வேங்கடேச:
வேங்கடேசன் என்கிற திருநாமத்தையுடையவர். இத்தால் வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்று தாம் பிறந்து படைத்த திருநாமங்களில் காட்டிலும் தம் திருத்தகப்பனாரால் சூட்டப்பட்ட திருநாமத்தில் ஸ்வாமி தேசிகனுக்குள்ள கௌரவாதிசயம் தெரிவிக்கப் பட்டதாகிறது. அன்றிக்கே அன்று க்ஷீரஸமுத்திரத்தைக் கடைந்த தண் நீள் புகழ் வேங்கடமாமலை மேவியவனே இன்று திருவேங்கடநாதன் என்னும் குருவாய் அவதரித்துநின்று, அதாவது தன்னை அடைந்தவர்களுக்குப் பரகதியைத் தந்தருளுவதற்காகத் திருத்தண்கா என்னும் திவ்ய தேசத்தில் குருவரராய் நின்றருளியவரே திருவாய்மொழியாகிற ஆராவமுதக் கடலைக் கடைந்தருளியவர் என்பதைக் குறிக்கிறதாகவுமாம்.
கல்பாந்தயூந: தல்பம் சடஜிதுபநிஷத் துக்த ஸிந்தும்
ஆழ்வார் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளினபடியால் சடஜிதுபநிஷத் என்னப்படுகிறது திருவாய்மொழி என்றபடி. ‘பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்து என் மனக்கடலில் வாழவல்ல’என்கிறபடியே அடிக்கடி ப்ரஹ்மாதி தேவதைகள் வந்து தங்கள் துயரங்களை வெளியிடும் இடமான க்ஷீராப்தியில் எம்பெருமான் ஸுகமாக நித்திரை செய்யமுடியாமல் போய்விடுகிறது. இங்கு அப்படியன்று என்பதைக் குறிக்கிறது ‘வாழவல்ல’ என்னும் பதம். இந்தத் திருவாய்மொழி ப்ரளயகாலத்திலும் நாசம் அடையாமல் யுவாவாக நிற்கும் பகவானுக்குத் திருப்பள்ளியாயிருக்கிறபடியினால் ப்ரளய காலத்தில் நாசமடையும் க்ஷீராப்தியினின்று வ்யாவ்ருத்தியைக் காட்டுகிறது ‘கல்பாந்தயூந: தல்பம்’ என்கிற பதம். இத்தால் திருவாய்மொழி நித்யம் என்னப்பட்டதாகிறது. ஒருகாலத்திலும் மாறுதலில்லாத ஸ்ரீவைகுண்டத்திலும் திவ்ய ப்ரபந்தங்கள் அனுஸந்திக்கப் படுகின்றன என்று ஸ்ரீபரமபத ஸோபானத்தில் அருளிச் செய்திருப்பதும் இந்த நித்யத்வத்தையே காட்டாநிற்கும்.
ப்ரஜ்ஞாக்யே மந்தசைலே ப்ரதித குணருசிம் ஸம்ப்ரதாயம் நேத்ரயந்
தம்முடைய ஜ்ஞானத்தை மத்தாகவும் ப்ரஸித்த குணவிசேஷங்களை யுடைய ஸம்ப்ரதாயத்தைக் கடைகயிறாகவும் கொண்டு
இதன் கருத்து:--
இதுவரையில் வேறு ஒருவருக்கும் கிட்டாத வேதாந்தாசார்யர், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர், கவிதார்க்கிக ஸிம்ஹம் என்கிற பிருதுகளைப் பெறுவதற்கு மூல காரணமாயிருந்த ஜ்ஞான விசேஷம் குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட ஜ்ஞானத்தை மந்த்ரபர்வதமாக நிரூபித்தபடியினால் ஒருவித யுக்தி முதலியவற்றாலும் சலிப்பிக்க முடியாதது என்பது குறிப்பிடப்படுகிறது.
தம்முடைய உத்தமமான ஜ்ஞானமாகிற மந்தரமலையிலே அதாவது:-- ‘இந்த ஸம்ப்ரதாயத்தை விசேஷித்து ப்ரவசனம் செய்யக்கடவாய்’ என்னும் அம்மாளுடைய அனுக்ரஹத்தினால் உண்டானதாய்; கிடாம்பிக்குலபதி அப்புளார் தம் தேமலர் சேவடி சேர்ந்து பணிந்து, அவர் தம்மருளால் நாவலரும் தென்வடமொழி நற்பொருள் பெறுவதற்கு உற்றதாய்; அவரால் உபதேசிக்கப்பட்ட யதிவரனார் மடைப்பள்ளி வந்த மணமான ரஹஸ்யார்த்தங்களைப் பற்றியதாய்; பன்னுகலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாயருளிய பகவானுடைய திவ்ய லாலாம்ருதத்தினால் பெற்ற பதினெட்டு வித்யா ஸ்தானங்களிலே தாம் ப்ரதானமாய் அங்கீகரித்த வேதாந்த வித்யையை விஷயமாகக் கொண்டதாய்; அந்தமில்சீர் அயிந்தை நகர் அமர்ந்த நாதனுடைய முந்தைமறை மொய்யவழி மொழி நீ என்று பெற்ற நியமனத்தினாலும், ஸ்ரீரங்கநாதனால் அநிதர ஸாதாரணமாகக் கொடுக்கப்பட்ட வேதாந்தாசார்யத்வத்தினாலும், ஸ்ரீரங்கநாய்ச்சியாரால் கொடுக்கப்பட்ட ஸர்வதநத்ர ஸ்வதந்த்ரவத்தினாலும், அயிந்தை மாநகரில் முன்னாள் புணராத பரமதப்போர் பூரித்ததின் பலனாக ஸ்ரீதேவநாதனால் சாற்றப்பட்ட கவிதார்க்கிக ஸிம்ஹத்வத்தினாலும் மெய்ப்பிக்கப் பெற்றதாய்; செய்ய தமிழ்மாலைகள் தாம் ஓதித் தெளிய ஓதித் தெளியாத மறை நிலங்கள் தெளியப் பெற்றதற்கு ஏற்றதுமான ஜ்ஞானமாகிற மந்தர பர்வதத்திலே,
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக