செவ்வாய், 5 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினாவிடை 6

வினா 144.- இவ்வாறு புத்திமதி கூறி வருங்கால்‌ சைத்ரரதன்‌ என்ன சரித்திரத்தைச் சொல்லவேண்டி நேர்ந்தது? ஏன்‌?

விடை.- புத்திமதி கூறிவருங்கால்‌ அர்ஜுனனை தாபதேசா என்று அவன்‌அழைத்தான்‌. இதைக்‌ கேட்டதும்‌ அர்ஜுனனுக்கு 'நம்மைத்‌ தாபதேசன்‌ என்று கூப்பிடுவானேன்‌' என்ற ஸந்தேகம்வர, அவன்‌ கந்தர்வனை இதன்‌ காரணத்தைக்‌ கேட்டான்‌. இதற்காக கந்தர்வன்‌ தபதியின்‌ உபாக்கியானத்தைச்‌ சொல்லும்படி நேரிட்டது.

வினா 145.- இந்தத்‌ தபதி யார்‌? இவளுக்கும்‌, அர்ஜுனனது வம்சத்திற்கும்‌ என்ன ஸம்பந்தம்‌?

விடை.- பரதவம்சத்தில்‌ ஸம்வரணன்‌ என்றொரு அரசன்‌ இருந்தான்‌. அவன்‌ ஸூர்யனது பெண்ணாகிய தபதியின்‌ அழகைக்கண்டு ஆசைகொண்டு அவளை விவாஹம்‌ செய்து கொள்ள வேண்டுமென்று ஸூர்யனைக்‌ குறித்துத்‌ தபஸு செய்தான்‌. பின்பு ஒருநாள்‌ காட்டிற்கு வேட்டையாடப்‌ போகையில்‌ அவளைக்‌ காட்டில்‌ கண்டு மோஹித்து அவளைத்‌ தனக்குப்‌ பெண்சாதியாக வேண்டுமென்று கேட்க, அவள்‌ தனது தகப்பனான ஸூர்யனது அனுமதியின்பேரில்‌ அவனுக்குத்‌ தான்‌ பெண்சாதியாவதாகச்‌ சொல்லி மறைந்தாள்‌. அரசனுக்கு அடங்காத துக்கம்‌ வர, அவன்‌ மூர்ச்சையாகிக்‌ கீழேவிழுந்துவிட்டான்‌. மந்திரியால்‌ அரசன்‌ மூர்ச்சை தெளிந்தெழுந்து ஸூர்யனை ஆராதித்துத்‌ தனது குருவாகிய வஸிஷ்டரை நினைத்தான்‌. உடனே அவர் வந்து ஸூூர்யனிடம்‌ சென்று, தன்‌ அரசனது எண்ணத்தை வெளியிட்டுத்‌ தபதியை வாங்கி வந்து அரசனுக்கு விவாஹம்செய்து வைத்தார்‌. ஸம்வரணனுக்குத்‌ தபதியிடம்‌ பிறந்தவனே குரு என்னும்‌ அரசன்‌. இதனாலேயே பரத வம்சத்தவருக்குக்‌ குரு வம்சத்தவர்‌ என்கிற பெயரும்‌ உண்டு. இக்காரணம்‌ பற்றிக்‌ கந்தர்வன்‌ அர்ஜுனனைத்‌ தாபதேசன்‌ என்று அழைத்தான்‌.

வினா 146.- வஸிஷ்டரது மஹத்துவத்தைச்‌ சொல்ல வேண்டும்‌ என்று அர்ஜுனன் கேட்க சைத்தரரதன்‌ என்ன சொன்னான்‌?

விடை... வஸிஷ்டரிடத்தில்‌ ஒரு காமதேனு இருந்தது. இது விசுவாமித்திரர்‌ தமது பரிவாரங்களோடு வந்திருக்குங்கால்‌ அவர்கள்‌ எல்லாருக்கும்‌ உணவளிக்க, வஸிஷ்டரிட மிருந்து அதைத்‌ தான்‌ கொண்டுபோக வேண்டுமென்று கெளசிகர் நினைத்து அதைக்‌ கட்டிப்பிடித்துக்‌ கொண்டு போகப்‌ பார்த்தார்‌. விசுவாமித்திரரது நோக்கத்தைக்‌ காமதேனு அறிந்து, தன்‌ தேகத்திலிருந்து அனேகஸேனைகளை சிருஷ்டித்து அவரை வென்றது. உடனே விசுவாமித்திரருக்குப்‌ பிரம்ம பலத்தின்‌ மஹிமை தெரிய வர, தபஸுசெய்து பிராம்மணரானார்‌. இவர்‌ பிராமணராகுமுன்‌, இவருக்கும்‌ வஸிஷ்டருக்கும்‌ காமதேனு விஷயமாய்ச்‌ சண்டை நேர்ந்ததால்‌ கெளசிகருக்கு வஸிஷ்டரிடம்‌ விரோதமிருந்தது. இதனால்‌ கெளசிகர்‌ வஸிஷ்டரது பிள்ளைகளெல்லோரையும்‌ உயிர்‌ இழக்கும்படி சபித்தார்‌. அப்பொழுது வஸிஷ்டருக்கு அடங்காத்‌ துக்கம்‌ வந்தும்‌, கெளசிக வம்சத்தை அழிக்கவேண்டு மென்கிற எண்ணம்‌ அவர்‌ மனதில்‌ தோன்றவில்லை. அவர்‌ மாத்திரம்‌ துக்கத்தால்‌ அனேக வழியில்‌ உயிரை மாய்க்கப்‌ பார்த்தும்‌ உயிர்போகவில்லை. இதற்குள்‌ அவரது மூத்தகுமாரனது பெண்சாதி வயிற்றில்‌ ஒரு குமாரன்‌ இருப்பதை அறிந்து, துக்கம்‌ தீர்ந்தார்‌. இக்‌ குமாரனே பராசர முனி. இவர்‌ பிறந்ததும்‌ தமது தகப்பன்‌, சிற்றப்பன்‌ ஆகிய இவர்கள்‌ இறந்ததைக்‌ கேள்வியுற்று உலகத்தை அழிக்க யத்தனிக்கையில்‌ அப்பொழுதும்‌ வஸிஷ்டர்‌ பிருகு வம்சத்தில்‌ பிறந்து உலகத்தை அழிக்க முயன்ற ஒளரவர்‌ என்பவரை அவர்‌ பிதிர்க்கள்‌ தடுத்த கதையைச்சொல்லித்‌ தடுத்து, இவரை நல்ல வழியில்‌ திருப்பினார்‌. இவ்வளவு, மேலான துறவும்‌, சாந்தமும்‌ வாய்ந்தவர்‌ வஸிஷ்டமுனி.

வினா 147.- விசுவாமித்திரர்‌ எவ்வாறு வஸிஷ்டரது பிள்ளைகளைக்‌ கொல்லக்‌ காரணமானார்‌.

விடை.- இக்ஷ்வாகு வம்சத்தில்‌ கல்மாஷபாதர்‌ என்கிற ஒரு அரசர்‌ இருந்தார்‌. அவர்‌ வேட்டைக்குப்‌ புறப்பட்டுப்‌ போகும்போது வஸிஷ்டரது பிள்ளை சக்தி என்பவரோடு விவாதம்‌ செய்து மிகுந்த அபராதத்தைச்செய்ய அவர்‌ “நீ இராக்ஷஸனாய்‌ போகக்கடவது' என்று சபித்தார்‌. இதைக்‌ கேட்டிருந்த விசுவாமித்திரர்‌ தாம்‌ ஒரு இராக்ஷஸனை ஏவி, அரசனுள்‌ புகும்படி செய்ய, அதனால்‌ அவன்‌ பிராம்மணருக்கு மனுஷ்ய மாம்ஸம்‌ ஊட்டல்‌ முதலிய கொடிய அபராதங்கள்‌ செய்து வந்தான்‌. அவர்களது சாபத்தால்‌ இராக்ஷஸத்‌ தன்மை அரசனுக்கு அதிகரிக்க, விசுவாமித்திரர்‌ ஏவிய இராக்ஷவனது தூண்டுதலால்‌ இவ்வரசன்‌ வஸிஷ்டரது குழந்தைகளைத்‌ தின்ன ஆரம்பித்தான்‌. இவ்வாறு இவன்‌ வஸிஷ்டரது பிள்ளைகள்‌ எல்லோரையும்‌ கொன்றுவிட்டான்‌.

வினா 148.- இவ்வரசன்‌ கதி என்னவாயிற்று?

விடை... இவன்‌ ஒருநாள்‌ வஸிஷ்டரையும்‌, அவரது பிள்ளை சக்தியினது கர்பந்தரித்த பெண்சாதியையும்‌ கண்டு அவர்களைத்‌ தின்னவர, வஸிஷ்டரது அநுக்கிரகத்தால்‌ சாபம்‌ நீங்கி, இராஜ்யம்‌ சென்று ஒரு புத்திரனை அடைந்து ஸுகித்திருந்தான்‌.

வினா 149- பிராம்மணரது மஹிமையைப்பற்றி இவ்வளவு சொல்லிய பின்பு, கந்தர்வன்‌ யாரை பாண்டவருக்குப்‌ புரோஹிதராக நியமித்துக்கொடுத்தான்‌? பின்பு பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... அதே காட்டில்‌ ஒரு திவ்ய ஸ்தலத்தில்‌ தபஸு செய்து கொண்டிருக்கும்‌ தேவல ரிஷியினது தம்பியாகிய தெளம்யர்‌ என்பவரை கந்தர்வன்‌ பாண்டவர்களுக்குப்‌ புரோஹிதராகத்தக்கவர்‌ என்று சொன்னான்‌. இவன்‌ சொல்லியவாறே பாண்டவர்கள்‌ அக்காட்டில்‌ தெளம்யரைத்‌ தரிசித்து 'எமக்கு பெளரோஹித்யம்‌ செய்தருள வேண்டும்‌' என்று மஹா விநயத்துடன்‌ அந்த ரிஷி சிரேஷ்டரைக்‌ கேட்க, அவர்‌ அதற்கு இசைந்தார்‌. உடனே தெளம்யரை முன்னிட்டுக்கொண்டு பாண்டவர்கள்‌ திரெளபதி ஸ்வயம்வரத்திற்காக பாஞ்சால தேசம்‌ சென்றார்கள்‌. பாஞ்சாலதேசம்‌ சென்று ஒரு குயவன்‌ விட்டில்‌ இறங்கி, இவர்கள்‌ பிரம்மசாரிகளைப்‌ போலவே பிக்ஷை எடுத்து ஜீவனம்‌ செய்து வந்தார்கள்‌. இவர்களை ஒருவராலும்‌ கண்டு பிடிக்க முடியவில்லை.

வினா 150.- திரெளபதியை விவாகத்தில்‌ அடைவதற்குப்‌ துருபதராஜன்‌ அரசர்களுக்கு என்ன பரீக்ஷையை ஏற்படுத்தினான்‌?

விடை... ஒரு மத்ஸ்யம்‌ போன்ற ஒரு குறியை உயர அமைத்து, அதன்‌ கீழ்‌ ஒரு யந்திரம்‌ சுற்றிக்கொண்டிருக்கும்படி அமைக்கப்‌ பட்டிருந்தது. யாரொருவன்‌ அங்கு வைத்திருக்கும்‌ ஒரு பெரியவில்லை நாணேற்றி இந்த யந்திரத்தின்‌ வழியால்‌ அந்த மத்ஸ்யத்தைக்‌ குறிவைத்து அம்பால்‌ அடித்து விடுகிறானோ, அவனுக்கு உடனே திரெளபதியைக்‌ கொடுப்பதாக ஏற்பாடு செய்திருந்தார்கள்‌.

வினா 151.- அரசர்கள்‌ அந்த ஸ்வயம்வரத்தில்‌ வில்லை வளைத்தபோது என்ன கதியை அடைந்தார்கள்‌?

விடை... சிலர்‌ வில்லைத்‌ தூக்கவும்‌ முடியவில்லை. சிலர்‌ வளைக்க யத்தனித்தும்‌ வில்லால்‌ அடிபட்டுக்‌ கீழே விழுந்தனர்‌. கர்ணன்‌ மாத்திரம்‌ வில்லை வளைத்து அம்பு விடப்போகும்‌ தருணத்தில்‌, திரெளபதி இவர்‌ தான்‌ என்‌ புருஷரோ என்று நினைக்கும்போது அம்பினுடைய நாண்‌ கழன்று கர்ணனைக்‌ கீழே தள்ளிவிட்டது.

வினா 152.- இவ்வாறு எல்லா அரசரும்‌ அவமானப்பட்டுப்‌ போகுங்கால்‌ யார்‌ இந்த பரீக்ஷையில்‌ தேறினார்கள்‌? எப்படி? இதனால்‌ என்ன விளைந்தது?

விடை... பிராம்மணர்‌ கோஷ்டியிலிருந்து அர்ஜுனன்‌ எழுந்து, வில்லை வெகு சீக்கிரத்தில்‌ நாணேற்றி அந்த, மத்ஸ்யக்‌ குறியை அடித்துவிட்டான்‌. உடனே திரெளபதி அர்ஜுனனுக்கு மாலையிட, துருபத ராஜனும்‌ இதற்கு இசைந்து இந்த பிராம்மணச்‌ சிறுவனுக்கே தன்‌ பெண்ணைக்‌ கொடுப்பதாகத்‌ தீர்மானித்தான்‌. இதைக்‌ கண்டு அங்கு வந்திருந்த அரசர்கள்‌ கோபங்கொண்டு துருபதனைக்‌ கொல்லப்போக அர்ஜுனனும்‌ பீமனும்‌, அவர்களை எதிர்த்துச்‌ சண்டை செய்தார்கள்‌. அப்பொழுது அர்ஜுனனுக்கும்‌ கர்ணனுக்கும்‌, சல்லியனுக்கும்‌ பீமனுக்கும்‌, கோரமான யுத்தமுண்டாயிற்று. இந்தச்‌ சண்டையின்‌ நிலையைக்கண்டு இராஜாக்களுக்கு இவர்கள்‌ கேவலம்‌ பிராம்மணர்கள்‌ அல்ல வென்று தோன்ற, அவர்கள்‌ உடனே சண்டையை நிறுத்திவிட்டார்கள்‌.

வினா 153.- இவ்வாறு சண்டை நின்றுவிடப்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌? பின்பு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பாண்டவர்கள்‌ திரெளபதியை அழைத்துக்கொண்டு தாங்கள்‌ இறங்கி யிருக்கும்‌ குயவன்‌ விட்டற்குப்போனார்கள்‌. அங்கு குந்தியோ 'நமது பிள்ளைகள்‌ இவ்வளவு நாழிகையாயும்‌ ஏன்‌ பிக்ஷையைக்‌ கொண்டுவரவில்லை? அவர்களுக்கு வழியில்‌ ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டதோ? என்று துக்கித்துக்கொண்டிருந்தாள்‌. இப்படி யிருக்குங்கால்‌, பீமார்ச்சுனர்கள்‌ திரெளபதியைக்‌ கூட்டிக்‌ கொண்டு வந்து 'தாயே நாம்‌ ஒரு பிக்ஷைகொண்டு வந்திருக்கிறோம்‌' என, குந்தி உள்ளேயிருந்தபடி அவர்கள்‌ கொண்டுவந்தது இன்னதென்று பாராது 'அப்பா அப்படியானால்‌ அதிக நாழிகையாய்‌ விட்டது; நீங்கள்‌ ஐந்து பேரும்‌ அதைப்‌ பங்கிட்டு உண்ணுங்கள்‌' என்று கட்டளை யிட்டாள்‌. இது தர்மபுத்திரருக்குத்‌ தெரிய வந்ததும்‌, அவர்‌ முதலில்‌ அர்ஜுனனுக்கே திரெளபதி பெண்சாதி என்று தீர்மானித்‌திருந்த போதிலும்‌, ஏகசக்கிரபுரத்தில்‌ வியாஸர்‌ திரெளபதியின்‌ பூர்வ ஜன்ம சரித்திரம்‌ சொன்னது ஞாபகம்‌ வர, 'நாம்‌ ஐவரும்‌ இவளைக்‌ கல்யாணம்‌ செய்துகொள்ளவேண்டியது' எனத்‌ தீர்மானித்தார்‌.

வினா 154.- இவ்வாறு தர்மபுத்திரர்‌ தீர்மானித்துக்‌ கொண்டிருக்கையில்‌, அவர்கள் விட்டிற்கு யார்‌ வந்தது? அவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- அவர்களது அம்மான்‌ சேயாகிய கிருஷ்ண பலராமர்கள்‌ அங்கு அவர்களைப்‌ பார்க்கவந்தார்கள்‌. முதலில்‌ இவர்களைக்‌ கண்டதுமே, இவர்கள்‌ இன்னார்‌ என்பது பகவானுக்கு விளங்கிவிட்டது. மேலும்‌ பீமார்ச்சுனர்‌ செய்து வந்த சண்டையால்‌ அவர்‌ எண்ணம்‌ திடப்பட, இவர்களைப்‌ பார்த்துத்‌ தேறுதல்‌ சொல்ல பகவான்‌ அங்கு அக்காலத்தில்‌ அவஸரமாய்‌ வந்தார்‌. இதுவே பாண்டவர்களுக்கு முதலில்‌ கிருஷ்ண தரிசனம்‌ ஆன ஸமயம்‌. இது முதல்‌ கிருஷ்ணர்‌ பாண்டவர்களை அடிக்கடி நேரில்‌ பார்த்து அவர்களுக்கு அப்போதைக்கப்போது வேண்டிய ஸஹாயங்களைச்‌ செய்து வந்தார்‌. இங்கு வந்த கிருஷ்ண ராமர்கள்‌ வெகு அவஸரமாய்த்‌ தமது அத்தையாகிய குந்தியிடம்‌ விடைபெற்றுத்‌ துவாரகையை நோக்கிச்சென்றார்கள்‌.

வினா 155.- இவர்களது உண்மை நிலையை அப்பொழுது வேறு யார்‌ எப்படித்‌ தெரிந்து கொண்டு என்ன செய்தார்‌?

விடை.- அர்ஜுனன்‌ திரெளபதியை ஸ்வயம்வர மண்டபத்திலிருந்து அழைத்துக்‌ கொண்டு போனதும்‌, துருபதன்‌ “அர்ஜுனனுக்காகப்‌ பெற்ற பெண்ணை யாரோ ஒரு பிராம்மணன்‌ அடித்துக்கொண்டு போய்விட்டானே” என்று துக்கிப்பதைத்‌ திருஷ்டத்யும்னன்‌ கண்டு, தன்‌ தங்கையைக்கொண்டுபோன பிராம்மணரது உண்மை நிலை யறிவதற்கு, அர்ஜுனன்‌ பின்னே மறைவாய்ச்‌ சென்றான்‌. இவன்‌ திரெளபதியை ஒரு குயவன்‌ விட்டிற்குக்‌ கொண்டுபோய்‌ வயது சென்ற ஒரு அம்மாளிடம்‌ அவளை ஒப்புவித்துவிட்டு, பிக்ஷையெடுக்கச்சென்று கொண்டுவந்த சோற்றை அப்பெரிய அம்மை திரெளபதியைப்‌ பாகம்போட்டு, பாதி ஒரு பிராம்மணனுக்கும்‌ (பீமனுக்கும்‌) மற்றையப்‌ பாதியை ஆறு ஸரி பாகமாக்கி ஒவ்வொன்றை மற்றையவர்‌ ஒவ்வொருவருக்கும்‌ கொடுக்கும்படி செய்ததையும்‌, இரவில்‌ இவ்வைந்து பிராம்மணர்‌ பேசிக் கொண்டிருந்த யுத்த விஷயங்களையும்‌ கண்டு திருஷ்டத்யும்னன்‌ இவர்கள்‌ பாண்டவர்களாய்‌ இருக்கலாம்‌ என்று தீர்மானித்துத்‌ தன்‌ தகப்பனிடம்‌ சொல்ல, துருபதன்‌ அன்றிரவு ஸந்தோஷமாயி ருந்தான்‌. காலையில்‌ ஒரு புரோஹிதர்‌ மூலமாயும்‌, அவர்கள்‌ பாண்டவரெனத்‌ தெளிந்து, அவர்களைத்‌ தன்‌ அரண்மனைக்கு அழைத்து அவர்கள்‌ வாயாலேயே அவர்கள்‌ பாண்டவர்கள்‌ எனத்தெரிந்துகொண்டான்‌.

வினா 156.- இவ்வாறு இவர்கள்‌ பாண்டவர்கள்‌ என்ற ஸந்தாஷ ஸமாசாரம்‌ தெரிந்த பின்‌, துருபதனுக்குத்‌ திரெளபதி விவாஹ விஷயத்தில்‌ என்ன தடை ஏற்பட்டது?

விடை... நல்ல சுபதினம்‌ நோக்கி அர்ஜுனன்‌ திரெளபதியை விவாஹம்‌ செய்து கொள்ளலாம்‌' என்று துருபதன்‌ வார்த்தை எடுப்பதற்கு முன்னமே, மஹா தர்மாத்மாவான தர்மபுத்திரர்‌ அதைத்‌ தடுத்து “நாங்கள்‌ ஐவரும்‌ திரெளபதியை விவாஹம்‌ செய்து கொள்ள வேண்டியது தான்‌, அர்ஜுனன்‌ மாத்திரம்‌ அன்று” என்றும்‌, குந்தி தேவி, “நீங்கள்‌ கொண்டு வந்திருப்பதை ஐவரும்‌ ஸமமாய்‌ அநுபவியுங்கள்‌ என்று என்‌ வாக்கில்‌ வந்துவிட்டது. அது பொய்யாகக்கூடாது" என்றும்‌ சொல்ல, துருபதனுக்கு “ஒரு பெண்‌ ஐவரை விவாஹம்‌ செய்துகொள்வது அதர்மமல்லவா? இந்த தர்மாத்மாவான பாண்டவர்களுக்கும்‌ இவ்விஷயத்தில்‌ மனம்‌ ஏன்‌ ப்ரவிருத்தித்‌தது?" என்ற எண்ணங்களால்‌ மனக்‌ குழப்பமுண்டாயிற்று.

வினா 157.- இது எவ்வாறு யாரால்‌ நீங்கியது?

விடை.- இவர்கள்‌ ஒரு காரியமும்‌ செய்யமுடியாமல்‌ தயங்கி நிற்குங்கால்‌, வியாஸ மஹாரிஷி வந்து துருபதனை ஒரு ஏகாந்த ஸ்தலத்திற்கு அழைத்துக்கொண்டு போனார்‌. அங்கு பாண்டவர்‌ ஐவரும்‌ மஹாதேவதைகள்‌ என்றும்‌, பூர்வஜன்மத்தில்‌ இவர்கள்‌ கர்வத்தால்‌ மனிதராகும்படி மஹாதேவரது சாபம்‌ வந்ததென்றும்‌, அப்பொழுது மஹாதேவரைக்‌ குறித்து இந்தத்‌ திரெளபதி தவம்‌ செய்து ஐந்து தரம்‌ பர்த்தா வேண்டுமென்று கேட்டதற்கு, அவர்‌ இவ்வைந்து தேவதைகளையும்‌ அவளுக்குப்‌ பர்த்தாக்களாக நியமித்தார்‌ என்றும்‌, இவள்‌ இவ்வாறு தவம்‌ செய்யுங்கால்‌ ஒரு நாள்‌ கங்கையில்‌ குளிக்கப்‌ போனவிடத்தில்‌ இவளது கண்ணீர்‌ கங்கையில்‌ விழுந்து பொற்றாமரையாய்‌ மிதந்ததும்‌, அதைக்கண்டு அப்பொழுது கங்கைக்கரைக்கு வந்திருந்த இந்திரன்‌ அப்பொற்றாமரையின்‌ உற்பத்தி அறியப்‌ போனவிடத்தில்‌ இவளைக்‌ கண்டு இவள்‌ மூலமாய்‌ மஹாதேவரைத்‌ தரிசித்ததும்‌, அவனுக்குக்‌ கர்வ மடங்காததால்‌ ஐந்தாவது தேவனாக (மஹாதேவரால்‌ முன்னமே நான்கு தேவதைகளை அடைக்கப்பட்டுள்ள) ஒரு மலைக்குகையில்‌ அடைக்கப்‌ பட்டான்‌ என்றும்‌, கடைசியில்‌ இவ்வைவரையும்‌, துக்கித்துக்‌ கொண்டிருக்கும்‌ ஸ்திரீக்குச்‌ சிவன்‌ பர்த்தாவாக ஏற்படுத்தினார்‌ என்றும்‌, வியாஸர்‌ துருபதனுக்குத்‌ திரெளபதியின்‌ பூர்வஜன்மக்‌ கதையைச்‌ சொன்னார்‌. இப்படிச்‌ சொல்லியும்‌ அவ்வரசன்‌ தேறாதது கண்டு, அவனுக்கு வியாஸர்‌ திவ்யசக்ஷுஸைக்‌ கொடுத்து பாண்டவர்கள்‌ திரெளபதி இவர்களது உண்மையான உருவாகிய தேவதா உருவைக்‌ காட்டினவுடன்‌ துருபதன்‌ மனது திருப்தி யடைந்தது.

வினா 158.- இதன்‌ பின்பு திரெளபதிக்கு விவாஹம்‌ எப்படி நடந்தது?

விடை.- விவாஹம்‌ ஐந்துநாள்‌ நடந்தது. ஒவ்வொருநாளிலும்‌ ஒவ்வொருவராகப்‌ பாண்டவர்‌ ஐவரும்‌ திரெளபதியைப்‌ பாணிக்கிரஹணஞ்‌ செய்துகொண்டார்கள்‌. இக்கல்யாண மஹோத்ஸவத்தில்‌ பாண்டவர்களது மாமன்‌ பிள்ளைகளாகிய கிருஷ்ணராமர்கள்‌ ஏராளமான சீர்‌ முதலிய மரியாதைகளைச்‌ செய்தார்கள்‌.

வினா 159.- இவ்வாறு அரக்குமாளிகையில்‌ இறந்து விட்டார்கள்‌ என்று எண்ணப்பட்ட பாண்டவர்கள்‌, திரெளபதியை விவாஹம்‌ செய்துகொண்டார்கள்‌ என்று கேட்டதும்‌, திருதிராஷ்டிர ராஜன்‌ என்ன செய்தான்‌?

விடை.- தனது பிள்ளைகளின்‌ கெட்ட எண்ணங்களால்‌, பாண்டவர்களுக்கும்‌ திரெளபதிக்கும்‌ சண்டை உண்டாக்கி பாண்டவர்களைக்‌ கெடுக்க வேண்டும்‌ என்று திருதிராஷ்டிர ராஜனுக்குத்‌ தோன்றின போதிலும்‌, பீஷ்மர்‌, துரோணர்‌, விதுரர் முதலிய மஹான்களது நல்ல போதனைகளால்‌ மனம்‌ மாற அவன்‌ பாண்டவரையும்‌, திரெளபதி முதலியவர்களையும்‌, ஹஸ்தினாபுரிக்கு அழைத்துவரும்படி விதுரரைத்‌ துருபதராஜன்‌ பட்டணத்திற்கு அனுப்பினான்‌.

வினா 160- இவ்வாறு பாண்டவர்களை அழைப்பித்த பின்பு அவர்களுக்குத்‌ திருதிராஷ்டிரன்‌ என்ன ஏற்பாடு செய்தான்‌?

விடை.- ஹஸ்தினாபுரியில்‌ திரெளபதியோடு பாண்டவர்கள்‌ ஸுகித்திருந்தால்‌ தூர்யோதனாதியர்களுக்கும்‌ இவர்களுக்கும்‌ சண்டை உண்டாகும்‌ என்று எண்ணிப்‌ பாண்டவர்களுக்கு ஹஸ்தினாபுரத்திற்கு அருகில்‌ இருக்கும்‌ காண்டவப்ரஸ்தம்‌ என்னும்‌ நகரத்தைப்‌ பிரதான பட்டணமாக நியமித்து, அவர்களை அர்த்த ராஜ்யம்‌ ஆளும்படி திருதிராஷ்டிரன்‌ ஏற்பாடூ செய்தான்‌.

வினா 161.- அர்த்தராஜ்யம்‌ கிடைத்ததும்‌, பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை. கிருஷ்ண பகவானை முன்னிட்டுக்கொண்டு வியாஸரால்‌ நியமிக்கப்பட்ட சுபலக்கினத்தில்‌ காண்டவப்ரஸ்த நகரப்பிரவேசம்‌ செய்து, பின்பு கிருஷ்ணபகவான்‌ ஸஹாயத்தால்‌ அந்த நகரத்தைப்‌ புதிதாய்‌ நிர்மாணம்‌ செய்யும்படி செய்தார்கள்‌. அது ஒரு திவ்ய பட்டணமாக மாறி விட்டபடியால்‌ அதற்கு இந்திரப்ரஸ்தம்‌ என்ற பெயர்‌ உண்டாயிற்று. இவ்வளவையும்‌ செய்து வைத்துவிட்டு, கிருஷ்ணபகவான்‌ துவாரகைக்குப்‌ போனார்‌.

வினா 162.- இப்படிப்‌ பாண்டவர்‌ ஸுகமாய்‌ இந்திரப்ரஸ்தத்தில்‌ வாழுங்கால்‌ அவர்களிடம்‌ யார்‌ வந்து, என்ன நல்ல ஏற்பாடு செய்து வைத்தார்‌?

விடை.- திரிலோக ஸஞ்சாரியாயும்‌, எங்கும்‌ பூஜ்யராயும்‌ உள்ள நாரதமுனிவர்‌ இந்திரப்ரஸ்தம்‌ வந்தார்‌. வந்து, பாண்டவர்‌ ஐவருக்கும்‌ பொதுவாய்‌ ஒருபெண்சாதி அமைந்திருப்பதை அறிந்து, பாண்டவர்களுக்கு, பொது ஸ்திரீ நிமித்தத்தால்‌ புருஷர்களுக்கு உண்டாகும்‌ பிரமாதங்களை ஸுந்தோப ஸுந்தாளது கதையால்‌ நன்கு விளக்கி, அம்மாதிரி சண்டை அவர்களுக்கு உண்டாகாதிருக்கும்படி அவர்களுக்கும்‌ திரெளபதிக்கும்‌ இருக்கும்‌ ஸம்பந்தத்தை ஒருவாறு ஒழுங்கு படுத்தினார்‌. அந்த ஒழுங்காவது ஒவ்வொரு வருஷம்‌ திரெளபதி ஒவ்வொரு பர்த்தா விடத்திலிருக்கவேண்டியது; அந்த வருஷக்கடைசியில்‌ வரிசைக்‌ கிரமமாய்‌ அடுத்த பர்த்தாவிடம்‌ போகவேண்டியது. இவ்வாறு ஒரு பர்த்தாவோடு திரெளபதி யிருக்குங்கால்‌ மற்றைய நால்வரில்‌ யாராவது அவர்களைப்‌ பார்க்கும்படி நேரிட்டால்‌, அவர்‌ 12-வருஷம்‌ தீர்த்த யாத்திரை செய்து ஒழுங்கிற்கு விரோதமாய்‌: நடந்துகொண்ட பாபத்தைத்‌ தீர்த்துக்கொள்ள வேண்டியது" என்பதே.

வினா 163.- இந்த ஸுந்தோப ஸுந்தாள்‌ யார்‌? இவர்களின்‌ ஸ்வபாவம்‌ என்ன?

விடை.- ஹிரண்யகசிபு வம்சத்தில்‌, நிகும்பன்‌ என்றொரு அஸுர அரசன்‌ இருந்தான்‌. அவனுக்கு ஸுந்த உபஸுந்தன்‌ என்ற இருபிள்ளைகள்‌ பிறந்தார்கள்‌... இவர்கள்‌ இருவரும்‌, பிறந்தது முதல்‌ ஒருவரோடு ஒருவர்‌ மிக அந்நியோன்யமாய்‌ இருந்தார்கள்‌. பார்ப்பவர்கள்‌ யாவரும்‌ இவர்களுக்கு தேகம்‌ இரண்டே யொழிய மனது ஒன்று தான்‌ என்று சொல்லத்தக்க நிலையில்‌ இருந்தார்கள்‌.

வினா 164.- இவர்கள்‌ யாரைக்‌ குறித்து தவம்‌ செய்து என்ன அடைந்தார்கள்‌?

விடை.- பெரியவர்களிடம்‌ இருந்து உபதேசம்பெற்று விந்திய மலைச்‌ சாரலில்‌ பிரம்மாவைக்‌ குறித்து, இவர்கள்‌ கடுந்தவம்‌ புரிந்தார்கள்‌. தேவர்கள்‌ எவ்வளவுதான்‌ இவர்களது தபஸைக்‌ கலைக்கப்பார்த்தும்‌, அவர்களால்‌ முடியவில்லை. பிர்ம்மா பிரத்யக்ஷமாய்‌, "என்னவரம்‌ வேண்டும்‌” என்று கேட்க, இவர்கள்‌ தமக்கு அமரத்வம்‌ வேண்டுமென, அது தம்மால்‌ கொடுக்க முடியாது என்று பிர்ம்மா மறுத்துவிட்டார்‌. பின்பு இவர்கள்‌ "எங்களுக்கு எந்தக்‌ காரணத்தாலும்‌ சாவு வரக்கூடாது. எங்களுக்குள் சண்டை வந்து நாங்கள்‌ ஒருவருக்கொருவர்‌ அடித்துக்கொண்டு சாகவேண்டுமே ஒழிய, வேறு எந்தக்‌ காரணத்தாலும்‌ சாகக்கூடாது என்று கேட்டுக்கொள்ள பிர்ம்மா அந்த வரத்தைக்‌ கொடுத்துவிட்டார்‌.

வினா 165.- இவ்வரத்தைப்பெற்று இவர்கள்‌ என்ன செய்தார்கள்‌? அப்பொழுது தேவதைகள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- இவர்கள்‌ அஸுரரானபடியால்‌ நல்லவர்களை உபத்திரவப்படுத்த ஆரம்பித்தார்கள்‌. இதையறிந்து, தேவதைகள்‌ மிகுந்த துக்கமடைந்து பிரம்மாவிடம்‌ சென்று முறையிட்டார்கள்‌.

வினா 166.- பிர்ம்மா எப்படி இந்த ஸஹோதரர்களுள்‌ சண்டை உண்டாக்க ஏற்பாடு செய்தார்‌?

விடை.- பிர்ம்மா உலகத்திலுள்ள பெண்களை விட அதிக அழகோடுகூடிய பெண்ணொருத்தியைச்‌ சிருஷ்டிக்கும்படி விசுவகர்மாவுக்குக்‌ கட்டளையிட, அவன்‌ உலகத்திலுள்ள ஒவ்வொரு வஸ்துவிலிருந்தும்‌ எள்ளளவு அழகை எடுத்து, திலோத்தமை என்ற அப்ஸர ஸ்திரீயை சிருஷ்டித்தான்‌.

வினா 167.- இந்தத்‌ திலோத்தமை ஸுந்தோபஸுந்தாளுக்குள்‌ எப்படி சண்டை யுண்டாக்கி அவர்களை இறக்கும்படி செய்தாள்‌?

விடை.- ஸுந்தோபஸுந்தாள்‌, ஒருநாள்‌ நடுப்பகலில்‌ விந்திய மலையில்‌ ஒரு கற்பாறையில்‌ உட்கார்ந்துகொண்டு இருக்கையில்‌ அங்கு திலோத்தமை பிரம்மாவினது ஆக்ஞைப்படி பூக்கொய்து கொண்டு வந்தாள்‌. அவளைக்‌ கண்டதும்‌ இருவரும்‌ ஓடிவந்து அவள்‌ கையைப்‌ பிடித்துக்கொண்டு இவள்‌ என்‌ பெண்சாதி, 'இவள்‌ என்‌ பெண்சாதி என, இருவருக்கும்‌ சண்டை உண்டாய்விட்டது. இச்சண்டையில்‌ ஒருவரை ஒருவர்‌ கொன்று விட்டார்கள்‌.

வினா 168.- இக்கதையைச்‌ சொல்லி நாரதர்‌ ஏற்படுத்திப்‌ போன ஒழுங்குக்கு, யார்‌ யாது காரணத்திற்காக விரோதமாய்‌ நடக்க வேண்டிவந்தது?

விடை.- அர்ஜுனன்‌ இதற்கு விரோதமாய்‌ நடக்கவேண்டி வந்தது. ஒருநாள்‌ மத்தியானம்‌ ஒரு திருடன்‌ ஒரு பிராம்மணரது கோதானம்‌ யாவையும்‌ திருடிக்‌ கொண்டுபோக, அப்பொழுது அப்பிராம்மணர்‌ ஓடிவந்து அரண்மனையிலிருந்த அர்ஜுனனிடம்‌ முறையிட்டார்‌. பிராம்மணனைக்‌ காப்பாற்ற வில்லை எடுக்க யத்தனிக்கையில்‌, அது அப்பொழுது தர்மபுத்ரரும்‌, திரெளபதியும்‌ ஏகாந்தமாய்‌ இருக்கும்‌ ஒரு உள்ளில்‌ இருப்பதாக அர்ஜுனனுக்கு ஞாபகம்‌ வந்தது. வில்லெடுக்கப்‌ போனால்‌, நாரதர்செய்த ஒழுங்கிற்கு விரோதம்‌ வரும்‌; வில்லெடுத்து வாராமற்‌ போனால்‌, பிராம்மணர்‌ அநியாயமாய்ப்‌ பொருளிழந்து கஷ்டப்படுவார்‌. சற்று நேரம்‌ யோசித்து தனக்கு 12-வருஷம்‌ தீர்த்தயாத்திரை போகும்படி நேரிட்டாலும்‌ ஸரி, பிராம்மணனைக்‌ காப்பாற்றவேண்டுமென்று அர்ஜுனனுக்குப்‌ பட்டது.

வினா 169.- உடனே அர்ஜுனன்‌ என்ன செய்தான்‌?

விடை.- உடனே அவன்‌ தனது கண்களை மூடிக்கொண்டு பகவானது நாமத்தை ஸ்மரணம்‌ செய்துகொண்டு அதிவேகமாய்‌ தர்மபுத்ரரிருக்குமிடம்‌ சென்று தனது வில்‌ முதலியவைகளை எடுத்துக்கொண்டு வெளிவந்து பிராம்மணனைக்‌ காப்பாற்றினான்‌.

வினா 170.- இதன்‌ பின்பு அர்ஜுனன்‌ தீர்த்தயாத்திரை விஷயமாய்‌ என்ன செய்தான்‌?

விடை.- தர்மபுத்ரர்‌ முதலியோர்‌ எவ்வளவோ விதத்தில்‌ இது நாரதர்‌ செய்த ஒழுங்கிற்கு விரோதமில்லை என்று காட்டி, அர்ஜுனன்‌ தீர்த்தயாத்திரை செய்யவேண்டியது அவசியமில்லை என்று சொல்லிய போதிலும்‌, அர்ஜுனன்‌ ஒரே பிடிவாதமாய்‌ தீர்த்த யாத்திரைக்கே புறப்பட்டு, அனேக பிராம்மண உத்தமர்கள்‌ பின்தொடர்ந்து வர, வடக்கிலுள்ள அனேக திவ்ய ஸ்தலங்களைத்‌ தரிசித்துக்‌ கொண்டு கங்கோத்தரைக்கு வந்து அங்கு பிராம்மணர்களுடன்‌ கொஞ்சகாலம்‌ வஸித்திருந்தான்‌

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக