செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 37

அறுபத்தியெட்டாவது ஸர்க்கம்

[நாய் ஸ்ரீராமனிடம் நியாயம் வேண்டி வருதல்.]

                மறுநாள் பொழுது விடிந்ததும், ஸ்ரீராமச்சந்திரன் நித்ய அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, ராஜஸபைக்கு எழுந்தருளி சீரிய சிங்காதனத்தில் அமர்ந்தனன். அப்பொழுது, வேத வித்துக்களான பிராம்மணர்களும், ரிஷிகளான, காச்யபர், வஸிஷ்டர் முதலானவர்களும், வ்யவஹாரமறிந்த மந்திரிகளும், தர்மவித்துக்களும், நீதிமான்களும், ஸாமாந்த அரசர்களும், அங்கு வந்தமர்ந்தனர். அப்பொழுது அந்த ஸபையானது, தேவேந்திரனுடையதோ, யமனுடையதோ, வருணனுடையதோ என்னலாம்படி விளங்கியது.

                அப்பொழுது ஸ்ரீராமன் லக்ஷ்மணனை நோக்கி, 'லக்ஷ்மணா! உடனே சென்று, வாயிலில் எவரேனும் என்னிடம் முறையிட்டுக் கொண்டவர் இருந்தாரேயாகில் அழைத்து வரவும்' என்று கூற, லக்ஷ்மணன் அவ்வாறே அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றான். ஆனால் அங்கு ஒருவருமில்லை. ஏனெனில், ஸ்ரீராமன் அரசாட்சி செய்கையில், உலகத்தில் ஒருவருக்கும் ஒருவிதமான துன்பமும் உண்டாகவில்லை. வியாதிகள் ஒன்றும் உண்டாகவில்லை. பூமியெங்கும் ஸகல தானியங்களும் விளைந்து. ஸகல ஓஷதிகளும் ஸம்பூர்ணமாயிருந்தன. பால்யத்திலாவது, யௌவனத்திலாவது எவரும் துர்மரணமாயும் அல்பாயுஸ்ஸாகவும் மடிவதில்லை. உலகம் முழுவதும் தர்மமாகவே பரிபாலிக்கப்பட்டதாதலால் எவருக்கும் எவ்விதமான பீடையும் உண்டாவதில்லை. அதனால் அரசவையில் முறையிட்டுக் கொள்பவர் ஒருவரும் காணப்படவில்லை. எனவே வெளியே சென்ற லக்ஷ்மணன், அங்கு ஒருவரையும் காணாது ராமனிடம் திரும்பி வந்து அவ்விவரத்தை விளம்பினான். அது கேட்டு, ஸ்ரீராகவன் ஸந்துஷ்ட மனஸ்ஸை உடையவராக, மறுபடியும் லக்ஷ்மணனைப் பார்த்து, “தம்பி! நீ மீண்டும் சென்று பார்த்துவா,  ஒருவருக்கும் ஒரு குறையும் இல்லை என்று உபேக்ஷித்து இருக்கக் கூடாது. அடிக்கடி சென்று பார்த்து வரவேண்டும்” என்றார்.

                அதன் பொருட்டு மீண்டும் லக்ஷ்மணன் வெளியில் சென்று பார்த்த போது, அங்கு ஒரு நாய் குரைத்துக் கொண்டிருந்தது. அது லக்ஷ்மணனைக் கண்டதும், பல தரம் குரைத்தது. அதைக் கண்ட லக்ஷ்மணன், அதைப் பார்த்து-"ச்வாவே! உனக்கு ஆக வேண்டிய காரியம் என்ன? பயப்படாமல் கூறவும்" என்றான். அதற்கு நாய் "ஸ்வாமின்! ஸர்வலோக சரண்யரான ஸ்ரீராகவனிடம் விஜ்ஞாபிக்க விரும்புகிறேன்" என்றது. அதைக் கேட்ட லக்ஷ்மணன், உடனே, ஶ்ரீராமனிடம் சென்று விஜ்ஞாபித்து, மீண்டும் திரும்ப வந்து, நாயிடம், “வா, வந்து அரசனிடம் விஜ்ஞாபிக்கவும்,” என்று கூறினான். இதற்கு, நாய், கூறியதாவது-"தேவன் கோயில், அரசனுடைய அரண்மனை, வேதப் பிராம்மணனுடைய கிருஹம், இவைகளில் அக்னி, இந்திரன், ஸூரியன், வாயு, இவர்கள், வஸிக்கிறார்கள். எனவே அங்கு என் போன்ற கீழ் யோனியிற் பிறந்தவர்கள் புக அனர்ஹர்கள். எனவே அவரிடம் சென்று நான் வரலாமா? என்பதைக் கேட்டறிந்து வரவும். அவருடைய அநுமதியிருந்தால் நான் வருகிறேன் என்று கூறியது. லக்ஷ்மணனும் உள்ளே சென்று, ஸ்ரீராகவனிடம் விஜ்ஞாபிக்க, அவரும் "உடனே அதை இங்கு அழைத்து வா" என்று கூறினார்.

அறுபத்தொன்பதாவது ஸர்க்கம்

[நாய், ஸ்ரீராமனிடம், தனது நிலையைக் கூறியதும், அந்த நிலையை உண்டு பண்ணிய பிராம்மணனை விசாரித்தலும், அதற்கான தண்டனையையும் அவனுக்கு நாயின் சொற்படியே கொடுத்ததும்,
அதற்கான காரணமும்
.]

                ஸ்ரீராமபிரானின் சொற்படி, லக்ஷ்மணன் அந்த நாயை ஸபா மண்டபத்திற்குள் அழைத்து வந்தான். அந்த நாயைக் கண்ட ஸ்ரீராமன்; "ஸாரமேயமே! உனக்கேற்பட்டுள்ள குறை யாது? பயமின்றிக் கூறுவாயாக" என்றார். அது கேட்ட நாயானது- "ஸ்வாமின்! ராகவ ஸிம்ஹ! அரசனே ஜனங்களை (பிரஜைகளை) தூங்கும் காலத்திலும் விழித்திருக்கும் காலத்திலும் ரஷிக்கிறான். நல்ல நியாயவாதியாகவும் அவனே திகழ்கிறான். அரசன் தர்மத்தினாலேயே ராஜ்யத்தைப் பரிபாலித்து வருகிறான். ஆபத்துக்களிலிருந்து பிரஜைகளை ரக்ஷித்து அபயத்தை யளிக்கிறான். இதனையறிந்த தேவரீர் அடியேனுடைய விண்ணப்பத்தைக் கேட்டு ஆவன செய்யவும். ஸர்வார்த்த ஸித்தன் என்கிற பிக்ஷை எடுத்துண்ணும் ஒரு பிராம்மணன், என்னை ஒரு காரணமுமின்றி வீணாக அடித்து வருத்தினான். இதோ மண்டை யுடைபட்டு நிற்கும் என்னைப் பாகும். இதனை விசாரிப்பீராக" என்றது. உடனே ஸ்ரீராமன், அந்தப் பிராம்மணனை அழைத்து வருமாறு காவலர்களுக்கு உத்திரவிட, அவர்கள் அப்பொழுதே விரைந்து சென்று அந்த அந்தணனை அழைத்து வந்தனர். ஸ்ரீராகவன் அவனை நோக்கி, “பிராம்மணரே! நீர் ஒரு பிராம்மணனாயிருந்தும், இந்த எளிய நாயை அடித்தது எதற்காக? இது உமக்கு என்ன அபகாரம் செய்தது? நீர் இதற்கு ஏன் இப்படிப்பட்ட தண்டனையை கொடுத்தீர்? கோபமே ப்ராணஹாரியான சத்ரு. கோபமே நண்பனின் ரூபமான பகைவன். கோபமே கொடிய கத்திபோன்றது; கோபமே அனைத்து நன்மைகளையும் பாழாக்குகிறது. செய்யும் தவம் தானம் முதலிய அனைத்துப் பலன்களையும் கோபம் நாசம் செய்து விடுகிறது. இப்படியிருக்க நீர் ஏன் இப்படிப்பட்ட காரியத்தைக் கோபத்திற்கு வசப்பட்டுச் செய்தீர்" என்று கேட்டார்.

                இப்படி ராமன் கூறக் கேட்ட ஸர்வார்த்த ஸித்தன் என்கிற பிராம்மணன், 'மஹாராஜனே! நான் கோபத்திற்கு வசப்பட்டவனாகி இந்த நாயை அடித்தது உண்மையே. நான் பிக்ஷை எடுத்துக் கொண்டு வீதி வழியே வரும்போது, இந்த நாயானது நடு வழியே நின்று கொண்டு, ஒரு புறமும் ஒதுங்காமல் என்னை உபத்திரவப்படுத்தியது. நான் இதைப் பல தடவை. "ஒதுங்கு ஒதுங்கு" என்று கூறியும், கேளாமல் என்னை எதிர்த்து நின்றபடியால், நான் பசியாலும் களைப்பாலும் கோப மதிகரித்தவனாகி, இதை அடித்து விட்டேன். நான் செய்தது பெருங் குற்றமே இதற்குத் தகுந்த தண்டனையைக் கொடுக்கவும்!" என்றான். இப்படி வேதியன் கூறக் கேட்ட ஸ்ரீராமன், ஸபையிலுள்ள பெரியோர்களைப் பார்த்து, அந்தப் பிராம்மணனுக்கு விதிக்க வேண்டிய தண்டனை என்ன? என்று ஆராய்ந்து உரைக்க வேண்டுமென வேண்டினான். அது கேட்டு, நீதி சாஸ்திரமும் ராஜ தர்மமுமுணர்ந்த அப்பெரியோர்கள், "ஸ்ரீராம பிராம்மணர்களுக்கு வதை தண்டனை விதிக்கலாகாதென்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது" என்றனர். அப்பொழுது அந்த நாய், ஸ்ரீராமபிரானை நோக்கி, “ராஜன்! தேவரீர் என்னிடத்து அருள் புரியத் திருவுள்ளமாயின், நான் கேட்டுக் கொள்வதைச் செய்விக்க வேண்டுகிறேன், இந்தப் பிராம்மணனுக்கு 'குலபதி' என்கிற தர்மபரிபாலனாதிகாரம் அளிக்க வேண்டுகிறேன்." என்று கேட்டுக் கொண்டது. அதனைக்கேட்ட காகுத்தன் அவ்வாறே அந்தப் பிராம்மணருக்கு அவ்வதிகாரத்தில் அபிஷேகம், செய்வித்தனன். தனக்குக் கிடைத்த உயர்ந்த அதிகாரத்தினால் அந்த வேதியன் மிக்க மகிழ்ச்சி கொண்டு யானை மீதேறி, அனைவராலும் பூஜிக்கப்பட்டவனாகி, ஆனந்தத்துடன் சென்றான். இப்படித் தவறு செய்த பிராம்மணனுக்கு, அதிகார மளித்தது கண்டு ஸ்ரீராமனது மந்திரிகள் வியப்புற்றவர்களாகி ராமபிரானை நோக்கி, “ஸ்வாமின்! இந்தக் குற்றவாளிக்கு, உயர்வான பதவியன்றோ அளிக்கப்பட்டது. இதன் மர்மம் யாது?” என்று கேட்டனர். ஸ்ரீராமன், அவர்களைப் பார்த்து-"நீங்கள் நீதி சாஸ்திரம் அறியாதவர்கள் போலும். இதன் மர்மத்தை இந்த நாய் நன்கு உணர்ந்திருக்கின்றது. இதுவே, இதனை விளங்கக் கூறும், நீங்கள் நன்கு கேட்டுணர்க" என்று கூறி, அதன் வரலாற்றை யாவருக்கும் நன்கு எடுத்துக் கூறுமாறு, நாய்க்குக் கட்டளை யிட்டார். உடனே அந்த நாய் சொல்லத் தொடங்கியது.

                "ஸ்வாமின்! அடியேன் பூர்வ ஜன்மத்தில், ஒரு குலபதியாகி, தர்மாதிகாரி ஸ்தானம் பெற்றிருந்தேன். அது ஸமயம், அடியேன் தேவ பூஜைகளிலும், பிராம்மண பூஜைகளிலும், மிகுந்த அன்னத்தைப் போஜனம் செய்வேன். தேவதாசிகளுடனும், தேவதாசர்களுடனும் கூடிக் களிப்புற்றிருந்தேன். தேவத்ரவ்யங்களைக் கருத்துடன் காப்பாற்றினேன். அன்றியும், வினயமும் நல்லொழுக்கமு முடையவனாகி எல்லாப் பிராணிகளுக்கும் நன்மையையே நாடி வந்தேன். அக்காரணம் பற்றி எனக்கு இந்த கோரமான அவஸ்தையும், அதமமான ஜன்மமும் கிடைத்தது. கோபங் கொண்ட பிராம்மணனுக்கும், தரும நிலை தவறித் தீமையிழைக்கத் துணிந்த பிராம்மணர்க்கும் இதே கதிதான். ஹே ராகவ! கோபங் கொண்டவனும், ஜீவகாருண்ய மில்லாதவனும், அறிவில்லாத மூடனும், ஏழேழு ஜன்மமும், தன் குலமழியுமாறு தீமையைத் தேடிக்கொள்கிறான். ஆதலால் எவனும் எவ்விதமான நிலைமை நேர்த்த காலத்திலும், தர்மாதிகாரம் செய்தலாகாது. எவனொருவன் தேவஸ்தானங் களுக்கும், பசு பரிபாலன ஸ்தானங்களுக்கும், பிராம்மண ரக்ஷண ஸ்தானங்களுக்கும் அதிகாரியாக யிருக்கின்றானோ அவன் தனது புத்திரர்களுடனும் பந்துக்களுடனும் நரகத்தில் வீழ்வது நிச்சயம். எவன் பிராம்மணர்களது திரவியங்களையும் தேவஸ்தான த்ரவ்யத்தையும், ஸ்த்ரீகளின் செல்வத்தையும் அபகரிக்கிறானோ, எவனொருவன் தானம் செய்து கொடுத்து விட்டதை, மறுபடியும் பறித்துக் கொள்ளுகின்றானோ, அவன் தன்னைச் சேர்ந்தவர்களுடனே விநாச மடைவது நிச்சயம்” என்று கூறியது.

                பிறகு அந்த நாய், ராமபிரானிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்றது. அது நீச ஜாதியில் பிறந்ததாயினும், பூர்வ ஜன்ம ஸ்மரணமுடையதாகிக் காசி க்ஷேத்திரம் சென்று, அங்கு பிராயோபவேசம் செய்து உடலை விடுத்து ஸ்வர்கம் சென்றது.

எழுபதாவது ஸர்க்கம்

(கழுகு கோட்டான்களின் வழக்கும், கழுகு, சாபம் நீங்கப் பெற்றதும்.)

                ஒரு ஸமயம், ஒரு காட்டிலிருந்து, ஒரு கழுகும் கோட்டானும் விவாதம் செய்து கொண்டு, ஸ்ரீராமபிரானிடம் வந்து, நியாயம் கூறும்படி வேண்டிக் கொண்டன. விவாதத்திற்குக் காரணமென்னவெனில்? கெட்ட புத்தியுடையதான கழுகு. கோட்டானது கூட்டிற்குச் சென்று, 'அது தன்னுடையது' என்று சொல்லி, அதனுடன் சண்டையிடத் தொடங்கியது.

                கழுகு ராமனை நோக்கி, 'உலக நாதனே! நான் நெடு நாளாகவே வஸித்து வருகிற எனது இருப்பிடத்தை, இந்தக் கோட்டான் தன்னுடையதென்று சொல்லி வலிய வந்து வதம் செய்கின்றது. இவ்விஷயத்தில் எனக்கு நீதி வழங்கவும்' என்றது.

                இதற்கு கோட்டான்:-ஸ்ரீராகவ! தேவரீர் ஸர்வலோக சரண்யர், ஸ்ரீமன் நாராயணனும் தேவரே. இது எனக்கு நன்கு தெரியும், அடியேன் விஷயத்தில் உசிதமான நியாயத்தை வழங்கவும். அரசரே ! இந்தக் கழுகு எனது கூட்டினுள் வந்து புகுந்து எனக்கு அனேக விதமான துன்பங்களை உண்டு பண்ணுகிறது. இதனை நன்கு விசாரித்தருள்க, என்று கூறி முறையிட்டது.

                ராகவன் முதலில் கழுகை நோக்கி, நீ இந்த கூடு கட்டிக் கொண்டு, இதில் எத்தனை வருஷ காலமாக வஸித்து வருகின்றனை? உள்ளதை உள்ளபடி கூறவும் ' என்று கேட்டான். அது கேட்ட கழுகு. ஸ்ரீராம! இப்பூமியில் மானிடர் உற்பத்தியாகி எங்கும் எப்பொழுது பரவினர்களோ, அன்று முதல் இது எனது வீடாகவே யிருக்கிறது' என்றது. பிறகு கோட்டான் ராகவனைப் பணிந்து, ராஜ ராஜனே! இப்பூமியில் எப்பொழுது, மரம் செடி கொடிகள் செழித்து வளரத் தொடங்கினவோ, அக்காலந் தொடங்கி இது எனது வாஸஸ்தலமாக உள்ளது, என்று கூறியது. இப்படி அவைகள் கூறியதைக் கேட்ட ஸ்ரீராமபிரான், ஸபையோர்களைப் பார்த்து அவ் வழக்கின் நுட்பத்தை யறிந்து, ந்யாயம் கூறுமாறு வேண்டினன். அதனைக் கேட்ட மந்திரிகள், அரசே! கோட்டான் கூறியதிலேயே ந்யாயமிருக்கிறதென எண்ணுகிறோம்; என்றனர்.

                இப்படி அவர்கள் கூறக் கேட்ட ரகுநந்தனன், அவர்களை நோக்கி மந்த்ரிகாள்! இதைப் பற்றிய புராணக் கதை யொன்றுள்ளது. அதனைக் கூறுகிறேன் கேளுங்கள் - முதன் முதலில் இப்பூமி தேவி லக்ஷ்மியுடன் கூடி, ஸ்ரீமகாவிஷ்ணு வினுடைய திருவயிற்றினுள் பிரவேசித்தனள், அப்படி உலகங்களனைத்தையும் தம் உதரத்தினுட் கொண்ட ஆதி புருஷனான ஸ்ரீமந் நாராயணன், அலைகடல்மீது அனேகம் ஆண்டுகள் அறிதுயிலமர்த்தனன். அது பொழுது, பிரம்ம தேவன், அம்மஹா விஷ்ணுவினது. திருவுந்தியிற் பூத்த, பொற்றாமரையின் வழியே, வெளித் தோன்றி, மகா யோகியாகி, முதலில் இப் பூமியையும், அதன் மீது மரங்களையும், மலைகளையும் படைத்து, அப் பூமியைச் சுற்றி வாயுவை ச்ருஷ்டித்தனன். பிறகு அதில், மானிடர்களும், மிருகங்களும் ஸர்ப்ப ஜாதிகளுமான அனேசுமாயிரம் உயிர்களையும் படைக்கலாயினன். அப்பொழுது பிரம்மனது காது மலத்தினின்றும், 'மது-கைடபர்கள் என்னும் அஸுரர்கள் தோன்றி, மிகவும் பயங்கரமாக அப் பிரம்மனின் மீது பாய்ந்தனர். அப்பொழுது, பிரம்மதேவன், நடுநடுங்கிப் பெருங் கூச்சலிட்டான். அக்கணமே ஸ்ரீமகாவிஷ்ணு, அங்கு தோன்றி, அந்த அசுரர்களை எதிர்த்துத் தனது சக்கரத்தினால், அவர்களைச் சம்ஹரித்தார். அவர்களது சரீரங்களிலிருந்துமொழுகிய 'மேதஸ்' என்கிற நிணநீர் முதலியவை இப் பூமி முழுதும் பாய்ந்து பரவின. அதன் பின்னர் ஸ்ரீமகாவிஷ்ணு, இப்பூமியை மீண்டும் மிகவும் பரிசுத்தமாக்கி, எல்லாவிடத்தும் மரங்களும், நானாவிதமான பயிர் பூண்டுகளும், அனேகமான ஓஷதிகளும், விசேஷமாக விருத்தியடையும்படி செய்தனர். மது கைடபர்களின் மேதஸ்ஸினது நாற்றமெங்கும் பரவியதுபற்றி இப்பூமிக்கு, 'மேதினீ' எனவும் ஒரு பெயர் வழங்கலாயிற்று. ஆகவே இது கழுகினது வீடு இல்லை, கோட்டானது இல்லமே' என நான் நிச்சயிக்கிறேன்' இக்கழுகு மற்றொருவனுடைய மனைவியை, மோசமாகக் கைக்கொள்ளக் கருதுகின்ற கொடும் பாபியே யாகும் என்று கூறினன்.

                அச்சமயம், ஆகாயவாணி, உரத்த குரலில், “ஹே ராகவஸிம்ஹ! முன்னமே தபோபலத்தினால் தஹிக்கப்பட்டிருக்கின்ற இந்தக் கழுகை, மீண்டுமொரு தரம் வதை செய்யாதருள்க. இது முன் ஜன்மத்தில், 'பிரம்மதத்தன்' எனப் பெயர் பூண்ட ஓர் அரசனாயிருந்தது. அவ்வரசனது வீட்டிற்கு ஒரு ஸமயம் கௌதமர் என்கிற முனிவர், போஜனம்செய்ய எழுந்தருளினார். அந்தப் பிரம்மரிஷியைக் கண்டவுடன், பிரம்மதத்தன் மிக்க மகிழ்ச்சி கொண்டவனாகி, அவரை நன்கு பூஜித்து, போஜனத்திற்கு மாமிஸங்களை அதிகமாக வரவழைத்தான். அது கண்டு அம்முனிவர் மிகுந்த கோபங் கொண்டு, இப்பொழுது நீ 'பிணம் தின்னும் கழுகாகுக" என்று சாபம் கொடுத்தார். பிறகு அம்முனிவர் அவன் மீது கருணை கொண்டு, செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந் நாராயணன், இக்ஷ்வாகு வம்சத்தில், ஸ்ரீராமனாக அவதரிக்கப் போகிறான். அவரது திருக்கரம் உன் மீது பட்ட மாத்திரத்தில், இந்தப் பாபஜன்ம மொழிந்து, புனிதனாகக் கடவை என்று வரமளித்தார். என்று, கூறியது. அந்த அசரீரி வாக்கைச் செவியுற்று. ஸ்ரீராமன் ஆச்சரியமடைந்து, அதன் மீது கருணை கூர்ந்து, தனது திருக்கரத்தினால், அதனைத் தொட்டுத் தடவிக் கொடுத்தான். அக்கணமே அக் கோரமான கழுகு வடிவம் போய், அற்புதமான ஆடையாபரணமணிந்து திவ்ய ரூபம் பெற்று, ஸ்ரீராமனையடி பணிந்து வணங்கிய பின், அவனை வாழ்த்தி, விடை பெற்றுக் கொண்டு தன்னிடம் சேர்ந்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக