ஞாயிறு, 19 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்


பன்னிரண்டாம் களம்


இடம்:                     கைகேயியின் அந்தப்புரம
காலம்:                    இரவு
பாத்திரங்கள்:        தசரதர், கௌசலை, சுமித்திரை, கைகேயி, வசிஷ்டர், சுமந்திரர்,                  வாயில்காப்போன்.



தசரதர்: (துயரக்குரலில் உரத்து) இராமா! சென்றுவிட்டனையோ! பிராமணர்களே! வசிஷ்டரே! சுமந்திரரே! என்ன கொடுமை இது!

அம்மாவென் றுகந்தழைக்கு மார்வச்சொல் கேளாதே அணிசேர் மார்வம்
என்மார்வத் திடையழுந்தத் தழுவாதே முழுசாதே மோவா துச்சி
கைம்மாவின் நடையன்ன மென்னடையும் கமலம்போல் முகமுங் காணா
தெம்மானை யென்மகனை யிழந்திட்ட இழிதகையே னிருக்கின் றேனே.


இராமன் அம்மாஎன்று மகிழ்ந்து அழைப்பானே! அந்த அன்பார்ந்த இனிய குரலை நான் இனி என்று கேட்கப்போகின்றேன்! அவனது அழகிய மார்பு என் மார்போடு அழுந்த இனி என்று கட்டி அணைப்பேன்! அவனை உச்சி மோந்து நான் அடையும் ஆனந்தம் இனி என்று எனக்குக் கிட்டும்! ஐயோ! ஆண் யானை போன்ற அவன் நடையும், செந்தாமரை போன்ற அவன் திருமுகமும் என் கண்ணிலேயே நிற்கிறவே! என் ஐயனை, என் திருமகனை, இராமச்சந்திரனை இழந்து இன்னமும் நான் உயிர் தரித்திருக்கின்றேனே! என்னைப் போல் வன்னெஞ்சுடைய வஞ்சகனுமுண்டோ! ஐயோ! வாசனைச் சாந்து பூசிக்கொண்டு, மிருதுவான தலையணைமீது தலைவைத்து, சிறந்த ஸ்திரீகளால் விசிறிகொண்டு வீசச் சுகமாய் சயனிக்கும் என் உத்தம குமாரன், இனி மரக்கட்டை மேலோ, கல்லின் மேலோ தலைவைத்துக் கண்ணுறங்குவானே! ஜனகரால் வெகு செல்லமாக வளர்க்கப்பட்ட ஜானகியின் மெல்லிய சீரடிகள் கல்லிலும் முள்ளிலும்பட்டு எவ்வாறு வருந்துமோ?
பூமருவு நறுங்குறிஞ்சிப் புன்சடையாப் புனைந்து பூந்துகில் சேரிடையிற்
காமரெழில் விழலுடுத்துக் கலனணியா தங்கங்க ளழகுமாறி
ஏமருதோ னென்புதல்வன் யானின்று செலத்தக்க கானந்தான் சேர்தல்
தூமறையீ ரிதுதகவோ சுமந்திரனே வசிட்டனே சொல்லீர் நீரே    

பிராமணோத்தமர்களே! வசிட்டமா முனி புங்கவரே! சுமந்திரரே! எனது அருமைத் திருக்குமாரனது பூமுடித்த மெல்லிய குஞ்சி, திரித்த சடையா யிருத்தலை எனது கண்கள் கண்டு சகிக்குமோ? எனது செல்வ மருகி பூவினும் மெல்லிய பட்டாடை உடுப்பது போக, தருப்பைப் புல்லை யுடுப்பதற்கு பாவி நானோ காரணனாயிருந்தேன்! வயோதிகனாகிய நானன்றோ காட்டிற்குச் சென்று தவஞ்செய்யத் தக்கவன்? பால்மணம் மாறாத என் மகனும் மருகியும் அணிகலன்களின்றி, மேனி அழகு மாறி தவவேடம் புனைந்து காட்டிற்கேகுதல் நியாயமோ? நீங்களே கூறுங்கள். உலகத்துக்கெல்லாம் நாதனான இராமன் அனாதையாகக் காட்டில் எங்ஙனம் வசிப்பான்? பாவியாகிய இந்தக் கைகேயியின் சூதால் என் அருமை மகனைக் காடனுப்பி விட்டேன். ஆ, இனி என் செய்வேன்? இராமச்சந்திரா!என் அருமந்த புத்திரா! சீதா நாயகா! செந்தாமரைக்கண்ணா! செல்வப் புதல்வா! நீ காட்டிற்குப் போக வேண்டாம். வா இங்கே. என்னருகில் வா. உரை தவறினால் என்ன? உரை தவறினும் உன்னை இழக்கச் சம்மதியேன். இங்கு வாடா என் கண்மணி.
வசிஷ்டர்: (தசரதரை நெருங்கி) சக்கரவர்த்தி! மிதமிஞ்சிய காரியத்திற்கு இனித் துயரப்படுவதில் பிரயோஜனமில்லை. இராமன் இரதமேறிச் சென்றுவிட்டான். சுமந்திரர் இரதமோட்டிக்கொண்டு போயிருக்கிறார். இராமன் அதிதீவிர பக்குவமுடையவன். பதினான்கு வருஷத்திற்குள் மகரிஷிகள் அனுக்கிரகத்தைப் பெற்று, அறிவும் அனுபவமும் மிகுந்தவனாய்த் திரும்பி வருவான். அதுவரையில் அவனை நினைத்து மனம் வருந்தாதிருத்தலே உத்தமம். 
தசரதர்:-- ஆ! என் கண்மணி காடு சென்றுவிட்டானா? (கீழே மூர்ச்சையாய் விழுகிறார்) சற்று நேரம் பிரக்கினையின்றிக் கிடக்கிறார். பிறகு எழுந்து உட்கார்ந்துகொண்டு, கைகேயியைப் பார்த்து) அடி!
பொன்பெற்றா ரெழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவைபோலும்
மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியவென் மருகியையும் வனத்திற் போக்கி
நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட் டென்னையும்நீள் வானில் போக்க
என்பெற்றாய் கைகேசி இருநிலத்தி லினிதாக விருக்கின்றாயே.

அடி கேகயன் மகளே! அழகிலும் அறிவிலும் சிறந்த எனது உத்தம குமாரன் ஸ்ரீராமனையும், அவன்பின் பிறந்த இலக்ஷ்மணனையும் காட்டுக்கனுப்பினையே! அந்தோ! பச்சிளங்கிள்ளையைப் போன்ற என் மருகி மைதிலியையும் அவர்களுடன் அனுப்பி விட்டனையே! அடி பாவி! போதாக் குறைக்குப் பரதனுக்குப் பட்டங்கட்டி அவனையும் பழிக்காளாக்கத் துணிந்தனையே! இவ்வளவு கொடுஞ்செயல்களால் என்னையும் கொல்லுகின்றாயே! உன்னை மணந்த கணவன் மரணத்துக்கும் மனங்கலங்காது இக்காரியங்களைச் செய்து நீ என்ன பலனைப் பெறப் போகிறாய்? பாபசொரூபமான நீ இன்னும் இவ்வுலகில் எவ்வாறடி உயிர் தரித்திருக்கிறாய்? பாவி! வாய் கூசாது 'காட்டிற்குப்போ' என்று சொல்லி என் மகனை அனுப்பி விட்டாயே! அவனும் போய்விட்டானே! இனி யான் என்ன செய்வேன்?
கண்டே னெஞ்சங் கனிவாய்க் கனிவாய் விடநா னெடுநாள்
உண்டே னதனா னீயென் னுயிரை முதலோடுண்டாய்
பண்டே யெரிமுன் னுன்னைப் பாவீ தேவீ யாகக்
கொண்டே னல்லேன் வேறோர் கூற்றந் தேடிக் கொண்டேன்.

அடி பாவீ! உனதழகைக் கண்டு நெஞ்சுருகினேன். பாம்பை முத்தமிடுவதுபோல் நெடுநாள் ன்னை முத்தமிட்டு முத்தமிட்டு உன் விஷத்தைக் குடித்தேன். அதனால் நீ என் உயிர் முழுவதையும் உறிஞ்சிவிட்டாய். உன்னை நான் அக்கினி சாட்சியாகக் கைப்பற்றியது கற்புடைய மனைவியாகவல்ல, உயிருண்ணும் எமனாகவென்று இன்று அறிந்து கொண்டேன். அதை அன்றே அறிந்திருப்பேனாயின், உன் கருங்குழலும், பெருவிழியும், சிறு நகையும், திருமுகமும் என்னை மயக்கியிரா. உன் உருவத்தை, இத்துணை அழகாய் அமைத்த பிரமன், உன் உள்ளத்தை ஏன் இவ்வளவு கொடிதாய்ப் படைத்தான்! அடி, வன்னெஞ்சக்கள்ளி!
விழிக்குங் கண்வே றில்லா வெங்கா னென்கான் முளையைச்
சுழிக்கும் வினையா லேகச் சூழ்வா யென்னைப் போழ்வாய்
பழிக்கும் நாணாய் மாணாப் பாவி யினியென் பலவுன்
கழுத்தின் னாணுன் மகற்குக் காப்பின் நாணான் காணீ

அடி மனித சஞ்சாரமற்றதல்லவோ காடென்பது. என் அருமை மகன் தன்னைத்தான் பார்த்துக் கொள்ளமுடியுமேயன்றி வேறு மனிதர்களைப் பார்க்க ஏலாதே. அவ்வளவு கொடிய காட்டில் அவனை அனுப்புவதற்கு எத்தனை நாளாயடி எண்ணி யிருந்தாய்? உன்னை ஒரு மானிட மாதாக மதித்து உனக்கு வரங்கொடுத்தேனே! நான் செய்த அந்தக் கொடுந்தொழிலா லல்லவோ நீ இராமனைக் காட்டுக்கனுப்புவதற்கு இடமேற்பட்டது. அடி உனது கொடுமொழியால் என் நெஞ்சைப் பிளக்கின்றாயே! உலகோர் கூறும் பழிச்சொல்லுக்கும் நாணாதவளாயிருக்கின்றாயே! ஏன் பலவாறாகக் கூறுகின்றேன்? உன் மகன் பரதனுக்குப் பட்டம் கிட்டவேண்டுமன்றல்லவா நீ இவ்வளவு காரியம் செய்தனை! அந்த மகனுக்குப் பட்டம் கட்டுவதற்கு முன் கட்டப்பெற வேண்டிய இரக்ஷாபந்தனத்திற்கு உன் மாங்கல்யச் சரடே உபயோகப்படுமடி பாவீ! (சோகிக்கிறார்)
கோசலை:-- (தனக்குத்தானே) ஆ! இந்த விதிக்கு என்ன செய்வேன்? புத்திரனைப் பிரிந்த பாவியாகிய நான் புருஷனையுமன்றோ இழக்க நேரும்போலிருக்கிறது! ஜகதீசா! எல்லாம் உன் திருக்கூத்தன்றோ! எனது பர்த்தாவின் புத்திர சோகத்தைத் தவிர்த்து அவர் உயிரைக் காப்பாற்ற மாட்டாயா? (தசரதரைப் பார்த்து) என் அரசே! அயோத்திக்கிறையே! தங்களுக்கு ஏன் இந்த சோகம்? இராமச்சந்திரன் காடு சென்றால் என்ன? திரும்பி வந்து விடுகிறான். இதற்காக இப்படி வருந்துவது உங்கள் பெருமைக்குத் தகுமா?
தசரதர்:-- ஆ, கௌசலை! கற்புக்கரசியாகிய உனக்கு அபராதியாயினேன். காதற்குமாரனைக் காட்டுக்கனுப்பினேன். குற்றமற்ற சூரியகுல முறையைக் கெடுத்தேன். இத்துணைக் கொடியனாகிய நான் ஏன் இன்னும் உயிரோடிருக்கின்றேன்? மைந்தா! இராமச்சந்திரா! கொடிய காட்டுக்குச் சென்றுவிட்டனையோ? செல்லாதே, செல்லாதே!
கண்ணும் நீரா யுயிரு மொழுகக் கழியா நின்றேன்
எண்ணும் நீர்நான் மறையோ ரெரிமுன் னின்மேற் சொரிய
மண்ணு நீராய் வந்த புனலை மகனே வினையேற்
குண்ணும் நீரா யுதவி யுயர்கா னடைவாய் நீயே!

மகனே! கண்ணீர் ஆறாய்ப் பெருக நான் வருந்துகின்றது உனக்குத் தெரியவில்லையா? என் ஆவி சோர்கிறது! என் உயிர் நீங்குவதற்கு முன்னம் நீ காடு செல்லாதே! உன் மகுடாபிஷேகத்திற்காக நீ மஞ்சன நீராட வேண்டி மகாநதிகள் பலவற்றினின்றும் கொண்டுவரப்பட்ட திவ்ய தீர்த்தங்கள் சித்தமாயிருக்கின்றன. பாவியாகிய நான் இறக்குந் தருணத்தில், எனக்கு அந்தப் புண்ணிய நதிகளின் நீரைப் பருகக் கொடுத்து விட்டுப் பின்பு வனஞ் செல்லடா, என் கண்மணி! பரசுராமரைப் பங்கப்படுத்திய என் சிங்கமே! உனக்குரியதாகிய மணிமகுடத்தை உனக்குத் தருவதாக வாயாற் சொல்லிவிட்டு, சடைமகுடத்தைக் கொடுத்துக் காட்டுக்கு அனுப்பினேனே பாவியேன்! என்னைப்போலும் கொடியனொருவன் இவ்வுலகில் இருப்பானோ? என் கண்ணே!
கறுத்தா யுருவம் மனமுங் கண்ணுங் கையுஞ் செய்ய
பொறுத்தாய் பொறையே யிறைவன் புரமூன் றெரித்த போர்வில்
இறுத்தாய் தமியே னென்னா தென்னை யிம்மூப்பிடையே
வெறுத்தாய் இனி நான் வாணாள் வேண்டேன் வேண்டேனையா

என் செல்வா! மாணிக்க மேனியனே! மாசற்ற மனத்தனே! தர்ம சொரூபனே! திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளது வில்லை யொடித்த வீரனே! தளர்ந்த காலத்தில் என்னைத் தவிக்க விட்டுச் சென்றனையே! இது உனது அரும்பெருங் குணத்திற்கழகோ! உன்னைப் பிரிந்த பிறகு எனக்கு இவ்வுலக வாழ்க்கை எதற்கு? வேண்டாம், வேண்டாம்.
பொன்னின் முன்ன மொளிரும் பொன்னே புகழின் புகழே
மின்னின் மின்னும் வரிவிற் குமரா மெய்யின் மெய்யே
என்னின் முன்னம் வனநீ யடைதற் கெளியே னல்லேன்
உன்னின் முன்னம் புகுவேனுயர்வா னகம்யா னின்னே

பொன்னனைய புதல்வா! உன்னுடைய திருவொளிக்கு முன்னம் பொன்னின் ஒளியும் மங்குமே! புகழுக்குப் புகழ் கொடுக்கும் புத்திர சிகாமணியே! மின்னலைப் பொல் பிரகாசிக்கும் வில்லேந்திய வீரா! எனக்கு முன்னம் நீ வனஞ் சென்றாய். நீ வனஞ் சேர்வதற்கு முன்னம் நான் விண்ணுலகஞ் சென்றுவிடுவேன். கண்மணி! சகல நற்குணங்களும் அமைந்த உனக்கு நெஞ்சம் மட்டும் கல்லாகவா போய்விடவேண்டும்! மைந்தா! என் மனம் உன் மனம் போன்றதல்ல. அழலிற்பட்ட மெழுகுபோல் உருகக் கூடியது. என் உயிரும் உடலை விட்டுப் பிரியக்கூடியது. ஜனகன் பெற்ற புதல்வியின் திருக்கரத்தைப் பற்றி மணக்கோலத்தோடு நீ அயோத்தியிற் புகுந்ததைக் கண்ட கண்களால், மரவுரி உடுத்து அயோத்தியைவிட்டுக் காடு செல்வதைக் காண சகிக்க என்னால் ஆகுமோ? என்னை விட்டு என் மகன் பிரிவதை உலகம் பொறுக்குமேனும், தெய்வத்துக்குச் சம்மதமேனும், நான் அதைச் சகிக்க மாட்டுவேனோ? என்னரசே! என்னுயிரே! எனக்கினிய திருக்குமரா! என் மனமினிக்க மழலைமாறாக் குழவிப்பருவத்திற்றானே பழுத்த ஞானிகள்போல் பேசுவாயே! உனக்கென்றமைத்த கனக ரதத்திலேறி நீ ஊர்வலம் வருவாய், கண்ணாற்கண்டு களிக்கலா மென்றிருந்தேனே! என் மனோரதம் நிறைவேறுமுன் நீ இரதமேறிக் காட்டுக்குச் சென்று விட்டனையே! காடடைந்ததும் அந்த இரதத்தையும் விட்டுக் கால் வருந்த நடப்பையே! என் புகழெல்லாம் திரண்டு வந்த ஓர் உருவாய்த் திகழும் என் செல்வா! உன்னைப் பெற்ற அருமையை நான் அறிவேன். என் ஐயனே! உன்னைப் பிரியேன், பிரியில் உயிர் தரியேன்!
அள்ளற் பள்ளப் புனல்சூ ழகன்மா நிலமு மரசுங்
கொள்ளக் குறையா நிதியின் குவையும் முதலா மெவையுங்
கள்ளக் கைகேசிக்கே யுதவிப் புகழ்கைக் கொண்ட
வள்ளற் றனமென் னுயிரை மாய்க்கு மாய்க்கு மந்தோ!

ஐயோ! ஆழி சூழ்ந்த இவ்வுலகையும், அறுபதினாயிரமாண்டு அரசாண்டு வந்த என் அரசையும், அளவிறந்த செல்வத்தையும், இன்னும் மற்றுள்ள யாவற்றையும், இந்தக் கள்ளக் கைகேசிக்குக் கொடுத்து நான் அடைந்த புகழும் புண்ணியமும் என் உயிரை மாய்க்கின்றனவே! இராமச்சந்திரா! என் கண்ணே! மாற்றுயர்ந்த பொன்னே! பொன்னின் மணியே! சொர்க்க, மத்திய, பாதாளமென்னும் மூன்றுலகினும் உன்னைப்போல்வா ரொருவருண்டோ? இருபதோடொருமுறை நரபதியாருயிருண்ட பரசுராமரோடு சலியாது நின்று போர்செய்து அவரைப் புறங்கண்டனையே! அந்தோ! மைந்தா ! நீ கானடைந்தாயெனக் கேட்டும் நான் வானடையேனாகில், நான் எவ்வளவு கொடு மனமுடையேனாயிருத்தல் வேண்டும்! என் உடையவனே! நீ காட்டிலுறைவது , நான் இந்தக் கொடும்பாவிக் கைகேயியுடனிந் நாட்டிலுறைவதென்றால், என்னுடைய தன்மை வெகு நன்றாயிருக்கிறது! என் செல்வா! நீ பிரிந்த பிறகு உன்னைத் தவத்தாலடைந்த இலக்ஷ்மிதேவி மனம் வருந்தி ஒரு நிலையாயிராது பித்தங்கொண்டவள் போல் கண்டவிடமெல்லாம் ஓடித் திரிகிறாளே! உன்னை அடைந்து அகமகிழ்ந்த பூதேவியும் உன்னைப் பிரிந்து தரிக்க ஏலாது புரண்டுருண்டுத் தவிக்கின்றாளே! உனக்குத் தந்தையென்று வந்த நான் இன்னும் உயிர் தரித்திருக்கின்றேனே! எனக்கும் இந்தக் கைகேசிக்கும் என்ன பேதம்?
பூணா ரணியும் முடியும் பொன்னா சனமுங் குடையும்
சேணார் மார்பும் திருவும் தெரியக் காணத் திரிவேன்
மாணா மாவிற் கலையும் மானின் றோலு மவைநான்
காணா தொழிந்தே னென்றா னன்றாய்த் தன்றோ கருமம்!

புதல்வா! மணிகளிழைத்த பணிகளணிந்து, இலங்கு முப்புரிநூல் உன் பெருமார்பிடைக் கிடந்து துலங்க, நன்முடிமீது பொன்முடி தரித்து, சிங்கஞ்சுமந்த தங்க ஆசனத்தில் நீ வீற்றிருப்ப, கொற்ற வெண்குடை உனக்கு நற்றவர் பிடிக்க, உன் அருகே என் மருகி திருமகள்போல் திகழ்ந்தமர்ந்திருக்கும் கோலத்தைக் காணத் தவஞ் செய்தேனல்லேன். என் அரசே! அந்தக் கோலத்தோடுன்னை நான் பார்க்கப் பாக்கியஞ் செய்யாவிடினும், மான்தோலும் மரவுரியும் சடைமுடியும் தரித்த கோலத்தைக் காணாதிருக்கவேனும் தவம் புரியாதவனாயினேனே! என்னினும் பாவ கருமமுடையவ ரிவ்வுலகிலுண்டோ?
கோசலை:-- (தசரதரைக் கண்ணீர் ததும்ப நோக்கி) பிராணபதீ! தாங்கள் இவ்வாறு வருந்தலாமோ?
மெய்யின் மெய்யே யுலகின் வேந்தர்க் கெல்லாம் வேந்தே
உய்யும் வகைநின் உயிரை யோம்பா திங்ஙன் தேம்பில்
வைய முழுதுந் துயரான் மறுகும் முனிவனுடனம்
ஐயன் வரினும் வருவான் அயரேல் அரசே! அரசே!

சத்தியத்தைச் சத்தியமாக நாட்ட வந்த அரசே! அரசர்க்கரசே! தாங்கள் இங்ஙனம் வருந்தினால் உலகம் உய்வதெப்படி? உயிரைக் காப்பாற்றாது இவ்வாறு தேம்பித்தேம்பி வருந்தினால், உலகம் முழுவதும் துயரிலழுந்துமே. இராமனுக்கு இப்பொழுது என்ன நேர்ந்து விட்டது? பதினான்கு வருஷம் வனத்தில் மாதவர்களோடு சஞ்சரிக்கப் போகிறான். அதைவிட வேறொன்றுமில்லையே! பதினான்கு வருஷங்கழிந்ததும் திரும்பி வந்து விடப்போகின்றான்! தாங்கள் ஆண்ட அறுபதினாயிரம் ஆண்டுகளும் எப்படிக் கழிந்தன? அவ்வளவு நீண்ட காலமும் இப்பொழுது பார்த்தால் தங்களுக்கு எவ்வளவு சொற்ப காலமாய்த் தோன்றுகிறது! பதினான்கு வருஷம் அந்த அறுபதினாயிர வருஷத்தில் ஆயிரத்தில் ஒரு பங்குகூட ஆகாதே! இந்த அற்ப காலம் வெகு சொற்பமாகக் கழிந்துவிடும். பிறகு இராமன் மகரிஷிகள் அனுக்கிரகத்தோடு திரும்பி வந்து தங்களைக் காணுவான், பட்டமும் பூணுவான். மேலும் அவனைக் கொண்டுபோய் விடச்சென்ற சுமந்திரர் இன்னும் திரும்பி வரவில்லை. அவர் வரும்போது நமதையனும் ஒருகால் அவரோடு திரும்பி வந்தாலும் வருவான். தாங்கள் வருந்துதலொழிந்திருங்கள். (தசரதருடைய பாதங்களைத் தன் கையால் தடவுகிறாள்)
தசரதர்:-- என் கண்மணி, இராமச்சந்திரன் வருவானோ? என் கண்ணால் அவனைக் காண்பேனோ? வன்மாயக்கள்ளி, இந்தக் கைகேயி என் உயிரை வாங்கி விட்டாள். சண்டாளி, தானும் தன் மகனும் வாழ என்னைக் கொன்று என் மகனைக் காட்டுக்கனுப்பத் துணிந்தனளே! ஆ! நான் செய்த வினையும், எனக்கு வந்த சாபமும் சேர்ந்து கைகேயி என்ற ஒரு கொடு நீலி வடிவாக வந்தனவோ? (கோசலையைப் பார்த்து) கௌசல்யா! பெரியோர் வாக்குப் பிழை போகாதென்பதை இன்று கண்டேன். முன்னாள் முனிவரொருவர் எனக்கிட்ட சாபமொன்றுண்டு. அந்தச் சாபமே நான் இப்பொழுது அனுபவிப்பது. அதன் வரலாற்றைக் கூறுகின்றேன் கேள்:--
                நெடு நாட்களுக்கு முன் ஒரு நாள் நான் வேட்டையாடக் காட்டுக்குச் சென்றிருந்தேன். அங்கே வில்லுங் கணையுங் கொண்டு காட்டு மிருகங்களை எதிர்பார்த்தொரு செடிமறைவி லொளிந்திருந்தேன். அப்பொழுது அருகேயிருந்த தடாகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அவ்வொலியை, யானையொன்று தடாகத்தில் நீர் குடிப்பதாலுண்டாகு மொலியென்று நான் கருதினேன். அதோடு நில்லாது சப்தவேதி சாஸ்திரம் கற்றவன் என்ற கர்வத்தால் அவ்வொலி யானை நீர் குடிக்குமொலி யெனவே நிச்சயித்து அவ்வொலி எழுந்த இடத்தைக் குறிப்பிட்டு ஓர் அம்பெய்தேன். அந்தோ! அம்பெய்து அரைக் கணத்திற்கெல்லாம் யாரோ ஒரு மனிதர் ஓவென்றலறிய சத்தங் கேட்டது. உடனே நான் மனம் பதறி ஒலி வந்த திசையை ஓடிச் சென்று பார்த்தேன். ஆ! என் கண் கண்ட காட்சியை என்னென்பேன்! என் அம்பு தைத்து இரத்தம் பெருக, தடாகக்கரையிற் கிடந்து தவித்துப் புலம்பும் ஓர் அந்தணரைக் கண்டேன். அவரருகே நீர்க்குடமொன்று கவிழ்ந்து கிடப்பதையும் கண்டேன். நான் மதிமோசம் போனதறிந்து கொண்டேன். இனி என் செய்வதென்று அவ்வந்தணரைத் தடவி உபசாரஞ் செய்து, நான் யாரென்பதையும், அம்பெய்த வகையையும் அவருக்குத் தெரிவித்து அவர் யாவரென விசாரித்தேன்.
                அப்பொழுதவர் என்னை நோக்கி, “ வேந்தனே! என் தந்தை காசியப முனிவர் சந்ததியில் வந்த சலபோசனர் என்னும் முனிவராவார். எனது தாய் தந்தை இருவரும் கண்ணிழந்த வயோதிகரா யிருக்கின்றனர். ஆதலால், நான் அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியத்தைப் பெற்றேன். என்னைத் தவிர அவர்களுக்கு வேறு சந்ததியும் கிடையாது. இன்று வழக்கம்போல் நீர் திரட்டிச் செல்வதற்காக இங்கு வந்து குடத்தில் நீர் முகந்து கொண்டிருந்தேன். அதனாலுண்டான ஒலியை, யானை நீர் குடிப்பதென நினைத்து நீ அம்பெய்தனை. அவ்வம்பு பட்டு இதோ நான் உயிர் துறக்கப் போகின்றேன். உன்மேற் குற்றமில்லை. எனது ஊழ்வினைப் பயன். என்னைக் காணாமல் எனது தாய் தந்தையர் வருந்துவார்கள். ஆதலால் நீ இக்குடத்தில் நீர் முகந்து சென்று எனது பெற்றோரிடம் கொடுத்துவிட்டு நடந்த வரலாற்றையும் கூறிவிடு" என்று சொல்லி அவர்களிருக்குமிடத்தின் அடையாளத்தையும் கூறி என் முன்பாகவே உயிர் துறந்தனர்.
                நான் மனம் வருந்தி குடத்தில் நீர் எடுத்துக்கொண்டு சென்று சலபோசனரையும் அவர் மனைவியையும் கண்டேன். நான் சென்ற சத்தம் கேட்டுத் தம் மகன் வருவதாக எண்ணி அவர்களிருவரும் மனமகிழ்ந்து 'மகனே' என்றழைத்தனர். நான் நடந்த வரலாறனைத்தையும் அவர்க்குக்கூறி, அயோத்தி மன்னன் யானே யென்பதையும் தெரிவித்தேன். அதைக்கேட்டவுடன் அவர்கள் அலறி விழுந்தழுது புலம்பினார்கள். நான் அவர்கள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு "அடியேன் அறியாது செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்" என்று கெஞ்சினேன். நான் என்ன சொல்லியும் அவர்கள் புத்திர சோகம் அடங்கவில்லை. முனிவர் என்னைக் கோபித்து " அடாபாவீ! நீ எமது புத்திரனை, உனது அஸ்திரத்தால் கொன்றனை. அவனை இழந்த நாங்கள் இதோ இறக்கின்றோம். எங்களைப்போல நீயும் மூப்புக் காலத்தில் உனது புத்திரனது பிரிவாற்றாமையால் மாளக் கடவை" என்று சபித்தனர். அப்பால் என் கண்ணெதிரேயே அம்முனிவரரும் அவர் மனைவியாரும் உயிர் நீத்தனர். அக்காலை முனிவர் 'புத்திரசோகத்தால் நான் மடிவேன்' என்று கூறியதால் எனக்குப் புத்திரப்பேறு உண்டென்றெண்ணி நான் மகிழ்வடைந்தேனேயொழிய அச்சாபத்திற்காகச் சஞ்சலப்படவில்லை. அந்தச் சாபம் பாழ்போகாது இப்போழ்து பலித்தது. ஏ, கௌசல்யா! உனது மணிவயிற்றில் வந்துதித்த எனது கண்மணியை எப்பொழுது காணப்போகிறேன். சுமந்திரர் சென்று வெகு நாழியாயிற்றே! என் உயிர் துடிக்கிறதே! இராமச்சந்திரா! (வாயில் காப்போன் ஒருவன் வசிஷ்டரிடம் வந்து)
வாயில் காப்போன்:-- சுவாமி! மந்திரி சுமந்திரர் வந்திருக்கிறார்.
தசரதர்:-- சுமந்திரரா வந்திருக்கிறார்?
வசிஷ்டர்:-- ஆம், சக்கரவர்த்தி! சுமந்திரர் வந்திருப்பதாக வாயில்காப்போன் தெரிவிக்கின்றான்.
தசரதர்:-- முனிபுங்கவ! சீக்கிரம் அவரை வரச்சொல்லுங்கள். அவரோடு இராமன் வந்திருக்கின்றானா? அவனை என் கண்ணெதிரே அழைத்து வாருங்கள். (வசிஷ்டர் வாயில் காப்போனை நோக்கி)
வசிஷ்டர்:-- சுமந்திரரை வரச்சொல். (வாயில்காப்போன் போகிறான். சுமந்திரர் வருகிறார். சக்கரவர்த்தியை நமஸ்கரிக்கிறார். தசரதர் அவரை நோக்கி)
தசரதர்:-- சுமந்திரரே! எனது கண்மணி இராமச்சந்திரன் எங்கே?
சுமந்திரர்:-- (சற்றுத் தயங்கி) சக்கரவர்த்தி! அவர் காட்டிலேயே தங்கிவிட்டார்.
தசரதர்:-- ஆ! மைந்தா! (சோகித்து விழுகிறார். மீட்டும் எழுந்து) ஆ! என் கண்மணி!
முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்
உன்னையுமுன் னருமையையு முன்னோயின் வருத்தமுமொன் றாகக்கொள்ளாது
என்னையுமென் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க வெந்தாய்
நின்னையே மகனாகப் பெறப்பெறுவே னேழ்பிறப்பு நெடுந்தோள் வேந்தே.

உனதருமையையும் பெருமையையும் எண்ணாது, உன்னை வனஞ்செல்ல விடுத்தேனே பாவியேன்! நீ அடையும் வருத்தத்தை நினையாத கொடியவனாகிய எனதுரையையும், என்னையும் பெரிதாக மதித்து வனம் போன, என் செல்வா! ஏழேழு பிறப்பும் நான் உன்னையே புத்திரனாகப் பெறக்கடவேன்!
தேனருமா மலர்க்கூந்தற் கௌசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டின்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மநுகுலத்தார் தங்கள் கோவே!

 அருமந்த குமாரா! கற்புக்கரசியாகிய கௌசலை, சுமித்திரை இருவரும் வருந்தவும், நான் ஆவிசோரவும், சண்டாளக் கைகேயியின் சொல்லைக்கேட்டு , இந்நகரைத் துறந்து, காடு சென்றனையே! நீ துறந்த நகரை நானுந் துறந்து வானுலகு செல்கின்றேன். (வசிஷ்டரை நோக்கி) குருமகரிஷி! இதோ நான் உயிர் துறக்கிறேன். நான் இறந்த பிறகு என் உடலை அந்தச் சண்டாளி கைகேயி தீண்டாதிருக்கக் கடவள். இவள் மகன் பரதனும் எனக்கு உரிமைக் கடன் செய்ய ஏற்றவனல்லன். இராமா! (கீழே விழுந்து இறக்கிறார். சுமந்திரர் அவரைத் தாங்குகிறார். கோசலை கோவென்று அலறி அழுகிறாள். சுமித்திரை "ஐயோ!வென்று கதறி விழுந்து மூர்ச்சையாகிறாள். கோசலை தசரதர் நாசியிற் கைவைத்துச் சுவாசம் வருகிறதாவென்று பார்த்து, வராதது கண்டு உடம்பைத் தொட்டுப் பார்க்கிறாள். உடம்பு குளிர்ந்திருப்பது உணர்ந்து)
கோசலை:-- ஐயோ! முடிவேந்தே முடிந்தனிரோ! (என்று சொல்லிக்கொண்டே கீழே விழுகிறாள்; எழுகிறாள்; பெருமூச்செறிந்து மீட்டும் விழுகிறாள்; மறுபடியும் எழுந்து) பிராணபதீ! இனி நான் என் செய்வேன்! என் கணவா! என்னரசே! என்னுயிரே! என் கண்ணுக்கினிய காந்தா! என் மனத்துக்கினிய மணவாளா! என்னை மணமுடித்த திருவாளா! என் கருத்துக்கிசைந்த காதலா! என் உளத்துக்கினிய உத்தமவோ! என்னைக் கடிமணம் புரிந்த காவலவோ! எனக்கு வாழ்வளித்த வள்ளால்! என்னை அடிமை கொண்டருளிய ஐயாவோ! என் மனங்கவர்ந்த மன்னாவோ! இனி என் செய்வேன்! மகனால் மடியவென்று உமக்கு மலரயன் விதித்தானோ? புத்திரனைப் பிரிந்த நான் பர்த்தாவையு மிழந்து புலம்பவும் காலமோ? வாழைக்குத் தானீன்ற காய் கூற்றமாவதுபோல், நீரீன்ற மைந்தனோ உமக்குக் கூற்றமாயிருந்தான்! என் ஐயாவே! அடி கைகேயி! இப்பொழுதுன் மனம் குளிர்ந்ததா? உன் எண்ணம் முடிந்ததா? எம் மங்கல நாணை அறுக்கவன்றோ, மன்னர் உனக்கு மங்கலநாண் புனைந்து உன்னை மனைவியாகக் கொண்டார்! பிராணபதீ! தாங்கள் அன்று சம்பராசுரனைக் கொன்று தேவர்களுக்கு அரசளித்தீர்களே! அதற்காக அவர்கள் இன்று தங்களை விருந்துக்கழைத்தனரோ? அன்றி தாங்கள் இந்நாள் வரையும் செய்த புண்ணியத்தின் பலனை அனுபவிக்க அமருலகடைந்தீர்களோ? மகவேள்வி செய்து மகனைப் பெற்றீர். பெற்ற மகற்குக் கொற்றமுடி கவித்துக் கண்களாற் கண்டு களிப்பதற்குள் காலன் வந்து தங்களைக் கைப்பற்றிச் சென்றனனே! (சோர்ந்து கீழே விழுகிறாள்)                                         
அங்கம் 1 நிறைவு பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக