புதன், 29 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் 5

இரண்டாங் களம்.

இடம்: கங்கைக்கரை
காலம் காலை
பாத்திரங்கள்: பரதர், சத்ருக்நர், சுமந்திரர், கோசலை, கைகேயி, சுமித்திரை.

(பரதரும் சத்ருக்நரும் இராமர் சென்ற திசையை நோக்கி, அஞ்சலி செய்தபடி நிற்கிறார்கள். சுமந்திரர் அவர்களைநோக்கி வருகின்றார்.)

பரதர்:-- (சுமந்திரரை நோக்கி) மந்திரீ! கண்டறிந்து வந்தீரா?

சுமந்திரர்:-- ஆம், அறிந்து வந்தேன்.

கங்கையிரு கரையுடையான் கணக்கிறந்த நாவாயான்
உங்கள்குலத் தனிநாதற் குயிர்த்துணைவ னுயர்தோளான்
வெங்கரியி னேறனையான் விற்பிடித்த வேலையினான்
கொங்கலரும் நறுந்தண்டார்க் குகனென்னுங் குறியுடையான்.

அவன் இக்கங்கையின் இரு கரைகளையும் தனக்குச் சொந்தமாகக் கொண்டவன்.அளவில்லாக் கப்பல்களையுடையவன். வேடுவர்க் கெல்லாம் அரசனாயுள்ளவன். மிகுந்த பல பராக்கிரமுடையவன். கங்கையில் போவார் வருவார்க்கு ஓடம் விடுவதைத் தொழிலாகக் கொண்டுள்ளவன். மேலும் இராமமூர்த்திக்கு நெருங்கிய நேசமுடையவனாம். தங்களைப் பார்க்கவேண்டியே வருகிறானாம்.

பரதர்:-- அப்படியா! இராமண்ணாவுக்கு உயிர்த் தோழனா? ஆயின் நானே அவனை எதிர்சென்று பார்க்கிறேன்.

(பரதர் முன்செல்கிறார். குகன் அவரை எதிர்கொண்டு வந்து பாதத்தில் வீழ்கிறான். பரதர் தலை தாழ்த்தி அவனை வணங்குகிறார்.)

குகன்: -- (பரதரை நோக்கி) ஐயா! தாங்கள் இத் தவ வேடத்தோடு இங்கெழுந்தருளியது எதன் பொருட்டோ?

பரதர்:-- நண்பரே! காலத்தின் கோலத்துக்கோர் கணக்குண்டோ? அறுபதினாயிர வருஷம் அறநெறி வழுவா தரசாண்ட எமது தந்தை, ஏதோ கால விபரீதத்தால், தலைமுறை தலைமுறையாக வரும் குலநெறியினின்றும் நழுவிவிட்டார். அதை மறுபடியும் செம்மைப்படுத்த வேண்டி எம் அண்ணல் ரகுநாதரை அழைத்துப்போக வந்தேன்.

குகன்(பரதரது பாதங்களில் மறுபடியும் வீழ்ந்து எழுந்து) ஐயா! குலங்களுட் சிறந்தது சூரிய குலம். அங்ஙனம் தலைமுறை தலைமுறையாய்ச் சிறந்துவரும் உங்கள் குலத்தின் பெருங்குணங்களெல்லாம் ஒருங்கு திரண்டு ஓர் உருவெடுத்து வந்த தங்களது அருங்குணத்தின் மாட்சியை அடியேன் என்னென்று புகழ்வேன்!

தாயுரை கொண்டு தாதை யுதவிய தரணி தன்னைத்
தீவினை யென்ன நீத்துச் சிந்தனை முகத்திற் றேக்கிப்
போயினை யென்ற போழ்து புகழினோய் தன்மை கண்டால்
ஆயிர மிராமர் நின்கே ளாவரோ தெரியி லம்மா?

தாயார் விருப்புற்றுக்கேட்க தந்தையார் ஒருப்பட்டுத் தங்களுக்கு இத்தரணியைக் கொடுத்தார். அங்ஙனம் வலிய வந்த பெருநிலத்தைப் பெறுவது நெறியன்றென்று நீக்கி, அண்ணன் அரசைவிட்டு அரணியமடைந்ததை எண்ணி மனம் வாடி, அவரைத்தேடிப் புறப்பட்டு வந்துள்ளீர்களே! தங்கள் பெருந்தன்மையைக் கருதுமிடத்து ஆயிரம் இராமர் கூடினும் தங்களுக்கு இணையாவாரோ? ஆகார், ஆகார். ஐயா! தங்கள் புகழை விரித்துரைப்பதற்குத் திருத்தமில்லாத மனத்தினராகிய வேடுவர் குலத்தில் வந்த என் ஒருத்தனாலாகுமோ! சூரியனது பேரொளிக்குமுன் மற்ற சிற்றொளிகள் மறைந்தொழிவதுபோலத் தங்கள் முன்னோர் புகழ்களெல்லாம் தங்களது பெரும் புகழில் மறைபட்டு நிற்குமேயன்றிச் சிறிதேனும் தலைகாட்டுமோ? இராமபிரான் எனக்குத் தோழராய்க் கிடைத்தது யான் செய்த புண்ணியமே. அவருக்குத் தாங்கள் தம்பியாய்ப் பிறந்தது அவர் செய்த தவமே! அடியேனால் தங்களுக்கு ஆகவேண்டியதேதேனு முளதேல் திருவாய் மலர்ந்தருள்வீர்களானால், தலையாற் செய்யக் காத்திருக்கிறேன்.

பரதர்:-- அன்ப! என் அண்ணன் இவ்வழியே வந்தபோது எங்கு தங்கினார்?

குகன்:-- (ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி,) அதோ, ஒரு கல் கிடக்கின்றதே அவ்விடத்தில்தான் அக்கல்லைத் தலைக்கு அணையாகக் கொண்டு பசும்புல்லின் மீது படுக்கை கொண்டார்.

பரதர்:-- (முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு,) அந்தோ! அண்ணா! இவைகளையெல்லாம், என் கண்ணாற்காண யான் என்ன பாவஞ் செய்தேனோ? பஞ்சணைமீது துயில அமைந்த தங்கள் அருமைத்திருமேனி இங்ஙனமோ வருத்தமெய்தலாயிற்று!

இயன்றதென் பொருட்டி னாலிவ் விடருனக்கென்றபோழ்தும்
அயின்றனை கிழங்குங் காயு மமிர்தென வரிய புல்லில்
துயின்றனை யெனவு மாவி துறந்திலன் சுடருங் காசுங்
குயின்றுயர் மகுடஞ் சூடுஞ் செல்வமுங் கொள்வென் யானே.

என்னால் தங்களுக்கு இவ்வின்னல் உண்டாயிற்று, என்பதை அறிந்தும், காட்டுக் கனி கிழங்குகளை உணவாக உண்டீர்கள் என்பது தெரிந்தும், புல்லிற் படுத்து நித்திரை புரிந்தீர்கள் என்பதுணர்ந்தும் உயிர்துறக்காதிருக்கின்றேனே பாவியேன்! இத்தகைய கடின சித்தமுடைய யான் ஒருக்கால் என் அன்னை சம்பாதித்துள்ள இராச்சியத்தைப்பெற்று முடி புனைந்து கொண்டாலும் கொள்வேன். என்ன விபரீதம்! என்னவிபரீதம்! (குகனை நோக்கி,) நண்பா! இந்தப் புற்றரையில், கொற்றவர் கண் துயின்ற காலை, அவரோடுடனிருக்கப் பாக்கியம் பெற்ற இளையவர் யாது செய்தார்?

குகன்:-- ஐயா!

அல்லையாண் டமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச
வில்லையூன் றியகை யோடும் வெய்துயிர்ப் போடும் வீரன்
கல்லையாண் டுயர்ந்த தோளாய் கண்கணீர் சொரியக் கங்குல்
எல்லைகாண் பளவு நின்றா னிமைப்பிலன் நயன மையா.

சாமளவண்ணர் தமது தாமரைக் கண்மூடித் துயில் கொண்டிருப்ப, அவரருகே பிராட்டியாரும் படுத்துக் கண்ணுறங்கினார். அப்போது, இளையபெருமாள், வில்லேந்திய கையோடு, அடிக்கடி பெருமூச்செறிந்து, கண்ணீர் சொரியப் பொழுது விடியுமளவும், இமை கொட்டாது நின்று அவர்களுக்குக் காவல் புரிந்தனர்.

பரதர்:-- ஆ, அப்படியா! இலக்ஷ்மணன் பெற்ற பேறே பேறு! அவ் பக்தியின் பெருமையே பெருமை! என்ன ஆச்சரியம்! அன்பு! இராம பிரானுக்கு யானும் சகோதரன், இலக்ஷ்மணனும் சகோதரன். ஆனால் எங்களிருவருக்குமுள்ள பேதத்தைப் பார். ரகுநாதருக்கு நான் துன்பத்தை ஆக்குபவனானேன். ஆனால், அவனோ, அந்தத் துன்பத்தைப் போக்குபவனானான். என் அண்ணற்கு யான் செய்யும் அடிமைத்தனம் எவ்வளவு அழகாயிருக்கின்றது பார்த்தனையா! நல்லது, நண்பா! நீ எங்களை ஓடத்தில் ஏற்றி அக்கரை சேர்ப்பாயானால், எம்மைத் துன்ப சாகரத்தினின்று கரையேற்றி இராமபிரானிடம் சேர்த்தது போலாகும்.

குகன்:-- ஆகா, அப்படியே செய்கிறேன். (கோசலையைச் சுட்டிக்காட்டி,) இந்தப் பெருமாட்டி யாவரோ? திருவாய் மலர்ந்தருள வேண்டுகிறேன்.

பரதர்;- இவரா!

சுற்றத்தார் தேவரொடும் தொழநிற்குந் தூயாளைத் தொழுது நோக்கும்
வெற்றித்தார் மன்னவிவ ளாரென்று வினவுதியேல் வேந்தர் வைகும்
முற்றத்தான் முதற்றேவி மூன்றுலகு மீன்றானை முன்னீன் றானைப்
பெற்றத்தாற் பெறுஞ்செல்வம் யான்பிறத்த லாற்றுறந்த பெரியா ளையா.

உற்றாரும் உறவினரும் அடிவணங்க நிற்கும் இவர் யாரென்னிற் கூறுகின்றேன் கேள்! அயோத்தி அரண்மனையில் சக்கரவர்த்திக்குப் பட்டத்துத் தேவிமார் மூவர்க்குள் முதன்மை பெற்றவர். மூவுலகையும் ஈன்ற நான்முகனை உந்திக் கமலத்தில் தோற்றுவித்த பரந்தாமனை யொத்த இராமபிரானை, மணிவயிற்றிற் சுமந்து பெற்றவர். அங்ஙனம் பெற்ற புதல்வரால் தாம் பெறவேண்டிய பெருஞ் செல்வத்தை யான் பிறந்ததால் இழந்தவர். இவரே கோசலா தேவியார்.

குகன்:-- ஆ, அப்படியா! (கோசலையின் பாதங்களில் வீழ்ந்து பணிகிறான்.)

கோசலை:-- கண்மணீ, பரதா! இது யார்?

பரதர்:-- அம்மணீ! இவர் இராமண்ணாவுக்கும், இலக்ஷ்மணர்க்கும், சத்ருக்நருக்கும், எனக்கும் மூத்த அருமைச் சகோதரராவார். இராமரிடத்து மிகுந்த பக்தி பூண்டவர். குகன் என்ற நாமங்கொண்டவர்.

கோசலை:- பரதா! உனக்கினி யென்ன வருத்தம்? உன் தமையன் காட்டிற்குப் போனதும் ஒரு நன்மையாகத்தான் முடிந்தது. இல்லா விட்டால், இந்த அன்பமைந்த தோழன் கிடைப்பானா? மைந்தா! நீங்கள் நால்வரும் இவனோடு ஐவராகி, ஆயுராரோக்கிய திடகாத்திரராய் நெடுநாள் வாழ்ந்து இவ்விராச்சியத்தை ஆண்டிருங்கள்.

குகன்;-- (சுமித்திரையைக் காட்டி,) இவ்வம்மை யாவரோ?

பரதர்:-- அன்ப, இவர் எனது சிற்றன்னை. நாங்கள் தொழும் தெய்வமாகிய இராமண்ணாவோடு, இணை பிரியாது, அன்பு பூண்டு, இரவும் பகலும் இமை கொட்டாது அவரைக் காத்து நிற்கின்றானே இலக்ஷ்மணன், அந்த பாக்கியவானைப் பெற்ற பெருஞ் செல்வியார். சுமித்திராதேவியார் என்னும் திருநாமத்தோடு கூடியவர்.

குகன்:-- (கைகேயியைச் சுட்டிக்காட்டி,) இவர்?

பரதர்:-- இவரா?

படரெலாம் படைத்தாளைப் பழிவளர்க்குஞ்
செவிலியைத்தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கு
முயிர்ப்பாரம் குறைந்து தேய
உடரெலா முயிரிலா வெனத் தோன்றும்
உலகத்தே யொருத்தி யன்றே
இடரிலா முகத்தாளை அறிந்திலையோ
இந்நின்றா ளென்னை யீன்றாள்.

இப்புண்ணியவதியை உனக்குத் தெரியாதா? தன் கணவனை யமலோகத்திற்புகுத்தி, தன் புதல்வனைத் துயர்க்கடலில் அழுத்தி, தர்ம சொரூபியான இராம பிரானைக் கானகத்திற்குத் துரத்தியவள் இவள்தான். முன்னாள், திருமால் மூவடியாலளந்த இவ்வுலகத்தைத் தன் மனத்தில் நினைத்துச் செய்யும் கொடுமையால் அளவிடும் வன்மாயக்கள்ளி இவள்தான். துன்பத்திற்கு மூலகாரணமான துர்த்தேவதை இவள்தான். பழியை வளர்க்கும் செவிலி இவள்தான். தன் பாழுங்கும்பியில் நெடுங்காலம் என்னை உழல வைத்திருந்த நீலி இவள் தான். உலகத்தில் உயிரற்ற உடலோடு நடைப்பிணமாகத் திரிபவள் இவள்தான். என்னைப் பெற்ற பெரும் பாவி இவள்தான். ‘கல்லும் வல்லிரும்பும் வெண்ணெ யென்றுரைப்பக் காழ்படு மனத்த’ கைகேயி இவள்தான்.

குகன்:-- (காதுகளைப் பொத்திக்கொண்டு,) ஆ, ஆ! கர்ண கடூரமான இம்மொழிகளைக் கோட்கவும், இக்காட்சியைப் பார்க்கவும், நான் என்ன பாவஞ் செய்தேனோ? சுவாமீ! ஓடம் தயாராயிருக்கிறது. எல்லோரும் ஏறலாம். (போகிறார்கள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக