செவ்வாய், 29 டிசம்பர், 2009



மின் தமிழ் குழுமம் கூகுள் குழுமங்களில் ஒன்று. தமிழுக்கு அற்புதமாக சேவை செய்யும் பல தமிழன்பர்கள் கலந்து சங்கமித்து எல்லாரையும் தங்கள் தமிழறிவால் மனம் மகிழ வைக்கும் ஒரு நல்ல தளம். அதில் இன்று வந்து ரசித்த ஒரு கவிதை. ஷைலஜா என்பவர் எழுதியது. 

சீராரும் மார்கழித்திங்கள் வளர்பிறையின்

ஏரார் விழாவிற்கே ஏகிடுவோம்-பாரேத்தும்

காவிரியில் நீராடிக் களித்துக் கடவுளைத்தான்

பூவினால் போற்றியே பூசித்து-மேவினால்

மங்கலமாய் உள்ள மதுரப் பிரசாதம்

எங்கும் கிடைக்கும் இனிதுண்போம்-அங்கதன்பின்

வாசத் திருமாமணி மண்ட  பந்தன்னில்

தேசிகர்கள் சூழும் திருமுன்பில்-பாசமுற

வீற்றிருக்கும் தேவன் திருப்பாதம் தன்னைப்

போற்றிப்புகழ்ந்துள்ளே போயமர்வோம்  ஆட்சிபுரி

மன்னன் திருமுன் வணங்கி அரையர்கள்

பொன்னிலுறும்தாளத்தைப்போட்டபடி -இன்னிசையால்

சீரார் திருமொழியின் இன்பம் செவிக்களிப்பர்

ஊரார் வியக்க  உரைபகர்வர்-பேரருளால்

அண்ணல் சுவைக்க அபிநயமும் தாம் செய்வர்

கண்ணும் செவியும் களிப்படையும்  -நண்ணுவிழா

பத்துப்பகல் நடக்கும் பாற்கடலில் மோகினிபோல்

உத்தமன் அங்கே உலா வருவான் -பக்தர்கள்

எங்கும் நிறைந்திருக்க ஏகா தசியன்று

பொங்கும் பரிவால் புறப்பட்டு-மங்கலமாய்

அந்தணர்கள் போற்ற அருமறைகள் தாமேத்த

சிந்தித்து மக்களெலாஞ் சேவிக்க-  முந்துற்று

மின்னுமெழில் வைகுந்த வாயில் வழியாக

அன்னநடையோ டழகாகப் பொன் னரங்கன்

ஏராரும் ஆயிரக்கால் மண்டபத்தை எய்தியங்கு

சீரார் அமளியிலே சென்றமர்வான்  - அந்தமிழின்

ஆளிக ளாயுள்ள அரையர்கள் முன்னுற்றுத்

தாளத்தைக் கூட்டித் தமிழிசைப்பார் -கொஞ்சும்

தமிழுக்கவர் செய் அபிநயத்தைப் பார்த்தே

நெஞ்சம் மகிழ்ந்து நெகிழ்வுறுவர்-குமிழ்சிரிப்பால்

சிந்தை கவரும் சிறப்பார் கலியன் தான்

வந்து புரியும் வழிப்பறியும்  முந்துற்று

நாடும் பராங்குசநாயகியைக் கண்டிறைவன்

ஈடில்லா இன்பமிக எய்துவதும் - நீடுவளர்

மாட்சி யுறுகின்ற மகிழ்மாலை நம்மாழ்வார்

மோட்சமுறு நாடகமும் முற்றும் அந்தக்-காட்சியிலே

கண்டு மகிழ்ந்து களைதீர்வோம் -அன்னதன்பின்

அண்டர்கோன் ஆழ்வார்க்கருள் புரிவான் -மெய்யன்தான்

நம்பால் நண்ணியே  நலம் தருவான் அதன்பின்னே

நம்போல் உறுவாரார் உண்டு?  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக