வியாழன், 2 பிப்ரவரி, 2023

வால்மீகி ராமாயணம் – உத்தர காண்டம் 28-

நாற்பத்து நாலாவது ஸர்க்கம்.

[அகஸ்த்யர் ராமனிடம், ராவணன் ஸீதையை அபஹரித்ததற்குக் காரணம் கூறுதல்]

        இப்படி வாலி சுக்ரீவர்களின் உத்பத்தியைக் கேட்ட ஸ்ரீராமன் மிகவும் சந்தோஷமடைந்தார். மறுபடியும் அகஸ்திய முனிவர், ஸ்ரீராமளைப் பார்த்து ஶ்ரீராம! மற்றுமொரு முந்தைய விருந்தாத்தந்தைக் கூறுகிறேன். அதன் மூலமாக ஸீதையை ராவணன் என் அபஹரித்துச் சென்றான் என்பது விளங்கும். இதை ஸாவதானத்துடன் கேட்கவும் எனக் கூறி. சொல்ல ஆரம்பித்தார்.— ஸ்ரீராமபத்ர! முன்பு கிருதயுகத்தில் பிரம்மதேவனின் புத்திரரான சநத்குமாரர். சூரியன் போலப் பிரகாசித்துக் கொண்டு வீற்றிருப்பது கண்டு, ராவணன் மிகவும் வினயத்துடன் அவரை வணங்கி வினவலாயினன் "ஹே! தபோதனரே! இவ்வுலகில் உத்தம புருஷன் யாவன்? தேவர்களனைவரிலும் அதிகமான ஆற்றலுடையவன் யாவன்? யாரைத் துணையாகக் கொண்டு, தேவர்கள் போர் செய்து பூமியில் எதிரிகளை வெல்லுகின்றனர்? எவனைக் குறித்து வேள்வி செய்கின்றனர்? யோகிகள் எவனை உள்ளத்திற்கொண்டு நித்யமாகத் தியானம் செய்கின்றனர்? இவற்றை எனக்கு அருள் கூர்ந்து உரைப்பீராக" என்று,

        இதைக்கேட்ட அவர், ராவணனுடைய உள்ளத்திலுள்ளதை யோகத்ருஷ்டியினால் அறிந்தவராகப் பின்வருமாறு கூறினார். “ஹே ராவண எவன் இவ்வுலகமனைத்தையும், படைத்துக் கெடுத்துக் காத்து வருகிறானோ, எவனுடைய உத்பத்தி யாராலுமறியப் படாமலுள்ளதோ. எவனை தேவாஸுர கணங்கள் நித்யமாக வணங்கி வழிபடுகின்றனவோ, அவனே, விஷ்ணு, ஹரி, நாராயணன் எனப்படுபவன். புராணம், வேதம், பாஞ்சராத்ரம் முதலான சாஸ்திரங்கள் அவனையே கூறுகின்றன. அவனுடைய நாபீகமலத்திலிருந்து உண்டான பிரம்மதேவன், சராசரங்களுடன் கூடின இவ்வுலகினைப் படைத்தான். ஸகல சாஸ்திரங்களாலும் புகழப்படும் அந்த நாராயணனையே யோகிகள் எப்பொழுதும் த்யானிக்கின்றனர். தைத்யர்கள் தானவர்கள் இராக்கதர் முதலான தேவ சத்ருக்கள் அனைவரையும் அவனே, போர்க்களத்தில் ஜயங்கொள்பவன்'' என்று.

        இவ்வாறு மஹரிஷி சொல்லக் கேட்ட ராவணன் மறுபடியும் அவரை வணங்கி, "ஸ்வாமின்! போர்க்களத்தில், மரணமடையும் தைத்யர், தானவர்-அரக்கர் முதலியோர் என்ன கதியையடைகின்றனர்? அப்படி விஷ்ணுவினால் வதையுண்டவர் யாவர்?" என வினவினான் அதற்கவர். ராவணனை நோக்கி, 'ராக்ஷஸேச்வர! தேவதைகள் கையினால் வதையுண்டவர்கள் எப்பொழுதும் தேவலோகம் செல்லுகின்றனர். மீண்டுமவர்கள் அவ்வுலகத்தினின்றும் நழுவிப் பூலோகத்தில் வந்து பிறக்கின்றனர். அவர்கள் அனைவரும் பூர்வஜன்மத்தின் புண்ய பாவங்களுக்குக் கேற்றபடி பிறத்தும் இறந்தும், இன்பமும் து்பமும் அனுபவிக்கின்றனர் ஆனால் சக்ரபாணியான விஷ்ணுதேவனால், வதையுண்ட வீரர்களோ, அங்ஙனமில்லாமல், அக்கடவுளது வீடான, அந்தமில் பேரின்பமான மோக்ஷ ஸாம்ராஜ்யத்தை அடைகின்றனர். ஆகவே, அந்தப் பரம புருஷனது கோபமும் அவர்களுக்குக் கருணையேயாகின்றது” என உரைத்தார்.

        இதுகேட்ட அரக்கர் தலைவனான ராவணன் மிக்க மகிழ்ச்சியும் வியப்புமடைந்தவனாக, “யான் போர்க்களத்தில் அந்த நாராயணனை எதிர்த்து நிற்கும் வகை யாது?” என விசாரங் கொள்ளலானான்.

       

நாற்பத்தைந்தாவது ஸர்கம்  

[ஸ்ரீமந் நாராயணனின் கைகளால் வதத்தை விரும்பும் ராவணனுடைய மனோபாவத்தை யறிந்த ஸநத்குமாரர், நாராயணனே ராமனாகப் பூமியில் அவதரிக்கப் போவதைக் கூறுவது ]

        இப்படிச் சிந்தனையிலாழ்ந்த ராவணனைப் பார்த்து ஸநத்குமாரர், “ராவண! உனது எண்ணம் போல், நீ நாராயணனோடு போர் புரிவாய், அதற்கான சந்தர்ப்பம் உண்டாகும்" என்றார். அதைக் கேட்ட ராவணன் “ஸ்வாமின்! அந்த ஸந்தர்ப்பம் எப்பொழுது உண்டாகும்? எத்தனை காலம் அதற்காக தான் காத்திருக்க வேண்டும்! என்றும், அந்த நாராயணனுடைய லக்ஷணத்தையும் கூறவேண்டும். எனவும் வேண்டினன். அதற்கு அம்முனிவர் அந்த நாராயணன் எங்குமுளன், ஸூக்ஷ்மகுபி. கண்களுக்குப் புலப்படாதவன், ஆதி மத்ய அந்த ரஹிதன், அவனால் இவ்வுலகமனைத்தும் வியாபிக்கப்பட்டுள்ளது. அவனே பிரணவ ஸ்வரூபி, இவ்வுலக மனைத்தையும் தரிப்பவன்; அந்தப் பரமபுருஷனே. ஐந்து பூதங்களாய். இரண்டு சுடராய், அருவாகி, நாகத்தணையனாய் நடுக் கடலுள் உறங்குவான் போல் யோகநித்திரை புரிபவன், சகல உலகங்களையும், படைத்துக் கெடுத்துக் காத்துழலும் காரியத்தைத் தனக்கு ஒரு லீலையாக உடையவன். ஹே தசானன! நீலோத்பவத்தின் இதழ் போன்ற நீல நிறமான திருமேனியும் தாமரை மலரினது இதழ் போன்ற சிவந்த பீதக வாடையும் உடையவனாகி, மாரி காலத்து மின்னலோடு கூடின கருமுகிலென விளங்குகின்றனன். தாமரைக் கண்ணனான அவனது திருமார்பில், ஸ்ரீவத்ஸம் என்னும் மறு விளங்க, அவனது கருமுகில் போன்ற திருமேனியில், நீருண்ட மேகத்தினிடையே தோன்றும் மின்னற் கொடியென வெற்றி வடிவமான திருமகள் என்றும் இணை பிரியாது வீற்றிருக்கின்றனள்.

        அம்மஹா புருஷனை. தேவர்களேனும் அஸுரர்களேனும், பன்னகர்களேனும் காணும் திறமுடையவரல்லர். எவர்களிடத்தில் அவன் அருள் புரிகின்றனனோ. அவர்களே அவனைக் காணவல்லவர்கள். தன்னுடையப் பிரயத்தினத்தினால் எவரும் அவனைக் காண முடியாது. ராவண! இத்தகைய பரமபுருஷனை எங்ஙனம் உன்னால் காண முடியும்? ஆயினும் நீ அவனைக் காண விரும்புவாயேயாயின். அதற்கு யானொன்று சொல்லுகிறேன். கிருதயுகம் கழிந்த பின்னர். திரேதா யுகத்தின் துவக்கத்தில், ஸ்ரீமஹாவிஷ்ணு, இக்ஷ்வாகு வம்சத்தில் தசரத குமாரனாக, ராமனாக அவதரிப்பான். அக்காலத்தில், ஸ்ரீமகாலக்ஷ்மியே ஸீதாதேவி என்ற பெயருடன், ஜனக மகாராஜனுக்குப் புத்ரியாகப் பூமியினின்று, உத்பவித்து, அவ்விராமனுக்கு தர்ம பத்னியாவாள். அந்த ராமன் பித்ருவாக்ய பரிபாலனத்தின் பொருட்டுத் தன் மனைவியுடனும் தம்பியுடனும் தண்ட காரண்யத்திற்குச் சென்று அவ்வனம் முழுதும் ஸஞ்சரிக்கப் போகிருன். அச்சமயம் நீ அவனைக் காண்பாய்' என்று கூறினார்.

        “ஸ்ரீராம! இவ்வாறு ஸநத்குமாரர் மொழிந்ததைக் கேட்டு ராவணன், அம்முனிவரிடம், விடைபெற்று, அவர் கூறிய வார்த்தைகளை ஓயாது சிந்தனை செய்து கொண்டு மனம் மகிழ்ந்து, உன்னுடன் பகை கொண்டு போர் புரிய விருப்பமுற்று ஸீதையை அபஹரித்துச் சென்றனன்" என்று அகத்தியர் கூறினார்.

        இந்த விருத்தாந்தத்தைக் கேட்ட ஸ்ரீராமன், ஆச்சரியத்தினால் மலர்ந்த கண்களையுடைய வராகித் தலையை அசைத்து மகிழ்ந்தவராகி, மறுபடியும் அகஸ்த்ய முனிவரைப் பார்த்து, மேலும் பழைய விருத்தாந்தங்களை உரைத்திட வேண்டுமெனப் பிரார்த்தித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக