வியாழன், 10 நவம்பர், 2022

ஶ்ரீ மஹா பாரதம்–வினா விடை 28

வினா 15.- இக்கதையைச்‌ சொன்ன பின்பு சல்லியன்‌ என்ன செய்தான்‌?

விடை.- 'இந்திரனுக்கு வந்த கஷ்டம்‌ எவ்வாறு நீங்கியதோ, அது போல உங்களுக்கு வந்திருக்கும்‌ கஷ்டமும்‌ நீங்க, நீங்கள்‌ ஸுகமடைவிர் என்று பாண்டவர்களை ஆசீர்வதித்து விட்டு சல்லியன்‌ துர்யோதனனிடம்‌ சென்றான்‌.

வினா 16.- துர்யோதனனுக்கு அனுப்பிய தூதரான புரோஹிதர்‌ காரியம்‌ என்னமாயிற்று?

விடை... புரோஹிதர்‌ துர்யோதனன்‌ ஸபைக்குச்‌ சென்று, ஸாமதான பேதமாகிய

ராஜோபாயங்களை முன்னிட்டுக்‌ கொண்டு பாண்டவர்களது அபிப்பிராயத்தை

வெளியிட, பீஷ்மர்‌ அதை அங்கீகரித்து, தம்மா லியன்றமட்டும்‌ திருதிராஷ்டிர

ராஜனைப்‌ போரில்லாது பாண்டவர்களுக்கு அவர்களுடைய பாகத்தைக்‌ கொடுக்கும்‌

படி சொல்லிப்‌ பார்த்தார்‌. இதன்‌ மத்தியில்‌ கர்ணன்‌, பீஷ்மர்‌ அர்ஜுனனைப்‌ புகழ்ந்து பேசுங்கால்‌, அவரைத்‌ தடுத்துப்பேச, அவர்‌ கர்ணனை அந்த ஸபையில்‌ நன்றாய்‌ அவமானப்படுத்தினார்‌. திருதிராஷ்டிர ராஜன்‌ புரோஹிதனை நோக்கித்‌ தான்‌ கூடிய சீக்கிரத்தில்‌ பாண்டவர்களுக்குத்‌ தன்‌ கருத்தை ஸஞ்சயர்‌ மூலமாய்த்‌

தெரிவிப்பதாகச்‌ சொல்லி அனுப்ப, அவரும்‌ பாண்டவர்களிடம்‌ வந்து நடந்த

விஷயம்‌ யாவையும்‌ சொல்லிவிட்டார்‌.

வினா 17.- ஸஞ்சயர்‌ வந்து பாண்டவர்களுக்கு என்ன ஸங்கதி தெரிவித்தார்‌?

விடை.- முதலில்‌, ஸஞ்சயர்‌ சண்டையிடாது எல்லோரும்‌ ஸமாதானமாகப்‌ போகவேண்டியது என்று திருதிராஷ்டிர மஹாராஜா சொன்னதாகச்‌ சொன்னார்‌. அதற்கு யுதிஷ்டிரர்‌ தாங்கள்‌ சண்டைபோடப்‌ பயப்பட்டவர்களல்ல வென்றும்‌, அப்படிச்‌ சண்டையிடத்தகுந்த காரணங்கள்‌ இருக்கின்றன வென்றும்‌, அப்படி இருந்த போதிலும்‌, அவருக்காகத்‌ தாங்கள்‌ சண்டையிடாது நிற்பதாகவும்‌, தங்களுக்கு முன்‌ இருந்தபடி இந்திரப்ரஸதத்தைத்‌ துர்யோதனாதியர்‌ ஸமாதானமாய்க்‌ கொடுத்து விடட்டும்‌ எனறும்‌ சொன்னார்‌. அப்பொழுது ஸஞ்சயர்‌ 'திருதிராஷ்டிரருக்கு நீங்கள்‌ சொல்லியவாறு கொடுப்பது இஷ்டம்‌ தான்‌. அவரது கொடியபிள்ளைகள்‌ கொடுக்க மாட்டேன்‌ என்று பிடிவாதமாய்‌ இருக்கிறார்கள்‌. அவர்களைத்‌ தடுத்துச்சொல்ல தைர்யம்‌ அவருக்கில்லை. ஆகையால்‌, அவர்‌ உங்களைச்‌ சண்டைக்கு வராது எங்கேயாவது சென்று பிரம்மசாரிகள்போல ஸத்காலக்ஷேபம்‌ செய்து புண்ணியம்‌ ஸம்பாதிக்கச்‌ சொன்னார்‌. அவர்‌ முரட்டுப்‌ பிள்ளைகளோடு சண்டையிடுவதால்‌ பயன்‌ ஒன்றும்‌ இல்லை. அந்தச்‌ சண்டையில்‌ யார்‌ ஜயிப்பார்களோ? யார்‌ தோற்பார்க ளோ? யார்‌ ஜயித்தாலும்‌ அனேகம்‌ பேர்கள்‌ முதலில்‌ இறக்கவேண்டும்‌. ஏனெனில்‌ இருபக்கத்திலும்‌ மஹா பலவான்கள்‌ சண்டைக்கு சண்டைக்கு வருவார்கள்‌. வேண்டியவர்கள்‌ இறந்தபின்‌ உங்களுக்கு ஜயம்‌ கிடைத்தென்ன பயன்‌? தோல்வி அடைந்தால்‌ அவமானம்‌. ஆகையால்‌ உங்களை வேறு எந்தப்பட்டணமாவது போய்‌, சண்டை சச்சரவின்றி ஸுகமாய்‌ நல்ல காலம்‌ கழிக்கச்சொன்னார்‌ என்று விஸதாரமாய்த்‌ திருதிராஷ்டிரன்‌ சொன்னதை, யாவரும்‌ அறிய வெளியிட்டார்‌.

வினா 18.- இவ்வாறு நயவஞ்சகமாய்‌ திருதிராஷ்டிரன்‌ சொன்னதற்குத்‌ தர்மபுத்திரர்‌ என்ன பதில்‌ சொன்னார்‌? அவ்விஷயத்தில்‌ வேறு யார்‌ தமது அபிப்பிராயத்தைச்‌ சொன்னது? கடைசியில்‌ என்ன முடிவுண்டாயிற்று?

விடை... தர்மபுத்திரர்‌, திருதிராஷ்டிரர்‌ சொல்லியபடி தாம்‌ இராஜ்யம்‌ வாங்காது ஸமாதானத்திற்கு வந்து ஸந்நியாஸிகளைப்‌ போல வஸித்தல்‌ க்ஷத்திரிய தர்மமல்ல வென்றும்‌, கிருஷ்ணபகவான்‌ இவ்விஷயத்தில்‌ என்ன சொல்லுகிறாரோ அப்படியே தாம்‌ செய்வதாகவும்‌ ஒப்புக்கொண்டார்‌. இதைக்‌ கேட்டு கிருஷ்ணபகவான்‌ எழுந்து, முதலில்‌, பாண்டவர்கள்‌ துர்யோதனாதியரால்‌ அடைந்த அவமானம்‌, கஷ்டம்‌ இவைகளைக்‌ கேட்போர்‌ மனங்கரையும்படி எடுத்துரைத்து, கடைசியில்‌ மஹாத்மான பாண்டவர்கள்‌ சண்டைக்குவர சக்தியுடையவராயும்‌ தயாராயும்‌ இருந்த போதிலும்‌, நியாயமான ஸமாதானத்திலேயே எண்ணமுடையவர்களாய்‌ இருக்கிறார்கள்‌ என்று ஸஞ்சயரை திருதிராஷ்டிர ராஜாவிடம்‌ சொல்லும்படி சொன்னார்‌. தர்மபுத்திரரும்‌ இதை அங்கீகரித்தார்‌.

வினா 19.- ஸஞ்சயர்‌ இதைக்‌ கேட்டுக்கொண்டு ஹஸதினாபுரி போகுமுன்‌, தர்மபுத்திரர்‌ என்ன சொல்லி அனுப்பினார்‌?

விடை.- துர்யோதனாதியருக்கு ஸகாயம்‌ செய்ய வந்திருக்கும்‌ பெரியோர்கள்‌ எல்லோருடைய க்ஷேமத்தைத்‌ தாம்‌ விசாரித்ததாக அவரவர்களிடம்‌ சொல்லும்படி ஸஞ்சயருக்கு தர்மபுத்திரர்‌ கட்டளையிட்டார்‌. 'இந்திரப்ரஸதம்‌ அல்லது வேறு ஏதாவது ஐந்து கிராமங்கள்‌ இவற்றுள்‌ எதையாவது எங்களிடம்‌ கொடு. இல்லாவிட்டால்‌ சண்டைக்குப்‌ புறப்படு என்று தாம்‌ சொன்னதாக அவர்‌ துர்யோதனனிடம்‌ சொல்லும்படி ஸஞ்சயரிடம்‌ சொல்ல, அவர்‌ தர்மபுத்திரரிடம்‌ விடைபெற்று ஹஸதினாபுரம்‌ சென்றார்‌.

வினா 20.- ஹஸதினாபுரம்‌ சென்று ஸஞ்சயர்‌ என்ன செய்தார்‌?

விடை.- ஒரு நாள்‌ ஸாயங்காலம்‌ ஸஞ்சயர்‌ ஹஸதினாபுரம்‌ வந்து, உடனே திருதிராஷ்டிரன்‌ இருக்கும்‌ அந்தப்புரம்‌ சென்று, அரசனிடம்‌ தாம்‌ போய்வந்த செய்தியைச்‌ சொன்னார்‌. கடைசியில்‌ பாண்டவர்களோடு ஸமாதானமாய்‌ அவர்கள்‌ கேட்டதை நல்லமனதோடூ கெளரவர்கள்‌ கொடுக்காது வீண்‌ சண்டைக்குப்‌ போவார்க ளேயானால்‌, கெளரவர்கள்‌ நிர்மூலமாய்‌ அழிவார்கள்‌ என்பது திண்ணம்‌. அர்ஜுனன்‌ ஒருவனே கெளரவரை ஜயிக்கப்‌ போதும்‌. அவனைவிடச்‌ சிறந்த வீரர்கள்‌ யார்‌ இருக்கிறார்கள்‌. ஆகையால்‌ எப்படியாவது பாண்டவர்களோடூ ஸமாதானம்‌ செய்து கொள்ள வேண்டும்‌' என்று ஸஞ்சயர்‌ தமது அபிப்பிராயத்தை வேகு உருக்கத்தோடு வெளியிட்டுத்‌ திருதிராஷ்டிரன்‌ மனதைக்‌ கலக்கிவிட்டு, மறுநாள்‌ காலை தர்மபுத்திராதிகள்‌ சொன்னவைகள்‌ எல்லாவற்றையும்‌ விடாது இராஜ ஸூபையில்‌ சொல்லிவிடுவதாக வாக்குக்கொடுத்து திருதிராஷ்டிரனிடம்‌ விடைபெற்று தமது வீடு சேர்ந்தார்‌.

1 கருத்து: