சனி, 18 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரையின் நிறைவு'


ப்ரபந்தவகை


இம்மஹாதேசிகர் அருளிச் செய்த ரஹஸ்ய நூல்கள் பல. அவை முப்பது என்பர் சிலர்.  முப்பத்திரண்டு என்பர் வேறு சிலர்.  பின்னும் அதிகம் என்பர் பின்னும் சிலர்.  மறைந்தன பல.  மிகுந்துள்ளவற்றுள்ளும் சிலபாகங்கள் மறைந்தன.  மும்மணிக்கோவையில் பாக்கள் பத்தே காணப்படுகின்றன.  மிகுந்துள்ளவை மறைந்தன.  வடமொழியிற்போல் மணிப்பவளத்திலும் தமிழிலும்  பல்பெரும்ப்ரபந்தங்கள் மறைந்தன.  பந்துப்பா, கழற்பா, அம்மானைப்பா, ஊசற்பா, ஏசற்பா என்று தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடியுள்ளதாக இவர்தாமே1(நவமணிமாலை 10) கூறிய பாக்கள்  ஐந்தும் மறைந்தன.  அதுபோற் பாடற்ப்ரபந்தங்களும் ரஹஸ்யப்ரபந்தங்களும் உரைப்ரபந்தங்களும் மறைந்தன பலவே.  மிகுந்துள்ளவற்றை ஆன்றோர்கள் தேசிகப்ரபந்தம் என்று திரட்டித் தொகுத்து ஓதி உணர்ந்து வருகின்றார்கள்.  அதன் வகை:-
   1   அமிர்தரஞ்சனி:- இது, ஸம்ப்ரதாயபரிசுத்தி, தத்த்வ பதவி, ரஹஸ்யபதவி தத்த்வநவநீதம்,     ரஹஸ்யநவநீதம், தத்த்வமாத்ருகை, ரஹஸ்யமாத்ருகை, ரஹஸ்யஸந்தேசம், தத்த்வரத்நாவளி            ரஹஸ்யரத்நாவளி, ரஹஸ்யரத்நாவளிஹ்ருதயம். தத்த்வத்ரயசுளகம், ரஹஸ்யத்ரயசுளகம் என்னும் மணிப்பவள ரஹஸ்யநூல்கள் பதின்மூன்றின் தமிழ்ப் பாடல்களின் திரட்டு.  இதிற் பாடல் 39.
   2   அதிகாரஸங்க்ரஹம்:- இது குருபரம்பராஸாரம் உள்ளிட்ட ரஹஸ்யத்ரயஸாரப் பாடல்களின் திரட்டு.  ரஹஸ்யத்ரய ஸாரநூலின் ஒவ்வோர் அதிகாரப் பொருளின் தமிழ்ச் சுருக்கு ஆதலால் இது அதிகார ஸங்க்ரஹம் என்னப்படும் இதிற் பாடல் 56.
   3   அமிர்தாஸ்வாதினி:- இது ஸாரஸாரம், அபயப்ரதாநஸாரம். ரஹஸ்யசிகாமணி. அஞ்சலி வைபவம் ப்ரதாநசதகம். உபகாரஸங்க்ரஹம், ஸாரஸங்க்ரஹம், விரோதபரிஹாரம், முநிவாஹநபோகம் என்னும் மணிப்பவள ரஹஸ்ய நூல்கள் ஒன்பதின் தமிழ்ப்பாடல் திரட்டு இதிற் பாடல் 21.
   5   பரமதபங்கம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்ய நூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதிற் பாடல் 54.  
   6  அத்திகிரிமான்மியம்:- இது இப்பெயருடைய மணிப்பவள ரஹஸ்யநூலின் தமிழ்ப்பாடல் திரட்டு.  இதைமெய்விரதமான்மியம்என்றும் கூறுவர்.  இதிற் பாடல் 29.
    7   அடைக்கலப்பத்து:- இது தமிழ்ப்பாடற்ப்ரபந்தம் இதிற் பாடல் 11.
    8. அர்த்தபஞ்சகம்:- ‘ஐந்துபொருள்களை’ (அர்த்தபஞ்சகத்தை) உணர்த்தும் தமிழ்ப் பாடற் ப்ரபந்தம.  ஐந்து பொருள்களாவன:- அடையப்பெறும் இறைவன் ஸ்வரூபம், அடையும் உயிர்ப்பொருளின் ஸ்வரூபம், இறைவனை உயிர்ப்பொருள் அடைதற்குத்தடை, அடையும் உபாயம், பேறாகிய அடைவு என்பன.  இதிற்பாடல் 10.
   9   ஸ்ரீவைஷ்ணவதினசரி:- இது ஸ்ரீ வைஷ்ணவர்கள் நாள்தோறும் ஐந்து காலங்களிலும் ஒழுகவேண்டிய முறையை உணர்த்தும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 10.
   10   திருச்சின்னமாலை:- இது பேரருளானுக்குப் பாடிய திருச்சின்னத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 11.
     11   பன்னிருநாமம்:- இது கேசவநாமம் முதல் தாமோதர நாமமளவும் ஓதும் பன்னிருநாம விளக்கத் தமிற்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 13.
     12    திருமந்திரச்சுருக்கு:- இது மூலமந்திரப் பொருள் ஒன்பதை உணர்த்தும் தமிழ்ப்பாடற் ப்ரபந்தம் இதிற் பாடல் 10.
    13  த்வயச்சுருக்கு:-  இது த்வயமந்திரத்தின் பத்துப் பொருள்களை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதில் பாடல் 12.
   14  சரமச்லோகச்சுருக்கு:- இது சரமச்லோகத்தின் திரண்ட பொருளையும், பதம் சொற்றொடர் இவைகளின் பொருள்களையும் விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். இதிற் பாடல் 11.
   15  கீதார்த்தஸங்க்ரஹம்:- இது கீதைப்பொருளைச் சுருங்கச்சொல்லி விளங்கவைக்கும் முறையில் கீதை ஒவ்வொரு அத்தியாயப்பொருளையும் ஒவ்வொரு பாட்டால் சுருங்கக் கூறி, முதற்பாட்டால் கீதைக்குத் திரண்டபொருள் கூறி, இருபதாம் பாட்டால் பயன் கூறி, இருபத்தொன்றாம் பாடல் திருநாமப் பாட்டாகத் தலைக்கட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற்பாடல் 21.
   16   மும்மணிக்கோவை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்றஅவியகத்துறைகள்  தாங்கி நிற்கும் பேரின்பத் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10. பிற மறைந்தன.
   17   நவமணிமாலை:- இது தெய்வநாயகன் விஷயமாய்ப் பாடப்பெற்ற தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்.  இதிற் பாடல் 10.
            மும்மணிக்கோவையைசெந்தமிழ் மும்மணிக்கோவை செறியச் சேர்த்துஎன்றும், நவமணி மாலையைபரவுநவ மணிமாலைஎன்றும் அவர் நவமணிமாலையில் கூறியிருத்தல் நோக்குக.
   18  ப்ரபந்தஸாரம்:- இது ஆழ்வார்கள் அவதரித்த நாள்’,‘திங்கள்’,‘அடைவு’,“திருநாமங்கள்அவர்கள் அருளிச்செய்ததிருமொழிகள்” “அவற்றுட் பாட்டின் வகையான தொகை யிலக்கம்” “மற்றுமெல்லாம்விளங்கக்காட்டும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம். ‘திருமாறன் கருணைஎன்றதே ப்ரபந்தஸாரம், நாலாயிரதிவ்யப்ரபந்தஸாரம், தேசிகப்ரபந்தஸாரம், கீதாஸாரம்: இந்த ஸாரம் ப்ரபந்தஸார உரையில் விரிக்கப்பெறும்.  இதிற் பாடல்;  18.
   19   ஆஹாரநியமம்:- இது அடியார்களுக்கு உணவு நெறியை விளக்கும் தமிழ்ப்பாடற்ப்ரபந்தம்,  உயிர்க்கு நல்லுணர்வு போல், உடலுக்கு நல்லுணவு. நல்லுணர்வுக்கும் நல்லுணவுக்கும் உற்றுள்ள ஒற்றுமை தோற்ற நல்லுணர்வை உபதேசித்தது போல் நல்லுணவையும் உபதேசித்தார்.  சாரீரக சித்தாந்த நயத்தை இங்கும் காண்க.  இதிற் பாடல் 21.

            ஆகப்ரபந்தங்கள் 19க்குப் பாடல் 405.  தேசிகப்ரபந்தம் என்னும் இம்மாலை ஞானப்பெருந்தகவோர் சம்பிரதாயத்தில் தோன்றி விளங்கும் தூய்மையும், இதன் பொது நூன்மையும், வேதாந்த உள்ளக்கருத்தில் உரைத்துரைத்த முத்தமிழ்சேர்ந்த மொழித்திருச்சிறப்பும், தத்துவம் உபாயம் புருஷார்த்தம் என்பனவற்றின் தன்மையும் நன்மையும் இனிமையும் இதில் விளங்கும் நலமும், இதன் வகை முதலியனவும் இங்குக் கூறப்பட்டன.  மற்றும் கூறவேண்டியவைகள் ப்ரபந்தஸார முன்னுரையில் கூறப்பெறும்.

மாறிலா மகிழின் மாலை மன்னன்வாய் மொழியின் கந்தம்
நாறநான் மறையி னுள்ளக் குருத்தினில் நறவம் வைத்துத்
தேறிமா தவன லத்தா ளிறைநிலை தூப்பு லண்ணல்
ஆறுநீள் சேது பந்தம் அருளினான் சரணவள்ளல்.

அன்னவன் கையின் மெய்யாய் அருளிறைப் பொருளின் மாலை
பொன்னெனப் புனிதர் போற்றிப் புந்தியுட் புனைந்து பேணும்
நன்னர்கண் டிறைஞ்சி நல்லா சிரியர்தா ணலம் தெண்ணி
இன்னுரை நவின்றா னன்பன் கேசவ னீது நன்றே.

ஸர்வம் சுபம்.

வெள்ளி, 17 டிசம்பர், 2010

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரை

மூலம்: த்வயம்: சரமச்லோகம்
மூலமந்திரம், த்வயம், சரமச்லோகம், என்னும் இம்மூன்றும் மெய்யுணர்ந்து உய்யும் அவாவுடையார்க்கு ஸாரதமங்களான மூன்று ரஹஸ்யங்களாகும்.  இவற்றின் பொருள்களை ரஹஸ்யத்ரயஸாரத்தில் பரக்கக் காண்க.  அப்பொருள்களின் சுருக்கை திருமந்திரச்சுருக்கு, த்வயச்சுருக்கு, சரமச்லோகச்சுருக்கு என்னும் இம்மாலைப்ரபந்தங்களிலும் பின்னும் அவற்றின் தெளிவை ஸாரஸாரம், விரோதபரிஹாரம் முதலிய ரஹஸ்ய நூல்களிலும் கண்டு கொள்க.  சரண்ய தம்பதியார்க்கு உயிர்ப்பொருளை சரணாகதியஞ்ஞத்தில் அவியாக வடித்திட்டு யஞ்ஞசிஷ்டராய், போன கம்செய்தசேடராய் மீளாத பேரடிமைக்கு அன்பு பெறுதலே பேறு என்றது இம்மூன்று ரஹஸ்யங்களும் உணர்த்தும் பொருளின் சுருக்கு.  இவைமூன்றிலும் தனித்தனியே எல்லாமறைப் பொருள்களும் மொழியாலும் குறிப்பாலும் காணலாமாகிலும் ஓரொன்றிலே ஓரொன்றுக்கு நோக்காயிருக்கும்.  திருமந்திரத்துக்கு மெய்யுணர்வில் நோக்கு.  த்வயத்துக்குப்பேற்றில் நோக்கு.  சரமச்லோகத்துக்கு ஒழுக்கத்தில் நோக்கு திருமந்திரத்தில் தத்துவம் தெளியவிளங்கும்.  சரமச்லோகத்தில் உபாயமாகிய செய்தவம் என்னும் சரணாகதி நன்கு விளங்கும்.  த்வயத்தில் புருஷார்த்தமாகிய பேறு இனிது விளங்கும்.  ஆதலால் திருமந்திரம் தாரகம் (தவர்க்க நான்காம் யகரம்) என்றும், சரமச்லோகம் போஷகம் என்றும் த்வயம் போக்கியம் என்றும் போற்றப்படும்.  தாரகம் என்றதற்கு தரிக்கச்செய்தல், போஷகம் என்றதற்கு வளரச்செய்தல் போக்கியம் என்றதற்கு சுவைக்கச்செய்தல் என்று பொருள்.இறைப்பொருளுக்குச் சேடமயமாகிய உயிர்ப்பொருளின் பரிசுத்த இயல்பை விளக்கி அதன் இருப்பைத் தரிப்பித்தலால் திருமந்திரம் தாரகம் ஆகும்.  தரிப்பிக்கப்பெற்ற உயிர்ப்பொருளுக்கு, இறைப்பொருளைத் தாள்பற்றி உய்தற்கு வேண்டிய நிறைமதி நலமெல்லாம் ஊட்டும் உபதேசத்தில் தலைக்கட்டலால் சரமச்லோகம் போஷகம் ஆகும்.  ஒருக்கால் உச்சரித்தலால் வீடு என்னும் பெரும்பேற்றுக்கு ஏதுவாய்க் கொண்டு, என்றுமே அதன் பொருளை உள்ளுதலால் அப்பொழுதைக்கப் பொழுது ஆராவமுதப்பெருக்கில் ஒருக்கால் உச்சரித்தவனைப் பேறுபெற்றானாக்குகையால் த்வயம் போக்கியம் ஆகும். “நன்புகழில்-வைகுந்தம் சிந்தையினும் மற்றினிதோ, நீயவர்கு, வைகுந்தமென்றருளும் வான்”1 என்று இவ்வின்பத்தை சடகோபர் பாடியபடி. மேற்கூறிய பொருள்கள் எல்லாவற்றின் விளக்கத்தை ரஹஸ்யத்ரயஸாரத்தில் பரக்கக் காண்க.  அதில் உணர்த்தியிருக்கும் பொருள்களைப் பின்னும் இனிது விளக்கி வலியுறுத்தும் முறையில் மற்றைப்ரபந்தங்கள் அருளப்பெற்றுள்ளன.  இந்த ரஹஸ்யப்ரபந்தங்கள் அனைத்தும் இனிய முறையில் அவியகத்துறைகள் தாங்கிச் சவியுறத் தெளிந்து தண்ணென்றொழுக்கமும் தழுவிச் சான்றோர்க்கு அமுதமாகும் நறுமை உடையன.  சில, கதை கூறும் முறையிலும், சில, கதைபோல், நிலைபேற்றைக் கூறும் முறையிலும், சில உபதேச முறையிலும், சில உபதேசப் பொருள்களை ஒழுகிக் காட்டும் முறையிலும், சில ஒழுக்கத்தை உணர்த்தும் முறையிலும், சில காவியம் படைக்கும் முறையிலும், சில சூத்திரம் நூற்கும் முறையிலும், சில வாதம நிகழ்த்தும் முறையிலும், சில ரஹஸ்யப்பொருள்கள் பொலிய உரையிடும் முறையிலும், பல்வேறு நன்முறைகளில், உணரவேண்டிய நற்பொருள்களைத் தனித்தனியாகவும், கூறுகூறாகவும், சேரப்பிடித்தும், சுருக்கியும் விரித்தும் வலியுறுத்தியும், சாந்திச்சுவை தலைமையாகச் சுவைகள் முதிர்ந்து பொருள் பொதிந்து அணிகள் மிளிர்ந்து குணங்கள் ஓங்கி ஓசைநயத்தில், கௌடவைதர்ப்பபாஞ்சாலரீதிகளில், செவிக்கினிய சீரிய யாப்புச் செறிவில் இம்மஹாதேசிகரது ரஹஸ்யப்ரபந்தங்களும் ரஹஸ்யப்ரபந்தப் பாடல்களும் பாடற்ப்ரபந்தங்களும் முறையே திகழ்கின்றன.  கற்பார் கேட்பார்களின் கல்விப் பயிற்சி, மனப்பான்மை, உருசி, நிலைமை, முதலியவற்றுக்கு ஏற்றவாறு இந்நூல்கள் தொடுக்கப்பெற்றுள்ளன.  வசன யாப்புக்களின் நடையெழிலை இப்ரபந்தங்களிற் காண்க.
நாளை நிறைவுறும்.

தேசிகப்ரபந்தம் --- ஆர். கேசவய்யங்கார் முன்னுரை

இறைவன் புரிந்துள்ள உபகாரங்கள் உயிர்கள் சரணம் புகுதற்கே
            
 உளவாக்கப்பட்ட உயிர்ப்பொருள்கள் தன்னடிக்கீழ் ஒருக்காற் சரணம் புகுந்து வாழாவோ என்ற கருணைப் பெருங்கடலாய் ஊழிவெள்ளத்திலும் ஒழிந்து போகாதே அவற்றைத் தனது குக்கியில் தானே வைத்துக் காத்துப் படைப்பைச் செய்யக் கருதி அவைகளை உளவாக்கி உணர்வளித்து அவற்றுக்குத் தான் உள்ளுயிராய் உறைந்து காத்துவிளங்கும் இறைவனுடைய கிடைகளையும் நிலைகளையும் உணர்ந்தக்கால், உயிர்ப்பொருளானது கூப்பியகையும் அடிவீழ்ச்சி விண்ணப்பமுமே தஞ்சமாக விடலரிய திருமாலின் தாளைப்பற்றி அதன் கீழமர்ந்து புகாது நில்லா.  அவனது அக்கிடைகளைக் கண்டு உருகிய சடகோபர் திருப்பாடல் ஒன்றை இங்கு எடுத்துக்காட்டுவாம்:- திருவுருவுகிடந்தவாறும் கொப்பூழ்ச் செந்தாமரை மேல் திசைமுகன் கருவுள் வீற்றிருந்து படைத்திட்ட கருமங்களும், பொருவிலுன் தனிநாயகமவை கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின்று நெக்கு, அருவி சோரும் கண்ணீர் என்செய்கேன்! அடியேனே”1 என்றது அப்பாடல். உகாந்தத்தில் இறைவன் தனது படைப்பு அனைத்தையும் பேரொழித்து உரு நீக்கி ஊழிப்பெருவெள்ளத்தை ஆக்கி அதில் தனிமாத் தெய்வமாய் யோகு செய்கின்றான்.  யோகு என்பது அறிதுயில். உணர்வற்றுத் துயில்வன பேருருக்கலைந்த உயிர்பொருள்களே.  இறைவன் உணர்ந்தவண்ணனாயே இருக்கின்றான்.  ஆயினும் அவன் யோகநித்திரை செய்கின்றான் என்று மறைகள் ஓதுகின்றன. சரீரங்களாகிய உயிர்ப்பொருள்களின் உறக்கம் சரீரியாகிய இறைப்பொருளின் மேல் நின்றது.  இறைவனது ஸர்வசரீரித்தன்மையை உணர்த்தற்கு ஈதுமோர் தக்க சான்றாகும்.  ஆதலால், ‘அறிதுயிலமர்ந்தோன்’ என்பது இறைவனுடைய பெயராயிற்று.  உயிர்ப்பொருள்கள் படைப்புநாள் தொடங்கி, தனது ஏவலை ஓர்ந்து ஒழுகித் தன்னைத்தாள் பற்றாது, தம்மனம்போன போக்கிலேயே ஒழுகிப் பாவத்தைப் பெருக்கி, ஸம்ஸரித்துப்போரும் படிகளை நோக்கி, அப்பெரும்பாவங்கள் கழுவாய்களாலும் வருங்கால அநுபவங்களாலும் ஒழித்தற்கு ஒண்ணாமையை எண்ணி, உயிர்ப்பொருள்கள் பின்னும் தம்போக்கிலேயே போய் அழிந்தொழியாதிருத்தற்பொருட்டு அவற்றின் உருக்களைக் கலைத்து பேர்களை நீக்கி அவைகளுக்குப் புத்துருப்பூட்டிப் பேரிடக்கருதி இறைவன் ப்ரளயம் என்னும் நீக்கற்செயலைச் செய்கிறான்.  நீக்கலும் காக்கும் இறைவனுடைய அருளின் செயலே. “படைப்புநாள் தொடக்கமாகப் படிப்படி மிகுத்துப் பின்னும், கடைப்படச் செய்யும் வையக் கடுவினை தடிக்கும் பாவம், தடைப்படத் திருவி னாதன் கருணை! நீ தருண நோக்கி, முடிப்பெனப் பார்துடைக்கும் ஒருதிருக் கேளி செய்வாய்”2 என்று நீக்கல் என்னும் இறைவனுடைய அருளிச்செயல் ஆக்கல் என்னும் அருளிச்செயலின் தொடக்கமாதல் காண்க.  நோக்கும் இயல்வினனாகிய இறைவனுடைய அருளிச்செயல்களே ஆக்கலும் நீக்கலுமாம்.  அவ்வாறு ஊழிவெள்ளத்தில் உயிர்களெல்லாம் பேருருவொழிந்து உணர்வழிந்து செயலற்று, இறைவனது சரீரம் என்னும் தன்மையாலுங்கூடப் பிரித்துப் பேரிடவொண்ணாவாறு சடத்தோடு சடமாய் மண்டிக்கிடக்க அறிதுயிலமர்ந்த இறைவன் தானே ஊழிகழிய விழித்து அவ்வுயிர்களின் பால் அருள்நோக்கைப் புரிகின்றான்.  அருள்சுரக்க மெய் கறுக்கின்றான்.  துன்னிய தன்திரு என்னும் மன்னியமங்கலமின்னொடு பசும்பொன்மேனியனாய் மிளிர்கின்றான்.  பல்கும் கருத்தில் பச்சைமாமாலைபோல் மேனியனாய். செய்யதாமரைக்கண்ணனாய் உயிர்களுக்கு இரங்கி அவற்றை உற்றுநோக்குகின்றான்.  கருப்பொருளாகின்றான், கரியமேனியனாய் நிகழ்கின்றான், ஆரருள் சுரக்கும் அறநிறம் பூக்கின்றான், பூத்துக்கருதி எரிநீர் மண் எனப் பூரிக்கின்றான், பூரித்து அண்டமாகிய பொன்முட்டையை இடுகின்றான், அடைகாக்கின்றான், அண்டப்படைப்பு என்னும் தொகைப்படைப்பைத் தானே ஆக்குகின்றான், அதன்பின், தனது உந்திக்கமலத்தில் உயிர்த்தொகைப் பொருளாகிய நான்முகன் என்னும் குஞ்சைப் பொறிக்கின்றான்.  அந்தக்குஞ்சுக் கடவுளுக்கு வேதமாகிய அம்மத்தை ஊட்டுகின்றான்.  அக்குஞ்சுக்கடவுளின் கருவுள் வீற்றிருந்து வகைப்படைப்பு என்னும் நாமரூபவ்யாகரணத்தை (பேருருவமைப்பை)ப் பணிக்கின்றான், உள்கலக்கின்றான், செய்தொழில்களைப் பாகுபடுத்துகின்றான், அறநெறிகளை நிறுவுகின்றான். உயிர்கள் உகமுடிவில் உணர்வழிந்து சடத்தோடு சடமாய் மண்டிக்கிடந்த செயலற்ற கிடையையும், இறைவன் யோகில் அவற்றைத் தன்குக்கியில் வைத்துக் காத்தருளிய இறைக்கிடையையும், பின்னர் இவைகளை உள்வாக்கி நாமரூபவ்யாகரணம் செய்து உள்கலந்தருளிய இறைநிலையையும் கண்டு உருகிய சடகோபருடைய திருப்பாடற்பொருளை இவ்வாறு உள்ளி உணர்க.  அக்கிடையெல்லாம் கிடந்து தனது உயிர்க்காதற்பொருள்களை உள்ளுயிர்க்காதலனான தானே நற்பாலாகிய வீட்டுப்பாலுக்கு உய்த்துத்தன்னடிப்பாலாக்கும் திருவுள்ளத்தால், தான் புரிந்துள்ள எண்ணரிய அருளிச்செயல்களின் பரம்பரைகளெல்லாம் ஒருகுளப்படியாமாறு. அவைகளின் உய்வண்ணமுகந்த திருவுள்ளக்கருணைப் பெருங்கடற் கண்ணனாய் சரண்ய தீக்ஷை கொண்ட ஸித்தோபாயனாய் “ஆரோ வருவார்” என்று சரணாகதன் வரவுபார்த்த வண்ணனாய் அர்ச்சாஸமாதியில் நிலைகொண்டு விளங்காநின்றான்.  ஒருக்காலே சரணம் அடைகின்றவர்க்கு அபயம் அளிக்கும் விரதம் பூண்டுவிளங்கும் வண்ணமே சரண்யவண்ணம். இவ்வண்ணத்தை இம்மஹாதேசிகர் பாடியருளிய வண்ணம்:-
            ஒருக்காலே சரணாக அடைகின் றாற்கும்
                        உனக்கடிமை ஆகின்றேன் என்கின் றாற்கும்
            அருக்காதே அனைவர்க்கும் அனைவ ராலும்
                        அஞ்சேலென் றருள்கொடுப்ப னிதுதா னோதும்
            இருக்காலு மெழின்முனிவர் நினைவி னாலும்
                        இவையறிவார் செயலுடனென் னிசைவி னாலும்
            நெருக்காத நீள்விரத மெனக்கொன் றென்னும்
                        நெறியுரைத்தார் நிலையுணர்ந்து நிலைபெற் றோமே.3
           
இறைவனைச் சரணம் அடைந்தே உயிர்ப்பொருள் நிலைபெறும்.  உயிர்ப்பொருள் நிலைபெறும் ஆறு சரணாகதி என்றது இதனாற் காட்டப்பட்டது.  இது இறைவனைத்தாள் பற்றித் துயர் அறுக்கும் ஆறு ஆதலின் பேறே போல் இவ்வாறும் பேரின்பமாயே நிகழும்.  “அச்சுதனைப் பற்றி யான் இறையேனும் இடரிலனே”4 என்றும் “எல்லையில் ஞானத்தின் ஞானமஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் எல்லையில் மாயனைக் கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர்துக்க மிலனே”5 என்றும் “கண்ணனைத் தாள் பற்றி யான் என்றும் கேடிலனே”6 என்றும், இறைப்பொருளைத் தாள்பற்றியே உயிர்ப்பொருள் துயரறுக்கும் நல்லாறே சரணாகதி என்றும் காட்டியருளிய ஆதிகுலபதியாகிய சடகோபர் இந்தசரணாகதிக்கு “மார்க்கதரிசி”யாய் (வழிகாட்டியாய்) விளங்குதல் காண்க.  சரணத்தை இறைவன் நல்குகின்றான்.  சரணாகதியை சடகோபர் நல்குகின்றார்.  சடகோபர் தாமும் ஒழுகி தம்மடியாரையும் ஒழுகும்படி உபதேசித்தருளின் ஆறு இச்சரணாகதியாதலின் ப்ரபந்நர்களுக்கு (சரணம் புகுந்த அடியார்களுக்கு) சடகோபர் ஆதிகுலபதி ஆயினர். “ஆமுதல்வன்” ஆயினர்.  ஆதிகுலகுரு என்றது அதன் பொருள்.  ஆதிகுலபதி அருளினால் இம்மஹாதேசிகர் திருமாலைத்தாள் பற்றியதை:-
            “மந்திரமும் மந்திரத்தின் வழியுங் காட்டி
                        வழிப்படுத்தி வானேற்றி அடிமை கொள்ளத்
            தந்தையென நின்றதனித் திருமால் தாளில்
                        தலைவைத்தோம் சடகோப னருளி னாலே”7
என்று பாடியருளினார். ‘ஆரோ வருவார்’ என்று ப்ரத்யகாத்ம அவியை (உயிர்ப்பொருளாம் அவியை) உண்ணவே சரணியவிரதம் பூண்டுள்ள திவ்யதம்பதியார்களாகிய திருமாமகளும் திருமாலும் விளங்கும் வள்ளன்மையை “இவ்வேழுலகும் கொண்ட நம்திருமார்பன் நம்மாவியுண்ண நன்கெண்ணினான்8 “ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக் கண்ட சதிர்கண்டொழிந்தேன் அடைந்தேன் உன்திருவடியே9 “தடங்கொள்தாமரைக் கண்விழித்து நீஎழுந்து உன் தாமரைமங்கையும் நீயும் இடங்கொள் மூவுலகும் தொழ இருந்து அருளாய்”10 “நின் திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு”11 “தரும வரும் பயனாய திருமகளார் தனிக்கேள்வன்”12 என்று கண்ணாரக் கண்டு  “அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறைமார்பா”13 என்று வாயார விளித்து, தான் தனது என்ற யாதொன்றினையும் காணாது, “நிகரில் புகழாய்! உலகம் மூன்றுடையாய்!” என்று திருமாலின் “துயரமில் சீர்க்கண்ணன் மாயன் புகழ்துற்று”14 ய்யக் கடவனாய “அடியேன்” என்று தனது வேறுகதியற்றமையை விண்ணப்பம் செய்து அடைக்கலத்தவத்திருமூர்த்தியாய், “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே”15 என்று சரணம் புகுந்து வன்பரம் மாய்த்துவிளங்கும் குலபதியாய்த் தமது அடியார்களை “அடியீர்”16 என்று அன்பாரக்கூவி  “அடிக்கீழமர்ந்து புகுந்து வாழ்மின்”17 என்று சரணாகதியை உபதேசித்து சரணம்புகுந்து நல்வாழ்வு பெறுவீராக என்று வாழ்த்தியருளினார்.  ஆதலால் இம்மஹாதேசிகர் “தேற இயம்பினர்… ஆதியரே” என்றும் “அந்தண ரந்திய ரெல்லையில் நின்ற அனைத்துலகும்…. வந்தடையும் வகை… அன்பரறிந்தறிவித்தனரே” என்றும் போற்றினார்.  சரண்ய தம்பதிகளாகிய திருமகளார் திருவடியும் திருமாலார் திருவடியுமே சரணம், அதாவது உபாயம் என்று சடகோபர் ஓதியருளிய இந்த த்வயமந்திரப் பொருளை சடகோபர் பாசுரமாக லக்ஷ்மீகல்யாணம் என்னும் நாடகத்தில் பட்டர் அருளிச் செய்துள்ள ச்லோகத்தை இம்மஹாதேசிகர் ஸாரஸாரம் என்னும் ரஹஸ்யத்தில் எடுத்துக்காட்டியிருத்தல் காண்க.  “இப்ரகாரத்தை ‘ஸ்வயம் வஸ்தூகுர்வந் ஜநமிம மகஸ்மாத் ஸரஸிஜ ப்ரகாரௌ பத்மாயா: தவ ச சரணௌ ந: சரணயந்’ என்று லக்ஷ்மீகல்யாணத்தில் நம்மாழ்வார் பாசுரமாக பட்டர் அருளிச்செய்தார்” என்றது ஸாரஸாரவாக்கியம்.  சடகோபர் திருவுள்ளவிளக்கமாய் பட்டர் அருளிச் செய்த இந்தச்லோகத்தின் தமிழ்:- “பொருளலாவிவனைத் தானோர் பொருளென அருளிலாக்கித், திருமலர் நிகர்த்த செய்யாள் திருவிரி சரணம் தானும், சரணமுன்னதுவும் தான் எம்சரணமென் றாக்கி…” என்பது.  இவ்வாறு, த்வயமந்திரம் விளக்கும் சரண்யதம்பதியார் திருவடிகளின் உபாயஉண்மை தெளிக.  திருமகளும் திருமாலும் ஸித்தோபயம்.  உயிர்ப்பொருள் புரியும் செய்தவமாகிய சரணாகதி ஸாத்யோபாயம்.  சரண்யவசீகாரமாய் உயிர்ப்பொருளுக்கு ப்ரபத்தியை ஸாத்யமாக விதித்துள்ளது.   “அவன்வசீகரணம் அவன்பாற்சரணாகதியே”18 என்றது எம்பெருமானார் அறுதியீடு.  சரண்ய தம்பதிகளே ஸித்தோபாயம்.  சரண்யவசீகாரமே ஸாத்யோபாயம்.  அது சரணாகதி.  அதன் வசீகாரத் தன்மையையும் அதனால் வசீகரிக்கப்பெற்ற சரண்ய தம்பதிகள் பேறளிக்கும் வள்ளன்மையையும்:-

“இமையவர் பதமுங் கைவல் லியமுமந் தாமந் தானும்
சமையவே நல்கி யாங்கோர் அஞ்சலிப் பரஞ்சு மந்தாற்
கமையவே தொன்று மன்னாற் காற்றிலே னென்று வெள்கி
அமைதிநீ ஆதி யெம்மோய்! ஆமிதோர் வண்மையோ? சொல்”19
என்று பட்டர் விளக்கி அருளினார்.  திருமகளாரின் உபாயவள்ளன்மை இதனால் தெளியக்காட்டப்பட்டது.  திருமகளும் திருமாலும் ஸித்தோபாயம், அவர்கள் வசீகாரம் ஸாத்யோபாயம் என்னும் சரணாகதி என்றது காண்க


1
திருவாய்.5.10.8
2
தயாசதகம் 16 (தமிழ் செய்தது திருவருண்மாலை)
3
அமிர்தஸ்வாதினி 16
4
திருவாய் 3-10-4
5
திருவாய் 3-10-8
6
திருவாய் 3-10-10
7
அமிர்தஸ்வாதினி 28.
8
திருவாய் 9-5-5
9
திருவாய் 4-9-10
10
திருவாய் 9-2-3
11
திருவாய் 9-2-1
12
திருவாய் 1-6-9
13
திருவாய் 6-10-10
14
திருவாய் 3-10-6
15
ஸாரஸாரம் த்வயாதிகாரம்
16
ஸ்ரீபாஷ்யம் அநுமாநிகாதிகரணம்
17
குணரத்நகோசம் 58. (தமிழ் செய்தது)
18
ஸ்ரீபாஷ்யம் அநுமாநிகாதிகரணம்
19
ஸ்ரீகுணரத்நகோசம் 53 (தமிழ் செய்தது)

வியாழன், 16 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்---- யமுனைத்துறைவர்

3. சிறுவன் சிவிகை யூர்ந்தமை

பாடிய பட்ட னெல்லே பயந்திது பகருந் தன்னுள்
"நீடிய கால மாக நேருமிக் கப்பந் தானும்
கேடிது காண்கி லாதான் கெடுத்தன னிளைஞ னென்னை
வாடிய வாழ்வ தின்றே" என்றிது சாய்ந்து மண்ணில். 22.

பாடிய பட்டன் மோகித்துத் தரையிற் சாய்ந்தான். வாழ்வு இது இன்றே வாடியது --இன்றே எனது வாழ்வு போயிற்று. இ கப்பம் நீடிய காலமாக நேரும் --- இது நெடுங்காலமாகச் செலுத்துவதே.

மறுகினில் மக்க ளீண்டு மைந்தனைக் கண்டி தார்த்தார்
"சிறுவனோ புலவர் சீயந் தன்னுடன் வாது செய்வான்?
உறுதியே விளக்கு தன்னி லோயுமிவ் விட்டில் தானும்
இறுதியே கண்ட தந்தோ இவன்றனக் குரைப்பதாமோ?" .23.

சிறுவனைச் சிவிகையிற் பார்த்த மக்கள் கூறிக்கொண்டது. கண்டு+இது ஆர்த்தார் ----------.புலவர் சீயம் -- புலவர்களுக்குள் சிறந்தோன். விளக்கு தன்னில் ஓயும் -- விளக்கில் விழுந்து இறக்கும்.

கோயிலின் மாடத் துற்ற கோமக னிவனைக் கண்டு
ஆயிடை வந்த தேவி தனக்கிது கூறும், "அன்பே!
சீயமொன் றூர்தல் காணாய் நம்மவைச் செம்மல் தன்னை
ஆயதொர் வாது தன்னிற் குலைத்திட அவன தேற்றம்" .24.

அரசன் தன் தேவியிடம் கூறியது. கோமகன் -- அரசன். ஆயிடை -- அத்தருணத்தில். சீயம் -- இகழ்ச்சிக் குறிப்பு. அவனது ஏற்றம் குலைத்திட, ஊர்தல் காணாய் --

தேவியுஞ் சிவிகை தன்னி லூர்தருஞ் சிறுவன் றானும்
கோவித னென்னக் கண்டாள் மேனியிற் சோதி கண்டாள்
"நாவின னிவனு நந்தம் புலவனோ டியக்கும் வாது
நாவிற மலைத்தல் செய்யும் நாதனே! உறுதி "யென்றாள். .25.

தேவி மொழிந்தது கோவிதன் -- அறிஞன். நாவினன் இவனும் -- நாவல்லமை பெற்றுள்ள இவன். வாது இயக்கும், நா இற மலைத்தல் செய்யும் --- வாது செய்வன். புலவனது நா அடங்குமாறு அவனை வெல்லுவான்.

மன்னவ னெள்கிக் கூறும், "வயதிலான் கல்வி யில்லான்
சொன்னயஞ் சிறிது மில்லான் துணிவுட னவையிற் சேர்தல்
உன்னிலோர் வாசி கொம்பு வாய்தலே யொருமண் பூசை
இன்னலி னெலி பிடித்தல் ஒப்பதுங் கனவு மென்னே." .26.

ஏளனத்துடன் அரசன் கூறியது. அவையில் -- நம் சபையில். உன்னில் -- நினைந்து பார்த்தால். ஓர் வாசி கொம்பு வாய்தலும் --- ஒரு குதிரை கொம்பு பெறுதலும். ஒரு மண் பூசை --- மண்ணாலாகிய பூனை (பொம்மை)ஒன்று. இன்னல் இல் -- துன்பம் இழைப்பதாய் .. கனவும் -- இது கனவு போன்றதுமாம். நிகழ்வதன்று.

"புரையிலாப் புகரி வன்பாற் பொலிவது காண்பி ரையா!
வரையிலா மாணி முன்னர் தானவர் மன்னைத் தாழச்
சிறையினிற் சேர்த்த தொப்ப நம்மவன் செருக்க டக்கி
உரையிலாப் பெருமை யேற்கு மிவ"னெனத் தேவி ஓதும். .27.

தேவி மீண்டும்கூறியது. புகர் இவன் பால் பொலிவது காண்பிர் , ஐயா-----------. வரையிலா மாணி---- மிகச் சிறிய வாமனன் (இறைவனது அவதாரம்) தானவர் மன் --- மகாபலி. தாழ சிறையினில் --- பாதாளத்தில் ஆழுமாறு. உரை இலா பெருமை ஏற்கும் -- சொல்ல இயலாத பெருமை பெறுவான்.

"வரன்முனம் வயது வாயாச் சிறுவனும் வருவ தென்னே
விரலிதோ உரலு மாகில் உரலதும் வீங்கு மன்றோ?
உரமில னிவனு நந்த முரவனை யணுகு முன்னர்
வெறுவுறுந் திண்ண" மென்றான் வேந்துதன் தேவி தன்பால். .28.

அரசன் மொழிந்தது; வரன் --- சிறந்தவன்; நம் புலவன். என்னே -- வியப்புச் சொல். விரல் இதோ -- விரல் போன்ற சிறியவனாகிய இவன். உரல்போன்ற நம் புலவனுக்கு ஒப்பப் பெரியவனாகில், புலவனும் பெரியவனாவனன்றோ? உரம் இலன் இவன் -- கலையில் வலிமை இல்லா இவன். நந்தம் உரவனை --அறிவு மிக்கவனாகிய நம் புலவனை. வெருவுறும் -- அஞ்சுவான்.

"ஈடிலாத் தேசு வாயிச் சிறுவனோ தோற்கு மென்னிற்
கேடிலா வீர! நுந்தம் சேடியர்க் கேவல் செய்யும்
சேடியே யாவ"லென்று தேவியுங் கூற மன்னன்
"நாடினை நல்ல தொன்றாம்" என்றுபின் நவிலு மிஃதே. .29.

தேவி கூறிய சபதம்.

"பாலனை மொழியி னாய்!நீ பகர்ந்தனை சபதே மேயிப்
பாலகன் நந்த மான்றோன் றன்னையும் படுக்கு மென்னில்
கோலமே பரவு மென்றன் கோன்மையிற் பாதி கொள்ளப்
பாலகற் களிப்பல் மெய்யே பகர்வது மீள லில்லை" .30.

அரசன் மொழிந்த சபதம். பால் அனை மொழியினாய் ---பால் போலும் இனித்த சொல்லுடையாய். படுக்கும் -- வெல்லுவான். கோன்மை --- இராச்சியம். இலக்கணை.

தெருவெல்லாம் முரசதிரச் சிறுசின்னந்
தானொலிப்பத் திரண்ட மக்கள்
பொருவில்லாப் பண்டிதனை வாதமெனும்
போர்தன்னிற் புடைக்க வேகும்
உருவின்மீச் சிறியவனைக் கண்டிவன் றன்
உன்மத்த மென்னே யென்னக்
குருவென்றார் புதனென்றார் குறுமுனிவன்
றானென்றார் நிபுணர் தாமே. .31.

தெருவில் திரண்ட மக்கள் பாலகனைக் கண்டு சொல்லிக் கொண்டவை. புடைக்க -- வாதச்சொற்களால் தோல்வி கொள்ளச்செய்ய. உன்மத்தம் --பித்து. குரு -- வானோர்களது குரு, பிரஹஸ்பதி, புதன் -- அறிஞன், குறுமுனிவன் -- அகத்தியன்.

திங்கள், 13 டிசம்பர், 2010

நாட்டேரி ஸ்வாமியின் டெலி-உபந்யாஸம் 13-12-2010

 நாட்டேரி ஸ்வாமி இன்று நிகழ்த்திய குரு பரம்பரை உபந்யாஸம் இங்கு வீடியோ mp3 இரண்டு வடிவிலும்.





Get this widget | Track details | eSnips Social DNA