செவ்வாய், 13 நவம்பர், 2007

ஸ்ரீவேதாந்ததேசிக வைபவப்பிரகாசிகைக் கீர்த்தனைகள்

திவ்யதேச மங்களாசாஸனத்துக்கெழுந்தருளியது
கட்டளைக் கலித்துறை

பதின்மர்தம்பாக்கொண்டருளியங்காவிரிப்பாங்கரங்கப்
பதியருள்கொண்டுநந்தூப்புல்வந்தார்தொண்டர்பாடிமனம்
பதிபதபங்கயவேதாந்ததேசிகர்பாங்குதிருப்

பதிகளின்மேற்சென்றுமங்களாசனம்பண்ணினரே.

தரு-இராகம்-கேதாரகவுளம்-தாளம்-ஆதி
பல்லவி

தெரிசித்தாரையா - திருப்பதிகளையெல்லாம்
திருவேதாந்தகுருவே.

அனுபல்லவி

திருக்கோட்டியூரிலென் னுருவிலரியையும்
திருமெயத்திலின்ன முதவெள்ளத்தையும்
திருமாலிருஞ்சோலை தனிற்சுந்தரமாலையும்
திருமோகூர்க்காளமேகன் றிருவடியையும் (தெரி)

சரணங்கள்

மல்லாண்டதிண்டோளனை மதுரைதனிலேகண்டு
மங்களாசாசனஞ்செய்தேத்தி
புல்லாணிதனிற்றெய்வச் சிலையாரைச்சேவித்துப்
புகழ்திருவணையாடிவாழ்த்தி (தெரி)

மீண்டுந்தண்காவிற்றிறல் வலியைக்கண்டு வணங்கி
வில்லிபுத்தூரில் வந்துசேர்ந்து
வேண்டிப்பெரியாழ்வாரைப் புருஷகாரமாய்க்கொண்டு
வியந்து மனது களிகூர்ந்து (தெரி)

கொண்டேவடபெருங் கோயிலுடையான்சூடிக்
கொடுத்தநாச்சியாரையும்பாடித்
தண்டமிழோர்கள் சொல்லுந் திருநகரியில்வந்து
சடகோபன்றனையே கொண்டாடி (தெரி)

நிரஞ்சனமயஞ்சனவென்னுஞ்சுலோகத்தாலே
நிறையுமன்பொடுநம்மாழ்வாரைப்
பொருந்தியடிபணிந்தேயவரை முன்னிட்டுக்கொண்டு
பொலிந்துநின்றபிரானென்பாரை (தெரி)

அங்குள்ளவிரட்டைத் திருப்பதியிதென்றுசொல்வ
தான தொலைவில்லிமங்கலந்தானே
பொங்கமிருந்துவளரர விந்தலோசனைப்
புகழ்ந்துபணிந்து நலந்தானே (தெரி)

கலந்துதிருப்பேரையில் மகரநெடுங்குழைக்
காதனடிக்கேயன்புசார்த்தி
சொலுந்திருப்புளிங்குடிக் காசினிவேந்தரையும்
தொழுததும் வெகுநேர்த்தி (தெரி)

வரகுணமங்கையிலெம் மிடர்கடிவானையவ்
வைகுந்தத்திற்கள்ளப்பிரானைப்
பரவித்தென்குளந்தையில் மாயக்கூத்தனென்னும்
பாஞ்சசன்னியக்கரத்தானை (தெரி)

மாவளம்பெருகிய திருக்கோளூர்தனில்
வைத்தமாநிதியையுமீண்டு
சீவரமங்கைநகர் வானமாமலையும்
சேரப்பரவியருள்பூண்டு (தெரி)

வருகுறுங்குடியில் ஸ்ரீவைஷ்ணவநம்பியருள்
மருவித்தி ருவண்பரிசாரம்
திருவாழ்மார்பனுடன் வாட்டாற்றிலாழ்வானைச்
சிறந்து தொழுது வேதசாரம் (தெரி)

திருவநந்தபுரத்தில்வளர் பதுமநாபனையுந்
திருவடிதொழுதங்கே நின்றும்
அருமையாகியமலை நாடேறவேயெழுந்
தருளிமனத்துட்கொண்டுசென்றும் (தெரி)

தென்காட்கரையின்மீதிலுறையுமென்னப்பனைநற்
றிருமூழிக்களத்தோன்சுடரென்றே
நின்கருணைதாவென் றேத்தித்திருப்புலியூர்
நின்றமாயப்பிரானையென்றே (தெரி)

திருச்சங்கனூரிலமர்ந்தநாதனையத்
திருநாவாய்மாமணிவண்ணத்தோனைத்
திருவல்லவாழில் நின்றபிரானைத் திருவண்வண்டூர்
சேர்ந்தகனிவாய்ப்பெருமானைத் (தெரி)

கருதும்வித்துவக்கோட்டிற் களிறட்டானைமெய்த்
திருக்கடித்தானத்துமாயப்பிரானை
திருவாறன்விளையினந் தெய்வப்பிரானென்று
சேர்ந்துதலத்திலுறைவானை (தெரி)

நின்றிப்படியேதானே மலைநாடதனிற்சொல்லி
நிறைதிருப்பதியன்புகூர்ந்து
தென்றிருப்பதிகளு மலைநாட்டுப்பதிகளுஞ்
சிறந்துபணிந்த ரங்கஞ்சேர்ந்து (தெரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக