ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 36

அறுபத்தி நாலாவது ஸர்க்கம்

[பிரம்மதேவனை யடைந்த வஸிஷ்டருக்கு. அவர் சரீரம் உண்டாகும் வகை கூறுவது.)

                லக்ஷ்மணன், ஸ்ரீராமனைப் பார்த்து, 'பிரபோ! உடலை விட்ட அவ்விருவரும், எங்ஙனம் மறுபடி சரீரத்தைப் பெற்றனர்? இதை யறிய எனது மனம் ஆவல் கொண்டுள்ளது, கிருபை கூர்ந்து கூறவும்,” என வேண்டினான்.

                அதற்கு ஸ்ரீராமன்-“ஹே லக்ஷ்மண! உடலை விட்டுப் பிரிந்த அவ்விருவரும், காற்றாக ஆயினர். வஸிஷ்டர் மீண்டும் வேறொரு சரீரத்தைப் பெற விரும்பி, தனது பிதாவான பிரம்ம தேவரைச் சரணமடைந்தார். அங்கு அவர், வாயு வடிவமாகவே நின்று, தனது துயரத்தை அவரிடம் கூறி, தனக்கு வேறொரு சரீரம் உண்டாக வேண்டும் என்று அந்தத் தேவனை வேண்டினார். இது கேட்டு ஸரஸ்வதீ வல்லபனான பிரம்மா வஸிஷ்டரை நோக்கி, ''குழந்தாய்! நீ இப்பொழுது, மித்ரா வருணர்களது வீர்யத்தில் பிரவேசிப்பாயாகில், அதினின்றும் அயோனிஜனாக (ஒரு சரீரத்தினின்றும் பிறவாமல்) உத்பவித்து, மஹாதர்மிஷ்டனாகி, எனக்குப் பிரியமான புத்திரனே யாகுவாய்" என வுரைத்தார். உடனே வஸிஷ்டர், பிரமனை வணங்கி விடைபெற்று, வருணனுக்கிருப்பிடமான ஸமுத்திரத்திற்குள் சென்றார்.

                அக்காலத்தில் மித்திரன் என்னும் தேவன், வருணனுக்கு மித்திரனாகயிருந்தான். ஒரு ஸமயம் ஊர்வசி என்னும் தேவலோகப் டெண் தனது தோழிமார்களுடன் கூடி, கையில் குடத்தை யேந்தியவளாய், கடற்கரைக்கு வந்து விளையாடலாயினாள். அப்பொழுது மித்திரன், அவளை முதலில் பார்த்து மோகித்தான். அசசமயம் புணரவியலாது அவர்களிருவரும் மனதின் கண்ணே காதல் கொண்டனர். அதனால் ஸ்கலிதமான மித்திரனுடைய ரேதஸ்ஸை, ஊர்வசி தனது கையிலுள்ள குடத்தில் ஏற்றுக் கொண்டாள். அதன் பின்னர் வருணன் அவளைக் கண்டு காதல் கொண்டு அவளிடம் இன்பம் நுகர ஆவல் கொண்டான். அது கண்டு ஊர்வசி தான் முன்னமே மித்திர னுக்கு உடன்பட்டுப் போயின செய்தி கூறி. ஆயினும் வெளிப்பட்ட வருணனது வீர்யத்தையும் (ரேதஸ்ஸையுu) தனது குடத்திலே ஏற்றுக் கொண்டாள்.

                தமக்குச் சரீரத்தை வேண்டி, பிரம்ம தேவரிடம் விடை பெற்றுச் சென்ற வாயு வடிவமான வஸிஷ்டர் அத்தருணம் ஊர்வசியினது சூடத்திலிருந்த, மித்ராவருணர்களுடைய வீர்யத்தில் புகுந்தார். பிறகு அவ்வமர மங்கையான ஊர்வசி, அவ்விடம் விட்டு மித்ரனிடம் சென்றள். அவளைக் கண்டவுன் மித்திரன கோபங் கொண்டவனாகி, ''பெண்ணே! நீ முதலில் என்னைப் புருஷனாக வரித்து, பின்னர் மற்றொருவனை மனதில் கணவனாக வரித்தமையால் நீ கற்பை யிழந்த வளாயினை. ஆதனால் நீ, பூலோகம் சேர்ந்து, புதனது புத்திரனும். காசி ராஜனுமான 'புரூரவஸ்' என்னும் அரசனுக்கு மனைவியாகி வாழக்கடவை" என்று சாபமிட்டான். அந்த சாபத்தினால் ஊர்வசி, புரூரவஸ் சக்கரவர்த்தியை யடைந்தாள். அவ்வரசனுக்கு அவளிடம், 'ஆயு' என்னும் புதல்வன் பிறந்தான். ஆயுவுக்கு, தேவேந்திரனுக்கொப்பான பராக்ரமமுடைய 'நகுஷன்' என்னும், நற்புத்திரன் பிறந்தான். அந்த நகுஷன். இந்திரன் விருத்திரனைக் கொன்று வருந்திய காலத்தில், இந்திர பதம் பெற்று அனேக மாயிரமாண்டு தேவலோகத்தை யாண்டான். மஹாரூபவதியான ஊர்வசி மித்திரனுடைய சாபத்தினால் பூலோகத்தில் பல காலம் வஸித்திருந்து, அச்சாபம் நீங்கப் பெற்று, பின்னர் தேவலோகம் போய்ச் சேர்ந்தான்,” என்றார்.

அறுபத்தைந்தாவது ஸர்க்கம்

[வஸிஷ்டர் சரீரம் பெற்றதும், நிமி, பிராணிகளின் கண் இமையில் வஸிக்கலானதும்,
அவனது உடலை கடைந்ததனால்
, மிதில ராஜனின் உத்பத்தியும்.]

                ஸ்ரீராமன் இவ்வாறாக உரை செய்த ஆச்சரியமான வரலாற்றைக் கேட்ட லக்ஷ்மணன், மிகுந்த ஸந்தோஷத்துடன், “அண்ணா! சரீரத்தை விட்டுச் சென்ற, வஸிஷ்டரும் நிமி சக்கரவர்த்தியும் மீண்டும் எவ்வாறு தேஹத்தை யடைந்தனர்?” என்று கேழ்க, ராமன் மறுபடியும் கூறலாயினான் “லஷ்மணா! ஊர்வசியினது கும்பத்தில் புகுத்த மித்ரா வருணர்களுடைய ரேதஸ்ஸானது பரிபூரணமாக, அதினின்றும், சோதி மயமான இரண்டு முனிவர்கள் உண்டாயினர். முதலில் உண்டானவரே அகஸ்த்திய முனிவராவார். அவர் தோன்றியவுடன், மித்திரனை நோக்கி, நான் உனது குமாரனல்லன் என்று கூறி விட்டுப் புறப்பட்டுச் சென்றார். அகஸ்த்தியர் வருணனது வீர்யத்திலிருந்தே உண்டானவராதலால் அவர் அவ்வாறு கூறினார். பிறகு சில காலம் சென்றதும், அந்த மித்ரா வருணர்களது வீர்யத்தினின்றும் நமது குலகுருவான வஸிஷ்ட முனிவர் உண்டானார்.

                லக்ஷ்மணா! நிமிச் சக்கரவர்த்தி உயிர் பிரிந்து போனது கண்டதும் அங்கிருந்த முனிவர்கள் அவருடைய சரீரத்தை புஷ்ப சந்தனாதிகளாலும், ஆடையாபரணங்களாலும், அலங்கரித்து, அஃது அழியா வண்ணம் ஸுகந்தமிட்டுத் தைல கடாஹத்தில் வைத்துக் காப்பாற்றினர். பிறகு அவ்வரசன் துவக்கிய யாகத்தை, குறைவற நிறைவேற்றி, அவனது யாக தீக்ஷையைப் பூர்த்தி செய்தனர். அதன் பிறகு முனிவர், அந்த அரசனது ஆவியை நோக்கி "அரசனே! நான் உன் விஷயத்தில் மகிழ்ச்சியுற்றனன். உன் உயிர் உடலோடு சேர அருள் புரிகின்றேன்," என்று கூறினார். தேவர்கள் அவ்வரசன் செய்த யாகத்தினால் மிகவும் திருப்தியடைந்து, அவரை நோக்கி, “அரசர் பெருமானே! நீ எங்களை நன்கு பூஜித்தாய், உனக்கு என்ன வரம் வேண்டும்? உனது ஜீவன் எவ்விடம் குடி புகுந்திருக்க வேண்டும் என நீ விரும்புகிறாயோ?” என வினவினார். அது கேட்ட அரசன் மகிழ்வடைந்து, 'தேவர்களே! இனி எனக்குச் சரீரம் வேண்டியதில்லை. பிராணிகளுடைய கண்களில் வளித்திருக்க வரம் வேண்டுகின்றேன்' என்று பதிலளித்தான். தேவர்கள் அவனை நோக்கி, 'ஓ அரசனே! அப்படியே யாகுக. நீ அங்ஙனம் ஸமீரண வடிவாக ஸஞ்சரிக்கையில், எல்லாப் பிராணிகளும் இளைப்பாறுதற் பொருட்டாக, அடிக்கடி கண்களை இமை கொட்டுவார்கள்' எனக் கூறித் தம்மிடஞ் சென்றனர், (நிமியினால் உண்டானது பற்றி இமை கொட்டுதலுக்கு, 'நிமிஷம்' எனப் பெயர் வழங்கலாயிற்று). இஃது இப்படியாக, நிமியினது உடலைப் பாதுகாத்துவந்த முனிவர்கள் அவ்வுடலை எடுத்து அவனுக்குப் புத்திரன் உண்டாவதன் பொருட்டு மந்திரங்களோடு ஹோமம் செய்து, அரணியைக் கொண்டு கடைய லாயினர். அப்படிக். கடையும் பொழுது அதினின்றுமொரு மஹா புருஷன் தோன்றினார். மதனம் (கடைதல்) செய்து உண்டானபடி யால், 'மிதி' எனவும், ஜனித்ததனால் ஜனகர் எனவும், விதேஹனாகி (வெறும் உடலினின்று) உண்டானமையால் ‘விதேஹர்' எனவும், அவருக்குப் பெயர்கள் ஆயின. இந்த விதேஹ ராஜனே ஜனகருக்குத் தலைவரான முதலரசர். இவரால்தான் அந்த தேசத்திற்கே 'விதேஹ மெனப் பெயர் பிரஸித்தமாயிற்று. இவரது குலத்தில் தோன்றிய ஜனக மஹாராஜாவே, எனது மாமனாரும், ஸீதைக்குத் தகப்பனாரு மாவார், என்று கூறி முடித்தார்.

அறுபத்தியாறாவது ஸர்க்கம்

[ராஜரிஷியும், யாக தீக்ஷை பெற்றவருமான நிமி சக்கரவர்த்தி, பொறுமையுடனிருக்க வேண்டியவர்,
ஏன் தனது குல குருவை சபித்தார்
? என்பதில், யயாதி சரிதம்.]

                இப்படியாக ராமன் கூறியதைக் கேட்ட லக்ஷ்மணன்  ஸ்ரீராமனைப் பார்த்து-

                “பிரபுவே! தேவரீர் கூறிய வரலாற்றில் எனக்கொரு ஸந்தேஹம் உண்டாகிறது. நிமி சக்கரவர்த்தி மஹாசூரரான க்ஷத்திரியரன்றோ? அத்துடன் யாக தீக்ஷை கொண்டவருமன்றோ? அப்படி யிருக்கும் போது தமது குலகுருவான வஸிஷ்டரை, பொறுமையின்றி, சீற்றங் கொண்டு சபித்தது யாது காரணம் பற்றியது?” என்று கேழ்க்க, ஸ்ரீராமச்சந்திரன் கூறியது-

                "லக்ஷ்மண! எல்லோரிடத்திலும் எப்பொழுதுமே பொறுமை நிலை கொண்டிருக்காது. கோபத்தை யடக்குவது தர்மமல்லவா. யயாதி போல் கோபத்தை யடக்கிப் பொறுமையைக் கைக்கொள்ள யாராலும் முடியாது. அப்படிப்பட்ட யயாதியின் சரிதத்தைக் கூறுகிறேன். கேள்.முன்பு கூறப்பட்ட நகுஷனுடைய குமாரன் யயாதி என்பவன். அவனுக்கு அழகிய மனைவியர் இருவர். அவர்களுள் ஒருத்தி, அஸுர ராஜனான விருஷபர்வாவினது மகளான சர்மிஷ்டை என்பவள். மற்றொருத்தி சுக்ராசாரியரது மகளான தேவயானை என்பவள். தேவயானை யினிடத்தில் யயாதி மன்னனுக்கு அவ்வளவாக பிரீதியில்லை. அவ்வரசனுக்கு அம்மனைவிமார்களிருவரிடத்திலும், அற்புதமான வடிவழகுள்ளவர்களான இரண்டு குமாரர்கள் பிறந்தனர். சர்மிஷ்டையின் குமாரன் பூரு என்பவன். தேவயானையின் குமரன் யது என்பவன் பூரு நல்ல குணமுள்ளவனாக இருந்தபடியாலும், அவனது தாயிடமுள்ள பிரீதியின் மிகுதியாலும் இளையாள் குமாரனான அவனை அரசன் அதிகமாகப் பாராட்டி வரலானான். இதைக் கண்டு பொறாத யதுவென்பவன், வியசனமதிகரித்தவனாகி தனது அன்னையிடஞ் சென்று, 'தாயே! தந்தை என்னை அனாதரவு செய்து இளையாள் குமாரனை மேலாகக் கொண்டாடுகிறாரே! உயர் குலத்தவரான சுக்ராசாரியரது வயிற்றில் பிறந்த நீ பொறுத்ததற்கரியதான இவ்வவமானத்தை எப்படி ஸஹித்துக் கொண்டிருக்கிறாய்? நாமிருவரும் ஒன்று கூடி இப்பொழுதே தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொள்வோம். அரசன் அஸுர ராஜன் மகளுடனே ஸுகித்து வாழட்டும். இதை நான் இனிப் பொறுக்க முடியாது' என்று கூறினான். இப்படித் தனது அன்புப் புதல்வன் கூறக் கேட்டு, தேவயானை மிகவும் கோபங் கொண்டவளாகித் தந்தையை மனதில் நினைத்தாள். அப்பொழுதே சுக்ராசாரியார் அங்கு வர அவரிடம் அரசரது செய்கையைச் சொன்னாள். சுக்ராசாரியார் தனது மகள் தெரிவித்ததைக் கேட்டு மிக்க கோபங் கொண்டு, யயாதியை நோக்கி, "ஹே நகுஷ குமார! துர்புத்தியுடையவனாகி, என்னை அவமதிக்கின்றபடியால், நீ உடம்பு தளர்ந்து மூப்பு மேலிட்டு மனம் வருந்து வாயாக" என்று சபித்து. தனது புத்திரியை சோகந் தணியச் சமாதானப் படுத்தித் தமதிருப்பிடஞ் சென்றனர். அது தெரிந்து அரசன், அவரிடஞ் சென்று வணங்கிப் பிரார்த்திக்க, அவர், 'யானிட்ட சாபம், ஒரு பொழுதும் வீணாகாது. யாரேனு மொருவன், உனது மூப்பை ஏற்றுக் கொள்ள உடன்படுவானாகில் உனது மூப்பை அவனுக்குக் கொடுத்து நீ அவனது வாலிபத்தைப் பெற்று, உனக்கு வேண்டிய இன்பங்களை அனுபவிக்கலாம்' என வரமளித்தார்.

அறுபத்தியேழாவது ஸர்க்கம்

[பூரு பெற்ற பாக்யம்]

                சுக்ராசாரியர் இப்படிச் சபித்தவளவில், மகாராஜனான யயாதி, யௌவனமிழந்து, மூப்பை எய்தினவனானான். அதனால் அவன் மிகவும் வருத்தமுற்று, தன் குமாரனான யதுவை யழைத்து, 'குழந்தாய்! எனக்குச் சிற்றின்பத்தில் ஆசை இன்னும் ஒழியவில்லை. அஃதொழிவதற்குள் எனது சரீரத்தில் மூப்பு வந்து புகுந்து விட்டது. இந்த மூப்பை நீ ஏற்றுக் கொண்டு, உனது யௌவனத்தை எனக்குக் கொடுப்பாயாகில், நான் இன்னும் சில காலம், வேண்டுமளவு சுகபோகங்களை யனுபவித்துத் திருப்தி யடைந்து, அதன் பிறகு உனது யௌவனத்தை உனக்களித்து, எனது மூப்பை ஏற்றுக் கொள்ளுகிறேன்' என வேண்டினான். அது கேட்டு யதுவானவன், “அரசே! நீர்தான் என்னை அடியோடு விரும்புவதில்லையே,உமக்கு வேண்டாப் பிள்ளையான நான் இந்தப் பீடையைப் பெறுவதற்கு மாத்திரம் வேண்டுமோ? உமது அருமைப் புதல்வனான பூருவே இதனை யேற்றுக் கொள்ளட்டும்” என்று பதிலளித்தான்.

                யயாதி உடனே பூருவை யழைத்து, தனது விருப்பத்தை வெளியிட, அவன், “தந்தையே! இதுவே எனக்குச் சிறந்த பாக்யமாகும். தேவரீருடைய நியமனப்படி நடக்க ஸித்தமாயிருக்கிறேன்” என்றான். உடனே தனது யௌவனத்தை அரசனுக்களித்து, அரசனது மூப்பைத் தான் பெற்றுக் கொண்டான். இப்படியாக யௌவனம் பெற்ற யயாதியரசன், ஆயிரக்கணக்கான யாகங்கள் செய்து,அனேகப் பிரகாரங்களான இன்பங்களை யனுபவித்து பல ஆண்டு காலம் பூமியை ஆண்டனுபவித்து வந்தான். பின்னர் அந்த அரசன், பூருவை யழைத்து, 'குழந்தாய்! இனி நீ உனது யௌவனத்தைப் பெற்றுக் கொண்டு எனது மூப்பை எனக்களித்து விடுவாயாக. நீ என் சொல்லைக் கடவாது நடந்தபடியால், யான் உன் விஷயத்தில் மிகவும் ஸந்தோஷித்து, அதன் மிகுதியால், உன்னையே எனது ராஜ்யத்திற்கு அரசனாக அபிஷேகஞ் செய்கிறேன்' என்று கூறினான். பிறகு தேவயானையின் மகனை நோக்கி, “அடே குமார! நீ ஒரு ராக்ஷஸன். தந்தை சொல் கேளாத மூர்க்கன், ஆகவே நீ அரசினை யிழந்து போகக் கடவாய். உன்னிடம் மிகக் கொடியவர்களான அரக்கர்கள் அனேகர் தோன்றுவார்கள். இனி நீ சந்திர வம்சத்தரசனாகாய்,” என்று கூறிப் பூருவுக்குப் பட்டமளித்துத் தான் வனம் சென்று தவம் புரிந்து, முடிவில் உடலை நீத்துத் தேவலோகம் சென்றான்.

                இவ்வாறு யயாதி மகாராஜன் க்ஷத்திரிய தர்மத்தை மேற்கொண்டு பொறுமை யுடையோனாகிச் சுக்ராசாரியரிட்ட சாபத்தைப் பொறுத்திருந்தான். நிமிச் சக்ரவர்த்தி இவ்வாறு பொறுத்திலன். 'லக்ஷ்மணா! அரசர்களிடம் காரியமாக வருகின்றவர்களை வரவேற்காது உபேக்ஷை செய்வதனாலாய தீமையிப்படிப்பட்டதெனக் கூறினேன். ஆகவே நீ ந்ருகராஜனுக்கு நேர்ந்தவாறு நமக்கு நேரா வண்ணம் நாம் நடந்து கொள்ள வேண்டும்" என்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக