செவ்வாய், 28 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்


இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம் 


அங்கம் 2 களம் 3



இரண்டாங் களம்
இடம்: கங்கைக்கரையில் ஓடத்துறை
காலம்: காலை
பாத்திரங்கள்: இராமர், இலக்ஷ்மணர், குகன், சீதை

(இராமர், இலக்ஷ்மணர், சீதை மூவரும் ஓடத்துள் அமர்ந்திருக்கின்றனர். குகன் ஓடந்தள்ளுகிறான். சீதை இராமர் தோளைக் கட்டிக்கொண்டு பின்புறத்தில் இருக்கிறாள்.)
இராமர்: (குகனைப் பார்த்து) அன்ப! சீதை ஒருபொழுதும் ஓடத்திலேறிப் பழகாதவள். தலைமயக்குற்றிருக்கிறாள். ஓடத்தை சற்றே மெதுவாகச் செலுத்து.
குகன்: சுவாமீ, அலை அதிகமாயிருப்பதால் ஓடம் என்னுடைய கட்டுக்கடங்காமல் அதிகமாய் ஆடுகிறது. இன்னும் சற்று நேரத்தில் காற்று அடங்கி விடும். அலையும் ஓய்ந்துவிடும். அப்பால் ஓடம் அதிகமாய் ஆடாது.
இராமர்: (சீதையின் புறமாகத் திரும்பி) இப்பொழுது ஆட்டம் அதிகமாயில்லை, சீதா! கண் விழித்துப்பார். அலைகள் நதியில் எவ்வளவு அமைதியாய் ஒன்றன்மேல் ஒன்று அடுக்கடுக்காய்க் காணப்படுகின்றன. கரை சமீபித்துவிட்டது. பார்த்தனையா?
(சீதை கண்விழித்துப் பார்க்கிறாள். யாவரும் கரையில் இறங்குகிறார்கள்.)
இராமர்: (குகனைப் பார்த்து) அன்ப, உன்னுடைய அன்பார்ந்த உதவியால் இக்கரை வந்து சேர்ந்தோம். உனக்கு மங்களம் உண்டாகட்டும். நாங்கள் இனிச் சித்திரகூட பர்வதம் போகவேண்டும். அதற்கு வழியைக் காட்டிவிட்டு நீ உன் இருப்பிடம் போகலாம்.
குகன்: சுவாமீ! சித்திரகூடத்துக்கு வழிகாட்டச் சித்தமாயுள்ளேன். அதற்குமுன் அடியேன் செய்துகொள்ளும் விண்ணப்பம் ஒன்றுண்டு.

பொய்ம்முறை யிலரேமெம் புகலிடம் வனமேயால்
கொய்ம்முறை யுறுதாராய் குறைவிலெம் வலியேமால்
செய்ம்முறை குற்றேவல் செய்குது மடியோமை
இம்முறை யுறவென்ன வினிதிரு நெடிதெம்மூர்.

யாங்கள் வேடராயினும் சத்தியநெறி தவறோம். வனமே எங்களுக்கு வாசஸ்தலம். எங்களுக்கு தேகபலமும் படை வலியும் மிகுதியுமுண்டு. ஆதலால் தாங்கள் நினைப்பன யாவையும் நிறைவேற்றித் தங்களுக்குக் குற்றேவல் செய்ய ஏற்றவர்களாவோம். தங்களுக்கு ஒரு விஷயத்திலும் குறை நேராது. உணவுக்கு இனிய தேனும் தினையும் மீனும் விசேஷமாகக் கிடைக்கும். துணை நாங்கள் இருக்கின்றோம். தேவியார் பொழுதுபோக்காக விளையாடுவதற்கும் பலவளங்களும் சிறந்து பரந்த இவ் வனம் மிக உத்தமமான இடம். நீராடவோ நதிகளுக்குட்சிறந்த கங்கைமாநதியே அருகில் உள்ளது. உடுப்பதற்குப் பட்டாடைபோல மெல்லிய தோல்கள் மிகுதியும் உண்டு. தங்கள் திருச்சயனத்திற்கு சப்ரகூட மஞ்சம்போல் அழகாகப் பரண் அமைத்துத் தருகின்றேன். வேறு தங்களுக்குத் தேவையான பொருள்களைத் திருவாய் மலர்ந்தருளுவீர்களானால், வேகமாய் ஓடவல்ல கால்களும் வில்லேந்திய கைகளுமுள்ளன. ஒரு நொடியில் ஓடி வானத்தின் மேலுள்ளனவாயினும் கொண்டு வந்தளிப்பேன். தேவர்களினும் வலியவராய வேடர் ஆயிரக்கணக்கா யுள்ளனர். அவர்களனைவரும் தங்கள் திருக்கட்டளைகளை நிறைவேற்றச் சித்தமாயிருக்கின்றனர். தாங்கள் தயை கூர்ந்து எளியோமுடைய குடிலுக் கெழுந்தருள்வீர்களானால் அடியோம் உய்ந்தவராவோம். அதைவிட மேலான வாழ்வு எங்களுக்கு வேறில்லை. திருவுளங்கூரவேண்டும்.
இராமர்: (புன்னகை புரிந்து), அன்ப! யாம் விரதம் பூண்டு மாதவஞ் செய்ய வனத்திற்குப் புறப்பட்டோம். வனவாச விரதம் பூண்டோர் ஓர் இடத்தில் நிலையாய் வசிப்பது கூடாது. ஆதலால் யாங்கள் எமது விரத நெறிப்படி சென்று, புண்ணிய நதிகளில் நீராடி, மாதவரை வழிபட்டுச் சில வருஷங்களில் திரும்பி வருவோம். அப்போது உனது இல்லத்தில் சில நாள் தங்குவோம். ஆதலால் இப்பொழுது நாங்கள் செல்வது பற்றி வருந்தாதே.
குகன்: தங்கள் திருவுளம் அதுவானால் அப்படியே ஆகட்டும்.

திருவுளமெனின் மற்றென் சேனையு முடனேகொண்
டொருவலெ னிருபோது முறைகுவெ னுளரானார்
மருவல ரெனின் முன்னே மாள்குவென் வசையில்லேன்
பொருவரு மணிமார்பா போதுவெ னுடனையா.

உத்தரவானால் அடியேன் எனது சேனையோடு தங்களுடன் வந்து தங்களை விட்டு அகலாதிருப்பேன். தங்களுக்கு முன் வருவார் தங்கள் திருவடிச் சேவைக்கு வருவாரே யன்றி தங்களோடு பகைமை கொண்டு வாரார். ஒருகால் பகைவர் எவரேனும் வருவாராயின் என் உயிரைக் கொடுத்தாயினும் அவர்கள் தங்களை அணுகவொட்டாமற் செய்து பெரும்புகழ் பெறுவேன். தங்களோடு வருவதற்கு மட்டும் அடியேனுக்கு உத்தரவு கொடுங்கள்.

இராமர்: நண்ப! நீ என் ஆருயிரனையவன்; என் தம்பி இலக்ஷ்மணன் உனது தம்பி; சீதை உன் கொழுந்தி; எனக்குள்ள இராச்சியமெல்லாம் உன்னுடையது; உனக்கும் எனக்கும் யாதொரு வித்தியாசமுமில்லை யென்பதை அறி. மேலும்,

துன்புள தெனினன்றோ சுகமுள ததுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுள தெனவுன்னேல்
முன்புளெ மொருநால்வே முடிவுள தெனவுன்னா
அன்புள வினிநாமோ ரைவர்க ளுளரானோம்.

துன்பமில்லாமல் இன்பம் இராது. பிரிவுதான் சுகத்துக்கு மூலம். ஆதலால் எங்களைப் பிரிவதற்குப் பின்வாங்காதே. மேலும் இதுவரை நாங்கள் சகோதரர் நால்வராயிருந்தோம். இப்பொழுது உன்னோடு நாம் ஐவர் சகோதரராயினோம். உன் உறவினரெல்லாம் எனக்கு உறவினரல்லவா? அயோத்தியில் நமது பந்துக்களைப் பாதுகாக்கத் தம்பி பரதனை வைத்து வந்தேன். இவ்விடத்திலுள்ள நமது பந்துக்களைப் பாதுகாக்க உன்னையன்றி வேறு யாரை வைத்துப் போவேன்? ஆதலால் நீ இங்குதானே நமது சுற்றத்தாரைக் காத்துக் கொண்டிரு. என் சொல்லைக் கடவாதே. நாங்கள் வனவாசம் முடித்துத் திரும்பி அயோத்தி செல்லுங்கால் உன்னோடு தங்கிச் செல்வோம்.

குகன்: சித்தம்.
(இராமன் முதலிய யாவரும் புறப்பட்டுச் செல்கின்றனர்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக