வினா 31.- தமயந்தி ஸ்வயம்வரத்தில் என்ன விசேஷம் நடந்தது? தமயந்தி நளனை எவ்வாறு அறிந்து மாலையிட்டாள்?
விடை.- ஸ்வயம்வர மண்டபத்தில் இந்திரன் முதலிய நான்கு தேவதைகளும் நளன்போல் ரூபங்கள் எடுத்துக்கொண்டு நளன் அருகில், தமயந்தியின் உறுதியைச் சோதிக்க உட்கார்ந்தார்கள். தமயந்தி ஸ்வயம்வர மாலை எடுத்துவரும் பொழுது ஐந்து நளர்கள் உட்கார்ந்திருப்பதைக் கண்டு முதலில் மயக்கமுற்றாள். அதன் பின் கண் இமைத்தல், கால் நிலத்தில் பதிதல் முதலிய இலக்ஷணங்களால் உண்மையான நளனைக் கண்டுபிடித்து அவனுக்கு மாலையிட்டாள். இதன் பின்பு நளன் நிஷதபுரி சென்று ஸுகமாய் வாழ்ந்திருக்கையில் இவனுக்கு இந்திரஸேனன், இந்திரஸேனை என்ற இரண்டு குழந்தைகள் உண்டாயின.
வினா 32.- தேவதைகள் தமது இருப்பிடம் செல்லுங்கால் யார் எதிரே வந்தது? அதனால் என்ன விபரீதம் விளைந்தது?
விடை.- தேவதைகள் தமது இருப்பிடம் செல்லுங்கால் எதிரே கலி (சனி பகவான்) தலைவிரிகோலமாய்த் தமயந்தியை கல்யாணம் செய்துகொள்ள வேண்டுமென்று ஓடி வந்து கொண்டிருந்தான். இவன், தேவதைகளிடமிருந்து காரியம் முடிந்து போய்விட்டது என்று அறிந்ததும், இவனுக்கு அடங்காக் கோபம் உண்டாயிற்று. உடனே இவன் “நளனைப் பிடித்துத் திண்டாட்டம் ஆட்டுவித்தும் அவனைத் தமயந்தியை விட்டுப்பிரித்தும் கஷ்டப்படுத்துகிறேன்" என்று கொடிய பிரதிக்கினை செய்தான்.
வினா 33.- கலி புருஷன் எவ்வாறு நளனைப் பிடித்துக் கொண்டான்? கலி புருஷன் பிரவேசம் ஆனதும் நளன் என்ன செய்தான்?
விடை.- ஒருநாள் ஸந்தியாவந்தனம் செய்யப் போகுங்கால் காலை நன்றாய்க் கழுவாது உட்கார, இந்த அசுத்த ஸமய்ம் பார்த்துக் கலிபுருஷன் நளனைப் பிடித்துக் கொண்டான். உடனே அவனுக்குப் புத்திமாற, அடுத்த இராஜ்யத்திலிருந்த புஷ்கரராஜனோடு சூதாடித் தனது ஸொத்துக்கள் எல்லாவற்றையும் தோற்று விட்டான். ஆகையால் நளன் இராஜ்யத்தைவிட்டு வெளியே போக வேண்டிவர, தனது குழந்தைகளை விதர்ப்பதேசம் அனுப்பிவிட்டு தமயந்தியையும் அங்குபோகும்படி சொல்லிப் பார்த்தான். அவள் அங்கு செல்லாது நளனோடே காட்டிற்குப் புறப்பட்டாள்.
வினா 34.- கலிபுருஷன் எவ்வாறு இவர்களை வழியில் கஷ்டப்படுத்தினான்? கடைசியில் இவர்களை எவ்வாறு பிரித்தான்?
விடை.- போகும்வழியில் இவர்களுக்கு ஒருவரும் பிச்சையிடாதபடி ஜனங்களது மனதை மாற்றிவிட, இவ்விருவரும் பசிதாகங்களால் மிகவருந்தினார்கள். இவ்வளவு சிரமத்தோடு காட்டின் வழியாய்ப்போகையில் ஒரு அன்னபட்சி உருவமாய் கலிபுருஷன் இவர்கள் முன் தோன்ற, அதை அறியாது தமயந்தி அந்தப்பட்சி தனக்கு வேணுமென்றாள். உடனே நளன் தமயந்தியின் புடவையின் ஒரு பாகத்தைத் தான் சுற்றிக்கொண்டு தனது ஆடையை அன்னத்தின் மேல் போட்டு அதைப் பிடிக்கப் பார்க்க, அந்தப்பட்சி ஆடையை தூக்கிக்கொண்டூ ஆகாயத்தில் பறந்து போய்விட்டது. இவ்வாறு ஆடை இழந்து இவர்கள் போகையில், விதர்ப்பம் போகும்வழியைக்கண்டு நளன் தமயந்தியைத் தகப்பன் வீடு செல்லும்படி தன்னால் இயன்றமட்டுஞ் சொல்லிப்பார்த்தான். தமயந்தி கேட்கவில்லை. அன்றிரவு அவர்கள் அருகிலிருந்த ஒரு பாழ்மண்டபத்தில் தங்கினார்கள். நடு ராத்திரியில் நளன் எழுந்து, தமயந்தியின் புடவையைக் கிழித்துக்கொண்டு, தமயந்தி காலையில் எழுந்து தகப்பன் வீடு போவாள் என்கிற எண்ணத்துடன், அவளைத் தனிமையாய்க் காட்டில் விட்டுவிட்டு ஓடிப்போனான்.
வினா 35.- காலையில் தமயந்தி கதி என்னமாயிற்று?
விடை. காலையில் எழுந்ததும் தன் புருஷனைக்காணாது புலம்பிக்கொண்டே போகையில் வழியிலிருந்த ஒருமலைப் பாம்பு அவளைப்பிடித்து விழுங்கத் தொடங்கியது.
வினா 36.- இவளை யார் இதிலிருந்து தப்புவித்தது? தப்புவித்தவன் கதி என்னமாயிற்று? ஏன்? விடை.- இவளது அழுகுரலை ஒரு வேடன் கேட்டு ஓடிவந்து அம்பெய்து பாம்பைக்கொன்று இவளை விடுவித்தான். உடனே வேடன் தமயந்தியின் அழகைக் கண்டு மோஹித்து அவளைப் பெண்டாள வேண்டும் என்று கிட்டப் பிதற்றிக் கொண்டுவரவே, தமயந்தியின் கோபாக்கினியால் அவன் சாம்பலாய் விழுந்து இறந்தான்.
வினா 37.- பின்பு இவள் கஷ்டப்பட்டு எந்த ஊருக்குச் சென்றாள்?
விடை- வழியில் ஒரு வர்த்தகக்கூட்டத்தைக் கண்டு அத்துடன் சேர்ந்துபோனாள். இராத்திரி ஒரு மலைச்சாரலில் அது தங்கியது. அன்றிரவு காட்டு யானைக் கூட்டங்கள் வந்து அநேகரை அழிக்கத் தமயந்தி மாத்திரம் பிழைத்து, பின்பு மிகுந்த கஷ்டங்களை அடைந்து கடைசியில் தனது சிற்றம்மை இராணியாக வாழும் சேதி நகரம் சென்று அங்கு அரண்மனையில் ஓர் ஸைரந்திரியாக அமர்ந்தாள்.
வினா 38.- காட்டில் நடு ராத்திரியில் தமயந்தியை விட்டுப் பிரிந்த நளனது கதி என்னமாயிற்று?
விடை.- -நளன் காட்டு மார்க்கஞ் செல்லுகையில் ஒரு காட்டுத்தீ எரிவதைக்கண்டு அதன் அருகில் சென்றான். அங்கு கார்க்கோடகன் என்ற பாம்பு தீயில் அகப்பட்டுத் தத்தளிப்பதைக் கண்டான். பாம்பு நளனுக்குத் தகுந்த உபகாரம் செய்வதாகச் சொல்ல, அவன் அதை நெருப்பிலிருந்து வெளியே எடுத்து விட்டான். அது வெளியே வந்ததும் அவனைக் கடிக்கவே, நளன் தனது அரச உருவம் இழந்து ஒரு கரிமுண்டமாக மாறினான். உடனே பாம்பு கலி நீங்கியதும் அவன் நினைத்த போது வந்து, இந்த ரூபத்தை அவனுக்கு மாற்றுவிப்பதாக வாக்களித்து விட்டு மறைந்தது.
வினா 39.- பின்பு நளன் என்ன செய்தான்?
விடை... இந்தஉருவத்தோடு அயோத்தியா பட்டணத்தில் ருதுபர்ணனிடம் பாஹுகன் என்கிற பெயர் வைத்துக்கொண்டு ஸாரதியாகவும் சமையற்காரனாகவும் அமர்ந்து, வாயு அக்கினி முதலிய தேவதைகளிடமிருந்து பெற்ற சக்தியால் தனது வேலையை அரசன் பார்த்து திருப்தியடையும்படி செய்தான்.
வினா 40.- தமயந்தியின் தகப்பன், தமயந்தி இருக்குமிடத்தை எவ்வாறு கண்டு பிடித்தான்?
விடை. - தனக்கு வேண்டியவனான ஸுதேவன் என்கிற பிராம்மணனை அனுப்பி விதர்பதேசாதிபதி, தமயந்தியைத் தேடச் சொன்னான். இவன் எல்லாவிடங்களிலும் தேடிக்கொண்டு வருகையில் தமயந்தியைச் சேதிதேசத்தில் கண்டு அவளை அவள் தகப்பனிடம் கொண்டுபோய்ச்சேர்த்தான்.
வினா 41.- இதன் பின்பு நளனைக் கண்டுபிடிக்க தமயந்தி என்ன ஏற்பாடுகள் செய்தாள்? அவை என்னமாய் முடிந்தன?
விடை.- ஸுதேவனைத் தமயந்தி அழைத்து “நீர் ஒவ்வொரு இராஜ ஸபைக்கும் சென்று தன் பெண்சாதியை நடுக்காட்டில் பாதி ராத்திரியில் காப்பதற்கு வகையறியாது ஒரு புருஷன் விட்டுப் போவது நியாயமா? என்கிற கேள்வியைக் கேளும். இதற்கு யார் தகுந்த பதில் சொல்லுகிறார்களோ அவர் தான் என் புருஷன். அவரை இவ்வாறு நீர் சீக்கிரத்தில் கண்டுபிடித்து வாரும்” என்று ஏவினாள். பிராம்மணன் இவ்வாறு இராஜஸபைதோறும் சொல்லி வந்தான். அயோத்தி வந்து அங்கும் இதைச் சொல்லி ஸபையை விட்டு வெளியே வருகையில், பாஹுகன் வெகு அவஸரமாய் வெளிவந்து பிராம்மணரை நோக்கி "காட்டில் தான் கஷ்டப்படுங்கால் பெண்சாதியுங் கஷ்டப்படுவானேன் என்றும், அவளைத் தனிமை யாய் விட்டுப்போனால் அவள் தன் தகப்பன் வீடுசென்று ஸுகமாய் இருப்பாள் என்றும் எண்ணி அவன் விட்டுப் போயிருக்கலாம். ஆகையால் அது நியாயம்தான்" என்றான். இதைத் தமயந்தியிடம் பிராம்மணர் வந்து சொல்ல, பாஹுகன் தான் நளன் என்று தமயந்தி. தீர்மானித்தாள்.
வினா 42.- நளன் தன்னிடம் வருவதற்குத் தமயந்தி என்ன ஏற்பாடுகள் செய்தாள்? அதனால் என்ன நடந்தது?
விடை... ஸுதேவபிராமணர் மூலமாய் ருதுபர்ணனுக்கு மாத்திரம் தனக்கு இரண்டாம் ஸ்வயம்வரம் அடுத்த நாள் காலையில் நடக்கப் போகிறது என்கிற ஸமாசாரத்தைத் தமயந்தி தெரிவிக்க ஏற்பாடுகள் செய்தாள். இதைக் கேட்டதும் ருதுபர்ணன் தேரைத் தயார் செய்யும்படி பாஹுகனுக்குக் கட்டளையிட அவன் பார்வைக்கு இளைத்தனவாயும் ஓடுவதில் வாயுவுக்கு ஸமானமாயும் உள்ள குதிரைகளை எடுத்துப் பொறுக்கி தேரில்கட்டித் தேரைக்கொண்டுவந்து நிறுத்த, ருதுபர்ணன் விதர்ப்பதேசம் நோக்கிப் புறப்பட்டான்.
வினா 43- போகும் வழியில் என்ன விசேஷம் நடந்தது?
விடை.- போகும் வழியில் கிளைகள் படர்ந்து தழைத்திருந்த வன்னிமரம் தோன்ற அதன் அருகே அரசன் தேரை நிறுத்தச் சொன்னான். உடனே அரசன் அந்த மரத்திலிருக்கும் இலை, காய், பூ, பழம் இவ்வளவு என்று கணக்குச் சொன்னான். அது ஸரியாய் இருப்பதை நளன் மரத்தருகில் சென்று எண்ணித் தெரிந்து கொண்டு மிகுந்த ஆச்சரியப்பட்டான். உடனே ருதுபர்ணன் தனக்குச் சூதாட்ட ரகஸியம் (அக்ஷஹிருதயம்) தெரியும் என்றும், தான் பாஹுகனுக்குச் சொல்லிக் கொடுப்பதாகவும், அதற்குப்பதிலாகப் பாஹுகன் தனக்குத்தெரிந்த அசுவஹ்ருதயத்தைச் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்றும் ஏற்பாடு செய்து பாஹுகனுக்குச் சூதாட்ட ரகஸியத்தைச் சொல்லிக்கொடுத்தான். இதை நளன் கற்றுக் கொண்டதும் அவனிடமிருந்த கலி புருஷன் அங்கேயே நீங்கிப் போனான். உடனே நளன் இரதத்தில் ஏறிக்கொண்டு விதர்ப்ப நகரம் போய்ச் சேர்ந்தான்.
வினா 44- பாஹுகன் தான் நளன் என்பதைத் தமயந்தி எவ்வாறு பரிசோதித்தறிந்தாள்? பின்பு என்ன நடந்தது?
விடை... முதலில் ஒரு தாதியை அனுப்புவித்து பாஹுகனைப் பார்த்து அவனோடு, நளன் தன்னைக்காட்டில் விட்டுப்போன விஷயத்தைப்பற்றிப் பேசிவரச்சொன்னாள். பின்பு பாஹுகனிடம் தனது குழந்தைகளை அனுப்பிப் பார்த்தாள். பின்பு பாஹுகன் சமைக்கும் விதத்தைப் பார்த்து வரச் சொன்னாள். கடைசியாக அவன் சமைத்த பதார்த்தங்களின் ருசியையும் பார்த்து பாஹுகன் தான் நளன் எனத் தீர்மானித்துக் கொண்டு அவரை ராஜஸபைக்குத் தமயந்தி அழைத்துவரச் சொன்னாள். ஸபையிலே கார்க்கோடகன் வந்து நளன் ஸ்வரூபத்தை மாற்றிவிட, காட்டில் கட்டியிருந்த பாதிப்புடவையோடு மாத்திரம் நளன் வெளியானான். அன்று நளனும், தமயந்தியும் ஒருவரை ஒருவர் கண்டு ஆனந்தித்தார்கள்.
வினா 45.- இதன் பின்பு நளன் என்ன செய்தான்?
விடை... நளன் தனது பெண்சாதி குழந்தைகள் தனது பரிவாரங்கள் முதலியவைகளோடு கூடிக் கொண்டு நிஷதபுரி சென்று புஷ்கரனை சூதாட்டத்தில் வென்று, இழந்த தனது இராஜ்யத்தை மீட்டுக்கொண்டு ஸுகமாய் வாழ்ந்திருந்தான்.
வினா 46.- இந்த உபாக்யானம் சொல்லி முடிந்தவுடன் பிரஹதசுவர் என்ன செய்தார்?
விடை... தர்மபுத்திரருடைய வேண்டுகோளின்படி அவருக்கு இந்த ரிஷி சூதாட்டத்தைச் சொல்லிக்கொடுக்க, தர்மபுத்திரர் சூதாட்டத்தில் சகுனியையும் வெல்லும் படியான தேர்ச்சியை அடைந்தார். இதன் பின்பு பிரஹதசுவர் யாத்திரார்த்தம் புறப்பட்டுப் போனார்.
வினா 47.- பிரஹதசுவர் சென்றதும் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?
விடை.- பாண்டவர்கள் அர்ஜுனனது பிரிவுக்கு ஆற்றாமையால் மிகக் கஷ்டப்படுங்கால், நாரத மஹாமுனி வந்து புலஸ்தியருக்கும் பீஷ்மருக்கும் முன் காலத்தில் தீர்த்த மஹத்துவங்களைப் பற்றி நடந்த ஸம்வாதத்தைச் சொல்லிப் பாண்டவரைத் தீர்த்த யாத்திரை செய்யச்சொன்னார். பின்பு தெளம்யரும் ஸகல தீர்த்தங்களை வர்ணித்தார். இந்த ஸமயத்தில் லோமசர் பூமிக்கு வந்து பாண்டவரிடம் அர்ஜுனனது செய்தியைச் சொல்லி, இந்திரன் அவர்களை அர்ஜுனன் வரும் வரையில் தீர்த்த யாத்திரை செய்து புண்ணிய விசேஷங்களை ஸம்பாதிக்கச் சொன்னதாக வெளியிட் டார். இவைகளை யெல்லாம் கேட்டதும் தர்மபுத்திரர் தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட லோமசரும் தீர்த்த யாத்திரையால் தேவர்கள் அடைந்த பலனையும், அது இல்லாததால் அஸுரர்கள் அடைந்த கேட்டையும் சொல்லி, அதே மாதிரி பாண்டவர்களுக்கு நன்மையும், துர்யோதனாதியருக்குக் கேடும் விளையும் என்று பலவாறு தேற்றிக்கொண்டு பாண்டவர்கள் பின்னே தாமும் புறப்பட்டார்.
வினா 48.- இவர்கள் எந்தெந்த முக்கியமான தீர்த்தங்களுக்குச் சென்றார்கள்? அங்கு இருந்த விசேஷங்கள் என்ன?
விடை.- சில தீர்த்தங்களில் ஸ்நாநம் செய்தபிறகு பாண்டவர்கள் அகஸ்திய ஸம்பந்தமான பிரம்மஸரஸ் என்கிற தீர்த்தம் வர, அங்கு லோமசர், அகஸ்தியர் லோபாமுத்திரை என்கிற மிகுந்த அழகிய பெண்ணை ஒரு அரசனிடம் பிறக்கும்படி செய்து, பின்பு தான் அவளைக் கல்யாணம் செய்துகொண்டதையும், பின்பு அவளைத் திருப்தி செய்வதற்காக இரண்டு அரசரிடம் சென்றும் பணம் கிடையாதது கண்டு இல்வலன் என்கிற அஸுரனிடம் சென்றதையும், அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக்கிக் கறிசமைக்க அதை அகஸ்தி.பர் உண்டு வாதாபியை உடனே ஜீரணமாக்கிக் கொன்றதையும் விஸ்தாரமாய்ச் சொன்னார். இதன் பின்பு அகஸ்தியரது மகிமையை விஸ்தாரமாய்க் கேட்கவேண்டும் என்று தர்மபுத்திரர் சொன்னார். தேவேந்திரன் விருத்திராஸுரனை ததீசி மஹரிஷி எலும்பால் ஆக்கப்பட்ட வச்சிராயுதத்தால் கொல்ல, அவனைச் சேர்ந்தவர்கள் கடலுள் ஒளித்துக் கொண்டு இரவில்வந்து ஜனங்களைக் கஷ்டப்படுத்தினதையும், அகஸ்தியரைக் கடலைக் குடிக்கும்படி செய்து தேவர்கள் அஸுரர்களை வென்றதையும், இவ்வாறு அகஸ்தியரால் வற்றிய கடல் ஸகர சக்கிரவர்த்தியின் பிள்ளைகளால் அசுவமேதக்குதிரை தேடிவருங்கால் வெட்டப்பட்டதையும் அதன் முடிவில் அவர்கன் யாவரும் கபிலவாஸுதேவரது கோபாக்கினியால் இறந்ததையும், அவர்களைக் கரை ஏற்ற பகீரதனது பிரயத்தினத்தால் கங்கை வந்ததையும் லோமசர் விஸ்தாரமாய்ச் சொன்னார். வினா 49.- இதன் பின்பு பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்? அங்கு இருந்த விசேஷம் என்ன? விடை. - அவர்கள் கெளசிகி நதி சென்று காசியபர் ஆசிரமத்தைக் காண லோமசர், ரிசியசிருங்கர் காசியபரது வம்சத்தில் பிறந்ததையும், அவரை லோமபாத ராஜனது நாட்டிலிருக்கும் வேசியர் வந்து தமது இராஜ்யத்திற்கு அழைத்துப் போனதையும், அவர் நாட்டில் உள்ளே அடிவைத்ததும் மழை தாரை தாரையாய்ப் பொழிந்ததையும், பின்பு லோமபாதர் தனது பெண்ணாகிய சாந்தையை அவருக்கு விவாகம் செய்து கொடுத்ததையும் விஸ்தாரமாய் எடுத்துரைத்தார்.
வினா 50.- இதன் பின்பு பாண்டவர்கள் எங்கு சென்றார்கள்? அங்கு என்ன நடந்தது?
விடை.- பாண்டவர்கள் மஹேந்திர மலை சென்று அங்கு பரசுராமரது சிஷ்யரைக் கண்டார்கள். அவரிடமிருந்து பரசுராமர் கூடிய சீக்கிரத்தில் அங்குள்ள ஸந்நியாஸிகளுக்குத் தரிசனம் கொடுக்கப் போகிறதாக பாண்டவர்கள் தெரிந்து கொண்டு, அது வரையில் அங்கிருந்து பரசுராமரைத் தரிசிப்பதாகத் தீர்மானித்தார்கள். இதன் மத்தியில் அகிருதவ்ருணரிடமிருந்து பாண்டவர்கள் பரசுராமரது தகப்பனாரான ஜமதக்னி பிறந்த விதத்தையும், அவருக்குப் பரசுராமர் உண்டானதையும், பின்பு தன் தாயாருடைய பாதிவிருத்யத்திற்குக் குறைவுவரத் தன் தகப்பனாரது உத்திரவின்படி பரசுராமர் தனது தாயைக் கொன்றதையும், பின்பு தன் தாயைப் பிழைப்பிக்க வேண்டும் என்று கேட்க அவர் தாயை அடைந்ததையும், கடைசியாய் கார்த்தவிரியார்ஜுனனது பிள்ளைகளால் ஜமதக்னி ரிஷி இறந்ததையும், இதனால் பரசுராமர் க்ஷத்திரியர் மேல் கோபங்கொண்டு அவர்கள் வம்சத்தை 21-தடவை வேரறுத்து தனது தகப்பனாருக்குப் பிதிர்தர்ப்பணம் செய்ததையும், கடைசியில் பூமியைக் காசியபருக்கு தானம் செய்துவிட்டு மஹேந்திர மலையில் தபஸுசெய்து கொண்டிருப்பதையும் தெரிந்து கொண்டார்கள். இந்தக் கதை முடிந்ததும் பரசுராமர் இவர்கள் கண்முன்தோன்ற அவரைத் தரிசித்துவிட்டு பாண்டவர்கள் வேறு தீர்த்தங் களுக்குப் புறப்பட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக