என்பதையும் 'ஈதென்ன பேருறக்கம்?' என்ற வாக்கில் கண்டு கொள்கிறோம்.

'மேலே, தலைக்கு மேலே, பனி வெள்ளமிடுகிறது; கீழே பால் வெள்ளமிடுகிறது; உள்ளத்திலோ கிருஷ்ண பக்திக் காதல் வெள்ளமிடுகிறது' என்று மூவகைப் பெரு வெள்ளத்திற்கு இடையே அகப்பட்டுக் கொண்டவர்களைப் போல் பெண்கள் பேசுகிறார்கள், இந்த வீட்டுக்காரியை நோக்கி. ஒரு சிறிய ஊரில் கிழக்கேயிருந்து ஆற்று வெள்ளம் பெருகி வந்ததாம். மேற்கேயிருந்து கால்வாய்க்கரையை உடைத்துக் கொண்டு வெள்ளம் பெருகி வந்ததாம். தெற்கே குளத்தை உடைத்துக்கொண்டு அந்த வெள்ளமும் ஓடி வந்ததாம். இப்படி மூவகை வெள்ளத்திற்கும் இடையே சிக்கிக் கொண்டவர்கள் வடக்கு நோக்கிப் போய் மேடான ஒரு இடத்தில் தப்பி ஓடித் தங்க உத்தேசித்தார்களாம்! அப்படியே இந்தப் பெண்களும் மூவகை வெள்ளத்திற்கும் ஆற்றாது தப்பிக் கண்ணன் இருக்கும் திசையை நோக்கிப் போக விரும்புகிறார்களாம்.

போகும்போது இந்த நற்செல்வன் தங்கையாகிய அன்புச் செல்வியையும் அழைத்துப் போக விரும்புகிறார்கள். இவளை விட்டுப் போகத் துணியவில்லை. எனவேதான் கண்ணனைப் பாடியவர்கள் இராமனையும் பாடி, 'நாங்கள் இப்போது துஷ்டக் கண்ணனைப் பாடவில்லை அம்மா! சாதுவாகிய இராமனைத் தான் பாடுகிறோம்' என்கிறார்கள். எப்படியாவது இவளுடைய பேருறக்கத்தைக் கலைத்துத் தங்களுடன் அழைத்துப் போகவேண்டும் என்பது இவர்கள் சங்கற்பம்.

நற்செல்வன் தங்கையும் அந்தப் பழக்கத்தாலும் அந்த உறவாலும் கிருஷ்ண பக்திக்கு இசைந்த நற்செல்வியாகத்தானே இருக்கவேண்டும்?



மூவகை வெள்ளம்



கனைத்துஇளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி


நினைத்து முலைவழியே நின்றுபால் சோர


நனைத்துஇல்லம் சேறுஆக்கும் நற்செல்வன் தங்காய்!


பனித்தலை வீழநின் வாசற்கடை பற்றி


சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற


மனத்துக்கு இனியானைப் பாடவும்நீ வாய்திறவாய்


இனித்தான் எழுந்திராய் ஈதுஎன்ன பேருறக்கம்?


அனைத்துஇல்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.



விளக்கம்

இந்த வீட்டில் வசிக்கும் பெண்ணின் அண்ணன் கண்ணனை விட்டுப் பிரியாத ஒரு நண்பன். 'அவனுடைய தங்கையாகிய நீயும் இப்படி உறங்கிக் கொண்டிருக்கலாமா?' என்று கேட்கிறார்கள். 'தலைக்கு மேலே பனி விழ நாங்கள் வாசலில் நின்று கொண்டிருக்கிறோமே; எழுந்து வாராய்' என்கிறார்கள். தாங்கள் உய்ந்துபோகும்படி இவள் வந்து கலந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள்.

எருமைகளைச் செல்வமாக உடையவன் கிருஷ்ண பக்திச் செல்வமும் உடையவனாக இருப்பதால் 'நற்செல்வன்' என்று குறிக்கப் படுகிறான். பணத்தைக் காட்டிலும் எருமைகளைச் செல்வமாக மதிக்கிறவர்கள் கிருஷ்ண பக்தியைத் தங்கள் அடிப்படைச் செல்வமாகிய தனிப் பெருஞ் செல்வமாக மதிக்கிறார்கள்.

கறவை எருமைகள் கன்றை நினைத்துப் பால் சோர நிற்பதும், அந்தப் பால் நனைத்து இல்லத்தைச் சேறாக்குவதும் செல்வச் செழிப்பை நினைவூட்டு கின்றன. இத்தகைய இல்லத்திலே கிருஷ்ண பக்திச் செல்வமும் வழிந்து பொங்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக