அது 1971. அன்று DOT ஆக இருந்த தொலைபேசித்துறையில் தொலைபேசி இயக்குனர் ஆகத் தேர்வு செய்யப்பட்டு நான் திருச்சிக்குப் பயிற்சிக்குச் செல்கிறேன். என் அடுத்த வீட்டுக்காரர் திருச்சியில் தன் கம்பெனி ஓய்வறையில் பிற ஊழியர்களுடன் தங்கிக் கொள்ளலாம் என்று கூறி வரச் சொல்லியிருந்தார். கிளம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில் இன்னொரு குடும்ப நண்பர் தன் உறவினர் ஒருவர் திருச்சியில் மிகப் புகழுடன் இருப்பதாகவும், ஆனால் தனக்கு மிக நெருக்கம் என்று சொல்ல முடியாதெனவும் வேண்டுமானால் அவரைப் போய்ப் பார்த்தால் ஒருவேளை உதவலாம் எனவும் கூறி அவர் விலாசத்தையும் கொடுத்திருந்தார். திருச்சிக்குப் போய் அடுத்த வீட்டுக்காரர் அறையில் ஓரிரு நாள்கள் தங்கிய பிறகு, ஒரு மாலை தேரத்தில் ஊர் சுற்றக் கிளம்பினேன். செல்லும் வழியில் குடும்ப நண்பர் கொடுத்த முகவரியைப் பார்த்தேன். போய்த்தான் பார்ப்போமே என்று உள்ளே நுழைந்தேன். அங்கிருந்தவரிடம் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு நான் அங்கு வந்திருக்கும் நோக்கத்தைக் கூறினேன். “எங்கு தங்கியிருக்கிறாய்?” இது அவர் கேள்வி. இடத்தைச் சொன்னேன். “சரி, உன் பெட்டியை எடுத்துக்கொண்டு என் வீட்டிற்கு வந்து விடு” என்றார். “இல்லை, அது உங்களுக்கு சிரமமாக இருக்கும். இருக்கும் இடத்திலேயே அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்கிறேன்” என்றேன். “சிரமம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நான். அதைச் சொல்ல நீ யார்?” என்று அவர் கர்ஜித்தார். அப்போதும் நான் தயங்கினேன். அப்போது கல்லூரி முடிந்து வந்த அவர் மூத்த பையனிடம் , இவன் பெட்டி இந்த இடத்தில் இருக்கிறது. அங்கு போய் அதை எடுத்துக்கொண்டு நம்மகத்தில் கொண்டுபோய் வைத்துவிடு என்று கூறி, எனக்கு இடம் கொடுத்தவரையும் தொலைபேசியில் அழைத்து விவரம் சொல்லி விட்டார். ஆக, எனக்கு அவர் வீட்டிற்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் ஆயிற்று. ஆனால், அது இறைவன் எனக்கு அந்த இள வயதில் கொடுத்த மகா பெரிய பாக்யம் என்பது அந்த நொடியில் தெரியவில்லை. அவர்தான் பெருந்தன்மையோடு எனக்கு இடம் கொடுத்தார் என்று நினைத்துச் சென்ற எனக்கு , வீட்டின் உள்ளே நுழைந்த நொடி முதல் தன் மூத்த பையனாகக் கருதி நடத்திய ஒரு அருமையான அன்னை, ஏதோ அந்த வீட்டிலேயே பிறந்து அவர்களுடனேயே வாழ்ந்தவன்போல் தன்னை சொந்த சகோதரனாக நடத்திய நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் என என்னைப் பாச மழையில் நனைத்த ஒரு குடும்பம் உறவான பெரிய பேறு ஆண்டவன் அளித்தது. இரண்டு மாதங்கள்தான் அங்கிருந்தேன். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை அந்தக் குடும்பம் என்மீது மாறாத பிரியம் காட்டி வருகிறது இன்னொரு பாக்யம். அவர்கள் மட்டுமல்ல, வீட்டிற்கு வந்த மருமகன்கள், மருமகள்கள் என எல்லோரும் ஒரே மாதிரி நடப்பது கற்பனைகூடப் பண்ணிப் பார்க்க முடியாத அதிசயம். அந்த மாமனிதர் விண்ணுலகம் சென்று 40 ஆண்டுகள் கழித்து அவரது புதல்வர்கள் அவரைப் பற்றி ஒரு அருமையான ஆவணப்படம் தயாரித்து அழகான விழாவாக நடத்தி சமீபத்தில் வெளியிட்டார்கள். ஸ்ரீமத் ஆண்டவன் திருப்புல்லாணி விஜயம் தொடர்பான காரியங்களாலும், சற்றே பாதித்த உடல்நிலையாலும் அந்த அருமையான சந்தர்ப்பத்தில் விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் என் மனைவி மட்டும் செல்லும் துர்பாக்யம் எனக்கு. விழாவில் வழங்கிய குறுந்தட்டை நேற்றுத்தான் பார்த்தேன். வாழ்வாங்கு வாழ்ந்த தந்தைக்கு இவ்வளவு சிறப்பாக ஒரு மரியாதையைச் செய்தவர்கள் விரல் விட்டு எண்ணும்படியே இருக்கும். அவர்களில்கூட இப்படிக் காலமெல்லாம் நிலைத்து பின்னாளில் வருவோர்கூட இவர் சிறப்பைப் புரிந்து கொள்ளும் வகையில் இப்படி ஒரு குறுந்தட்டை மூலம் ஒரு ஆவணப் படத்தைத் தயாரித்தவர் யாருமில்லை. இந்தக் குடும்பத்துடன் உறவு ஏற்பட என்ன தவம் செய்தேனோ என்று நொடிக்கு நொடி வியந்து கொண்டே இருக்கிறேன்.
யார் அவர்? இன்று ஊரெல்லாம் பாரதி பாடல்களை உற்சாகமாகப் பாடி வருகிறோமே அந்த பாரதி பாடல்கள் திரு ஏ.வி. எம். செட்டியாரின் தனி உடமையாக இருந்ததைப் போராடிப் பெற்று தேச உடமையாக மாற்ற வழி கண்டவர். பாரதியாரின் துணைவியார் உடல் நலம் குன்றியிருந்த கடைசி மூன்று ஆண்டுகளிலும் தன் சொந்தத் தாயைப் போல பாவித்து உடன் இருந்து , அவர் தன் மடிமீது தலைவைத்து உயிர் துறந்த பாக்யம் பெற்றவர். அக்ரஹாரத்து அதிசயம் என்று திரு அண்ணாவால் பாரட்டப் பட்டவர். பாரதிதாசனின் பேரன்புக்குப் பாத்தியப்பட்டவர். வாய் திறந்தால் கவிதை மழை காளமேகம் எனப் பொழியும் ஆற்றல் படைத்தவர். பல சிற்றிதழ்களுக்கு ஆசிரியராயிருந்து பின்னாளில் “சிவாஜி” என்ற சிறப்பான மாத இதழை நடத்தியவர். சுஜாதா போன்ற பிரபலங்களின் முதல் படைப்புகளெல்லாம் இவர் இதழில் வந்தவையே. அவர்தான்
திருலோக சீதாராம் என்ற மாபுருடர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக