"காட்டவே கண்ட" (பாணன் தனியன்) என்று முதலடியில் கூறியது அரங்கன் திருமேனிக் காட்சி: அர்ச்சா விக்ரஹக் காட்சி. मूर्तिराद्या (மூர்த்ததிராத்யா) (ஸ்ரீஸ்துதி) என்னும் ஆதியஞ்சோதியோடு அபேதமாய் அனுபவம். பரவிபவஹார்த்த அர்ச்சாமூர்த்திகளை ஒன்றாக அனுபவம். பெரிய பெருமாள் திருமேனியிலே திருமலை முதலாகக் கோவில்கொண்ட அர்ச்சாவதாரங்களிலும், ராம க்ருஷ்ண வாமன வடபத்ர சயனாதிகளிலுமுள்ள போக்யதையெல்லாம் சேரவனுபவித்து என்பது முனிவாஹனபோகம். உபய விபூதி விசிஷ்டனாக ஜகஜ்ஜந்மாதி காரணமாக அனுபவம். உபய லிங்கானுபவம். நிர்த்தோஷ கல்யாண குணாகரத்வ, ஆதி காரணத்வ, ரக்ஷகத்வாதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்மமாக அமலனாதிபிரானில் அனுபவம். பாட்டுக்கள் காட்சி அனுபவத்தின் பரீவாஹம். யோகமென்னும் லயத்திற்கு ஸாதகம். விரோதியல்ல. உபய விபூதி விசிஷ்டாநுபவத்தில் भिद्यन्ते हृदयग्रन्धिश्छिद्यन्ते सर्वसंशया:क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन्दृष्टे प्रावरे (முண்டகம் 2,3,9) (பித்யந்தே ஹ்ருதயக்ரந்திஸ்சித்யந்தே ஸர்வஸம்ஸயா: க்ஷீயந்தே சாஸ்ய கர்மாணி தஸ்மிந்த்ருஷ்டே பராவரே) என்றபடிக்கும் यत्र नान्यत्पश्यति (யத்ர நாந்யத்பஸ்யதி) (சாந்தோகியம் -- பூமமித்யை) என்றபடிக்கும், பரிபூர்ண ப்ரஹ்ம தர்சநம் கிடைத்துப் பாரமாய பழவினை பற்றறுந்தது. நான்காமடியில் "பாட்டினால் கண்டு வாழும்" என்றது, முக்தி தந்தருளின உபய விபூதி விசிஷ்ட பரிபூர்ண ப்ரஹ்ம தர்சனக் காட்சி. முதல் பாதத்தில் "கண்ட" என்றது அரங்கன் திருமேனிக் காட்சி.
நம் பாணநாதர் யோகி ஸார்வபௌமர்: பாட்டினாலும் யோகத்தினாலும் தர்சன ஸமாநாகாரணமான காட்சிபோன்ற தெளிந்த அறிவாகிய ஸமாதியை அடிக்கடி ஏறுபவர். பல்கால் யோகாரூடர். யோகாரோஹமே இவருக்குப் பொழுதுபோக்கா யிருந்தது. கடைசியில் இவருக்குப் பெருமாள் நியமனத்தால் கிடைத்தது யோக்யாரோஹம் முனியேறினது. யோகாரூடராக நெடுகிலுமிருந்து வந்தவர் கடைசியில் யோக்யாரூடரானார். எந்த யோகிக்கும் இந்த ஏற்றமில்லை. நம்பிகளும் இதை "முனியேறி" என்று ரஸமாக வ்யஞ்ஜனம் செய்தார். யோகமேறுவது யோகிமாத்ர ஸாதாரணம். ஆழ்வார்களெல்லாரும் யோகாரூடர்கள்: யோகமேறினவர்கள். पश्यन् योगी परम् (பஸ்யந் யோகீ பரம்) என்று முதல் திருவாய்மொழியின் ஸங்க்ரஹ ச்லோகத்திலேயே, தாத்பர்ய ரத்னாவளீ சடகோப முனியை யோகி என்றது. முநித்வம் மட்டிலும் எல்லாருக்கும் ஸாதாரணம். முனியேறின முனி இவரொருவரே.
யோகம் அஷ்டாங்கம்: எட்டு அங்கங்களுடையது. ஆனால் எட்டாவது அங்கமாகிய ஸமாதியே அங்கி. யமநியமாதிகளான அங்கங்கள் ஸாதகனுடைய ப்ரயத்னங்கள். திவ்யமங்கள விக்ரஹம் யோகத்திற்கு ஆலம்பநமாகும். ஸாலம்பநமாகச் செய்யும் பகவத் ஸ்வரூப த்யானத்தில் திவ்யமங்கள விக்ரஹம் சுபாச்ரயமான ஆலம்பநம். அந்த யோகாலம்பநத்தைப் பாணயோகி எட்டு அங்கங்களாக வகுத்து, அந்த த்யானத்தை அஷ்டாங்கமாக வகுத்தார். "பாதகமலம், நல்லாடை, உந்தி, உதரபந்தம், திருமார்பு, கண்டம், செவ்வாய், கண்கள், என்பன எட்டு அங்கங்கள். முதல் எட்டுப் பாட்டுக்களிலும் இந்த எட்டு அங்கங்களின் அநுபவம். ஒவ்வொன்றிலும் விக்ரஹியின் ஸ்வரூபாநுபவமும் கலந்தது. அங்கவிசிஷ்ட ஸ்வரூபாநுபவம். ஸ்வரூபாநுபவத்தில் குணக்ரியாத்யநுபவமும் சேர்ந்தது. "நல்லாடை" என்பது திருத்துடை முதலியவற்றின் ஆவரணம். वस्त्रप्रावृतजानु ( வஸ்த்ரப்ராவ்ருதஜாநு) ந்யாயத்தை நினைக்க வேணும். ஜங்காஜாநு, ஊருக்களுக்கும் நல்லாடை உபலக்ஷணம். இப்படி ஓர் விலக்ஷணமான அஷ்டாங்க த்யாநாநுபவம் பண்ணி, ஒன்பதாம் பாசுரத்தில் அகண்டமாகத் திருமேனி முழுவதையும் அனுபவிக்கிறார். இப்படி விசித்திரமான ஓர் அஷ்டாங்க த்யான முறையைக் காட்டுகிறார். அஷ்டாங்கங்களையும் அனுபவித்து, அகண்டமான திருமேனியை அனுபவித்து, உபயவிபூதி விசிஷ்ட ப்ரஹ்மத்தை அரங்கனாகக் கண்டு, பூமவித்யையில் கூறிய பரிபூர்ண ஸுகாநுபவம் வந்து மோக்ஷம் பெற்றார்.
ஆத்மாவில் ஜாதிபேதமில்லை. ஆத்ம ஸ்வரூபம் ஜ்ஞாநைகாகாரம்: ப்ரத்யஸ்தமித பேதம். சுத்தமான ஞான மயமான இவரது ஆத்ம ஸ்வரூபம் அரங்கனுக்குள் ப்ரவேசித்தது யுக்தமே. பீஷ்மர் கண்ணனைத் துதித்துக் கொண்டே அவருக்கு ஸம்பந்நராகும்போது ज्योतिर्ज्योतिषि संयुतम् (ஜ்யோதிர் ஜ்யோதிஷி ஸம்யுதம்) என்று வர்ணித்தபடி பீஷ்மருடைய ஆத்மஜ்யோதிஸ் ஸ்ரீக்ருஷ்ண பரமாத்மா ஜ்யோதிஸ்ஸுக்குள் புகுந்து அவிபக்தமாக "இனி மீள்வதென்ப துண்டோ!" என்று சாச்வதமாகக் கலந்தது. அவருடைய திருமேனி மட்டும் நின்றுவிட்டது. அதற்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்யப் பட்டது. சிசுபாலனுடைய ஆத்ம ஜ்யோதிஸ்ஸும் அப்படியே கண்ணனுக்குள் கலந்தது. "சிசு பாலனுடைய தேஹத்திலிருந்து ஒரு தேஜோக்னி கிளம்பி, தாமரைக் கண்ணனாகிய க்ருஷ்ணனை நமஸ்கரித்து, அவருக்குள் நுழைந்த அத்புதத்தை எல்லா ராஜாக்களும் கண்டார்கள்" என்று பாரதம். "எல்லோர் முன்னே சிசுபாலனுடைய தேஹத்திலிருந்து கிளம்பிய ஜ்யோதிஸ்ஸு வாஸுதேவனுக்குள் நுழைந்தது. த்யானம் செய்துகொண்டே தந்மயத்வத்தை அடைந்தான்" என்று பாகவதம். அங்கும் தேஹம் கண்ணனுக்குள் நுழைய வில்லை. இங்கு நம் பாணர் தம் திருமேனியோடு அரங்கனுக்குள் நுழைந்து கலந்தார். பாணனுடைய திருமேனியும் பகவதவதாரத் திருமேனிகளைப்போல அப்ராக்ருதமாகவே இருந்திருக்க வேண்டும். சுத்த ஸத்வமயமான திவ்ய திருமேனி சுத்த ஸத்வமயத் திருமேனிக்குள் ப்ரவேஸித்துக் கலந்தது. இதனால் அவர் தேஹமும் ப்ராக்ருதமல்ல என்று தெளிவாக ஏற்படுகிறது.
அனுபவம் தொடரும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக