ஞாயிறு, 11 நவம்பர், 2007

திருப்பாதுகமாலை


திருப்பாதுகமாலை
பெருமைப்பத்ததி
நண்ணு விண்ணவர்க் கிட்ட வெண்பரி வட்ட மாங்கொளிர் பாங்கினி
லுண்ணு மன்னவ னுந்து மின்னமு திந்து கிர்க்கதிர்ச் சிந்தலென்
றெண்ண வொண்ணணி யொண்ணி லாவணி யேறு மாதிய ரங்கமா
லண்ண லங்கிரி யந்த ரங்கம ராடி நாடிவ ணங்குவன். 11.
கோல வானதி தோன்று மாகழ லூன்றி வாழ்திரு வென்றுதன்
சீல மோலியிற் சூலி தாங்கெழி லாழி யாங்குமி லங்கலில்
நால தாமறை மூல மாதவன் தாள தாமரைத் தாணிலை
சாலு நானில மேலு மேனல னாளு மேநிறை நல்குமே. 12.
அம்பு ராசியி னீரு யிர்நிலை யாகு மாணவ மீன்களும்
உம்ப ராறென வம்பு தாவிய கோட ரப்படை வீரரும்
பம்பு பாலலை நட்ட மேருவு மட்டு வாகறி யாதுகண்
டெம்பி ரானணி பாது மாமர பம்பு திக்கரை நின்றனம். 13.
ஆராத வருளமுத னடிமலரின் துகள்கமழுஞ்
சீரோரு மறைகளிறை நிலைநாடு மடிநிலைகாள்!
ஆரானு முடியினுமைத் தாங்குபவ ராவர்நெடி
தேராரு மதிசூடி யேத்துமல ரந்தணனோ? 14.
ஒளிதளிரு மரவணையன் மரவடியே!யுனையொருகால்
அளிதளிர முடியணவு மடியவர்கட் கன்றொருநாள்
வளநிறைய வுனதமர ரவரவர்க ளிறைசொரிவார்
நளியவர துணர்த்திநமன் தமர்க்கவர்க ணாடானே. 15.
பேசுமறைப் பைங்கிளிகள் சென்னிகளிற் பாதுகையே!
ஆசறுதா ணிற்கவிறை யாமுனையே தாங்குதலின்
தேசுதிக ழாதியரங் கேசனடிச் சோதிமலர்
மாசறுநின் மாறெனவம் மாமகிமை தான்பெறுமே. 16.
செய்யெனமெய் யாழ்மறையின் சென்னிதெரி வேள்வியெலாம்
பெய்யருணற் பாதுகைநீ! யெல்லையென வொல்லியசீர்
மெய்யுணரற் கேலாதார் நீட்டுபெயர் வேட்டலெலாம்
செய்யுமுயிர்க் கோறலென மறைமேலோ ரிகழ்வாரே. 17.
முந்தைமறைச் சுந்தரமால் பூணுமணித் தாணிலையே!
வந்துசிவன் பணியவுனைப் பணிமுடியின் மணியுரசி
உந்துபுனற் கங்கையுதிர் முத்தெழினீர்த் துளியுனக்குச்
சிந்தியபொன் மந்திரநீர்ச் சிகரமாஞ் சீர்பெறுமே. 18.
வரந்தரவே விரிந்ததிரு வரங்கனடிப் பூவுமதி
சுரந்தருளே புரந்தமறைச் சுடர்முடியுஞ் செய்யதவத்
திருந்தவர்தூ மனமுமுதிர் தீங்கவிஞர் செஞ்சொலுமே
பரந்ததிருப் பல்லுருவப் பாதுகையுன் கோயில்களாம். 19.
மன்னனடி நிலை யுனது பக்கமுடி தாழ்த்துநலர்
முன்னமவர் விதிதலையில் முடித்திட்ட தீவரியே
நன்னிறனிற் சொன்னவரி மின்னமுது நன்னெறியில்
துன்னறநீ யொருதாது வாதமிதெங் கோதினையோ? 20.
மாவலியைத் தான்வளவு மாகளியில் மூவுலகும்
தூவலெனத் தாவியளந் தோங்கமலன் தாள்வலிக்கும்
மேவரிதென் றேறிடுமென் னேதகணம் பாதுகையே!
பாவளியுன் தேசினுழைத் தூசெனவின் றாயினவே. 21.
நீலச் சவியமுனை நீர்க்கரைவாழ் கடம்புலவை
ஞாலத் தெதன்கூட்டி னாட்டுமறைக் கிளைநாறும்
மூலப் பரஞ்சுடரப் பூவடிபா துன்கணிறை
சாலப் பரந்துகிளை மேற்கிளையாஞ் சால்புறுமே. 22.
பிறரெவரும் பெறற்கரிய பேறாகும் வேதமுடித்
திறனெடியோ னடிச்சோதிச் செவ்விதிக ழந்தாமம்
நிறையிலரி தாணிலையே! நினைமுடியிற் சூடுமறை
யறவடிவோர் கைகளிலுன் னருணிகழக் கொள்ளுமதாம். 23.
ஒருகற்பில் விகற்பறவே யுபநிடத மனுகற்பாய்த்
தெரிமுடியி லுனையொருபோ தேந்துவ ரரிபாதூ!
நரகமென நாகமது நணுகாது நாரணந்தாள்
அருளுமறை மூதிறைவ ரவையத்துச் சேர்ந்துறைவார். 24
ஆறுபொறி யகத் தூய்மை யான்றகுணம் நல்லன்பு
கூறுமவை போன்றநலங் கோலாவெம் போலர்க்கென்
றேறரிதா ணிலை!வேதம் நிதியெனவாழ் முடியேந்தும்
வீறுநெடு மாலடிநீ சேமிக்கும் விதிகொண்டாய். 25.
வந்துதொழ மூவுலகும் வண்மைமிகு மணிவண்ணச்
சுந்தரமால் பாதமலர் சூழுமெழிற் பாதுகையே!
வந்தனைதந் தண்டர்முடி தாங்கவுனை வேதமுமிழ்
கந்தமுட னவர்மிலையு மந்தார மாந்திடுமே. 26.
கோலப் புனற்பொன்னிக் கூலமெழுங் கற்பகமால்
மூலத் தளிர்ச்செந்தேன் மூழ்குமண மஞ்சரிநீ
சீலப் புகழ்மறைகள் சீர்மிழற்று களிவண்டாய்ச்
சாலச் சுவைக்கனிகள் தந்தருள்வாய் பாதுகையே! 27.
கமலைமலர்க் காப்பணிசெய் கண்ணனெழிற் கழலிணையில்
தமியனெனைச் சேர்த்திடுபே ரருள்புரிய விளங்குமுன
தமலநலத் தொருசேராச் சேர்த்திசெயு மத்திறலே
விமலமறைப் பொருடேரா வெம்போல்வார்க் கரிபாதூ! 28.
பாங்குகுமா லுந்திதரு மந்தணர்கள் பந்திமுடி
தேங்குமணிக் கல்வரையத் தேசுமிகும் பாதுகைகாள்!
ஓங்குதெருள் வேதசிரந் தாங்குபரஞ் சோதிகணீர்
வீங்குபவக் கடனீத்த வேகமற நீக்கிடுவீர். 29.
திப்பியமாய்ச் சிவமாக்குந் தெய்வநதி செறியுந்தன்
அப்பதமுஞ் சோதித்தென் னப்பனுமே தான்பூணும்
முப்புவியு மாக்கனிலை நோக்கலொடு நீக்குமறைத்
தற்பரனப் புனிதவிரு தாணிலைநான் பேணுவனே. 30.
தொத்தமரர் தாழ்முடியு முத்தமனா ரோங்கடியும்
ஒத்தடிமை யிறைமையெனு மொருநீரின் பிடியொன்ற
அத்திறநன் னன்றிசெயு மவ்விருமாண் பாதநிலை
துத்துறுவல் வினைவலயந் தூர்த்தென்னைத் தலைகாக்கும். 31.
நீடித் தரிபாதுன் சிந்தனையின் செந்நிறுவல்
ஆடிப் பகட்டும்ப ரரம்பையர்க ணிரம்புலகில்
கோடற் பயன்குன்றிக் கோதுமலிந் திறுதியுறும்
கூடக் கார்போக மோகமயற் போக்கிடுமே. 32.
சிற்றாடை யிடையருளைத் திருப்பாதூ! முடிதாங்க
வற்றாத மணவயமா கன்னமத மழைவெள்ள
முற்றாறு பெருகியபண் முரலுமணிக் களிவண்டுண்
ணற்றாரி னலம்பொலிய நன்முற்றம் புகுவாரே. 33.
அருணல் லுருமா ணரிதா ணிலையே!
வருபற் பலகற் புகளின் மலரோர்க்
கொருதே வெனவுன் னிறையே யுறையப்
பரிவா யெமையீன் றபயம் புரிவாய். 34.
கரியென் பொறிகட் டுமிடங் கணியோ
விரியென் னிரயக் கிறியின் தடையோ
பரமப் பதமே றருளே ணியுமோ
அரியங் கிரியா டணிபா துகைநீ. 35.
திருமா லடியார் திரளின் திருவாய்த்
தெரிவாய் மறையின் முடியின் மிளிர்வாய்
தருபொன் னரிதா ணிலை!யுன் தனையா
மிருகா விரியின் னிடையிற் றொழுவாம். 36.
துணைநீ யெனுமெய்த் துணிவில் லுனையே
பணிவோ ரவரம் பகமூன் றதுவோ
பிணையா னனமூன் றவையோ பெருமான்
மணிபா து!மறைந் துளவோ மொழிவாய். 37.
இறைவன் பணிகொள் ளணியின் னிறையிற்
பொறையில் லுறைபா துகையுன் பணிவிற்
செறியவ் விமையோர் சிகரம் பிறிதொன்
றுறலிற் பொறைநீ யுகவா வகையென்? 38.
வலமார் வுறைமா வலவன் பதமா
நிலை!யன் னவனே ரபயக் கரமும்
தலைநீ யணியன் னவனொண் கழலும்
நலராஞ் சிலரே சரணென் றுணர்வார். 39.
தெரிமே தினிவண் செவிமா முனிவன்
பரிபா துனையே பரதன் பரிவில்
அரிதா ளுரையா லருளோ தலிலந்
நிரைதா ளிணையின் னிலைவே றலவே. 40.
திசைகா வலர்சென் னியினின் றிடினு
மிசைமா லடிநண் ணிடினும் பதமே
வசுபா துகை!நோக் குதியான் முதியோ
ரசையா நலனேர் தலையோர் நிலையே. 41.
திணைசா லகிலத் திதியின் விதிகொள்
ளிணையே றணிதா ணிலைகா ளிணைநும்
மணியே யெனநா கணையன் துணையப்
பணையீ ரடியா மடியோ மறிவாம். 42.
இறையென் றறையவ் வரிதா ளிணையின்
னிறையின் னருளின் மிகுபா துகைநீ
உறுமப் பரதன் பிரிவிற் றுறுமவ்
வுறுகண் ணுறுநின் னுறவிற் றணிவன். 43.
கொடைமன் னடையெண் குணபா துகையே!
குடையொன் றிலரா யுனையெண் டிசையோர்
அடிமைத் திடனிற் படியுங் குடியாய்
முடிகொண் டளிநின் னிழலின் புறுவார். 44.
வனமே னையவா நரையுங் கறையும்
நனையா தனையே! யுனையே யனைய
நினதா நலமன் னிலைதா முறவே
நினைவா ருனையே நிலையே! பெரியார். 45.
அமலன் சரணா வனியே! யுனையார்
சமையவ் விதியாற் பணிவார் பணியார்
அமையன் னவருத் தமவங் கமனுத்
தமவங் கமதா யவிசித் திரமென்? 46.
அடியீ தெனவே றுமுனீ ணளியே
கடையீ தெனவீ ழுமெனாழ் கறையே
அடியா மதிலிக் கடைபின் னிடலாம்
படியா மறிவா மரிபா துகையே! 47.
புவனம் படையும் புனையும் மெனவே
யவையும் மணிதா ணிலை!தாங் கருமைச்
சவிமன் னிறையண் ணலையுன் தலையின்
நவநன் மணியென் றணிகின் றனையே. 48.
துணையான் றவிரா மனடித் துணைவீ!
பணிபூண் பரதன் பரதே வதையே!
தணியா வுலகின் னுருமந் தணியுன்
குணமா வரசின் பரிபா துணர்வன். 49.
பிறையோன் றலையின் மிலைவெண் டலையின்
உறவா லுறுசா னவிமா சறவோ
நிறைமா லடிமா நிலை! தன் தலைமீ
திறைநீ யுவளித் திடவேந் திடுவன். 50.
நிறையும் மணிதா ணிலை ! நின் னிறையிற்
செறிவை யகநல் லிறைமா ணிலைகண்
ணுறுமெய் யிதுபெண் ணரசிற் குறைவொன்
றறவுன் பெயர்நா தனொடோ தினரோ? 51.
உலகங் கடரிக் குமிறைப் பொருளைத்
தலைகொண் டரிபா து! தரித் தலினீ
தலைநின் றனையுன் றனையுந் தலைகொண்
ணிலைவல் லவரின் தலையெந் நிலையோ? 52.
பரனற் சரணற் பணைநன் றிணையும்
பரிபா துனதா ரரசே பரசிக்
கருடன் பணிமன் னவர்தஞ் சிரமேற்
புரியப் பரிவட் டமுனைப் புனைவார். 53.
அணிமா மலரா ளளியின் களிகொண்
மணிமா லடிமா ணிலையே! நினையே
பணியா ரிருளிற் றலைநல் லிபியும்
பிணியா யிடுதுல் லிபியா யிடுமே. 54.
செவியின் னிலநீர் தெரிதாத் திரிநீ
குவிநன் மரபின் புரைசொல் விபுலம்
நுவலந் நிலைநோக் குயரக் கமையெம்
மவனப் பொறையா திபதா வனியே! 55.
குலகோக் கணிலைக் குணமாக் கலிலெண்
ணலநா ரணனா ரடிநா றலினீள்
தலைமீ துனைமூ தரவேந் தலிலந்
நிலமா தினலந் திகழ்பா துகைநீ. 56.
தகையா டரியா டகபா துகைமுன்
னுகவா முரடர் முடிமோ லிகளே
தகவா தியரங் கநடைப் படியின்
தொகையா யுனைமீ துபொறுத் துளவே! 57.
கருடன் பணிமன் தவிசன் னொடுநீ
யொருபா திருமைக் குரியோ ரெனினும்
பரியில் லவருன் சமரே லுரியோர்
சிரனில் லுனையே மிலைகின் றனரென்? 58.
பரனார் பரமப் பதமெப் பதமும்
அரிதா ணிலைநீ தனிதாங்குதலின்
வரராம் பிறரெண் பதமுன் னுரிமைப்
பரிதாங் கிடுமென் பதுவிம் மிதமே? 59.
உருமா வுயிர்கட் கொருமா தவனார்
அருளா ளிருதாள் சரணா மவைதம்
சரணீ நினதோர் சரணற் றவனத்
திருவா யரிதா ணிலையே! தெரிவாய். 60.
உறையுந் திருவும் விரியம் புயனும்
பிறருந் தெரியுந் திருமா றனுவில்
நெறிதெள் ளரிபா துக! நீ செறியும்
திறலிற் கழலெம் மிறைதே றியதே. 61
மரைநோக் கரிதா ணிலை! யா துலரும்
பரிவோ டவரோர் கணமுன் பணியே
புரிவோ ரருகிற் புருகிங் கரராய்ப்
புருகூ தர்விரைந் துபொருந் துவரே. 62.
முடிமீ தரிபா துனையேந் திடுவார்
இடையூ றறவான் சரவா னிறமார்
நடையோ திமமோ நரையோ திமயோர்
விடையோ பரியாம் படியா யிடுவார். 63.
உயர்விண் ணவர்கண் ணுதனண் ணுவரவ்
வுயர்கண் ணுதனண் ணுவனம் புயனம்
புயனம் புயநா பனையம் புயநா
வியனின் தனைநீ நினை நின் னிறையென்? 64.
இழியா தெழுமுன் பினதாம் பிழைதா
னிழையா தரியங் கிரியே யருளுன்
வழியா லறிவார் விழியோ ரரிபா
தெழுதா மொழிநன் மதிநீ யெனவே. 65.
தனமா நெடுமா லடிமா நிலையே!
தனமே பெறவுன் தனையே பணிவார்
தனமே நிலராய்த் தனவா னிலமும்
வளையா நிதியின் பதியா குவரே. 66.
கழலும் பிறவே கழலத் திருமால்
கழலுங் கலவா நலர்பா துனையே
தொழுதக் கெடுகா மமொழிப் பரைநீ
பழநற் றிடதா மர்களாக் கலிதென்? 67.
மயலற் றிறைகாண் மனனிற் கருமைப்
பயிலுன் முகநோக் கமலர் மறையாஞ்
சயிலத் தருளன் னையுனா தரநோக்
கியநற் பதமன் னிதியுன் னுவரே. 68.
பாது! நீமுடி சூடிய நாதனை
நாத னேரடி நாடிய பாதுனை
ஆதி கூறிடு வாரடி யோங்களுக்
கோது நேரதி தேவதை யொன்றுநீ. 69.
துன்னவடி தன்னினலர் தூமுடிம ராடீ!
மன்னமுடி மீதுமழை வண்ணனடி யம்மா
நன்னருரு வன்னமறை மன்னுதிரு நின்னைச்
சொன்னநல மல்குகதி யொன்றெனவு ணர்ந்தோம். 70.
தொடர்வது.... "பணயப்பத்ததி"











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக