வியாழன், 16 டிசம்பர், 2010

வைணவ ஆசாரியர்கள்---- யமுனைத்துறைவர்

3. சிறுவன் சிவிகை யூர்ந்தமை

பாடிய பட்ட னெல்லே பயந்திது பகருந் தன்னுள்
"நீடிய கால மாக நேருமிக் கப்பந் தானும்
கேடிது காண்கி லாதான் கெடுத்தன னிளைஞ னென்னை
வாடிய வாழ்வ தின்றே" என்றிது சாய்ந்து மண்ணில். 22.

பாடிய பட்டன் மோகித்துத் தரையிற் சாய்ந்தான். வாழ்வு இது இன்றே வாடியது --இன்றே எனது வாழ்வு போயிற்று. இ கப்பம் நீடிய காலமாக நேரும் --- இது நெடுங்காலமாகச் செலுத்துவதே.

மறுகினில் மக்க ளீண்டு மைந்தனைக் கண்டி தார்த்தார்
"சிறுவனோ புலவர் சீயந் தன்னுடன் வாது செய்வான்?
உறுதியே விளக்கு தன்னி லோயுமிவ் விட்டில் தானும்
இறுதியே கண்ட தந்தோ இவன்றனக் குரைப்பதாமோ?" .23.

சிறுவனைச் சிவிகையிற் பார்த்த மக்கள் கூறிக்கொண்டது. கண்டு+இது ஆர்த்தார் ----------.புலவர் சீயம் -- புலவர்களுக்குள் சிறந்தோன். விளக்கு தன்னில் ஓயும் -- விளக்கில் விழுந்து இறக்கும்.

கோயிலின் மாடத் துற்ற கோமக னிவனைக் கண்டு
ஆயிடை வந்த தேவி தனக்கிது கூறும், "அன்பே!
சீயமொன் றூர்தல் காணாய் நம்மவைச் செம்மல் தன்னை
ஆயதொர் வாது தன்னிற் குலைத்திட அவன தேற்றம்" .24.

அரசன் தன் தேவியிடம் கூறியது. கோமகன் -- அரசன். ஆயிடை -- அத்தருணத்தில். சீயம் -- இகழ்ச்சிக் குறிப்பு. அவனது ஏற்றம் குலைத்திட, ஊர்தல் காணாய் --

தேவியுஞ் சிவிகை தன்னி லூர்தருஞ் சிறுவன் றானும்
கோவித னென்னக் கண்டாள் மேனியிற் சோதி கண்டாள்
"நாவின னிவனு நந்தம் புலவனோ டியக்கும் வாது
நாவிற மலைத்தல் செய்யும் நாதனே! உறுதி "யென்றாள். .25.

தேவி மொழிந்தது கோவிதன் -- அறிஞன். நாவினன் இவனும் -- நாவல்லமை பெற்றுள்ள இவன். வாது இயக்கும், நா இற மலைத்தல் செய்யும் --- வாது செய்வன். புலவனது நா அடங்குமாறு அவனை வெல்லுவான்.

மன்னவ னெள்கிக் கூறும், "வயதிலான் கல்வி யில்லான்
சொன்னயஞ் சிறிது மில்லான் துணிவுட னவையிற் சேர்தல்
உன்னிலோர் வாசி கொம்பு வாய்தலே யொருமண் பூசை
இன்னலி னெலி பிடித்தல் ஒப்பதுங் கனவு மென்னே." .26.

ஏளனத்துடன் அரசன் கூறியது. அவையில் -- நம் சபையில். உன்னில் -- நினைந்து பார்த்தால். ஓர் வாசி கொம்பு வாய்தலும் --- ஒரு குதிரை கொம்பு பெறுதலும். ஒரு மண் பூசை --- மண்ணாலாகிய பூனை (பொம்மை)ஒன்று. இன்னல் இல் -- துன்பம் இழைப்பதாய் .. கனவும் -- இது கனவு போன்றதுமாம். நிகழ்வதன்று.

"புரையிலாப் புகரி வன்பாற் பொலிவது காண்பி ரையா!
வரையிலா மாணி முன்னர் தானவர் மன்னைத் தாழச்
சிறையினிற் சேர்த்த தொப்ப நம்மவன் செருக்க டக்கி
உரையிலாப் பெருமை யேற்கு மிவ"னெனத் தேவி ஓதும். .27.

தேவி மீண்டும்கூறியது. புகர் இவன் பால் பொலிவது காண்பிர் , ஐயா-----------. வரையிலா மாணி---- மிகச் சிறிய வாமனன் (இறைவனது அவதாரம்) தானவர் மன் --- மகாபலி. தாழ சிறையினில் --- பாதாளத்தில் ஆழுமாறு. உரை இலா பெருமை ஏற்கும் -- சொல்ல இயலாத பெருமை பெறுவான்.

"வரன்முனம் வயது வாயாச் சிறுவனும் வருவ தென்னே
விரலிதோ உரலு மாகில் உரலதும் வீங்கு மன்றோ?
உரமில னிவனு நந்த முரவனை யணுகு முன்னர்
வெறுவுறுந் திண்ண" மென்றான் வேந்துதன் தேவி தன்பால். .28.

அரசன் மொழிந்தது; வரன் --- சிறந்தவன்; நம் புலவன். என்னே -- வியப்புச் சொல். விரல் இதோ -- விரல் போன்ற சிறியவனாகிய இவன். உரல்போன்ற நம் புலவனுக்கு ஒப்பப் பெரியவனாகில், புலவனும் பெரியவனாவனன்றோ? உரம் இலன் இவன் -- கலையில் வலிமை இல்லா இவன். நந்தம் உரவனை --அறிவு மிக்கவனாகிய நம் புலவனை. வெருவுறும் -- அஞ்சுவான்.

"ஈடிலாத் தேசு வாயிச் சிறுவனோ தோற்கு மென்னிற்
கேடிலா வீர! நுந்தம் சேடியர்க் கேவல் செய்யும்
சேடியே யாவ"லென்று தேவியுங் கூற மன்னன்
"நாடினை நல்ல தொன்றாம்" என்றுபின் நவிலு மிஃதே. .29.

தேவி கூறிய சபதம்.

"பாலனை மொழியி னாய்!நீ பகர்ந்தனை சபதே மேயிப்
பாலகன் நந்த மான்றோன் றன்னையும் படுக்கு மென்னில்
கோலமே பரவு மென்றன் கோன்மையிற் பாதி கொள்ளப்
பாலகற் களிப்பல் மெய்யே பகர்வது மீள லில்லை" .30.

அரசன் மொழிந்த சபதம். பால் அனை மொழியினாய் ---பால் போலும் இனித்த சொல்லுடையாய். படுக்கும் -- வெல்லுவான். கோன்மை --- இராச்சியம். இலக்கணை.

தெருவெல்லாம் முரசதிரச் சிறுசின்னந்
தானொலிப்பத் திரண்ட மக்கள்
பொருவில்லாப் பண்டிதனை வாதமெனும்
போர்தன்னிற் புடைக்க வேகும்
உருவின்மீச் சிறியவனைக் கண்டிவன் றன்
உன்மத்த மென்னே யென்னக்
குருவென்றார் புதனென்றார் குறுமுனிவன்
றானென்றார் நிபுணர் தாமே. .31.

தெருவில் திரண்ட மக்கள் பாலகனைக் கண்டு சொல்லிக் கொண்டவை. புடைக்க -- வாதச்சொற்களால் தோல்வி கொள்ளச்செய்ய. உன்மத்தம் --பித்து. குரு -- வானோர்களது குரு, பிரஹஸ்பதி, புதன் -- அறிஞன், குறுமுனிவன் -- அகத்தியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக