வினா 171.- அர்ஜுனனது தீர்த்த யாத்திரை என்னமாக முடிந்தது? முதலில் இதற்கேற்ப நடந்த விஷயமென்ன?
விடை.- அர்ஜுனனது தீர்த்த யாத்திரை விவாஹ யாத்திரையாகவே முடிந்தது. இவன் ஒருநாள் கங்கையில் ஸ்நானம் செய்ய முழுகி நிற்கையில், அங்கு யதிர்ச்சையாய் வந்திருந்த கெளரவன் என்னும் நாகனது பெண்ணாகிய உலுபி என்பவள், இவனது அழகைக்கண்டு மோஹித்து, அர்ஜுனனைத் திடீரென்று நாகலோகத்திற்குக் கொண்டு போய் தனக்கு அர்ஜுனன்பேரில் இருந்த ஆவலை அவனுக்கு வெகு தர்மசாஸ்திர ஆதாரங்களைக்கொண்டு தெரிவிக்க, அர்ஜுனன் ஒருநாள் அவளோடு இருந்து அவளுக்கு இராவான் என்ற பிள்ளையுண்டாகும்படி செய்துவிட்டு மறுநாள் காலை, தான் முந்தினநாள் ஸ்நானம் செய்துகொண்டிருந்த இடம், வந்து சேர்ந்து பிராம்மணர்களுடன் நடந்த விஷயங்களை ஒளிக்காது சொல்லி விட்டான்.
வினா 172.- இதன்பின்பு அர்ஜுனன் எங்கு சென்றான். அங்கு என்ன விவாஹம் நடந்தது?
விடை.- அர்ஜுனன் கிழக்குத் திக்கை நோக்கிப் புறப்பட்டு அனேக திவ்ய ஸ்தலங்களைப் பார்த்துக்கொண்டு வருகையில் ஓரிடத்தில் பின்னோடு வந்த பிராம்மணர்கள் அர்ஜுனனுக்கு ஆசீர்வாதம் செய்துவிட்டுத் தத்தம் இருப்பிடம் சென்றார்கள். இதன்பின் அவன் கிழக்கு ஸமுத்திரைக்கரை வழியாகவே மணிபுரம் வந்தான். அங்கு சித்ரபவனன் என்ற அரசனிருந்தான். அவனுக்குச் சித்திராங்கதை என்ற ஒரே ஒரு பெண் தான் உண்டு. அப்பெண்ணைக் கண்டு அர்ஜுனன் மோஹித்து, அவ்வரசனிடம் தனது பெயர், குலம், ஆசை முதலியவைகளைத் தெரிவித்தான். அவன் “உனக்குப் பிறக்கும் பிள்ளையை எனக்குக் கொடுத்து விடுவாயானால் உனக்கு என் பெண்ணை கல்யாணம் செய்து கொடுக்கிறேன் என்று சொல்ல, அதற்கு அர்ஜுனன் இசைந்து சித்திராங்கதையை விவாஹம் செய்து கொண்டு அவளுக்கு ஒரு பிள்ளை பிறக்கிற வரையில் மூன்று வருஷம் அவளிடத்தில் ஸுகமாய் இருந்து விட்டுப் பின்பு தனது தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்டான்.
வினா 173.- இதன் பின்பு, அர்ஜுனன் எங்கு தீர்த்தயாத்திரை செய்தான்? அங்கு நடந்த விசேஷம் என்ன?
விடை... அர்ஜுனன் தெற்கு ஸமுத்திரக்கரை வழியாய்த் தீர்த்தயாத்திரை செய்து வருகையில் அங்கு நிர்மானுஷ்யமான இடத்தில் மிக அழகான ஐந்து தடாகங்களைக் கண்டான். அங்கு பக்கத்தில் வஸித்துவந்த மஹான்களை “இவைகள் ரிஷிகளால் இப்படி ஏன் தியாகம் பண்ணப்பட்டன என்று கேட்க, அவர்கள் "இவைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முதலை இருக்கின்றது. அது தண்ணீரில் இறங்குபவர் எல்லோரையும் இழுத்துக் கொல்லுகின்றது" என்று சொல்ல, உடனே அர்ஜுனன் ஒரு தடாகத்திலிறங்கி ஸ்நானம் செய்ய, முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது. அதைத் தனது தேக பலத்தால் கரையில் அர்ஜுனன் இழுத்துப் போட உடனே அது ஒரு திவ்ய அப்ஸர ஸ்திரீயாய் மாறவே, அவளை நோக்கி, நீ முதலை யாவதற்குக் காரண மென்ன' வென்று அர்ஜுனன் கேட்டான்.
வினா 174.- இப்படிக் கேட்டதற்கு அவள் என்ன பதில் சொன்னாள்? அர்ஜுனன் பின்பு என்ன செய்தான்?
விடை.- தாங்கள் ஐந்துபேர் அப்ஸர ஸ்திரீகள் என்றும், ஒருகால் ஒரு பிரம்ம ஞானியின் தபஸைக் கலைக்க உத்தேசிக்கையில், அவர் தங்களை முதலைகளாகப் போகும்படி சபித்தார் என்றும், அப்பொழுது அவருக்குக் கிருபை வரும்படி தாங்கள் நடந்துகொண்டவுடன் தங்களை 103-வருஷங்களுக்குப்பின் ஒரு திவ்ய புருஷன் தண்ணீரை விட்டு வெளியில் போடுவான், உடனே தங்களுக்கு ஸ்வயமான ரூபம் வருமென்றும் சொல்லி, நாரதரது உத்தரவால் இவ்வைந்து தடாகங்களில் தாங்கள் முதலைகளா யிருப்பதாகச் சொன்னாள். இதைக்கேட்டதும் அப்ஸர ஸ்திரீகளுக்கும் அங்குள்ள ரிஷீசுவரர்களுக்கும் ஒரே காலத்தில் உபகாரம் செய்ய நினைத்து மற்றை நான்கு தடாகங்களில் உள்ள முதலைகளையும் அர்ஜுனன் கரையில் இழுத்துப் போட, அவைகளும் அப்ஸர ஸ்திரீகளாகி அர்ஜுனனைத் துதித்துக்கொண்டு ஸ்வர்க்கம் சென்றன.
வினா 175.- இதன் பின்பு அர்ஜுனன் எங்கே போனான்?
விடை... சித்திராங்கதையைப் பார்ப்பதற்காக மணிபுரத்திற்கு அர்ஜுனன் சென்று, அங்கு தன் பிள்ளையாகிய பப்ரவாஹனன் அரசாள்வதைக் கண்டான். அங்கு சித்திராங்கதையைக் கண்டு ஸந்தோஷமடைந்து, பின்பு மேற்கு ஸமுத்திரக்கரை யோரமாய் கோகரணம் முதல் ஸகல தீர்த்தங்களிலும் ஸ்நாநம் செய்துகொண்டு கடைசியாக துவாரகாபுரியின் அருகேயுள்ள பிரபாஸ் தீர்த்தம் வந்து சேர்ந்தான்.
வினா 176.- இங்கு வந்ததும், அர்ஜுனன் என்ன கேள்விப்பட்டான்? உடனே என்ன செய்தான்?
விடை.- இதுவரையில் கிருஷ்ண பகவானது தங்கையாகிய ஸுபத்திரையின் அழகைக் கேள்வியுற்று, அவளை விவாஹம் செய்து கொள்ள வேண்டுமென்று அர்ஜுனன் எண்ணியிருந்தான். அவளைத் துர்யோதனனுக்குக் கொடுப்பதாகப் பலராமர் வாக்களித்திருப்பதைக் கேள்வியுற்றான். உடனே ஸுபத்திரையைத் தான் அடைய வேண்டும் என்கிற ஆவலோடு கிருஷ்ணபகவானைத் துதிக்க, அவர் உடனே அவன் முன் தோன்றினார்.
வினா 177.- கிருஷ்ண பகவான் வந்து ஸுபத்திரையை அடையும் விஷயத்தில் அர்ஜுனனுக்கு என்ன உபாயம் சொல்லிக்கொடுத்து எந்த வழியால் ஸுபத்திரையை யும், அர்ஜுனனையும் சேர்த்து வைத்தார்?
விடை... அர்ஜுனனைத் திரிதண்ட ஸந்நியாஸி வேஷம் போட்டுக் கொள்ளும்படி செய்து, பக்கத்திலிருக்கும் ரெய்வதகபர்வதத்தின் குகை ஒன்றில் வந்திருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு, துவாரகைக்குச் சென்றார். கொஞ்ச நாளைக்குள் ரெய்வதக பர்வதத்தில் ஒரு உத்ஸவம் வர, அதற்கு ஸகல யாதவர்களும் அங்குவந்து அர்ஜுன ஸந்நியாஸியைக் கண்டார்கள். ஸந்நியாஸிகளிடம் அதிகப் பிரீதி வாய்ந்த பலராமர் வந்து அர்ஜுனனை வந்தனம் செய்ய, கிருஷ்ணமூர்த்தி கலியுக ஸந்நியாஸிகளை நம்பலாகாதென்று தூரவே நின்றுவிட்டார். பெரியவாளைத் தூஷியாதிருக்கும்படி கிருஷ்ணனைக் கையமர்த்தி விட்டு, பலராமர் துவாரகைக்கு ஸந்நியாஸியை அழைத்துப்போய், கிருஷ்ணமூர்த்தி எவ்வளவு தடுத்தும் அதைக் கேட்காது, ஸுபத்திரை முதலியவர்கள் இருக்கும் கன்னியா மடத்தருகில் ஒரு தோட்டத்தில் இவரை வைத்து, சாதுர்மாஸ்ய விரதம் முடிகிறவரையில் அப்படியே இருக்கும் படி ஏற்பாடு செய்தார். அப்பொழுது பலராமரது உத்தரவின்படி ஸுபத்திரை அர்ஜுன ஸந்நியாஸிக்குத் தொண்டுசெய்து வந்தாள்.
வினா 178.- பின்பு கிருஷ்ணமூர்த்தி ஸுபத்திரையின் கல்யாணத்தை எவ்வாறு நடத்திவைத்தார்.?
விடை.- சாதுர்மாஸ்ய முடிவில் துவாரகைக்கு அருகிலுள்ள பிண்டாரக தீர்த்தத்தில் ஒரு பெரிய உத்ஸவம் நடப்பது வழக்கம். அதற்காக அர்ஜுன ஸந்நியாஸியும், ஸுபத்திரையும் ஒரு யாதவ ஸேனாதிபதியும் தவிர, மற்றைய எல்லா யாதவர்களும் பிண்டாரக தீர்த்தம் சென்றார்கள். அப்பொழுது இரவில் ஸுபத்திரைக்கு அர்ஜுனன் தனது உண்மை ரூபத்தைக்காட்டி காந்தர்வ விவாஹம் செய்து கொள்ளலாமென்று சொல்ல, “கிருஷ்ணமூர்த்தி யில்லாது நாம் கல்யாணம் செய்து கொள்ளக்கூடாது என்று ஸுபத்திரை சொன்னாள். அர்ஜுனன் கிருஷ்ணமூர்த்தியைத் தியானம் செய்தான். கிருஷ்ணபகவான் உடனே வர, அவரது மஹிமையால் அந்த இரவிலேயே, தேவேந்திரன் பிரஹஸ்பதி முதலியவர் வர, அர்ஜுனனுக்கு விவாஹம் விதிப்படி நடந்தேறியது.
வினா 179.- இப்படி விவாஹம் முடிந்த பின்பு அர்ஜுனன் எவ்வாறு இந்திர ப்ரஸ்தத்திற்கு வந்தான்? வழியில் என்ன நடந்தது?
விடை... கிருஷ்ண பகவான் மறைந்து போகுமுன் ஸுபத்திரைக்கு இரத ஸாரத்யம் தெரியுமென்றும், ஆகையால் லாயத்தில் இருக்கும் ஒரு இரதத்தை தயார் செய்து கொண்டு ஸுபத்திரையை ஸாரதியாக வைத்துக்கொண்டு இந்திரப்ரஸ்தம் போகலாமென்றும், பொழுது விடிவதற்கு முன், துவாரகையின் எல்லையைத் தாண்டிவிட வேண்டுமென்றும், அர்ஜுனனுக்கு எச்சரிகை செய்து விட்டுப்போனார். அர்ஜுனன் பகவானது உத்திரவின்படி புறப்பட்டுப் போகையில், பகவானாலேயே ஏவப்பட்ட யாதவ ஸேனாதிபதி ஒருவன் அர்ஜுனனை எதிர்த்து யுத்தம் செய்வதுபோலப் பாசாங்கு செய்ய அவன் நோக்கத்தைத் தெரிந்த அர்ஜுனன் அவன் மேலே படாது, வெகு தந்திரமாய்ப் பாணங்களை வருஷித்தான். இதைக் கண்டு அந்த ஸேனாதிபதி தோல்வியடைந்தாற்போல பாசாங்கு செய்துகொண்டு அர்ஜுனனைப் போக விட்டான். அர்ஜுனன் கூடிய சீக்கிரத்தில் இந்திரப்ரஸ்தம் போய்ச்சேர்ந்தான்.
வினா 180.- இந்த ஸமாசாரம் பலராமருக்குத் தெரிந்ததும் அவர் என்ன செய்ய யத்தனித்தார்? அது எவ்வாறு முடிந்தது?
விடை.- உடனே அர்ஜுனனிடம் பலராமருக்கு அதிக கோபம் வர, அவனைக் கொல்ல வேண்டுமென்று அவர் ஸகல யாதவ ஸேனைகளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டார். உடனே கிருஷ்ணமூர்த்தி கலியுக ஸந்நியாஸிகளைப் பற்றிச் சொன்னவைகளைக் கேட்காததினாலல்லவா இக்கஷ்டம் வந்ததென்று பலராமருக்குத் தோன்ற, இப்பொழுதாவது கிருஷ்ணமூர்த்தி சொற்படி கேட்போம் என்று அவரோடு ஆலோசித்தார். "அர்ஜுனனைச் சண்டையில் கொன்றால் தமது ஸுபத்திரைக்குக் கஷ்டம். நாம் தோல்வியடைந்தால் நமக்கும் அவமானம். ஆகவே சண்டை எப்படி முடிந்தாலும் கஷ்டம் நமக்கே. ஆகையால் நமக்கு தெரிந்தே அர்ஜுனன் ஸுபத்திரையைக் கல்யாணம் செய்து கொண்டதாக, அவனுக்குச் சீர் முதலியவைகளைக் கொண்டு போய்க் கொடுத்து, அர்ஜுனனை நம்மோடு கூட்டிக் கொள்வதே இப்பொழுது செய்யத்தக்க காரியம்” என்று கிருஷ்ணன் சொல்ல, அதன்படியே யாதவர்கள் செய்து ஸுபத்திரைக்கு விவாஹத்தைப் பூர்த்தி செய்தார்கள்.
வினா 181.- பிரம்மசரிய விரதத்தோடு தீர்த்த யாத்திரைக்குப் புறப்பட்ட அர்ஜுனன் அதை இப்படி விவாஹ யாத்திரை யாக்கினது நியாயமா?
விடை.- கதை இருக்கிறபடியே பார்த்தால் நியாயம் என்று ஸ்தாபிக்க முடியாது. பாரதம் வேத ரஹஸ்யத்தை வெளியிட வந்த நூல் எனக்கொண்டு, அர்ஜுனனை நரனாகவும் கிருஷ்ண பரமாத்மாவை மனிதனுள் இருக்கும் பரமாத்மாவாகவும் கொண்டு, ஜீவாத்மாவுக்குக் கடைசியில் வைராக்கியம் வந்து மோக்ஷமடைவதற்குத் தக்க அதிகாரம் வரும்படி செய்யப் பரமாத்மா ஜீவாத்மாவை உலக இன்பங்களில் அலையவிட்டு வேடிக்கை பார்ப்பதை இந்த தீர்த்த யாத்திரை விவாஹ யாத்திரையானது சூசிப்பிக்கின்ற தென்று கொண்டால் மாத்திரம்தான் இந்த கேள்விக்கு ஒருவாறு பரிஹாரம் சொல்லலாம். வேறு எந்த விதமாய் ஆகட்டும், கதை யிருக்கிறபடி சொல்லப்போனால் அது யுக்திக்குப் பொருந்தாததாகவே முடியும்.
வினா 182.- இப்படி அர்ஜுனனுக்கு ஸுபத்திரா விவாஹமானதும் கிருஷ்ணார்ஜுனாள் என்ன செய்தார்கள்?
விடை.- இவ்விருவரும் இந்திரப்ரஸ்தத்திலேயே ஸுகமாய்க் கொஞ்ச காலம் வாழ்ந்திருந்தார்கள். இப்படி யிருக்கையில் வஸந்த காலத்தில் ஒருநாள் இவ்விருவரும் தங்களது ஸ்திரீகளோடு யமுனையில் ஜலக்கிரீடை செய்யவந்து கொஞ்ச நாழிகை ஜலக்கிரீடை செய்துவிட்டு யமுனைக் கரையில் ஏகாந்த ஸ்தலத்தில் இருவரும் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.
வினா 183.- அப்பொழுது அவர்களிடத்தில் யார்வந்து என்ன வேண்டுமென்று யாசித்தார்கள்?
விடை... கிருஷ்ணார்ஜுனாள் இப்படி உட்கார்ந்திருக்கும் பொழுது அக்கினி பகவான் ஒரு பிராம்மண வடிவம் கொண்டு அவர்களிடம் வந்து தனக்கு வலிமை குறைந்திருக்கிற தென்பதாகவும், அதற்குப் பிரம்மா பக்கத்திலிருக்கும் காண்டவ வனத்தைத் தான் எரிப்பதே பரிஹாரம் என்று சொன்னதாகவும், அந்த வனத்தைத் தான் முன் சில தடவை எரிக்கப்பார்த்து முடியாமற் போனதாகவும் சொல்லிக் கடைசியாய் அவர்களை அவ்வனத்தை எரிப்பதில் தனக்கு ஸஹாயம் செய்ய வேண்டுமென்று மஹா விநயத்துடன் கேட்டுக்கொண்டார்.
வினா 184.- அக்கினி பகவானுக்கு வலிமை குறையக் காரணமென்ன?
விடை.- முற்காலத்தில் சுவேதாகி என்றொரு அரசனிருந்தான். அவன் அடிக்கடி தொடர்ச்சியாய் யக்ஞங்கள் நடத்தி வர, பிராம்மணர்களுக்குக் கஷ்டம் அதிகரித்து விட்டபடியால் எல்லோரும், 'உம்முடைய யக்ஞத்திற்கு வந்து ஸஹாயம் செய்வதில்லை' என்று மறுத்துவிட்டார்கள். யக்ஞ ஆசை அதிகமாக உடைய அரசன் மஹாதேவரைக் குறித்து தவம் செய்ய அவர் அவ்வரசன் முன்தோன்றினவுடன் "நீரே எனக்கு யக்ஞ விஷயத்தில் எ ஹாயம் செய்யவேண்டும்” என்று அவன் கேட்க, அதற்கு அவர் “நீ ஒருவர் ஸஹாயமுமின்றி, அக்கினியில் விடாது நெய்யை ஆஹுதியாக 12-வருஷம் கொட்டிக்கொண்டிருந்தால் என் ஸஹாயத்தை நீ அடையலாம்” என்று சொல்லி மறைந்தார். இதுகேட்டு சுவேதாகி அப்படி செய்யக் கடைசியில் சிவன் தூர்வாஸ மஹாரிஷியை அனுப்பி அவ்வரசனது கஷ்டத்தை நிவர்த்தி செய்து வைத்தார். இப்படி 12-வருஷம் விடாது நெய்யைக் குடித்தமையால் அக்கினிபகவானுக்கு வலிமை குறைந்தது.
வினா 185.- அக்கினி பகவானது எண்ணத்தை யறிந்தவுடன் கிருஷ்ணார்ஜுனாள் என்ன செய்தார்கள்?
விடை.- இவர்கள் அக்கினிபகவானுக்கு வேண்டிய ஸஹாயம் செய்வதாக ஒப்புக் கொண்டார்கள். அர்ஜுனன் தனக்குத் தகுந்த தேர், வில், அம்பு முதலியவைகள் இல்லையென்று சொல்ல, அக்கினி பகவான் வருணபகவானிடம் சென்று ஹநுமக் கொடிவாய்ந்த நான்கு குதிரைகள் கட்டிய இரதத்தையும் காண்டீவ தனுஸையும், எப்பொழுதும் நிறைந்திருக்கும் அம்பறாத்தூணியையும் வாங்கி அர்ஜுனனுக்கே கொடுத்துவிட்டு காண்டவவனத்தைச் சென்று சூழ்ந்துகொண்டு எரிக்கத் தொடங்கினார். கிருஷ்ணார்ஜுனாள் சுற்றி வந்துகொண்டே வெளியில் ஓடப் பார்க்கும் ஸகல பிராணிகளையும் நெருப்பிலே தள்ளிக் கொண்டு வந்தார்கள்.
வினா 186.- இப்படி இவர்கள் அக்கினிபகவானுக்கு ஸஹாயம் செய்து கொண்டிருக்கையில் என்ன பிரமாதம் விளைந்தது?
விடை.- காண்டவ வனத்தை அக்கினி பகவான் எரிக்கிறான் என்ற செய்தியைக் கேள்வியுற்ற இந்திரன் தனது மேகங்களால் மழை பொழியும்படி செய்தான். கிருஷ்ணார்ஜுனாள் அம்மழையை ஆகாயத்தில் சரக்கூடுபோட்டுத் தடுத்து விட்டார்கள். இதைக் கண்டவுடன் ஸகல தேவதைகளும் இவர்களோடு சண்டைக்கு வர, கொஞ்ச நாழிகை இவர்களுக்கும் கிருஷ்ணார்ஜுனர்களுக்கும் கோரயுத்தம் நடந்தது. கடைசியில் தேவதைகள் தோல்வி யடைந்து தத்தம் இருப்பிடம் சென்றார்கள்.
வினா 187.- இந்த நெருப்பில் ஒரு ஜந்துவும் பிழைக்கவில்லையா?
விடை.- ஆறு ஜந்துக்கள் மாத்திரம் பிழைத்தன. அவையாவன: தக்ஷகன் பிள்ளையாகிய ஒரு பாம்பு, மயன் என்ற அஸுரன், நான்கு சாரங்கக பட்சிகள் ஆகிய இவைகளே.
வினா 188.- தக்ஷகனது பிள்ளையாகிய பாம்பு எப்படிப் பிழைத்தோடிப் போயிற்று?
விடை. நெருப்புப் பற்றி எரியும் காலத்தில் தக்ஷகன் காண்டவவனத்திலில்லை. குருக்ஷேத்திரத்திற்கு ஒரு காரியார்த்தமாய்ப் போயிருந்தான். அவன் பெண்சாதியும் பிள்ளையும் அவ்வனத்தி லிருந்தார்கள். நெருப்பு ஸமீபத்தில் வருவதைக் கண்டு, தன் பிள்ளையைப் பிழைப்பிக்க வெண்ணி, தன் பிள்ளையை தலை முன்னதாகவும், வால் வாயண்டையும் வரும்படியாகவும் விழிங்கிக் கொண்டு, தாய்ப் பாம்பு ஆகாயத்திற் கிளம்பியது. இதைக்கண்ட அர்ஜுனன் தாய்ப்பாம்பின் தலையை அறுத்துவிட, உள்ளிருந்த சிறு பாம்பின்வால் மாத்திரம் வெட்டுண்டது. அச்சமயத்தில் இந்திரன் முதலிய தேவர்கள் காற்று, தூசி இவைகளைக் கிளப்பி மறைக்க இச்சிறு பாம்பு தப்பி ஓடிப்போய்விட்டது. இது அர்ஜுனனுக்குத் தெரியாது.
வினா 189.- மயாஸுரன் எப்படித் தப்பித்துக்கொண்டான்?
விடை.- இவ்வஸுரன் தன்னண்டையில் தீ வருவதைக் கண்டு காண்டவ வனத்தை விட்டு ஓட யத்தனிக்கையில், கிருஷ்ணபகவான் கண்டு, அவனைக் கொல்ல சக்கிராயுதத்தைக் கையிலெடுத்துவிட்டார். இதை கண்ட மயன் அர்ஜுனன் காலில் விழுந்து தன்னைக் காப்பாற்ற வேண்டுமென்று கெஞ்ச, அர்ஜுனன் அவனைக் காப்பாற்றுவதாகச் சொன்னான். உடனெ பகவானும் சக்கிராயுதத்தைக் கீழே வைத்து விட்டார். ஆகவே இருவரும் மயனை தப்பிப் போகும்படி விட்டுவிட்டார்கள். (தனக்கு உயிர்தந்த அர்ஜுனனுக்கு இம்மயன் செய்த உபகாரத்தை ஸபாபர்வத்தில் விஸ்தரிப்போம்.)
வினா 190.- நான்கு சாரங்ககப் பறைவைகள் எவ்வாறு பிழைத்தன?
விடை. நெருப்பு சுற்றி வருவதைக் கன்ட நான்கு இறகு முளைக்காத சாரங்ககக் குஞ்சுகள் அக்கினி பகவானை மனதாரத் துதித்தன. மேலும் இச் சாரங்ககப் பறவைகளின் பிதாவாகிய மண்டபாலர் என்கிற ரிஷியும் முன்னமேயே அக்கினி பகவானிடம் தன் நான்கு குஞ்சுகளையும் எரிக்காது காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார். இவ்விரு காரணத்தால் இக்குஞ்சுகளை எரிக்காது அக்கினி பகவான் விட்டுவிட்டார்.
வினா 191.- ரிஷிக்குப் பறவைகள் பிறப்பானேன்?
விடை.- மண்டபாலர் என்கிற ரிஷி மஹா ஸந்நியாஸியாயிருந்து கடைசியில் தேகம் விட்டு பிதிர் லோகத்திற்குப் போனதும், அங்கு ஸுகம் கிடைக்காது கண்டு, அங்கிருந்த தேவதைகள் மூலமாய் தனக்குப் பிள்ளையில்லாததால்தான் அவ்வுலகில் ஸுகம் கிடைக்கவில்லை யென்று தெரிந்து கொண்டார். உடனே அதிசீக்கிரத்தில் குழந்தைகள் உண்டாவது பக்ஷிஜாதியில்தான் என்று அறிந்தரிஷி, ஒரு சாரங்ககப்பறவையாகி நான்கு குஞ்சுகளை உண்டாக்கினார். பின்புகொஞ்சநாள் சாரங்ககமாகவே பக்ஷிதர்மத்தை அனுஷ்டித்துவிட்டுப் பின் பிதிர்லோகமடைந்தார். ஆகையால் தான் ரிஷிக்குப் பக்ஷிகள் குழந்தைகளாகப் பிறந்தன.
வினா 192.- இப்படி காண்டவ தகனம் ஆனதும் என்ன நடந்தது?
விடை..- இந்திரன் முதலிய தேவதைகள் அர்ஜுனனைக் கண்டு ஸந்தோஷித்தார்கள். அப்பொழுது அர்ஜுனன் இந்திரனைத் தனக்கு அஸ்திர விசேஷங்களைக் கொடுக்கும் படி கேட்டான். இந்திரன் “உனக்கு எப்பொழுது சிவ கடாக்ஷம் வருமோ அப்பொழுது நீ கேட்டவைகளை நான் உனக்குக் கொடுப்பேன்" என்று சொல்லித் தன் இருப்பிடம் சென்றான். அக்கினிபகவானும் 'என் ஸஹாயத்தால் உங்களுக்கு நினைத்தவிடம் போக சக்தி வரட்டும்' என்ற வரத்தைக் கொடுத்துவிட்டு மறைந்தார். உடனே ஸகலதேவதைகளும் தத்தம் இருப்பிடம் சென்றார்கள். கிருஷ்ணார்ஜுனர்களும், ஸ்திரீ ஜனங்களும் இந்திரப்ரஸ்தம் சென்றார்கள்.
தெள்ளத் தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅடியேன் தாஸன்