வியாழன், 22 டிசம்பர், 2022

ராமாயணம் -- உத்தர காண்டம் 15


இருபத்தைந்தாவது ஸர்க்கம்.

(ராவணன் சூரியனிடம் செல்வதும், அவனை வென்றதாகத் தானே நினைப்பதும்)

       பிறகு ஆலோசனை செய்து ராவணன் சூரியனை ஜயிக்க நினைத்து, ஸூர்யலோகம் சென்றான். அங்கு அவன் ஒளிமயமானவனும், மங்களகரனும், உயர்ந்த கர்ண குண்டலங்களால் விளங்கிய முகமண்டலத்தை உடையவனும், உயர்ந்த ஸ்வர்ணமயமான தோள்வளைகளைத் தரித்தவனும், சிவந்த மாலையை அணிந்தவனும், செஞ்சந்தனம் பூசிய மேனியை உடையவனும், ஆயிரம் கிரணங்களோடு கூடியவனும், விபுவும், ஸப்தாச்வ வாஹனனும், ஆதி மத்ய அந்த ரஹிதனும், தேவதேவனுமான ஆதித்யனைக் கண்டான். அவனுடன் வந்த மந்திரிகள் சூரியனுடைய தாபத்தை ஸஹிக்க மாட்டாதவர்களாக நின்றனர்.

    அப்போது ராவணன் தனது மந்திரியான ப்ரஹஸ்தனைப் பார்த்து, “ ப்ரஹஸ்த! நீ உடனே சூரியனிடம் சென்று, ராவணன் வந்துள்ளான். நீ அவனுடன் போர் புரிகிறாயா? அல்லது தோற்றேன் என ஒப்புக் கொள்கிறாயா? என்று நான் கேட்டதாகச் சொல்லி , அவனது மறுமொழியை அறிந்து வா” எனக் கூறினான். அவனும் அவ்வாறே சூரியனிருக்குமிடம் சென்றான். அங்கே பிங்கன், தண்டீ என்ற இரண்டு த்வார பாலகர்களைக் கண்டு, அவர்கள் மூலமாக ராவணனின் விருப்பத்தைத் தெரிவிக்கச் செய்து, சூரியனிடம் தான் நெருங்க முடியாதபடியால் வெளியிலேயே நின்றான்.

      தண்டீ என்பவன் உள்ளே விஷயத்தைச் சூரியனிடம் கூறினான். அதற்கு, சூரியன் நன்கு ஆலோசித்து, “ நீ சென்று ராவணனை எதிர்த்து யுத்தஞ் செய்து வெற்றி பெறினும் பெறுக! அது முடியாதாகில் நான் தோற்றேன் என்று கூறினாலும் கூறுக. உனக்கு எது தோன்றுகிறதோ அதைச் செய்க. எனக்கு வீண்பொழுது போக்க நேரமில்லை” என்று கூறினான். தண்டீ ராவணனிடம் சென்று சூரியன் சொன்னவற்றை விளங்கக் கூறினான். அது கேட்ட ராக்ஷஸ ராஜன் தான் வெற்றி கொண்டதாக எண்ணி ஜயகோஷம் செய்துகொண்டு அவ்விடத்தை விட்டு அகன்றான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக