வியாழன், 23 பிப்ரவரி, 2023

ஶ்ரீ வால்மீகி ராமாயணம்–உத்தர காண்டம் 35

அறுபதாவது ஸர்க்கம்

(அயோத்தியைச் சேர்ந்த லஷ்மணன், ஸ்ரீராமனிடம்,

அவனது கட்டளை நிறைவேற்றப்பட்டதைக் கூறி, அவரைத் தேற்றியது)

மறுநாள் உதயமானவுடன் லக்ஷ்மணன் கேசினியாற்றங்கரையை விட்டுப் புறப்பட்டு அன்று நடுப்பகலில் அயோத்தி போய்ச்சேர்ந்தான். லக்ஷ்மணன் ஸ்ரீராமனிடம் சென்று, தலை குனிந்து கொண்டு, வாடிய முகத்துடன் கண்களில் நீர் பெருக அவரை வணங்கி, “அண்ணா! தேவரீருடைய ஆஜ்ஞைப்படி, அடியேன் ஸீதா தேவியை கங்கா தீரத்திலுள்ள, பரிசுத்தமான ஸ்ரீவால்மீகி முனிவரது ஆச்ரமத்தினருகே விட்டுத் திரும்பி வந்து சேர்ந்துள்ளேன். புருஷச்ரேஷ்டரான தேவரீர் இனி இது விஷயமாக சோகிக்க வேண்டாம். காலத்தின் கதி இப்படியாக உள்ளது. கற்றுணர்ந்த மகான்கள், இன்பங்கள் மொய்த்திடினும் கனியார் (அதிகக்களிப்படையமாட்டார்கள்). துயரங்கள் மிகுந்தாலும் முனியார் (வாட்டமுறார்). அவர்களுக்குச் சுகதுக்கங்கள் இரண்டும் ஒன்றேயாகும். எவ்விதமான செழிப்புக்கும் இறுதியில் அழிவு என்பது ஒன்றுண்டே. உயர எழுகின்றவை யாவும் இறுதியில் கீழே விழுகின்றனவையே. அவ்வாறே சேர்க்கைக்கு பிரிவும், உயிர்வாழ்க்கைக்கு மரணமும், அவசியமுண்டாகின்றவையே. ஆகவே, புத்திரன், மனைவி சிநேஹிதன் முதலியோர்களிடமும், தனத்திலும், அதிகமான மனப்பற்று வைக்கலாகாது. என்றைக்கேனும் அவர்களது வியோகம் ஸம்பவிக்குமென்பது நிச்சயம்.

सर्वे शयान्ता नियाः पतनान्ता स्समुच्छ्रयाः ।
संयोग वियोगान्ताः मरणान्त ञ्च जीवितम् ॥
तस्मात् पुत्रेषु दारेषु मित्रेषु च धनेषु च ।
नातिप्रसङ्गः कर्तव्यः विप्रयोगो हि तं ध्रुवम् ॥

ஸர்வே க்ஷயாந்தா நிசயா: பதநாந்தா: ஸமுச்ரயா: ]
ஸம்யோகா விப்ரயோகாந்தா மரணாந்தம் ச ஜீவிதம்
||
தஸ்மாத் புத்ரேஷு தாரேஷு மித்ரேஷு ச தனேஷுச
|
நாதிப்ரஸங்க
: கர்தவ்ய: விப்ரயோகோஹி தைர் த்ருவம்

என்பதையறிந்துள்ளீரன்றோ?

அண்ணா! தேவரீர் இப்படி மனங் கலங்கினால் மீண்டும் நமக்கு உலகாபவாதம் ஸம்பவிக்கும். ஆதலால் தேவரீர் தைரியத்தைக் கைக் கொண்டு வீணான வியஸனத்தை விலக்கிடவும் என்று வேண்டினான். லக்ஷ்மணன் இப்படிக்கூறக் கேட்டு ஸ்ரீராமபிரான், சிறிது மகிழ்ச்சியுடன் அவனை நோக்கி 'லக்ஷ்மண! நீ கூறியவை யாவும் நியாயமானவையே. உனது வார்த்தையைக் கேட்டு நான், மானக்கவலையொழிந்து, மகிழ்ச்சியுறலாயினேன்” என்றருளிச் செய்தான்,

அறுபத்தி ஒன்றாவது ஸர்க்கம்

(அரசனிடம், நீதியைத் தேடி வருபவர்களை உபேக்ஷித்தல் கூடாது என்னும் விஷயத்தில் 'நீருகன்' எனகிற அரசனுக்கு ஏற்பட்ட சாபத்தை, ஸ்ரீராமன் லக்ஷ்மணனிடம் கூறி, தம்மிடம் நீதி வேண்டி வருபவர்களை உடனுக்குடன் விசாரித்து நீதியளித்து அனுப்புமாறு உத்திரவிட்டது)

                ஸ்ரீராமச்சந்திரன், லக்ஷ்மணன் கூறியதைக் கேட்டு சாந்தியை யடைந்தார். பிறகு அவர் லக்ஷ்மணனை நோக்கி,“ஸுமித்ரை பெற்ற செல்வனே! லக்ஷ்மண! நான் நான்கு தினங்களாக. (மனங்கலங்கியிருந்தபடியால்) ராஜ காரியங்களொன்றையும் விசாரித்துச் செய்யவில்லை. அப்படிச் செய்யாமலிருந்தது என் மனதை மிகவும் துன்புறுத்துகிறது. ஆகவே, உடனே. புரோஹிதர்களையும் மந்திரிகளையும், ஸ்த்ரீகளோ, புருஷர்களோ, தங்களுடைய காரியத்தின் பொருட்டு வந்துள்ள நாட்டு ஜனங்கள் அனைவரையும், இங்கு வரவழைக்கவேண்டும். விசாரித்து ஆவன செய்யவேண்டும். நகரத்து ஜனங்களுடைய காரியத்தை பிரதிதினமும் எந்த அரசன் கேட்டு விசாரிக்கவில்லையோ, அவன் இறந்தபின், மிகக் கொடிய நரகத்தில் விழுந்து வருந்துவான். இது. நிச்சயம். லக்ஷ்மண! இதைப்பற்றி, முன்பு நடந்த ஒன்றைக் கூறுகிறேன், கேள்.

                முன்னொரு காலத்தில், ஸத்யமும் நன்னடத்தையுமுடைய 'ந்ருகன்' என்கிற அரசன், கன்றுகளுடன் கூடிய ஒரு கோடிப் பசுக்களை, பொன்னாபரணங்களால் அலங்கரித்து, புஷ்கர க்ஷேத்திரத்தில் பிராம்மணர்களுக்கு தானம் செய்தான். அப்படி தானம் செய்யப் பட்ட பசுக்களில், ஓர் ஏழை பிராம்மணனுக்குக் கொடுக்கப்பட்ட ஒரு பசு, மற்ற பசுக்களுடனே கூடி வேறிடம் சென்று விட்டது. பசியால் வருத்தமடைந்த அவ்வந்தணன், தனது பசுவைத் தேட விரும்பி, பல ஆண்டுகள், பற்பல தேசங்களிலும் சென்று தேடினான். அப்படித் தேடுகையில், 'கன கலம்' என்கிற ஒரு கிராமத்தில், ஒரு பிராம்மணன் வீட்டில் அப்பசுவைக் கண்டான். அப்பசுவும் அதன் கன்றும் மிகவுமிளைத்து, அன்றே இறந்து விடுபவை போலிருந்தன. தனது பசுவைக் கண்ட பிராம்மணன், அதனைப் பெயரிட்டழைக்க, அதுவும் அவனது குரலை யறிந்து, அவனைப் பின் தொடர்ந்து செல்லலாயிற்று. அதைக் கண்ட அப்பசுவை வளர்த்த பிராம்மணன் அதனைப் பின்தொடர்ந்தோடி, அது தன்னுடையதென்று அவனிடம் வாதாடினான். அந்தப் பிராம்மணர்களிருவரும், அப்பசு விஷயமாக விவாதம் செய்து கொண்டு அதனுண்மையை விசாரித்தறிய, அதை தானம் செய்த அரசனிடம் போய்ச் சேர்ந்தனர். அவர்களிருவரும், அரசனின் அரண்மனையின் வெளியில், வெகு நேரம் காத்திருந்தும் உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி கிடைக்க வில்லை. எத்தனை நாட்கள் காத்திருந்தும் அவர்களுக்கு அரச தரிசனம் கிடைக்கவில்லை. அவர்களிருவரும் கோபமுற்று, 'ஓ அரசனே! உன்னிடம் ஒரு காரியம் வேண்டி வந்த, ஏழைகளான எங்களுக்கு' நீ, கண்ணிற் படாது மறைந்திருந்தமையால், நீ ஒரு ஓணானாகி. ஒரு குழியில் வீழ்ந்து, அனேகமாயிரம் வருஷங்கள் வஸித்திருப்பாயாக, என்று சபித்தனர். ஆயினும் அவ்விருவரும், அவ்வரசனிடம் கருணை கொண்டு. கலியுகம் வருவதற்கு முன்னே பூமியின் பாரத்தை நீக்கும் பொருட்டு, நரநாராயணர்களிருவரும் இப்பூமியின்கண் பிறக்கப் போகின்றனர். அவர்களில் நாராயணனான ஸ்ரீவாஸுதேவனை தரிசித்தவளவில் உனக்கு இச்சாபம் நீங்கும்', என்று கூறி, விவாதத்தை விட்டவர்களாகி, அப்பசுவை வேறெரு பிராம்மணனுக்கு தானங் கொடுத்து தம்மிடஞ் சென்றனர்.

                அவ்வரசன் மிகக் கொடியதான அந்த சாபத்தை இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிறான். லக்ஷ்மணா! ஆகவே நம்மைத் தேடி வருகின்றவர்களுடைய காரியத்தை விசாரியாது, வருந்தச் செய்வது, அவர்களுக்குப் பெரிய பாதகமாகும். ஆதலால் நம்மிடம் காரியமாக எவரேனும் வந்திருப்பார்களே யாகில், அவர்களை அதிசீக்கிரத்தில் இவ்விடம் வரவிடுக”, என்று கட்டளையிட்டார்.

அறுபத்தியிரண்டாவது ஸர்க்கம்

(ந்ருகராஜா தனது புத்திரனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்து, தான் சாபத்தை அனுபவித்தது)

                லக்ஷ்மணன் இராமன் சொன்னதைக் கேட்டு, பிறகு இராமனை நோக்கி “அண்ணா! சிறிய பிழைக்குப் பெரிய தண்டனை போன்ற சாபத்தைப் பெற்ற அவ்வரசன் என்ன செய்தான்?” என்று கேழ்க்க ஸ்ரீராகவன் கூறியது—

                “ஸஹோதர! மேல் நடந்தவற்றைக் கூறுகிறேன் கேள். தனக்குப் பிராம்மணர்களால் நேர்ந்த கொடிய சாபத்தை, அவ்வரசன் தனது யோகத்ருஷ்டியினால் கண்டறிந்து, மந்திரிகள் நீதிமான்கள், புரோஹிதர்கள் முதலியவர்களை வரவழைத்துப் பின்வருமாறு கூறினான் - ‘பெரியோர்களே! நான் சொல்லப்போவதைக் கேளுங்கள். நாரதரும் பர்வதரும் பிராம்மணர்களாக வந்து எனக்குச் சாபமிட்டு வானுலகம் சென்றனர். நான் சாபத்தை அநுபவிக்க வேண்டி யுள்ளது. எனவே எனது குமாரனான வஸுவை அரசனாகச் செய்ய விரும்புகிறேன். அதற்கான காரியங்களைச் செய்யுங்கள். மேலும், நான் ஓணானாக உருக்கொண்டதும், வஸிப்பதற்கான குழிகளையும் நிர்மாணம் செய்யுங்கள். அவைகளில், ஒன்று, மழையிலிருந்து காப்பதாகவும், மற்றொன்று பனியினின்று காப்பதாகவும், மூன்றாவது வெய்யிலின் கொடுமையிலிருந்து காப்பதாகவும் இருக்க வேண்டும். அவைகளைச் சுற்றிலும், பழங்களாலும், வாஸனை நிறைந்த பூக்களும் நிரம்பிய செடி கொடிகள் இருக்குமாறும் செய்யுங்கள். நான் அவைகளில் ஸுகமாக வஸித்து எனது சாப காலத்தைப் போக்குகிறேன்," என்றான்.

                மேலும் தனது குமாரனான வஸுவை நோக்கி "குமார! நீ, சிறு பிழையின் பொருட்டு நான் சபிக்கப்பட்டதை யறிந்து எப்பொழுதும் தர்மிஷ்டனாகவே இருந்து கொண்டு பிரஜைகளை ரக்ஷித்து வரவும், இதற்காக நீ வருந்தாதே. தர்மதேவன் நேர்மை யானவனே.

प्राप्तव्यान्येव प्राप्नोति गन्तव्यान्येव गच्छति ।
सन्धव्यायेव लभत दु
:
खानि च सुखानिच।।
पूर्व जात्यन्तरे वत्स मा विषादं कुरुष्व ह ।

ப்ராப்தவ்யாந்யேவ ப்ராப்னோதி கந்தவ்யான்யேவ கச்சதி|
லப்தவ்யான்யேவ லபதே து
:கானிச ஸு-கானிச |
பூர்வே ஜாத்யந்தரே வத்ஸ
!
மா விஷாதம் குருஷ்வ ஹ|

                'மனிதன். அடைய வேண்டியகளையேதான் அடைகிறான். செல்ல வேண்டியவிடங்களுக்கே தான் செல்கிறான், ஸுகங்களையோ, துக்கங்களையோ அடைய வேண்டியவைகளையேதான் அடைகிறான். இவையனைத்தும் முன் வினைக்குத் தக்கவையாகவே ஆகின்றான்.இது நியதி.

                இப்படிக் கூறிய ந்ருகன், ஓணானுருவை யடைந்து, நிர்மாணிக்கப்பட்ட குழிகளில் புகுந்து சாபத்தை யனுடவிதது வருகிறான்." என்றார்.

அறுபத்து மூன்றாவது ஸர்க்கம்

[அரசனான நிமியும் வஸிஷ்ட முனிவரும், ஒருவரை யொருவர் சபித்துக் கொண்டு, சரீரத்தை விட்டது.]

                மேலும் ஸ்ரீராமன் தனது இளைய ஸஹோதானான். லக்ஷ்மணனைப பார்த்து-'இஃதொன்று மட்டுமேயன்று, இதற்கு திருஷ்டாந்தமாக வேறொரு கதையுமுண்டு,' என்றான்.

                இதைக் கேட்ட லக்ஷ்மணன், “அண்ணா! இப்படிப்பட்டவைகளைக் கேழ்க்க எனக்கு விருப்பமதிமாகவே உள்ளது, கூறவும்,” என்று பிரார்த்திக்க, ஸ்ரீராமன் கூறியது - “மஹாத்மாவான இக்ஷ்வாகு ரரஜனுக்குப் பனிரெண்டாவது புத்திரனாகிய 'நிமி' யென்னும்-சக்கரவர்த்தி யொருவர் இருந்தார். அவர் கௌதம முனிவரின் ஆச்ரமத்தருகே, அமராவதிக்கு நிகரான, 'வைஜயந்தம்' எனப் பெயர் பெற்ற, அழகிய நகரமொன்றை நிர்மாணம் செய்து அதில் வஸிக்கலானார்.

                அப்படி யிருக்கையில், அவ்வரசர், 'தீர்க்க ஸத்ரம்' எனப் பெயர் பெற்ற ஒரு யாகத்தைச் செய்யக் கருதி, அதற்குப் புரோஹிதராயிருந்து நடத்தி வைக்குமாறு தனது குல குருவான வஸிஷ்டரைப் பிரார்த்தித்தார். ஆனால் அவர் அரசனைப் பார்த்து "தேவேந்திரன் இதற்கு முன்பே, தனது வேள்விக்கு வருமாறு என்னை வேண்டிக் கொண்டான். அது முடிந்த பின்னர் நீ யாகத்தை ஆரம்பிக்கலாம்' என்று விடையளித்துச் சென்றார். வஸிஷ்டர் திரும்பிவரும் வரை காத்திருக்க மனமில்லாத நிமிச் சக்கரவர்த்தி, அத்ரி, அங்கிரஸ், பிருகு முதலிய தபோதனர்களைப் புரோஹிதர்களாக வரித்து, மற்றுமுள்ள வேதியர்களையும் வைத்துக் கொண்டு. இமயமலைச்சாரலில் தமது நகரத்தருகே கௌதம முனிவரைக் கொண்டு யாகம் செய்யலானார். ஐயாயிரம் வருஷம் தீக்ஷை கொண்டார் அரசர்.

                இஃது இவ்வாறிருக்க, தேவலோகஞ் சென்ற வஸிஷ்டர், இந்திரனது யாகம் முடிந்ததும், தம் அரசனான நிமிச் சக்கரவர்த்திக்கு யாகம் செய்விப்பதன் பொருட்டு விரைந்து வந்தார். வந்தவிடத்தில் அரசர் கௌதமரைக் கொண்டு யாகம் செய்வது அறிந்து, கோபம் கொண்டார். ஆயினும் அரசனைக் காண வேண்டும் எனக்கருதி, அவனரண்மனை வாயிலிற் சென்று ஒரு முகூர்த்த காலம் காத்திருந்தார். அப்பொழுது அரசர் களைப்பினால். நித்திரை செய்து கொண்டிருந்தபடியால் வஸிஷ்டர், அரசன் தன்னை வேண்டுமென்றே, எதிர் கொண்டழைக்காமல் காக்க வைத்தான் எனக் கருதி, கோபங் கொண்டு. ''அரசனே! நீ என்னை அவமதித்தபடியால், உனது உயிர் உடலை விட்டுப் பிரியக் கடவது'' எனச் சாபமிட்டார். பிறகு துயிலெழுந்த நிமிச் சக்கரவர்த்தி தனக்கு நேர்ந்த சாபத்தை யுணர்ந்து, அதிகமாகக் கோபங் கொண்டு. 'நான் உடம்பு தெரியாமல் துயிலுமளவில், நீர் கோபத்தினால் வீணாக என்னைச் சபித்தபடியால், உமது அற்புதமான உடலும், ஜீவனழிந்ததாகக் கடவது” என வஸிஷ்டருக்குச் சாபங் கொடுத்தார் இப்படியாக மஹாப்பிரபாவசாலிகளான, அந்தணர் பெருமானும், சக்கரவர்த்திப் பெருமானும். உள்ளங் கலங்கி ஒருவருக்கொருவர் சாபமளித்த வளவில் இருவரும் உடலை விட்டு உயிர் நீங்கினவர்களாயினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக