இப்படிப் பொதுவில் இப்பிரபந்தத்தின் ஏற்றத்தைக் குறிப்பிட்டு மேலே இதின் மேன்மையைத் தாம் அறிந்துகொண்ட ப்ரகாரத்தை ஒரு ச்லோகத்தாலே நிரூபித்தருளுகிறார் – ‘ப்ரஜ்ஞாக்யே’ --- என்றாரம்பித்து.
प्रज्ञाख्ये मन्थशैले प्रथितगुणरुचिं नेत्रयन् सम्प्रदायं
तत्तल्लब्धिप्रसक्तैरनुपधिविबुधैरर्थितो वेङ्कटेश: |
तल्पं कल्पान्तयून: शठजिदुपनिषद्दुग्धसिन्धुं विमथ्नन्
ग्रथ्नाति स्वादुगाथालहरिदशशतीनिर्गतिं रत्नजातम् ||
ப்ரஜ்ஞாக்₂யே மந்த₂ஶைலே ப்ரதி₂தகு₃ணருசிம் நேத்ரயந் ஸம்ப்ரதா₃யம்
தத்தல்லப்₃தி₄ப்ரஸக்தைரநுபதி₄விபு₃தை₄ரர்த்தி₂தோ வேங்கடேஶ: |
தல்பம் கல்பாந்தயூந: ஶட₂ஜிது₃பநிஷத்₃து₃க்₃த₄ஸிந்து₄ம் விமத்₂நந்
க்₃ரத்₂நாதி ஸ்வாது₃கா₃தா₂லஹரித₃ஶஶதீநிர்க₃திம் ரத்நஜாதம் ||
தத்தல்லப்தி ப்ரஸக்தை: அனுபதிவிபுதை: அர்த்தித:
அந்தந்தப் பலனை அடைவதில் ஈடுபட்டவர்களாய் அந்தப் பகவானைத் தவிர வேறு பலனை நாடாத பாகவதர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டவரான
ஆழ்வார் தம்முடைய பரம க்ருபையாலே தொண்டர்க்கமுதுண்ண ப்ரந்யக்ஷீகரித்து வெளியிட்ட திருவாய்மொழி என்னும் ப்ரபந்தத்தில் ஓரொரு குணங்களில் விசேஷித்து ஈடுபட்ட பாகவதோத்தமர்களினால் – ஸ்ரீவைகுண்டத்தில் ஸர்வகுணாபேதனான பகவானையே அனுபவிக்கும் ஸூரிகளும் முக்தர்களும் ஒரு திவ்ய குணத்திலோ ஒரு திவ்ய அவய சோபையிலோ ஈடுபட்டு, அந்த அனுபவத்தையே சூழ்ந்திருந்து பல்லாண்டு ஏத்துகிறாப்போலேயும், ;பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினான்’ (திருவாய்மொழி 1-6-4) என்கிறபடியே தான் அனுபவித்த குணத்தின் முக்யத்வத்தை நிர்வஹிக்கிறாப் போலேயும் இந்த த்ரமிடோபநிஷத்தில் பகவானுடை\ எல்லாக் குணங்களுமே ப்ரதிபாதிக்கப்பட்டிருந்தபோதிலும் ஒருவருக்கு அவனுடைய ஸௌலப்யத்தில் ஈடுபாடு அதிகமாயும், மற்றொருவருக்கு அவனுடைய திருமேனியின் அனுபவத்தில் ஈடுபாடு அதிகமாயும் இருக்கும். அப்படித் தாங்கள் அனுபவித்த ப்ரகாரத்தை இன்னும் விசேஷமாக அனுபவிப்பதில் ஆசையையுடைய பாகவதர்களினால் அப்படிப்பட்ட அம்சங்களைத் தங்களுக்கு அருளிச் செய்யும்படி ப்ரார்த்திக்கப் பட்டவரான என்றபடி.
விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமையெல்லாம் இம்மண்ணுலகத்திலேயே மகிழ்ந்து அடையும்படியான பாக்கியம் பெற்ற பண்ணமரும் தமிழ்வேதம் அறிந்தவர்களாயும், ப்ரயோஜனாந்தரங்களை அபேக்ஷியாதவர்களாயும் பகவத் பாகவத குணானுபவத்தையே ஸ்வயம் ப்ரயோஜனமாகக் கொண்டவர்களாயும் ஷோடச வர்ணத்தோடு கூடிய ஸ்வர்ணம் போன்ற பாரமை காந்த்யத்தை யுடையவர்களாயும் ‘தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே’ என்கிறபடியே எம்பெருமான் பேற்றையே தங்கள் பேறாகக் கொண்டவர்களாயுமிருக்கும் பாகவதோத்தமர்களினால் ப்ரார்த்திக்கப்பட்டார் என்றதாயிற்று.
இங்கு உத்தரக்ருத்யாதிகாரத்தில் ‘நித்யம் ப்ரூதே நிசமயதிச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி’ என்று அருளிச் செய்திருக்கிறபடியே ப்ரபன்னனுக்குக் கால யாபனம் திவ்ய ப்ரபந்தானுஸந்தானத் தினாலேயாகையினால் அதற்காக அதில் ப்ரதிபாதிக்கப்பட்டிருக்கும் குண விசேஷங்களைத் தங்களுக்குத் தெரிவிக்கும்படி ப்ரார்த்தித்தார்கள் என்று அறியவும்.
முன்பு ஒரு காலத்தில் ஸ்வகார்யப்புலிகளான தேவதைகள் தங்களுக்குச் சாகா மருந்து கிடைப்பதற்காகத் திருப்பாற்கடலைக் கடையும்படி பகவானை வேண்டிக்கொள்ள, அதற்கு இணங்கிய அந்தப் பகவான் மந்தர பர்வதத்தை மத்தாகவும், வாஸுகியைக் கடைகயிறாகவும் கொண்டு, தான் கூர்மரூபியாய் அந்த மந்தர பர்வதத்தைத் தன் முதுகில் தாங்கி, தேவதைகள் ஒரு பக்கமும் அஸுரர்கள் ஒரு பக்கமுமாக நின்று கடையும்பொழுது உண்டாகிய அம்ருதத்தைத் தேவர்களுக்குக் கொடுத்தானேயாகிலும், அவ்வமுதில் ஆவிர்ப்பவித்த பெண் அமுதாகிய பிராட்டியைத் தன் பேறாகக் கொண்டான் என்பது ப்ரஸித்தம். ஆனால் இங்கு ஸ்வாமி தேசிகன் தன் பேறாக ஒன்றையும் கோரவில்லை என்பது ஏற்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக