சனி, 21 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்ததேசிக வைபவப்
பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு - இராகம் - அடாணா - தாளம் - ஆதி
பல்லவி
கண்டாவதாரருக்கே தொண்டானபேரைக்கண்ணாற்
கண்டாலும்வாணிவிலாஸ முண்டாகுமே.
அநுபல்லவி
கொண்டாடிவைநதேயர் விண்டாரந்தமந்த்ரத்தைக்
கொண்டார்தாமுருவேற்றிக் கண்டாரயக்கிரீவரைக்
குதிரைமுகமுடனே யெதிரேவரவுமிக
மதனிலிசைபெருகு மதுரஅமுதையுண்டு (கண்)

சரணங்கள்

பன்னுகலைநால்வேதப்பொருளை யெல்லாமென்று
பரிமுகமாயருளியஎம்பரமன் காண்பனென்றுஞ்
சொன்னவகையேஸகலகலாதி தெய்வமென்றுந்
துதிமிகவேசெய்திடவும்பிர ஸன்னமாகிநின்றும்
பின்னும்வெள்ளைமுகத்தின் மன்னும்லாலாரூபமா
மென்னுமமுதமது தன்னைக்கொடுக்கவுண்டு
பெரியதிருவடிக ளருளாமிதுவெனவே
பெருகுகவிமழைகள் சொரியநினைவுகொண்டு (கண்)

வெள்ளைப்பரிமுகர்மீதில் துதியானதுரைத்து
விளங்கும்வைநதேயர்மீதிற் றுதியுமைந்துபத்துத்
தெள்ளியநகர்த்திருவஹீந்திர புரத்துத்
தெய்வநாயகரருள்செயலங்கே யைந்துபத்து
விள்ளுவார்பலபொரு ளுள்ளும்பிராகிருதபாஷைக்
குள்ளச்சுதசதகந் தெள்ளுமும்மணிக்கோவை
வெகுவிதகலையின திகளுமிசையவொரு
முகமதெனவருமத் தகைமையவர்தெரிய (கண்)

ஊஞ்சற்றிருநாளினி லூஞ்சற்பாட்டுப்பாடி
ஒருநாட்பெருமாள்பிராட்டி தமக்கம்மானைபாடி
வாஞ்சையுடனேயிருவர் களுக்குங்கழற்கோடி
வரிசைபந்துப்பாட்டேசல் வகைகளெல்லாஞ்சூடி
ஆஞ்சநவரத்தினமாலை தாஞ்சொன்னதிவையொன்பது
வாம்ஜகபிரஸித்தமான லாஞ்சனந்தேவநாயகர்
அவர்திருவடிதனி லிவருமுரைசெய்தது
கவிகளிவரைநிக ரிவரேகுருதிலகர். (கண்)

விருத்தம்

அங்குபதினெட்டுமதத்தருந்தர்க்கிக்க
அவர்களுடன்தர்க்கித்துச்செயித்துவாதி
பங்கமுறவேமணிப்பிரவாளமாகப்
பரமதபங்கமதொன்றையருளிச்செய்து
மங்கலஞ்சேர்சக்கரவர்த்தித்திருமகன்மேன்
மகாவீரகத்தியநூலருளிச்செய்து
துங்கவரைக்குடையெடுத்தகோபாலன்மேற்
சொல்லினாரிருபதுமேற்சொல்லினாரே.

இதுவுமது

பத்தியதிசதுரராயிருக்குநாளிற்
பரவாதியர்களாலேயேவப்பட்ட
கொத்தனவன்மாளிகையின்வாசல்வந்து
குறுகியுமக்கேஸகலதந்திரங்கள்
உற்றுவருமேகிணறுகட்டுமென்று
வுரைசெய்யக்கிணறுகட்டியவனைவென்றார்
துத்தியஞ்செய்தெல்லாரும்பணியவந்த
தூயனார்வேதாந்ததாயனாரே.

தரு - இராகம் -- பந்துவராளி - தாளம் -- ஆதி

பல்லவி

சறுவதந்திரசுதந்திர ரென்றாரேகி
ணறுகட்டிக்கொத்தனையும்வென்றாரே.

அனுபல்லவி

உறுதியுடன்கருடனயக்கிரீவருபாசனை
திறமைவேதாந்தகுருதிருவஹீந்திரபுரத்தில் (சருவ)

சரணங்கள்
கொத்தனானவனுமொ ருத்தன்பரவாதிக
ளெத்தியனுப்பவந்தெ திர்த்துவிருதுபேச (சருவ)
கணகணவெனவொலி மணியேயவதாரஞ்செய்
துணர்வுமிகுந்தவரைக் கிணறுகட்டுவீரென்றான் (சருவ)
நல்லகல்லுகள்கொடுத் தெல்லையுடனேகட்டச்
சொல்லவன்கிணறு வில்லுவளைதலாக (சருவ)
கோணற்கல்லுப்பொறுக்கி யூணிக்கொத்தன்கொடுக்கக்
காணும்வேதாந்தகுரு பாணிகொண்டுதிருத்தி (சருவ)
நீதியறியாப்பர வாதிசொற்கொண்டுவந்தேன்
பேதமைதவிர்த்தாளும் வாதிசிங்கரேயென்றான். (சருவ)

வெண்பா

கொத்தனைவென் றெங்கள் குருவேதாந் தாரியரும்
வித்தையத னாலெங்கு மேன்மையராய்ச் - சுற்றித்
திருக்கோவ லூர்கச்சி சேர்ந்து வளருந்
திருப்பதியும் வந்திப்பதே.

இராகம் - உசேனி - தாளம் - ஆதி

பல்லவி
தூப்புற்பிள்ளைவைபவமென்னசொல்லுவேன் - எங்கள்
தோதாரம்மனு மேதானேதருந்
தூப்புற்பிள்ளைவைபவமென்னசொல்லுவேன்

அனுபல்லவி
வாய்ப்பதாந்திருக் கோவலூரிலே
வந்துமாயனைத் திருவடிதொழச்
சேர்ப்பவங்கவர் விஷயமாகவே
தேகளீசஸ்துதி யையுஞ்செய்தருள் (தூப்)

சரணங்கள்
பெருமாள்கோவிலை நாடியே -எங்கள்
பேரருளாளரைப் பாடியே
ஒருபஞ்சாசத்துச் சூடியே - இன்ன
முள்ளமீதன்பு நீடியே
திருச்சின்னமாலை சாத்தியே
தினசரிதைசொன் னேர்த்தியே
திருமண்காப்பிலனு சந்திக்கவே
திருத்துவாசநாமப் பாட்டுஞ்
சரணியனிடத்திற் பண்ணிநல்ல
சரணாகதிமாலை நாட்டுந் (தூப்)
அர்த்தபஞ்சக சங்க்ரஹ - மின்னம்
அத்திகிரிமாகாத் மியகம்
இத்தனைபிரபந் தஞ்சகங்--களில்
இசையுமஷ்டபு ஜாஷ்டகம்
வைத்தேயாளரி மேற்பதி
வாகானகாமஸி காஸ்துதி
மெத்தசொன்னவண்னஞ் செய்தபெருமால்மேல்
வேகாசேதுஸ்துதியையுங் காட்டினார்
உத்தமவிளக்கொளி யெம்பெருமான்மீதி
லுஞ்சரணாகதி மாலையைச்சூட்டினார் (தூப்)

புல்லும்புட்குழிப்பே ரற்றதே - ரண
புங்கவர்மீதினிழல் சாய்த்ததே
வல்லோர்மனதன்புக் கேற்றதே - பர
மார்த்தத்துதியையும் பார்த்ததே
நல்லவிச்வாமித்திர கோத்ரா
ராமாநுஜதயா பாத்ரா
செல்லுமொருகாலப் பெரியோர்களுக்கங்கே
சீதச்சுரம்வந்து வாதிப்பதுந்தீர்க்கச்
சொல்லும்படிதிரு வாழியாழ்வான்மீதிற்
சோடசாயுதத் துதியையுஞ்செய்தருள் (தூப்)

விருத்தம்
காதலாமலகம்போல்வேதாந்தத்தைக்
கரைகண்டகண்டாவதாரர்நாளும்
நிரதராய்க்கச்சியைச்சூழ்திவ்யதேச
நிலையெல்லாஞ்சேவித்துநிதமுந்தாமே
விரதராய்ப்பேரருளாளரையுமின்னம்
வெண்பரிமுகத்தரையுமாராதித்தே
வரதர்திருவடிச்செந்தாமரையைவாழ்த்தி
வந்திப்பார்திருமலையைச்சிந்திப்பாரே.

இராகம் - சாவேரி - தாளம் - ரூபகம்
கண்ணிகள்

திருவேங்கடமுடையானைத்
திருவடித்தொழ நாடித்
திருவுள்ளமாய்ப்பயணங்கொண்டு
சென்றேயன்பு நீடி
வண்டுவிளங்கு - நறுநீள்சோலை
வண்பூங்கடிகை யென்றே
கொண்டதாங்கடிகை - மலைதன்னைக்
குணமாயேறி நின்றே
மிக்கானை யென்றனுசந்தித்து
மேநாரசிங் கனுமாந்
தக்கானைத் திருவடிபணி
தலைக்கொண்டவன் பனுமாம்
கடிகாத்துதியருளிச்செய்து
கண்டும்மங்கே தீர்த்த
சடகோபனை முதலாம்வரி
சைகளைப்பெற்று மேற்ற
அனுமப்புரத் தினிலேயெழுந்
தருளிப்பத்தோ சிதரை
மனதாய்மங்களாசாஸன
வரிசைசெய்தற் புதரை
ஸவர்ணமுகி நதியைக்கிட்டித்
தொடுத்தங்கனே பணிந்து
அவகாசித்தருளி யூர்த்துவபுண்
டராதிகளை யணிந்து
திருமலையை நோக்கியங்கே
சிந்தைசெய்கு வாரே
திருமாது மணாளாவென்றே
திருவாய்மலர் வாரே
கண்ணனடி யிணையெமக்குக்
காட்டும்வெற்பன் றெடுத்துப்
பண்ணோடிசை திருவாய்மொழிப்
பனுவலதைத் தொடுத்து
ஆழ்வார் தீர்த்தம திலெழுந்
தருளிநீராடி யேத்தி
வாழ்வார்கேச வாதிதிருநா
மங்களையுஞ் சாற்றி
தருணங்கண் டாழ்வாரைமங்களா
சாஸஞ்செய் தருளித்
திருமலையடி வாரத்திலெங்கள்
தேசிகரெழுந் தருளித்
திருப்பதியே யெழுந்தருளிச்
சித்ரகூடத்தின் செல்வர்
விருப்பாய்மங்களாசாஸனம்
வேண்டியிசை சொல்வர்
கூட்டமாகிய தொண்டர்களுடன்
கூடிமலை மீது
காட்டழகிய சிங்கர்ஸேவையுங்
கண்டாரே யப்போது.

விருத்தம்

வேங்கடேசதேசிகரிப்படியேதானே
வேங்கடாத்திரிமீதிலேறிச்சென்று
தாங்குதிவ்யநகரத்தைச்சேவித்தானந்
தநிலயமாந்திவ்யவிமானத்தைச்சேவித்
தோங்கியவைகுந்தத்திருவாசல்சேவித்
துறுவவாவறச்சூழ்ந்தான்வாசல்சென்று
பாங்குடனேசாஷ்டாங்கவந்தனந்தான்
பண்ணினார்கோனேரிநண்ணினாரே.

இதுவுமது

பணிந்துதிருக்கோனேரிதனினீராடிப்
பன்னிரண்டுதிருநாமமணிவடங்கள்
அணிந்தருளிச்சொலிக்கின்றவடிவாய்க்கொண்டு
அருள்ஞானப்பிரானுடனேவராகர்தம்மை
வணங்கியேவலமாகக்கோயில்மீத
வாவறச்சூழ்ந்தான்வாசல்வழியாய்ச்சென்று
தணிந்துதிருப்புளியாழ்வாரையுஞ்சேவித்த
சாந்தர்தாமுபயவேதாந்தர்தாமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக