செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 14

வினா 16.- வடக்கே சென்ற அர்ஜுனன்‌ யாரைக்கண்டான்‌? பின்‌ என்ன நடந்தது?

விடை... வடக்கே செல்லுங்கால்‌ இந்திரகீல மலைச்சாரலுக்கு வரும்பொழுது 'இங்கே நில்லு' என்ற அசரீரிவாக்கு உண்டாக உடனே அர்ஜுனன்‌ நின்று சுற்றுமுற்றும்‌ பார்த்தான்‌. அப்பொழுது ஒரு மரத்தடியில்‌ ஒரு ஸன்னியாஸியைக்‌ கண்டான்‌. இவர்‌ தம்மால்‌ இயன்றமட்டும்‌ அர்ஜுனனை வில்‌, அம்பு இவைகளை எறிந்து விடும்படி செய்யப்பார்த்தும்‌ முடியாதது கண்டு, தமது உண்மையான இந்திர ரூபத்தைக்காட்டி அர்ஜுனனைச்‌ சிவனைக்‌ குறித்து தவம்‌ செய்யும்படி ஏவிமறைந்தார்‌. உடனே அர்ஜுனன்‌ தவவடிவம்‌ பூண்டு அங்கேயே சிவனைக்‌ குறித்துக்‌ கொடிய தவம்‌ செய்யத்‌ தொடங்கினான்‌.

வினா 17.- இவ்வாறு கொடுந்தவம்‌ அர்ஜுனன்‌ செய்யுங்கால்‌, அதற்கு என்ன விக்கினம்‌ வந்தது?

விடை.- அர்ஜுனன்‌ சிறந்த அஸ்திரங்களைப்பெற்று சிறந்த வில்லாளியாகத்‌ தவம்‌ செய்யச்சென்றான்‌ என்ற ஸமாசாரத்தைக்‌ கேள்வியுற்ற துர்யோதனன்‌ தனது தோழனான மூகாஸுரனை ஏவி, அர்ஜுனனைக்‌ கொல்லும்படி அனுப்பினான்‌. இவன்‌ ஒரு பெரிய காட்டுப்பன்றி உருக்கொண்டு அர்ஜுனன்‌ தவம்‌ செய்யும்‌ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு பெரும்‌ புதரில்‌ ஒளித்துக்‌ கொண்டு அவன்‌ மேல்‌ பாய்ந்து அவனைக்‌ கொல்லும்‌ தருணத்தில்‌ இருந்தான்‌.

வினா 18.- இந்தத்‌ தடை எவ்வாறு யாது காரணத்தால்‌ நிவர்த்தியாயிற்று?

விடை.- இப்படி இருக்கையில்‌ ஸகல ரிஷி சிரேஷ்டர்களும்‌ பரமசிவனிடம்‌ சென்று, அர்ஜுனனது தபோக்கினியால்‌ தமக்குக்‌ கஷ்டம்‌ பொறுக்கமுடியவில்லை என்று முறையிட, பரமசிவன்‌ அர்ஜுனனுக்கு அனுக்கிரஹித்து, அவனைத்‌ தவத்தை நிறுத்தும்படி செய்வதாக ஒப்புக்கொண்டார்‌. இதற்காகவே பரமசிவன்‌ வேடரூபந்‌ தரித்து பார்வதியை வேடச்சியாக்கி நான்கு வேதங்களையும்‌ நான்கு நாய்களாக்கிக்கொண்டு வேட்டைக்குப்‌ புறப்படும்‌ வேடன்போல, அர்ஜுனன்‌ தவம்‌ செய்யுமிடம்‌ வந்து மூகாஸ்ரனாகிய பன்றியைக்‌ கண்டு, அதைச்‌ சங்கரிக்க ஒரு அம்பை எய்தார்‌. இதற்குள்‌ அர்ஜுனனும்‌ பன்றி தன்னைக்‌ கொல்லக்‌ காத்திருப்ப தைக்கண்டு அதைக்கொல்லத்‌ தானும்‌ ஓர்‌ அம்பு எய்தான்‌. இவ்விரண்டு அம்புகளா லும்‌ மூகாஸுரன்‌ உயிர்‌ நீங்கி விழுந்தான்‌.

வினா 19.- இவ்வாறு பன்றி இறந்ததால்‌ என்ன விபரீதம்‌ உண்டாயிற்று?

விடை. வேட்டை ஒழுங்குப்படி, ஒருவன்‌ அம்பு எய்து கொல்லக்‌ குறிவைத்த ஜந்துவின்பேரில்‌ வேறொருவன்‌ அம்பெய்தல்‌ அநியாயம்‌. இந்த ஒழுங்கின்படி வேடனுக்கும்‌, அர்ஜுனனுக்கும்‌ தர்க்கமுண்டாயிற்று. இதில்‌ ஒருவரை ஒருவர்‌ இகழ்ந்து பேசும்படி நேரிட, இந்தத்‌ தர்க்கம்‌ கடைசியில்‌ போராய்‌ முடிந்தது.

வினா 20.. இப்போரின்‌ விசேஷம்‌ என்ன? அது எவ்வாறு முடிவு பெற்றது?

விடை.- அர்ஜுனன்‌ போடும்‌ அம்புகள்‌ யாவும்‌ வேடன்மேல்‌ தைக்காது அவன்‌ அருகில்‌ போய்‌ கீழே விழத்தொடங்கி விட்டன. ஆனால்‌ வேடன்விடும்‌ பாணங்களோ அர்ஜுனன்‌ மேல்‌ நன்றாய்த்தாக்கி அவனுக்கு மிகுந்த துன்பத்தை உண்டாக்கின. இதைக்‌ கவனியாது அர்ஜுனன்‌ சண்டை செய்யும்பொழுது அவனுக்கு அக்கினி பகவானால்‌ கொடுக்கப்பட்ட அக்ஷய அம்பறாத்தூணியில்‌ பாணம்‌ ஒன்றுகூட இல்லாமல்‌ முடிந்துபோய்விட்டது. இப்படியானதால்‌ அதிக கோபத்தோடு அர்ஜுனன்‌ தன்‌ காண்டீவ தனுஸின்‌ நாணை அவிழ்த்துவிட்டு வேடனைச்‌ சிரஸில்‌ அடிக்க அவன்‌ தனது தனுஸை இழக்கும்படி நேரிட்டது. இதன்‌ பின்பு இருவரும்‌ மல்லயுத்தஞ்‌ செய்யக்‌ கடைசியில்‌ அர்ஜுனனுக்குச்‌ சிரமம்‌ வந்துவிட்டது. அப்பொழுது அர்ஜுனன்‌ சண்டையை நிறுத்திவிட்டு மனதில்‌ பரமசிவத்தைத்‌ தியானித்து ஒரு மண்விக்கிரஹத்தைச்‌ செய்து, பூஜை செய்து புஷ்பம்‌ முதலியவை களைச்‌ சாத்திக்‌ கண்ணை விழித்துநோக்க, அவைகள்‌ யாவும்‌ வேடன்‌ தலையில்‌ இருப்பதைக்‌ கண்டு, அர்ஜுனன்‌ சிவமே வேட உருவோடு வந்ததாக அறிந்து, தெண்டனிட்டுத்‌ தான்‌ செய்த அபராதத்தைப்‌ பொறுத்தருள வேண்டு மென்று பிரார்த்தித்தான்‌. உடனே அவன்‌ முன்பு, ஸகல தேவதைகளும்‌ தோன்றினார்கள்‌.

வினா 21.- இப்படி அர்ஜுனன்‌ சிவனைத்‌ தரிசித்த பின்பு: என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை- சிவன்‌, அர்ஜுனன்‌ செய்த திவ்ய யுத்தத்தைக்‌ கண்டு மகிழ்ந்து அவனுக்குப்‌ பாசுபத அஸ்திரத்தைக்‌ கொடுத்து, அதைத்‌ தகுந்த பலவான்‌ விஷயத்தில்‌ தான்‌ பிரயோகிக்க வேண்டும்‌, அப்படி இன்றி பலஹீனர்மேல்‌ பிரயோகித்தால்‌ பிரபஞ்ச முழுவதையும்‌ அது அழித்து விடும்‌ என்ற பிரயோகக்கிரமத்தைச்‌ சொல்லி சிவன்‌ மறைந்தார்‌. உடனே அங்கு இருந்த ஸகல தேவதைகளும்‌ தங்கள்‌ தங்களுக்குரிய முக்கிய அஸ்திரங்களை அர்ஜுனனுக்கு அநுக்கிரஹித்து மறைந்தனர்‌.

வினா 22.- இவ்வாறு அர்ஜுனன்‌ ஸகல அஸ்திரங்களையும்‌ பெற்ற பின்பு என்ன செய்தான்‌? ஏன்‌?

விடை... இந்திரனது வேண்டுகோளின்படி அர்ஜுனன்‌ இந்திர லோகம்‌ சென்று, அங்கு இந்திரனோடு ஐந்துவருஷம்‌ வாஸம்‌ செய்து வந்தான்‌. இந்திரனுக்கு மஹா பலசாலிகளாகிய நிவாதகவசாள்‌, காலகேயர்கள்‌ என்ற ஜாதியர்கள்‌ விரோதிகளாய்‌ இருந்ததால்‌, அவர்களைக்‌ கொல்லுவதற்காக அர்ஜுனனை இந்திரன்‌ இந்த ஸமயத்தில்‌ தனது லோகத்திற்கு அழைத்தான்‌.

வினா 23.- அர்ஜுனன்‌ இந்திரலோகத்தில்‌ வஸிக்குங்கால்‌ என்ன விபரீதம்‌ நடந்தது? காரணம்‌ என்ன? அது எவ்வாறு அர்ஜுனனுக்கு நன்மையாய்‌ முடிந்தது?

விடை.- அர்ஜுனன்‌ இந்திர ஸ்பையில்‌ ஒருநாள்‌ இருக்குங்கால்‌ அவன்‌ முன்பு எல்லா அப்ஸர ஸ்திரீகளும்‌ நர்த்தனம்‌ செய்துவர, அப்பொழுது தனது பூரு வம்சத்திற்குத்‌ தாய்போன்றவளாகிய ஊர்வசியை அர்ஜுனன்‌ கண்‌ கொட்டாது மிகுந்த விநயத்தோடு நோக்கினான்‌. இந்நோக்கத்தைக்‌ காமநோக்கு என்று விபரீத அர்த்தம்‌ செய்துகொண்டு, இந்திரன்‌ ஊர்வசியை அர்ஜுனனோடு ஓர்‌ இரவு ஸுகித்திருக்கும்படி அனுப்ப, அவன்‌, தனது எண்ணத்தை வெளியிட்டு மிகுந்த ஆவலோடு தன்னிடம்‌ வந்த ஊர்வசிக்கு வந்தனை வழிபாடுகள்‌ செய்தான்‌. தனது எண்ணம்‌ பூர்த்தியாகாதது கண்ட ஊர்வசி, அர்ஜுனனுக்கு நபும்ஸக ரூபம்‌ (பேடி ரூபம்‌) வந்து, ஸ்திரீகள்‌ மத்தியில்‌ அவன்‌ நாட்டியம்‌ கற்பிப்போனாக வஸித்து மானங்கெட்டுத்‌ திரிய வேண்டும்‌ என்று சபித்தாள்‌. இது இந்திரனுக்குத்‌ தெரியவே அர்ஜுனனது மனோதிடத்தை மெச்சி, ஊர்வசியை அழைத்துப்‌ பேடிரூபம்‌ முதலியவைகள்‌ ஒரு வருஷம்‌ மாத்திரம்‌ இருக்கும்படி சாபத்தை மாற்றுவித்தான்‌. (இந்தச்‌ சாபம்‌ எப்படி அர்ஜுனனுக்கு நன்மையாக முடிந்தது என்பதை விராடபர்வத்திற்‌ காண்க.)

வினா 24.- நிவாதகவச காலகேயர்களை அர்ஜுனன்‌ எவ்வாறு வென்றான்‌?

விடை.- அர்ஜுனன்‌ இந்திர ஸாரதியாகிய மாதலியால்‌ நடத்தப்பட்ட இரதத்தில்‌ ஏறிக்கொண்டு, நிவாதகவசர்கள்‌ இருக்கும்‌ பட்டணத்திற்கு வந்து தனது காண்டீவ தனுஸால்‌ பாண வருஷம்‌ செய்யத்தொடங்கினான்‌. முதலில்‌ அர்ஜுனனோடு அவர்கள்‌ எதிர்த்துச்‌ சண்டை செய்வது அஸாத்தியம்‌ என்று கண்டு, அநேக மாயா வித்தைகளை முன்னிட்டுக்‌ கொண்டு மறைந்து சண்டை செய்யத்‌ தொடங்கினார்கள்‌. அர்ஜுனனும்‌ தன்னால்‌ இயன்ற மட்டும்‌ அவர்களது மாயாவித்தைகளை வீணாக்கிக்‌ கடைசியில்‌ இந்திரனால்‌ கொடுக்கப்பட்ட வச்சிராயுதத்தைப்‌ பிரயோகம்‌ செய்து நிவாதகவசர்களது மாயைகளைச்‌ சின்னா பின்னமாக்கி அவர்கள்‌ எல்லோரையும்‌ கொன்றான்‌. பின்பு இந்திர லோகத்திற்குத்‌ திரும்பி வருங்கால்‌ ஹிரண்யபுரம்‌ வந்து அங்கு வஸித்திருந்த காலகேயாதி இராக்ஷஸர்களை மிகுந்த கஷ்டத்தோடு ருத்திராஸ்திரப்பிரயோகம்‌ செய்து வதம்‌ செய்தான்‌.

வினா 25.- இவ்வாறு அர்ஜுனன்‌ தேவகாரியமாய்‌ இந்திரலோகத்தி லிருக்கிறான்‌ என்ற செய்தி தர்மபுத்திராதிகளுக்கு எவ்வாறு தெரியவந்தது? பின்பு அவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- இந்திரன்‌ லோமசர்‌ என்ற முனிவரை அழைத்து அர்ஜுனன்‌ தன்‌ லோகத்தில்‌ இருக்கிறான்‌ என்றும்‌, நிவாதகவசாதி ராக்ஷஸர்களைக்‌ கொன்றபின்பு திரும்பி வருவான்‌ என்றும்‌, அதற்குள்‌ அவர்கள்‌ அர்ஜுனனை எண்ணி வருந்துவதை விட்டுத்‌ தீர்த்தயாத்திரை செய்து புண்ணியம்‌ ஸம்பாதித்தல்‌ நலம்‌ என்றும்‌ யுதிஷ்டிரரிடம்‌ சொல்லும்படி ஏவினான்‌. அவர்‌ வந்து இந்திரன்‌ சொன்னபடி யுதிஷ்டரரிடம்‌ சொல்ல, யுதிஷ்டிரர்‌ தமது தம்பி விஷயமான துக்கம்‌ நீங்கித்‌ தீர்த்தயாத்திரை செய்வதாகத்‌ தீர்மானித்தார்‌.

வினா 26.- அர்ஜுனனது மேன்மையைக்‌ கேள்வியுற்ற திருதிராஷ்டிரன்‌ கதி என்னவாயிற்று?

விடை.- தனது பிள்ளைகள்‌ செய்த துஷ்காரியங்களுக்காக கூடிய சீக்கிரத்தில்‌ அவர்கள்‌ அர்ஜுனன்‌ முதலிய பாண்டவ வீரர்களால்‌ இறப்பார்களென்றும்‌, அர்ஜுனனே தனது குலத்திற்கு யமன்‌ என்றும்‌ திருதிராஷ்டிரனுக்குத்‌ தோன்ற அவன்‌ மனமுடைந்து துக்கக்‌ கடலில்‌ ஆழ்ந்தான்‌.

வினா 27.- லோமசர்‌ இந்திரலோகத்திலிருந்து யுதிஷ்டிரரிடம்‌ வரும்‌ முன்‌, பாண்டவர்கள்‌ எங்கு எவ்வாறு காலங்கழித்தனர்‌?

விடை.- பாண்டவர்கள்‌ அர்ஜுனன்‌ தவம்‌ செய்யச்‌ சென்ற சில காலத்திற்கெல்லாம்‌ காம்யக வனம்‌ வர, அங்கு அர்ஜுனனது பிரிவை ஸகிக்கமுடியாது கஷ்டப்பட்டுக்‌ கொண்டிருந்தார்‌. அப்பொழுது அவர்கள்‌ இருக்குமிடம்‌ பிரகதசுவர்‌ என்ற மஹரிஷி வர, அவரிடம்‌ இவர்கள்‌ தமது குறைகளை எடுத்துரைத்தனர்‌. அப்பொழுது இந்த ரிஷி பாண்டவர்களது துக்கத்தை மாற்ற அவர்களை விடத்தனிமையாய்‌ அதிகக்‌ கஷ்டப்பட்ட நளனது சரித்திரத்தைச்‌ சொல்லி முடித்தார்‌.

வினா 28.- இந்த நளன்‌ யார்‌? இவனுக்கு விவாஹத்தை நடத்த யார்‌ முயற்சி செய்தது? ஏன்‌?

விடை.- இந்த நளன்‌ நிஷத தேசாதிபதி. ஓர்‌ அன்ன பக்ஷி இவனது அழகை விதர்ப்பதேசாதிபதியின்‌ குமாரத்தியான தமயந்தியிடமும்‌, அவளது அழகை நளனிடமும்‌ சொல்லி இருவருக்கும்‌ ஒருவர்மேல்‌ ஒருவர்க்குக்‌ காதல்‌ உண்டாகும்‌ படி செய்தது. ஒரு நாள்‌ இப்பட்சியைத்‌ தாதிமார்கள்‌ நளனது உத்தியான வனத்தில்‌ பிடித்து நளனிடம்‌ கொண்டுவந்து கொடுக்க அவன்‌ இதைக்‌ கொல்லாது விடுதலை செய்ததால்‌ அப்பட்சி நளனுக்கு இந்த உபகாரத்தைச்‌ செய்தது.

வினா 29.- தமயந்தியின்‌ ஸ்வயம்வரத்திற்கு நளன்‌ போகையில்‌, இவனது எந்த சிறந்தகுணம்‌, எவ்வாறு வெளிவந்தது?

விடை. தேவகாரியம்‌ ஸாதிக்கும்‌ விஷயத்தில்‌ தனது காரியத்தைக்‌ கவனியாது இருத்தல்‌ என்கிற அவனது சிறந்த குணம்‌ வெளிப்‌ பட்டது. போகும்‌ வழியில்‌ இந்திரன்‌, அக்கினி, வாயு முதலிய தேவதைகள்‌ தமயந்தியைக்‌ கல்யாணம்‌ செய்து கொள்ள எண்ணி வந்துகொண்டிருந்தார்கள்‌. அவர்கள்‌ நளனை நோக்கி, எமது மேன்மை முதலியவைகளை தமயந்தியிடம்‌ தெரிவித்து அவளை எங்களுள்‌ ஒருவரைக்‌ கல்யாணம்‌ செய்துகொள்ள இசையும்படி செய்ய வேண்டும்‌. அதற்காக நீ எங்களுக்குத்‌ தூது செல்ல வேண்டும்‌' என, நளன்‌ மனங்‌ கூசாது தான்‌ ஆசை வைத்திருந்த பெண்ணினிடம்‌ தூதாகப்‌ போய்த்‌ தன்னால்‌ ஆனமட்டும்‌ தேவர்களுக்காக மன்றாடிப்பார்த்தான்‌. தமயந்தி நளனையே கல்யாணம்‌ செய்து கொள்ளுவதாகப்‌ பிடிவாதமா யிருப்பதைக்‌ கண்டு, நளன்‌ தேவர்களிடம்‌ நடந்த விஷயங்களை ஒளியாது சொல்லி விட்டான்‌. தேவர்களும்‌ தமது சக்தியால்‌ இவன்‌ சொல்வது உண்மை யென்றும்‌, இவன்‌ மனங்‌ கூசாது. தமயந்தியினிடம்‌ தமது மேன்மையை எடுத்துரைத்தான்‌ என்றும்‌ தெரிந்து கொண்டார்கள்‌.

வினா 30- இவ்வாறு நளன்‌ நடந்துகொண்டதால்‌ அவனுக்கு என்ன சிறப்பு உண்டாயிற்று?

விடை... தேவர்களின்‌ ஸந்தோஷத்தால்‌ நளனுக்குச்‌ சிறந்த சக்திகள்‌ உண்டாயின. அக்கினியின்‌ அனுக்கிரகத்தால்‌ நளனுக்கு அரிசி காய்‌ கறி முதலியவைகளைக்‌ கையால்‌ தொட்டவுடன்‌ உண்ணத்தக்க நல்ல பக்குவ பதார்த்தங்களாக மாற்றும்‌ சக்தி வந்தது. வாயுவின்‌ அனுக்கிரகத்தால்‌ குதிரை நடத்தும்‌ வழியும்‌, அசுவஹ்ருதயம்‌ என்கிற குதிரைகளின்‌ ஸ்வபாவம்‌ அறியும்‌ வித்தையும்‌ கிடைத்தன. இது போலவே ஒவ்வோரு தேவதையிடத்‌திலிருந்தும்‌ நளன்‌ திவ்ய சக்திகளை அடைந்தான்‌.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக