செவ்வாய், 21 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்



அங்கம் 2
முதற்களம்

இடம்                      கங்கைக் கரை
காலம்                     மாலை
பாத்திரங்கள்         இராமர், சீதை, இலக்ஷ்மணர், குகன்
                (இராமர் சீதைக்கு இயற்கையி னழகை வருணித்துக் கூறிவருகின்றார். இலக்ஷ்மணர் அவரைத் தொடர்ந்து வருகிறார்)
இராமர்: சீதா! அதோ தெரிகின்றது பார், கங்கா நதி. அதில் அன்னப் பறவைகள் ஆணும் பெண்ணுமாய் இங்குமங்கும் ஓடியாடி எவ்வளவு ஆனந்தமாய் விளையாட்டயர்கின்றன, பார்த்தனையா! அதோ பார், செந்தாமரை மலர்கள், உனது திருமுகம்போல் மலர்ந்து எவ்வளவு சிறப்புடன் விளங்குகின்றன! சீதா! எனக்கொரு சந்தேகம் தோற்றுகிறது.
சீதை: நாதா! அது யாதோ?
இராமர்: அந்தத் தாமரை மலர்களினிடையே கெண்டைகள் தாவித் தாவிக் குதிக்கின்றனவே தெரிகிறதா?
சீதை: ஆம், அன்ப!
இராமர்: அம்மலர்களின் தேனை மாந்த வண்டினங்கள் ரீங்காரஞ் செய்துகொண்டு பறக்கின்றனவே, பார்த்தனையா?
சீதை: ஆம், பிராணபதி!
இராமர்: உனது கண்ணிணைகளை, அவ்வண்டினங்களோடு ஒப்பிடுவதா, அன்றி அக் கெண்டை மீன்களோடு ஒப்பிடுவதா என்று ஐயுறுகின்றேன்.
சீதை (புன்னகை கொண்டு): அன்பா, தங்கள் ஐயுறவு தீர்க்க அடியாள் கூறுவதொன்றுண்டு. தாமரை மலரை ஒப்பது தங்கள் முகமே. அடியாள் நயனங்கள் தங்கள் முகத்தின் அழகாகிய இனிய தேனை மாந்தி மாந்திக் களிப்புறுவதால் அம்மலர்களின் தேனை மாந்தும் வண்டுகளுக்கு இணையாகலாம்.
இராமர்: என் ஐயுறவு தீர்ப்பதுபோல் என்னையும் புகழ்ந்துவிட்டனையே. உனது புத்தி சாதுர்யமே சாதுர்யம். அதோ பார், அந்த வயல்களில் களை பிடுங்கும் பள்ளப் பெண்கள் மலர்களோடு கூடிய குவளைக் கொடிகளை வேரோடு பிடுங்கி எறிகின்றனர்.
சீதை: மெல்லிய கொடிகளை அங்ஙனம் வீசி எறியும் அவர்கள் மிகக் கொடியர்களன்றோ?
இராமர்: தடையென்ன? அக்குவளை மலர்களைப் பிடுங்கி எறிவது உன்னைப்போன்ற அழகிய பெண்களின் கண்களைப் பிடுங்கி எறிவது போலன்றோ தோற்றுகிறது? அது கிடக்கட்டும், அதோ பார்.
அருந்ததி யனையாளே யமிர்தினு மினியாளே
செருந்தியின் மலர்தாங்குஞ் செறிவிதழ் வனசோகம்
பொருந்தின களிவண்டிற் பொதிவன பொன்னூதும்
இருந்தையி னெழுதீயொத் தெழுவன வியல்காணாய்.
அருந்ததி போன்ற கற்பரசீ! அமிர்தினுமினியாய்! செருந்திப் புஷ்பங்கள் சிந்திய அசோக மரத்தின் மலர்களில் வண்டுகள் நிறைந்திருப்பதைப் பார். பொன்னை வைத்தூதும் கரியினின்று எழும் தீயைப்போலத் தோன்றுகின்றது.
சீதை: நாதா! தங்களது உவமானம் மிக அழகாயிருக்கின்றதே! செருந்திப் புஷ்பங்கள் செந்தீ போலவே தோற்றுகின்றன. அசோக மலர்களும் பொன்னிறமாகவே விளங்குகின்றன. இவ்விரண்டு உவமானங்களும் மிக மேலாகத்தானிருக்கின்றன. ஆனால் சற்றுமுன் எனது கண்களுக்கு உவமித்த வண்டுகளை இப்போது கரியாக்கி விட்டீர்களே! அதுதான் எனக்கு சற்று வருத்தத்தை விளைக்கின்றது.
இராமன்: காதலீ! உவமானம் அனைத்தும் ஏகதேசமே என்பதை நீ அறியாயோ? நெற்பயிர் புல்லைப் போன்றதென்றால் நெல்லும் புல்லும் சமமாய்விடுமா? அது போகட்டும், என் அன்பே! அதோ பார் அன்னங்கள் உறங்குவதை! ஆற்றங்கரை யிலிருக்கும் பலவகையான மலர் மரங்களினின்றும் உதிர்ந்த பலவகையான புஷ்பங்கள் கலந்து ஆற்றில் மிதந்து வருவது எவ்வளவு அழகாய் இருக்கிறது பார்!
சீதை: நாதா! இவ்வளவு அழகிய இயற்கைக் காட்சியை நாம் அயோத்தியில் காணமுடியுமா?
இராமர்: காதலீ! நகர நலங்களெல்லாம் மனிதரது செயற்கை. அங்கே இயற்கையின் அழகைக் காணுவதெப்படி?
சீதை: இவ்வுண்மையை அறிந்தும் என்னை அங்கேயே இருக்கும்படி கூறினீர்களே! இந்த இயற்கையின் அழகையெல்லாம் நீங்களே அனுபவிக்க வேண்டுமென்றுதானே எண்ணினீர்கள்?
இராமர்: (சீதையை நோக்கிப் புன்னகை புரிந்து) அயோத்தி அரண்மனை வாசலைத் தாண்டுவதற்கு முன்னமேயே கால் சோர்ந்து, "காடடைந்து விட்டோமா?" என்று கேட்டனையே! அவ்வளவு மெல்லியளாகிய உன்னை எவ்வாறு காட்டுக்கழைத்துப் போவதென்றெண்ணியே உன்னை அழைத்துவரப் பின்வாங்கினேன். (இலக்ஷ்மணரைப் பார்த்து) இலக்ஷ்மணா! இளைப்பாறுவதற்கு இவ்விடம் ஏற்றதாயிருக்கும் போலிருக்கிறதே! சீதை விளையாட்டாக வெகு தூரம் நடந்து வந்துவிட்டாள். இனியும் அவளை நடக்கச் செய்வது தகாது. ஆதலால் இவ்விடத்திலேயே இன்றிரவைக் கழித்துப் போகலா மென்றெண்ணுகிறேன்.
இலக்ஷ்மணர்: சித்தம். அடியேன் தங்கள் சயனத்திற்கு இடம் அமைக்கிறேன்.
இராமர்: நாளைய தினம் நாம் கங்கையைக் கடக்கவேண்டுமே.
இலக்ஷ்மணர்: அதற்கென்ன? ஓடம் விடுவோர் இருப்பார்கள். நாளைக் காலையில் சித்தம் செய்துவிடலாம்.
                (இலக்ஷ்மணர் இடம் அமைக்கிறார். இராமரும் சீதையும் அவ்விடத்தில் உட்காருகிறார்கள். இலக்ஷ்மணர் சற்று தூரத்தில் நிற்கிறார். பெருஞ்சத்தம் ஒன்று கேட்கிறது. இலக்ஷ்மணர் அச்சத்தம் வரும் திசையைப் பார்க்கிறார். சில வேடுவரோடு குகன் அவரை எதிர்கொண்டு வருகிறான். அவன் தோளில் வில்லும், முதுகில் அம்பறாத்துணியும் தரித்திருக்கிறான். அரையில் தோலைத் தொங்கும்படி கட்டியிருக்கிறான். புலிவாலை இடுப்பில் கட்டியிருக்கிறான். மார்பில் புலிப்பல் மாலை அணிந்திருக்கிறான். இருண்டு சுருண்ட தலைமயிர்க் கற்றையுடையவன்; முன்கையில் நீண்ட மயிர்களை உடையவன்; இடுப்பில் கட்டிய புலிவால் கச்சையில் வாளைச் செருகியிருக்கிறான். கையில் தேனும் மீனும் ஏந்தியிருக்கிறான். இலக்ஷ்மணரைக் காணவும் அவன் தன் பரிசனங்களை அப்பால் நிறுத்திவிட்டுத் தான் மட்டும் வந்து இலக்ஷ்மணரைச் சந்திக்கிறான்.)

இலக்ஷ்மணர்: (குகனை நோக்கி) ஐயா! நீர் யார்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக