நாற்பத்து மூன்றாவது ஸர்க்கம்
(அகஸ்த்யர் கூறிய வாலி ஸுக்ரீவ ஜனனம்.]
அப்பொழுது அந்த ஸபையில், ஸ்ரீராமச்சந்திரன் அகஸ்திய முனிவரைப் பார்த்து, "ரிஷிபுங்கவ! வாலி ஸுக்ரீவர்களின் பிதா! 'ரிக்ஷரஜஸ்' என்று கூறினீர்கள். இவர்களின் தாய் யார் என்பதைக் கூறவில்லையே. அவளின் பெயரையும்-அறிய விரும்புகிறேன். கிருபையுடன் கூற வேண்டும் என்று பிரார்த்தித்தார்.
இப்படி ஸ்ரீராமச்சந்திரனால் கேட்கப்பட்ட அகஸ்திய முனிவர் கூறியதாவது:- “ஸ்ரீராம பத்ர! முன்பொரு ஸமயம், திரிலோக ஸஞ்சார சீலரான நாரதர் என்னுடைய ஆச்ரமத்திற்கு வந்தார். அவரை நான் முறைப்படி உபசரித்து வார்த்தையாடிக் கொண்டிருந்தபொழுது, வாலி, சுக்ரீவர்களின் பிறப்பைப் பற்றி நான் கேட்க அவர் கூறியதை நான் உனக்குக் கூறுகிறேன். ஸாவதானத்துடன் கேட்கவும் ஸுவர்ணமயமானது மஹாமேரு பர்வதம். அதன் மத்யமமான சிகரமானது ஸகல தேவதைகளாலும் விரும்பி வஸிக்கப்படுவது மத்தியில் நூறுயோஜனை விஸ்தீர்ணமுடையது 'பிரம்மஸபா' என்ற இடம். அதில் எப்பொழுதும் பிரம்மா வஸித்து வருகிறார். அவர், ஒரு ஸமயம் ''யோகம்' செய்துகொண்டிருந்தபொழுது அவரது கண்களில் நீர்த்துளி ததும்பியது. அதை அவர் கையினால் எடுத்துக் கீழே எறிந்தார். அந்த நீர்த்துளி ஒரு வானரமாக மாறியது. பெயர் ரிக்ஷரஜஸ். பிரம்மதேவர் அவனைக் கண்டு இனிய மொழிகள் மொழிந்து, "ஹே வானர! இந்த மலையைப் பார். இந்த அழகிய மலையில் தேவர்களும் ரிஷிகளும் வஸிக்கின்றனர். ஆகவே நீயும் இந்த மலையில் கனிகளையும் கிழங்குகளையும் உண்டு, சில காலம் என் அருகிலேயே வஸித்து வா, பிறகு உனக்கு நன்மை உண்டாகும் என்று அருளினார். இதைக் கேட்ட வானரன் அப்படியே ஆகட்டும் எனக் கூறி, மகிழ்ந்து வஸித்து வந்தான். பகலெல்லாம் மலையில் ஸஞ்சரித்து கனிகள், தேன் இவற்றைச் சாப்பிட்டு, அஸ்தமன ஸமயத்தில் புஷ்பங்களையும் கனிவர்க்கங்களையும் எடுத்துக்கொண்டு, பிரம்மதேவனை அணுகி நமஸ்கரித்துப் பூசித்து வந்தான். இப்படியாக வெகுகாலம் சென்றது.
ஒரு ஸமயம் இந்த ரிக்ஷரஜஸ் என்ற வானரன், நடுப்பகலில் தாகத்தினால் பீடிக்கப்பட்டவனாக ஒரு மடுவின் கரையை அடைந்தான். அதனுள் தனது பிரதிபிம்பத்தைக் கண்ட வானரன், சிறிய அலைகளால் தனது பிம்ப உருவம் சற்றே வளைந்து அசைவதைப் பார்த்து, நீரினுள்ளே வேறொருவன் நின்றுகொண்டு தன்னைப் பரிஹஸிப்பதாக நினைத்தான். அதனால் கோபம் கொண்ட அவன் சடக்கென்று தண்ணீரில் பாய்ந்து அவனை தண்டிக்க நினைத்தான் தண்ணீரில் குதித்தான். அங்கு ஒன்றும் இல்லாமையால் மறுபடி கரையேறினான். அப்பொழுது அவனது ஆண் உருவம் மாறிப் பெண்ணினுடைய தாயிற்று. காண்போர் மனதை மயக்க வல்ல அழகான ரூபமும் ஸௌந்தரியமும் மன்மதனுடைய கணை போன்ற புருவமும், கறுத்த குழலும், புன்னகை வாயமைந்த வதனமும் விம்மி வீங்கிய கொங்கைகளும் அமைந்த புதுமையானதோர் பொற்கொடியென அந்தப் பெண்மணி மடுவின் கரையிலே நின்றாள். மேலும், அவள் தாமரைமலர் மேல் அமர்ந்திராத லக்ஷ்மி போலவும், களங்கமற்ற தெள்ளிய நிலவு போன்றவளுமாக மூவுலகத்தவரையும் மயங்கச் செய்து கொண்டு நின்றாள்.
அந்த வேளையில், பிரம்மதேவனைப் பூஜித்து வணங்கிய தேவேந்திரன் அவ்வழியாக வந்தவன் இந்த ஸ்த்ரீயைக் கண்டான். அதே ஸமயத்தில் சூரியனும் அங்கு வந்தான். அவனும் இந்த அணங்கைக் கண்டான். இருவரும் இவளுடைய அழகிய உருவத்தைக் கண்டு, காமனின் கணைக்கு இலக்காயினர். உடனே இந்திரனது வீரியம் ஸ்கலிதமாக (வெளிப்பட) அதனை அவன் அவளது தலையில் விழுமாறு செய்தான். அது அவ்வாறு விழாமல் வாலிலே விழுந்தது. தேவர்களுடைய வீரியம் ஒருபொழுதும் வீணாவதில்லை யாதலால், உடனே அஃது, அதிக பலசாலியான ஒரு வானரமாக மாறியது. வாலிலிருந்து உண்டான காரணத்தினால் அந்த வானரனுக்கு. 'வாலி' என்றே பெயர் வழங்கலாகியது. சூரியனும் அவ்வாறே அநங்கனுக்கு வசமாகித் தனது வீரியத்தை அத்தப் பெண்மானின் கழுத்தில் வீழ்த்தினான். க்ரீவை என்கிற கழுத்தில் வீழ்ந்த அந்த வீரியம் ‘ஸுக்ரீவன்' எனப் பெயர் பெற்ற வானரமாயிற்று. பிறகு தேவேந்திரன் ஒரு காஞ்சன (பொன்) மாலையைத் தனது குமாரனான வாலிக்குப் பரிசாக அளித்துவிட்டுத் தேவலோகம் சென்றான். சூரியன் தனது குமாரன், வாயுகுமாரனிடம் சேருவானென உணர்ந்து, தன் காரியத்திலே கண்ணுற்றவனாகி, விண்ணிடையே சென்றான்.
ஸ்ரீராமசந்திர! அன்றிரவு கழிந்து மறுநாள் காலையில், சூரியன் உதித்தவளவில், அந்த வனிதை மறுபடி வானரமே ஆனாள். ரிக்ஷரஜஸ் என்ற அவ்வானரன், தன்னருகே நின்ற காமரூபிகளான இரண்டு குமாரர்களையும், கண்டு களிப்படைந்தவனாகி, அவ்விடத்திலுள்ள அம்ருதத்திற்கொப்பான மதுவை அருந்தச் செய்து, அவர்களுடன் பிரம்மதேவனது இருப்பிடம் சேர்ந்தான்.
பிரம்மாவும் தனது, (குமாரர்களுடன் கூடின) மகனைக் கண்டு களிப்புற்று, அருகிலிருந்த தேவதூதன் ஒருவனை நோக்கி 'நீ இவ்வானரர்களை அழைத்துக் கொண்டு கிஷ்கிந்தாபுரிக்குச் செல்லவும். அந்த நகரம் ஸகல சிறப்பும் பொருந்தி மிக மேன்மை பெற்று விளங்குகிறது. அங்கு வானர வீரர்கள் திரள்திரளாக வஸிக்கின்றனர். முன்பு எனது கட்டளைப்படி, விச்வகர்மாவினால், நவரத்னங்கள் நிரம்பப் பெற்ற மிகப் பெரிதான கடை வீதிகளுள்ளதாகி அந்நகரம் அநேகவிதமான அரண்களுடனே, நிருமிக்கப் பட்டுள்ளது. காமரூபிகளான வானரர்கள் விசேஷமாக வஸிக்கும் அவ்விடத்திற்கு, நமது குமாரனான ருக்ஷரஜஸ் என்னும் இவ்வானரனை இவனது குமாரர்களுடனே அழைத்துக் கொண்டு போய், அங்குள்ள ஸகல வானரர்களையும் அழைத்துச் சபைக் கூட்டி, நமது உத்திரவு இன்னதென்பதை யறிவித்து, அவர்களுடைய மத்தியில், இவனைச் சிங்காசனம் ஏற்றி, வானர அரசனாக அபிஷேகம் செய்யவும் என்று கூறிக் கட்டளையிட்டார்.-
தேவதூதனும் அவ்வாறே, அவனைக் கிஷ்கிந்தைக்கு அழைத்துச் சென்று, அவனை அவ்விடத்திற்கு அரசனாக்கினான். இங்ஙனம் ரிக்ஷரஜஸ்ஸு பட்டாபிஷேகம் செய்துகொண்டு இப் புவியிலுள்ள வானரர்களனைவரையும், தனது கட்டளைக்கு உட்படுத்தி ஆட்சி செய்து வரலாயினன். இந்த ரிக்ஷரஜஸ் என்னும் வானரனொருவனே, வாலி சுக்ரிவன் இருவருக்கும், தந்தையும் தாயுமாகின்றனன்.
அகஸ்த்யர் - “ஸ்ரீராமச்சந்திர! இந்த சரித்திரத்தை எவனொருவன் சொல்லுகிறானோ, எவன் கேட்கிறானோ, அவன் இஷ்ட ஸித்தியைப் பெறுவான். இப்படியாக, ராக்ஷஸர்களின் உத்பத்தியும், வானரர்களின் உத்பத்தியும் என்னால் விஸ்தரமாக உரைக்கப் பட்டது. உனக்கு மங்களம் உண்டாகட்டும்” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக