5. உத்தியோக பர்வம்
மீனமாகியுங் கமடமதாகியும் மேருவை யெடுக்குந்தா
ளேனமாகியு நரவரியாகியு மெண்ணருங் குரளாயுங்
கூனல்வாய்மழுத் தரித்தகோவாகியு மரக்கரைக்கொலைசெய்த
வானநாயக னாகியுநின்றமான் மலரடிமறவேனே.
வினா 1.- இவ்வாறு பாண்டவர்கள் வெளிவந்ததும், விராடராஜன் ஸபையில் மேல்நடக்கவேண்டிய காரியத்தைப் பற்றி யார் யார் என்னென்ன சொல்லக் கடைசியில் என்ன தீர்மானம் ஏற்பட்டது.
விடை... விராடராஜன் ஸபையில், பாண்டவர்கள் வெளி வந்து விளங்குகிறார்கள் என்று கேள்விப்பட்டதும், அவர்களது ஸநேகிதர்களாகிய யாதவாள் முதலியவர்கள் எல்லோரும் துருபத ராஜனும், அங்குவந்து கூடினார்கள். கிருஷ்ணபகவான், கூடிய சீக்கிரத்தில் துர்யோதனனுக்கு ஒரு தூதனை அனுப்பி, தர்மபுத்திரரது, இராஜ்யபாகத் தைச் சீக்கிரம் கொடுத்துவிடும்படி தெரிவிக்கவேண்டும் என்று தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார். பலராமர், எப்பொழுதும் துர்யோதனனிடம் பக்ஷபாதியாகையால் அவனைக் கொஞ்சம் தாங்கிச் சில வார்த்தைகள் சொல்ல, உடனே இவர்கள் தம்பியாகிய ஸாத்யகி என்பவன் பலராமரை நடு ஸபையில் கடுமையான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தினான். உடனே துருபதராஜன் எழுந்து, “ஒருவேளை சண்டைவந்தால் அதற்கு நாம் தயாராய் இருக்கவேண்டும். ஆதலால் நமக்கு அதில் ஸகாயம் செய்யச் சீக்கிரத்தில் சிற்றசர்களுக்கு இந்த விஷயங்களைத் தெரிவித்து அவர்களை வெகு துரிதமாய் படைகள் சேர்க்கச் சொல்லவேண்டும்" என்று தனது அபிப்பிராயத்தை வெளியிட்டான். இதைக் கிருஷ்ணபகவானும் அங்கீகரித்தார். இவ்வாறுபடைகள் சேர்ப்பதற்கு, சிற்றரசர்க ளிடம் சில தூதரையும், தர்மபுத்திரரது இராஜ்ய பாகத்தைக் கொடுத்துவிடும்படி சொல்லி வருவதற்காகத் துர்யோதனனுக்கு ஒரு தூதனையும் அனுப்புவதாகத் தீர்மான மானவுடன், கிருஷ்ணபகவான் யாதவர்களை அழைத்துக்கொண்டு விராடராஜனிடம் மரியாதைகளைப் பெற்றுத் துவாரகையை நோக்கிச் சென்றார்.
வினா 2.- இப்படி கிருஷ்ண பகவான் சென்றதும், துருபதராஜன் இந்தத் தீர்மானங்களை எவ்வாறு நடத்தினான்?
விடை. பரதகண்டத்தில் உள்ள தமக்குத்தெரிந்த அரசர்கள் எல்லோரிடத்தும், பாண்டவர்களுக்கு ஸகாயமாய்ப் படை முதலியவைகளோடூ புறப்பட்டு வர வேண்டும் என்று சொல்லி வருவதற்காக பல தூதர்களை அனுப்பினான். துர்யோதனனுக்குத் தனது புரோஹிதர்கள் ஒருவரை அழைத்து, கேட்டவர் மனம் உருகிப் பாண்டவருக்கு இராஜ்ய பாகம் கொடுப்பது நியாயம் என்று சொல்லும் படியாக, வார்த்தை சொல்லும் வழிகளை அவருக்கு எடுத்துக்காட்டி, அவரை ஹஸதினாபுரத்திற்குத் தூதாக அனுப்புவித்தான். இதன் பின்பு பாண்டவர்களை விராடராஜனும் துருபத ராஜனுமாகச் சேர்ந்து உபப்பிலாவ்யம் என்ற கிராமத்தில் குடியேற்றி ஸுகமாய்ப் பாதுகாத்து வந்தனர். அப்பொழுது பாண்டவர்களிடம் அநேக அரசர்கள் தமது படைகளுடன் வந்துசேர்ந்தார்கள்.
வினா 3.- யாதவர்களையும் கிருஷ்ணபகவானையும் படைத்துணையாக அழைப்பதற்கு யார் சென்றது? அங்கு, என்ன விசேஷம் நடந்தது?
விடை.- அர்ஜுனனே கிருஷ்ண பகவானைப் படைத்துணையாக அழைப்பதற்குப் புறப்பட்டான். அங்கு சென்று கிருஷ்ணபகவான் இருக்குமிடம் போகையில், அங்கு அவர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதையும் தனக்கு முன்னமே துர்யோதனன் மகா இறுமாப்போடும், அவர், கால்மாட்டில் உட்கார்ந்தால் மானக்குறைவு என்கிற எண்ணத்தோடும், அவர் தலைமாட்டில் உட்கார்ந்திருப்பதை.யும் கண்டான். உடனே அர்ஜுனன் மஹா விநயம், பக்தி முதலிய நற்குணங்களோடூ கிருஷ்ணபரமாத்மா வின் கால்மாட்டில் வந்து நமஸ்கரித்துத் தரையில் உட்கார்ந்தான். அவன் வரவை எதிர்பார்த்திருந்த மாயாவியான கிருஷ்ணர் தூக்கத்திலிருந்து எழுந்திருப்பவர்போல் கண்ணைத் தேய்த்துக்கொண்டு உடனே எழுந்தார். அர்ஜுனன் உடனே அவர் கண்ணில் பட, "உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்க, அதற்கு அர்ஜுனன் "எனக்கு நீர் போரில் ஸகாயமாய் வரவேண்டும்” என, 'அப்படியே ஆகட்டும்' என்று ஒப்புக்கொண்டார்.
வினா 4.- முன்னமேயே வந்து காத்துக்கிடந்த துர்யோதனன் கதி என்னமாயிற்று?
விடை.- முன் சொல்லியபடி அர்ஜுனனுக்கு வாக்களித்து விட்டு தற்செயலாய் திரும்புபவர் போல் பகவான் தலையைத் திருப்பத் துர்யோதனனைக் கண்டார். உடனே அவனிடமிருந்து அவன் நோக்கத்தை அறிந்துகொண்டு, "முன் அர்ஜுனனுக்கு ஸகாயம் செய்வதாக நான் வாக்களித்தாய்விட்டது. ஆகையால் கிருதவர்மாவிடம் இருக்கும் ஒரு அக்ஷோகணி ஸேனையை உனக்கு ஸகாயமாய் அனுப்புகிறேன்" என்று பகவான் சொல்ல, அதைத் தூர்யோதனன் ஒப்புக்கொண்டு போய்விட்டான்.
வினா 5.- கிருஷ்ண பகவானை படைத்துணையாக அழைக்கப்போன துர்யோதனன், எவ்வாறு கிருதவர்மாவினது அக்ஷோகணி ஸேனைகளைப் பெற்று திருப்தி அடைந்து போனான்?
விடை.- துர்யோதனன் தனது எண்ணத்தைத் தெரிவித்ததும், பகவான் “நான் இந்த யுத்தத்தில் படை எடுக்கப் போகிறதில்லை. படை எடுக்காத என் ஸகாயம் வேண்டுமா? அல்லது, படை எடுத்துப் போர் செய்யக்கூடியதும் கிருதவர்மாவால் நடத்தப்பெற்றதுமான ஒரு அக்ஷோகணி ஸேனை வேண்டுமா?" என்று கேட்டார். அப்பொழுது பகவானது குணாதிசயங்களை அறியாத துர்யோதனன், கிருதவர்மாவின் ஸேனையை ஸந்தோஷமாய்ப் பெற்றுக் கொண்டு, ஹஸதினாபுரி போவதற்கு முன், பலராமரிடம் வந்தான். அவர் “இருதிறத்தாரும் எனக்கு வேண்டியவர்களாகையால், நான் ஒரு பக்கத்திலும் சேரமாட்டேன்” என்று மறுக்கத் துர்யோதனன் ஹஸ்தினாபுரம் சென்றான்.
வினா 6.- பகவான் படை எடாது பாண்டவர்களுக்கு எவ்வாறு ஸகாயம் செய்வதாக ஒப்புக்கொண்டார்?
விடை... பகவான் அர்ஜுனனது வேண்டுகோளின்படி, அவனுக்கு ஸாரதியாக இருந்து யுத்தத்தை ஒழுங்குபெற நடத்திவருவதாக ஒப்புக்கொண்டார்.
வினா 7.- அப்பொழுது பாண்டவர்களுக்கு ஸகாயமாக வந்த எந்த அரசனை துர்யோதனாதியர் எவ்வாறு வசப்படுத்திக்கொண்டார்கள்?
விடை.- பாண்டவர்களது மாமனாகிய மத்திரதேசாதிபதி சல்லியன் தனது ஏராள மான ஸேனைகளோடு பாண்டவர்கள் இருக்கும் உபப்லாவ்யத்தை நோக்கிப் புறப்பட்டான். இந்தச் செய்தியை துர்யோதனன் தெரிந்துகொண்டு சல்லியன் வரும் வழியில் அனேக அரண்மனைகள், கிணறுகள், தண்ணீர்ப்பந்தல் கூடாரங்கள் முதலியவைகளை ஏற்படுத்தி, காரியஸ்தர்கள் மூலமாய் இவைகளை நடத்தி வந்தான். இவைகளால் ஸந்தோஷமடைந்து சல்லியன் இதை ஏற்படுத்திய தர்மபுத்திரரது ஆட்கள் எங்கே, அவர்களுக்கு வெகுமதி அளிக்கிறேன்' என்று உரக்கச் சொன்னான். உடனே அங்கு ஒளிந்திருந்த துர்யோதனன் ஓடிவந்து தனக்கு யுத்தத்தில் ஸேனாதிபதியாக வேண்டுமென்று கேட்க, சல்லியன் தான் அடைந்த உபகாரத்திற்குப் பதிலாக துர்யோதனனுக்கு ஸகாயம் செய்வதாக ஒப்புக் கொண்டான். இந்தவிதமாய் சல்லியனை மோசம் செய்து துர்யோதனன் தன் வசப்படுத்திக் கொண்டான்.
வினா 8.- இவ்வாறு துர்யோதனனுக்கு வசப்பட்ட பின்பு சல்லியன் என்ன செய்தான்?
விடை.- பாண்டவர்களிடம் சென்று, அவர்களைப் பார்த்து தன் ஸேனையோடு ஹஸ்தினாபுரம் வருவதாக துர்யோதனனுக்கு வாக்களித்துவிட்டு, உபப்லாவ்யம் சென்று பாண்டவர்களைக் கண்டான். அங்கு, தான் மோசம் போனதை எடுத்துரைக்க, தர்மபுத்திரர் 'அப்படியானால் அர்ஜுனனும், கர்ணனும் சண்டையில் எதிர்க்குங்கால், கர்ணனுக்கு நீ ஸாரதியாக இருந்து, அவனை அதைர்யப்படுத்தி அவன் சீக்கிரத்தில் அர்ஜுனனால் அடிபட்டு விழும்படி செய்யவேண்டும்' என்று கேட்டுக்கொண்டார். சல்லியன் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு, பெரியவர்களும் கஷ்டகாலங்கள் வருங்கால் கஷ்டப்படவேண்டியது தான் என்னும் விஷயத்தில், இந்திரன் பட்ட கஷ்டங்களை எடுத்துரைத்தான்.
வினா 9.- இந்திரனுக்குக் கஷ்டம் வரக் காரணம் என்ன?
விடை. துவஷ்டா என்ற ஒரு மஹானுக்கு, இந்திராணியிடம் கோபமுண்டாக, மூன்று சிரமுடைய ஒரு பிராமணனை சிருஷ்டித்து, அவரை தபஸு முதலியவை களைச் செய்யச்சொல்லி இந்திர பதவியை விரும்பும்படி துவஷ்டா ஏவினார். இந்தப் பிராமணர் செய்த தபஸை இந்திரன், முதலில் அப்ஸர ஸ்திரீகளால் அழிக்கப் பார்த்து முடியாதது கண்டு, கடைசியில் தான் தனது வச்சிராயுதத்தால் இப்பிராம்மணனைக் கொன்றான். உடனே இந்திரனை பிரம்மஹத்தி சூழ்ந்து கொண்டது.
வினா 10.- இதற்காக இந்திரன் என்ன செய்தான்?
விடை.- இந்திரன் பிரம்மஹத்திக்குப் பயந்து உலகெங்கும் ஓடிப் பார்த்தும் பிரம்மஹத்தி தன்னைத் தொடர்ந்து வருவதைக்கண்டு, கடைசியாய் ஹிமய மலைக்கு வடக்கே தாமரைப் பூக்கள் நிறைந்த ஓர் ஏரியுட்சென்று ஒரு தாமரைத்தண்டுள் ஒளித்துக்கொண்டான். பிரம்மஹத்தி அக்குளத்துள் செல்ல முடியாது கரையிலேயே இருந்தது.
வினா 11.- இந்திரன் இவ்வாறு சென்றதும், யார் இந்திரப்பட்டத்திற்கு வந்தது? அவன் என்ன செய்தான்?
விடை.- நகுஷ மஹாராஜன் அக்காலத்தில் 100 அசுவமேத யாகம் செய்திருந்தமை யால், அவனுக்கு இந்திரப்பட்டம் கிடைத்தது. அவனுக்கு உடனே இந்திராணியுடன் ஸுகிக்கவேண்டுமென்ற கெட்ட எண்ணம் வர, அவன் தன்னிடம் இந்திராணியை வரும்படி தூதனிடம் சொல்லி அனுப்பினான்..
வினா 12.- இந்திராணி கதி என்னமாயிற்று? அவள் என்ன செய்தாள்?
விடை... இந்திராணி முதலில் நகுஷனிடம் போவதற்கு மயங்க, தேவர்கள் அவளை நகுஷனிடம் போய் கொஞ்ச நாள் கெடுவைத்துப் பின்பு அவனோடேயே வந்து சேருவதாக ஒப்புக்கொண்டு வரும்படி ஏவினார்கள். உடனே இந்திராணி நகுஷனிடம் சென்று, இவ்வாறு சொல்ல, அவன் அதற்கு ஒப்புக்கொண்டான். இதைக் கேட்டுக் கொண்டு, இந்த நாளுள் இந்திரனிருக்குமிடத்தை தேடிக்காண இந்திராணி யத்தனம் செய்து, கடைசியில் இந்திரன் தாமரைத் தண்டுள் ஒளிந்திருப்பதை ஒரு தேவதையின் ஸகாயத்தால் கண்டுபிடித்தாள். அப்பொழுது இந்திரன் தான் கூடிய சீக்கிரத்தில் வருவதாகச் சொல்ல, அதற்குள் தனக்கு நகுஷனால் அவமானம் வருமே என்று இந்திராணி சொன்னாள்.
வினா 13.- இந்திராணிக்கு இந்திரன் என்ன உபாயம் சொல்லிக் கொடுத்தான்? இது எவ்வாறு முடிந்தது?
விடை.- நகுஷன் கெடுவு முடிந்ததும், உன்னை அழைப்பான் அப்பொழுது நீ, 'இந்திரன் என்னிடம் எப்படி ஸப்தரிஷிகளால் சுமக்கப்பட்ட பல்லக்கில் வருவாரோ அதுபோல நீயும் வந்தால், நான் உன்னுடன் சேருவேன் என்று சொல்லு. இதனால் காமுகனான நகுஷனுக்கு ஆபத்து வரும்' என்று இந்திரன் உபாயம் சொன்னான். இது எவ்வாறு முடிந்தது என்பதை ஆரண்ய பர்வத்தில் 85-ம் விடையில் காண்க.
வினா 14.- இந்திரன் எவ்வாறு பிரம்மஹத்தி நீங்கி விளங்கினான்?
விடை.- பிரகஸ்மதி முதலியவர்கள், அக்கினியின் மூலமாகத் தேடி இந்திரன் இருக்கும் இடத்தை அறிந்து, விஷ்ணுவினிடம் தெரிவிக்க, அவர், தமது உத்தேசமாக ஒரு அசுவமேதயாகம் நடத்தினால் இந்திரனுக்கு பிரம்மஹத்தி நீங்கிவிடும் என, தேவர்கள் அவ்வாறே செய்து இந்திரனைப் புனிதனாக்கினார்கள். உடனே இந்திரன் அமராவதி வந்து, முன்போல அரசுபுரிந்து வந்தான்.
வினா 15.- இக்கதையைச் சொன்ன பின்பு சல்லியன் என்ன செய்தான்?
விடை.- 'இந்திரனுக்கு வந்த கஷ்டம் எவ்வாறு நீங்கியதோ, அது போல உங்களுக்கு வந்திருக்கும் கஷ்டமும் நீங்க, நீங்கள் ஸுகமடைவிர என்று பாண்டவர்களை ஆசீர்வதித்து விட்டு சல்லியன் துர்யோதனனிடம் சென்றான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக