செவ்வாய், 24 ஜனவரி, 2023

வால்மீகி ராமாயணம்–உத்தரகாண்டம் 26

நாற்பத்திரண்டாவது ஸர்க்கம்.

(மறுநாள் ஶ்ரீராமபிரான் ஸபைக்கு எழுந்தருளல்)

      இவ்வாறு ஶ்ரீராமபிரான் பட்டாபிஷேக மஹோத்ஸவத்தைக் கண்டருளிய பின்பு, முதல் தினத்தை முனிவர்களுடன் பேசிப் பொழுது போக்கி, அன்று ராத்திரி அந்தப்புரத்தில் நித்திரை கொண்டனன். அன்றிரவு கழித்து விடியற்காலையில் ஶ்ரீராமபிரானைத் திருப்பள்ளி எழுமாறு, சுப்ரபாதம் சொல்லிப் போற்றிப் புகழும் துதிபாடகர்கள் ராஜமாளிகை வாயிலில் வந்து கூடி நின்றார்கள். அவர்கள் நன்கு சிக்ஷிக்கப்பட்ட கின்னரர்கள் போல இனிமையான குரல்களை உடையவர்களாகப் பின்வருமாறு துதித்தனர்.

वीर सौम्य विबुत्यस्व कौसल्या प्रीतिवर्धन ।
जगद्धि सर्वं स्वपितित्वयि सुप्ते नराधिप ॥

வீர ஸௌம்ய விபுத்யஸ்வ கௌஸல்யா ப்ரீதிவர்தன|
ஜகத்தி ஸர்வம் ஸ்வபிதி த்வயி ஸபதே நராதிப||

        ஹே வீரனே! அழகியவனே! கௌஸல்யாதேவிக்கு ஆனந்தத்தை வளர்ப்பவனே! பிரஜாநாதனே! நீ துயிலெழுந்து வரவேண்டும். நீ கண்ணுறங்கினால் உலகமனைத்துமே உறங்கிவிடுமே! என்றும், உனது பராக்கிரமம் விஷ்ணுவுக்கு நிகரானது, உனது அழகு அச்விநீ தேவதைகளுடையது போன்றது, அறிவினால் நீ பிரஹஸ்பதிக்குச் சமமானவன், நீ பூமியைப் போன்ற பொறுமையுள்ளவன், உனது தேஹகாந்தி சூரியனுடையது போன்றது, வாயு போன்ற கதியையுள்ளவன் நீ, ஸமுத்திரம் போன்ற காம்பீர்ய முடையவன் நீ, மலை போன்று அசைக்க முடியாதவன், சந்திரன் போன்று இனிமையாகக் காணத்தக்கவன், இதற்கு முன்பு, உன்னைப்போன்று, அசைக்க முடியாதவர்களாயும், ஜனங்களிடத்தில் மிக்க அன்பு பூண்டவர்களாயும், தர்மநிஷ்டர்களாயுமுள்ள அரசர்கள் இருந்ததில்லை என்றும்,

        ஹே புருஷ ச்ரேஷ்ட! உன்னைக் கீர்த்தி என்றும் விட்டகலாது, லக்ஷ்மியும் உன்னிடத்தில் நித்யமாக வஸிப்பாள், அடக்கமும் தர்மமும் என்றுமே உன்னை விட்டு அகலாமலிருக்கும் என்றும்,

        இப்படியாகத் துதிக்கப்பட்ட ராகவன், வெண்பட்டுமயமான ஹம்ஸதூலிகா மஞ்சத்திலிருந்து, நாகத்தணையில் துயிலெழும் நாராயணனைப் போல் எழுந்து, காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, பகவத்ஸந்நிதியை அடைந்து, அங்கு இக்ஷ்வாகு குலதேவதையைப் பூஜித்து, பித்ருக் கடன்களையும் முடித்துக்கொண்டு, பிராம்மணர்களையும் தானம் முதலியவற்றால் திருப்தி செய்வித்து, அங்கிருந்து பரிஜனங்கள் மந்திரிகள் புடைசூழ ஆஸ்தான மண்டபத்தை அடைந்தான்.

        ஶ்ரீராகவன் அங்கு வந்து அமர்ந்தவுடன், வஸிஷ்டர் முதலான மகரிஷிகளும், ஸாமந்த ராஜாக்களும் இந்திரனைச் சூழ்ந்து அமர்ந்துள்ள தேவர்கள் போன்று அமர்ந்தனர். ஶ்ரீராமனது அருகில், பரத லக்ஷ்மண சத்துருக்னர்கள், யாகத்தில் மூன்று வேதங்கள் விளங்குவதைப் போன்று விளங்கினர். ஸுக்ரீவன் முதலான இருபது வானர வீரர்கள் (இஷ்டப்படி உருமாறக்கூடியவர்கள்) சூழ்ந்து அமர்ந்தனர். விபீஷணனும் தனது நான்கு மந்திரிகளுடன் அமர்ந்தான்.

        இப்படி விளங்கும் இந்த ஸபையானது தேவேந்திரனுடைய ஸபையைக் காட்டிலும் மேலானதாகக் காணப்பட்டது. பலரும் பலவிதங்களான புண்ணியக் கதைகளை, ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்தனர்.    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக