சனி, 26 டிசம்பர், 2009

மயிலே ! வா; உன் மேகத்தைப் பாடுகிறோம்

11. ஊருக்கு ஒரு உத்தமி.

ஆய்ப்பாடியில் கண்ணன் 'நந்தகோபன் குமரன்' என்ற நிலையில் மட்டும் வளரவில்லை; 'ஊருக்கு ஒரு பிள்ளை' என்ற நிலையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வந்தான் அல்லவா? ஆனால் கண்ணன் உத்தமன் என்று பெயர் எடுக்கவில்லை. இவளோ உத்தமி என்றும் பெயர் பெற்று அந்தப் புருஷோத்தமனுக்கு இசைந்த பக்தமணியாக வளர்ந்து வருகிறாள். 'பக்தி வளர்ச்சியில் பாங்கான பருவம் உடையவள்' என்றும் கொண்டாடப் பெறுகிறாள். இவளை இப்பெண்கள், 'குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!' என்று கொண்டாடிக் கூப்பிடுகிறார்கள்.
இவளோ, "கடவுளை நம்மால் தேடிப் போகமுடியுமா? அவனல்லவா நம்மை நாடி நாம் இருக்கும் இடத்திற்கு இறங்கி வரவேணும்?" என்று இறுமாந்திருக்கும் பக்தமணிபோல், 'அவனை அடைவதற்கு நானோ நோற்பேன்? வேணுமானால் அவனே நோற்று வரட்டும்!' என்று இறுமாந்து படுக்கையில் படுத்த வண்ணம் ஆனந்தக் கனவு கண்டு கொண்டிருக்கிறாளாம்.
'அந்தக் கனவுலகத்தில்தான் இருக்கிறாளா? அல்லது அந்தக் கனவையும் விட்டுப் பேருறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறாளா?' என்று அறியமுடியாத ஒருவகை நிலையில் இப்பெண் இருக்கும்போது, உறவினர் தோழிமார் ஆகியவர்களில் ஒருவர் தப்பாமல் அனைவரும் திரண்டு இவள் வீட்டை முற்றுகை இட வந்தவர்கள்போல் வாசலில் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
கண்ணனுடைய திருநாமங்களைப் பாடிக்கொண்டே நிற்கிறார்கள். உள்ளே இருப்பவளோ உடம்பிலும் அசைவில்லாமல், வாயிலும் அசைவில்லாமல் படுத்த படுக்கையாய் இருக்கிறாள். பெண்கள் பாடுகிறார்கள்:
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறல்அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!

கன்றுகளோடு கூடின பசுக் கூட்டங்களைக் கறக்கத் தெரியும் இக்கோவலர்களுக்கு, சத்துருக்களிடம் சண்டை போடவும் தெரியுமாம். மற்றைப்படி, குற்றம் ஒன்றும் அறியாதவர்கள்! இத்தகைய சாதுக்களுக்கும் பகைவர்கள் உண்டோ என்றால், கண்ணனுடைய மேன்மையைப் பொறாதவர்களை யெல்லாம் இவர்கள் பகைவர்களாகவே கருதுகிறார்கள் என்பது குறிப்பு. வலுச்சண்டைக்குப் போகாமல், வந்த சண்டையை விடாத சாதுக்களும் உண்டு; அத்தகைய சாதுக்களுமல்லர் இக்கோவலர்கள்! கண்ணனுக்குத் தீங்கு இழைப்பவர்கள் மீது படையெடுத்தும் போவார்களாம். இத்தகைய 'கோவலர்தம் பொற்கொடியே!' என்று இவளை அழைக்கிறார்கள் இவர்கள்.
ஜனக குலத்தை ஜானகி விளக்கம் செய்ததுபோல் கோவலர் குடியை இவள் விளக்கம் செய்கிறாளாம். இவளைப் 'பொற்கொடி' என்று குறிப்பிடுவதன் உட்பொருள், கோல் தேடிப் படரும் கொடிபோல் இவள் உள்ளமும் கண்ணனைத் தேடிப் படரவேண்டும் என்பது. இவர்கள் குறிப்பு இது. ஆனால் இவள் மனநிலையோ இந்தக் குறிப்பிற்கு இசைவாக இல்லை இப்போது.
'பொற்கொடியே!' என்று இவளை அழைத்தவர்கள் 'புனமயிலே' என்றும் கூவி அழைக்கிறார்கள். 'நாங்கள் மேகத்தைப் பாடுகிறோம், மயில் ஆடிக்கொண்டு வரவேண்டாமா?' என்று ஆதுரத்துடன் எதிர்பார்க்கிறார்கள். புனமயிலே! போதராய் --- அதாவது காட்டில் இஷ்டப்படி திரிகிற மயில் போன்றவளே! எழுந்து வருவாயாக – என்கிறார்கள்.
'புனமயிலே' என்று கூறுவது மயிலின் தோகை போன்ற கூந்தல் அழகை உடையவள் இவள் என்பதையும் குறிப்பிடுகிறது.இந்தக் கூந்தல் அழகியின் சமுதாய அழகையும் ஒளியையும் சுட்டிக் காட்டுகிறது 'பொற்கொடி' என்ற பதம். தினைப்புனத்தை மயில் அழகு செய்வதுபோல் தங்கள் கூட்டத்தை இப்பெண் அழகு செய்யவேண்டும், அழகு செய்யக்கூடியவள் என்ற கருத்தும் புலப்பட இவளை அழைக்கிறார்கள் இவர்கள்.
'செல்வப் பெண்டாட்டி!' என்றும் இவளை அழைக்கிறார்கள்.பெண்மையைச் செல்வமாகக் கொண்டிருப்பவள் இவள் என்பது பொருள். 'கிருஷ்ண பக்திச் செல்வத்தை எங்களோடு சேர்ந்து அனுபவிக்க நீயும் எங்களுடன் வந்து கலந்துகொள்ள வேண்டும்' என்கிறார்கள்.
'சுற்றத்தாரும் தோழிமாரும், உறவுமுறை உள்ள தோழிமாரும், எல்லாரும் வந்து காத்திருக்கிறார்களே, மேகவண்ணனான கண்ணனது திருப் பெயரைப் பாடுகிறார்களே; நீ மட்டும் உடம்பையும் வாயையும் அசைத்துக் கொள்ளாமல் இப்படி உறங்கிக் கொண்டிருக்கலாமா? இது தகுமா? இது தருமந்தானா? எந்தப் பயனை எண்ணி இப்படி அசைவற்றுக் கிடக்கிறாய், நிர்விகல்ப சமாதியில் இருப்பவரைப்போல?' என்றெல்லாம் பொருள்படப் பேசி முடிக்கிறார்கள்.
'பெண்மையை ஆளும் இந்தச் செல்வி பெண்மைக்கும் செல்வம்தான். எங்களுக்கும் செல்வம்தான். கண்ணனுக்கும் செல்வம்தான்!' என்ற குறிப்புடன் இவர்கள் அழைக்க, கடைசியாக இவளும் களித்துக் கூத்தாடும் மயில்போல் வெகு உற்சாகமாக வந்து இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்கிறாள் என்று கருதலாம். இந்தப் பொற்கொடியும் முடிவில் இசைந்த கோல் தேடிப் படர்கின்றது பிற கொடிகளுடன்.

மயிலே ! வா; உன் மேகத்தைப் பாடுகிறோம்

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறம்அழியச் சென்று செருச்செய்யும்
குற்றம்ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றுஅரவு அல்குல் புனமயிலே! போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண் டாட்டிநீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய். 11.

விளக்கம்

எழுப்ப வந்திருப்பவர்களில் உறவினர்களும் தோழிமார்களுமாகிய பலர் காணப்படுகிறார்கள். அவர்கள் எழுப்பவும் இவள் உறங்குவது சரியல்ல என்கிறார்கள். சாளரத்தின் வழியாகப் பார்க்கிறார்கள். பேசாதது மட்டுமா? – உடம்பையும் அசைத்துக் கொடுக்காமலே கிடக்கிறாள். இப்படி உறங்கும் பொருள்தான் என்ன? பொருளும் பயனும் உறக்கம்தானா? கிருஷ்ண பக்தி என்ற அந்த உறக்கம்தானா? எந்த உறக்கமாயினும் அது பொருளல்ல என்கிறார்கள். தங்களுடன் வந்து கலந்துகொண்டு கண்ணனை அடைவதே நலம் என்பதை வற்புறுத்துகிறார்கள்.
பக்தி உலகிலும் சொந்த நலம் பிறர் நலத்துடன் கலந்து இருப்பதுதான். இங்கும் சமுதாய மனப்பான்மை இன்றியமையாதது. இது இப்பாசுரத்தின் உட்பொருள். உத்தம பக்தர்கள் இந்த உண்மையை நன்கு உணர்ந்து ஒழுகுவர் என்ற குறிப்பையும் இப்பாசுரத்தில் காண்கிறோம். பிறரையும் திருத்தி உடன் சேர்த்துக் கொள்ள முயலாமல் ஒருவன் தான் மட்டும் பக்திப் பேரின்ப நெறியில் செல்ல முடியும் என்பது வீண் கனவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக