வெள்ளி, 10 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை -- முத்துப் பத்ததி

18. முத்துப்பத்ததி

611. கட்டொடு நித்தநலத்தொடு தன்னில்
நட்டிடு முத்தவை தட்குமி றைக்குந்
தொட்டடி மைமுடி மைமெ யுணர்த்துங்
கிட்டரி பாதுக சித்தியெ னக்காம். 1

612. அத்திற முத்தியின் சித்திக னத்தோங்
கத்தனை நல்வினை மித்திர நத்தும்
உத்தமன் பாதுனைத் தொத்திய சுத்தக்
கொத்தென முத்தணி யொத்துவி ளங்கும். 2

613. ஏலணி யில்லடை யேனல ங்கல்
தாலம ரங்கன்ப தாவனி! நாளும்
சீலநி னித்தில நீரொளி சாலப்
பாலென வாய்நதி பாய்நில மாமே. 3

614. நித்தநி றைத்திரு விண்டுப தத்துப்
புத்தெழி லுன்னல முத்தொளி மின்னிற்
சுத்தமு தற்கலை யுந்துடு நாத
னொத்தரி பாதுல குத்திரு மல்கும். 4

615. சொன்னவ ணத்தணி பாது! மு குந்தன்
தன்னரு ளாளிரு தாளுகிர் முன்னே
மின்னுமு னித்தில மீதெதிர் விம்பப்
பன்னல விந்துவின் பந்திப யந்தே. 5

616. தன்னில ரங்கன தங்கிரி நங்காய்!
துன்னுன துத்தம முத்தொளி தன்னிற்
பொன்னிபொ லிந்தரி பாதமு மிழ்ந்த
தொன்னதி மேனியினொண்மைது லங்கும். 6

617. ஒண்ணல முத்தெழு முன்னொளி முத்தை
வண்ணரி பாதுகை மாமழை வண்ணத்
தண்ணலின் மாமலர்த் தாணக மாமைத்
தண்ணவன் மண்டிலத் தாரைக ளாமே. 7

618. கண்ணுத லுவ்விய யங்கலி லாரப்
பண்ணொளி மின்னலி லாமொரு பாலிற்
கண்ணன லர்ப்பத மன்னலிற் பாதூ!
விண்ணவர் சிந்துவின் சந்தமி மைப்பாய். 8

619. தேறுமு னித்தில நீழலிற் றேவ
யாறென மாவரி பாதுகை! யுன்னைப்
பேறென வேமுடி யேந்துவர் மூர்த்தத்
தேறிடு மிந்துவின் விந்தொளி மேலும். 9

620. தன்முடி சூடணி தண்சுடர் தன்னின்
மன்மகி ழக்கலை மல்கம ராடி!
சின்மய நித்தில மின்மய நின்னை
நின்மல னுவ்வுயி லேந்திநி கழ்வன். 10

621. அத்தனி யப்பன தப்பத நோக்குன்
நித்தில நீளொளி நீதிவ டத்தே
நத்தப வக்கட னீந்திட மாந்தர்
நித்தமு மோர்துணை நீபுணை யாவாய். 11

622. பொங்கரி தாளமர் போகம யத்துச்
செங்கதிர் மாமணிச் சேகர மின்னில்
மங்கல வானல வாரநி லாவில்
நன்கர வாகம ராடி! நி கழ்வாய். 12

623. விஞ்சலி லெல்லிலு மிந்திள முத்தின்
மஞ்சொளி வானவர் மத்தக மீதே
கொஞ்சவ ரஞ்சலி மாமலர் கூம்பி
எஞ்சும ராடி!ம லர்ச்சிய தென்றும். 13

624. கொண்டநி னில்லடைத் தொண்டர்கள் தூய்மை
கொண்டுதி ராசவி மோசன மாதல்
விண்டும ராடி! நீ யிந்துட னொப்பே
பண்டுன தத்தரள த்தொட ருள்வாய். 14

625. நாடரி நன்னடை யாடம ராடீ!
நீடா ளங்கள்கி ளர்ந்தக திர்க்கண்
பீடுமு ளைத்திரு வீறுதெ ளித்துப்
பாடுந லம்பொலி பாலிகை போல்வாய். 15

626. மக்களை யேசிவ மாக்கிடு நீரின்
மிக்கவ ளப்பல முத்தொளி வெள்ளத்
தெக்கலி லாதிப தாவனி! நீமா
தக்கவ ரர்நதி தான்தரு வாயே. 16

627. ஆழியன் மாழையி னாழிம ருங்கில்
நீழன லந்தெளி முத்துநி றத்துச்
சூழலி னித்தில சூதகம் விள்ளும்
வாழொளி யிப்பியைப் பாதுகை! யொப்பாய். 17

628. அத்தகர் பிற்றைம டங்கலிற் பாதூ!
அத்தனி வானிடைத் தாரகை யாக்கக்
கொத்தொடு பல்பல முத்துகள் கத்தன்
வித்தென வுன்கண்வி தைத்தனன் போலும். 18

629. நாயக னோரடி மாயையி றாயா
காயம தோர்கண மாயது பாதுன்
பாயெழு வானதி மொக்குளின் சாயல்
மேயவ ணத்தர ளத்துடு மின்ன. 19

630. ஒத்தரு ளின்னமு தத்திரு வோடே
பத்துரு மால்விளை யாடிட நின்கண்
வைத்தச கத்திதி பாது! வி ளங்கும்
சத்துவ மன்னநி னித்தில வாளில். 20


631. ஆவத நித்தில பாதுக! நின்கண்
பாதமி டத்திரு மாதவ வேந்தன்
நூதன நீரெழு கைரவ மோம்பும்
போதவி ழல்லியின் பொய்கைபு கல்வாய். 21

632. மின்கலை மாமறை மேனிலை வண்ணம்
நன்கிடு நற்சுதை நாறுமு னாரத்
தென்கதிர் தங்குப தாவனி! திங்க
ணின்கறை மாலடி யார்கறை நீக்கும். 22

633. ஆளரி தாளுகி ரோடுற வாடுன்
னாளனி முத்துக ணித்தமும் பாது!
வாளெழு மண்டில வாரமு தாயன்
பாளரின் மூவழற் பாதையொ ழிக்கும். 23

634. தன்னிறை தாங்கவ னித்தனி யேந்தல்
மன்னொளி முத்தணி பாதுனை யேந்தும்
முன்னவ னொத்தொரு பின்னலு யர்த்த
பின்னவ னுச்சியிற் பிச்சநி ழற்றும் 24

635. ஒத்தன ரங்கன தொண்பத ரேகைத்
தொத்தலர் கற்பக மாமல ரொப்பே
அத்தர ளத்திர ணத்தெழில் பாதூ!
நித்தமு நின்னொளி நீத்தநி றக்கும். 25

636. பொங்கமு தக்கதி ரண்ணலு கிர்க்கள்
நன்குக நித்தமு நித்தில நன்றில்
எங்கெவர் பால்தெளி பாலொளி வெள்ள
மங்கள நின்னியல் மல்கும ராடீ! 26

637. ஏறிட மாநெடி யோனடி யேனுள்
ஊறிடு கோதுக ணூறிம ராடீ!
வீறணி நித்தில நின்னொளி வீசித்
தேறுப ளிங்கென மேனிலை செய்தாய். 27

638. மாலணி யாரப மேனியி ராவும்
பாலொளி முத்தினீ யாகுநி லாவும்
சாலவு மெம்முணர் வாம்பல்கள் விள்ள
ஏலும தம்மணி பாதுகை! மேலும். 28

639. நேரரி தாளுகிர் சேரொளி பாதுன்
னாரந லத்திரள் சாரவி றைஞ்சிக்
கோருப தச்சுரர் கோக்கண்மு டிக்கண்
வாரெழி னீர்முடி யாட்டிய ருள்வாய். 29

640. சக்கரி தாளுகிர் வாளமு தங்கொள்
ளக்கதிர் நற்கதி நாலிக ளன்ன
இக்கர ளப்பவ நீக்கும ராடீ!
மக்களு யிர்க்குளி கங்களு மிழ்வாய். 30


641. பத்திந டப்பர தாதியர் நாடும்
நித்தில நீரலர் போதுதெ ளிக்கும்
உத்தம னுன்னொடு வந்தரு ளாடற்
கொத்தவ ரங்கம ராடி! கொ ழிப்பாய். 31
642. தோமறு விண்ணல முத்தொளி துன்னும்
வாமனன் பாதுனை வந்துவ ணங்கும்
ஆமர னுவ்வியி லாரியர் சார்த்தத்
தூமதி தாரகை தூவிய தாமே. 32

643. மாவெடு மன்னிறை மால்விளை யாடத்
தூவணி முத்தொளி தூவிமு னண்ணல்
லாவிய லம்புய மூலக மென்னச்
சேவடி மாணிலை! சேணடு வாயே. 33

644. இந்திரை யோடுபி றந்தவ னென்றவ்
விந்துவி னற்கலை விண்டும ராடீ!
உந்திட வாணில வூனமி லாதே
வந்துனை முத்தில டுத்தது போலும். 34

645. உன்னணி நித்தில சுப்பிர மொத்த
நன்னர தொன்றிட நல்லவ ருன்னை
முன்னலொ ழுக்கவ ணக்கமு டிக்கண்
பொன்னரி பாதொரு போதணி வாரே. 35

646. தேறரி யங்குலி யேமவ லங்கல்
வீறில ரும்பிநி ரம்புநி னாரம்
ஏறடி யம்புல ரேகைவ ளைக்கண்
நாறிடு மாறரி பாது! தெ ரிப்பாய். 36

647. மாவலி கொள்ளவ ளர்ந்தமு குந்தன்
பூவடி வார்மக ரந்தமு மிழ்ந்த
பாவன யாறது பாவலு னார
மேவலி லாயது பாலென மேனி. 37

648. மாலடி சாலர விந்துட னிந்து
மேலுமு றழ்வற நீடுனை நாடும்
போலொளிர் முத்துடு கோடிம ராடீ!
சாலமு ரண்கலி மூலம றுக்கும். 38

649. நச்சுடை யப்பணி யுச்சிய ரங்கத்
தச்சுத னன்னட மாடம ராடீ!
அச்சுதை யாறெழு னித்தில வாளில்
முச்சக நோவறு முன்னையு ணர்வன். 39

650. வந்தொரு காலுனை வந்தனை செய்வோர்
உந்தவ நந்தலி லுத்தமன் பாதூ!
சந்தத முந்தன கச்சவி யாழ்ந்தும்
தந்திடு நித்தமு முத்தொளி நன்றே. 40

651. யாவுல காளரி தாள்கள் சுமந்துன்
தாவல்கள் தாணிலை தந்தத ளர்வில்
மேவுவி யர்ப்புதிர் புற்புத மேனித்
தாவள முத்துக ளாயுள வாறோ? 41

652. நீடரி தாணக விந்துபு ரந்த
ஆடக பாதுன தாதவ மேறச்
சேடுறு முத்தினி லாவிலெ னாக்கை
வீடலி வின்னுயிர் வீங்கழ னீங்கும். 42

653. பழ நலந் தழைய நின்தாள் பரவுமுத் தமர்ப ரப்பில்
இழையவென் றென்று தானும் விழையுமுன் னொளிபயின்ற
பழுதறுந் தவள யோகப் பரிவினிற் பாது கந்தே
வழுவினின் கண்ணி லைப்பண் புறுதிநீ தருதி போலும். 43

654. உத்தமன் திருவ டிப்போ தொன்றியே நின்ற நின்கண்
முத்தியற் சித்தி பெற்ற முழுநலத் துலகமுற்றும்
அத்துணைக் கரத்தி லேத மொழித்தொளி செழித்த பாதூ!
முத்தியென் றோது மந்த முதுமறைச் செல்வ நீயே. 44

655. அணிபதா வனி!ய ரங்கனடிமலர்ப் பிடியில் வாழும்
மணியுனைச் சரண டைந்தார் கடுவினை கடியு முன்னைப்
பணிவிறன் களப மேற்றச் சதமகன் மலியு னாலித்
துணியதன் தணிமு கத்துப் பொலிதிருச் சூழி யாமே. 45

656. நன்குபநற் கங்க நீத்தம் நகுதிரைத் தரள நீமம்
பொங்குமுன் பாங்கு தாங்கிப் பணிந்தபுத் தேளி ருச்சி
துங்கநன் னரைநி ரம்பத் துய்யபா துனது வாளில்
மங்கிநோய் நரைகள் மாயும் மாயமீ தென்ன வம்மே!. 46

657. நளிர்மதி புனையு மொத்த னடர்சடை மருங்கின் மற்றோர்
குளிர்வர நதியு லாவிற் றென்னமுத் தொளிகள் பாதூ!
தளிர்தலிற் கங்கை யென்றே கரிமுகன் வளைது ழாவல்
வளர்வெறு துதிக்கை வாரி வளமுடி நனைப்ப னம்மா. 47

658. நித்திலத் தருள ரங்கன் திருவடி நிலை! நீ மேலும்
நித்தமுந் தருமொ ளித்தண் ணிறையளி யமுத வெள்ளத்
தொத்தொரு நான்று தோயு முயர்திரு வுற்றோர்க் கன்றே
தொத்தறத் தொலையு மிந்தத் தொல்வினைக் கொடிய தாபம். 48

659. மலர்மகள் சரணச் செம்பஞ் சணியரி நின்மே னின்றான்
மலைமகள் சரண ரத்த மணவர னின்கீழ் நின்றான்
சிலதிகள் தேவி யில்லத் திவ்வணப் பிதற்ற னோக்கி
நலவலத் தவள வாளிற் பாது நீ நகைக்கின் றாயே. 49

660. மேவலின் மேலுமோர் நித்திலச் சோதியிற்
காவிரித் தீவிதா மாநரைத் தீவெனப்
பாவுமக் கோவலன் பாதுமூ வாதநற்
றூவளச் சீரெனக் கீந்தருள் பூக்குமே. 50

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக