செவ்வாய், 7 ஜூன், 2016

இராம நாடகம் -- பாதுகா பட்டாபிஷேகம்

|| ஸ்ரீ:||

இராம நாடகம்

பாதுகா பட்டாபிஷேகம்

அங்கம் -- 1

முதற்களம்

இடம் : அயோத்தி அரசிருக்கை மண்டபம்

காலம் : காலை

பாத்திரங்கள் :-- தசரதர், வசிஷ்டர், வாமதேவர், சுமந்திரர், மந்திரபாலர், அசோகர், அர்த்த சாதகர், சித்தார்த்தர், விஜயர், ஜயந்தர், திருஷ்டி முதலிய மந்திரிகள், சேனாதிபதிகள், சிற்றரசர், பிரபுக்கள், நகரமாந்தர், இராமர், சேவகர் முதலிய மற்றையோர்

(தசரதர், சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார். வசிஷ்டர், வாமதேவர் இருவரும் சக்கரவர்த்தியின் ஆசனத்துக்குச் சமத்துவமான பீடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். மந்திரிகள், சேனாதிபதிகள் முதலியோர் சக்கரவர்த்தியைச் சூழ்ந்து தத்தம் அந்தஸ்துக்கேற்றபடி ஆசனங்களில் வீற்றிருக்கின்றார்கள். நகர மாந்தரனைவரும் நின்று கொண்டிருக்கின்றனர். தசரதர் சற்றே கவலையுடன் சபையோரையெல்லாம் நோக்கி)

தசரதர்:--

ஈரே ழுலகு மொருகோ லோச்சினும்
வாழ்வு குறித்தநாள் தாழ்வினை யூட்டும்
ஊழ்வழிச் சுழல்வதிப் பிறவி யாகலின்
இதனை யொழித்தே இனிய முத்திப்
பதம்பெற வேண்டியிம் மணிமுடி துறந்து
மாதவர் வதியும் கானகமுற் றாங்கவர்
அடிமுடி சூடுவ தகத்திற்
கருதினேன் அடியேன் பெரிதும் விழைந்தே.

மகரிஷிகளே, மந்திரிகளே, மகா ஜனங்களே, இப்பொழுது நான் அதிமுக்கியமான ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன். எல்லோரும் அன்புடன் கேட்டு உங்கள் அபிப்பிராயத்தை வெளியிட வேண்டும். சூரிய குலத்து என் முன்னோர்களெல்லாம் இந்த இராஜ்ஜியத்தை மனுமுறை தவறாமல் செங்கோல் செலுத்தி வந்தனர். நானும் அனேக வருஷங்களாக இறைவன் திருவருளாலும், உங்கள் உதவியாலும், செங்கோல் கோணாது அரசு செலுத்தி வந்தேன். சகல சற்குணங்களும், பல பராக்கிரமும், போரில் ஒருவராலும் வெல்லப்படாத தன்மையும், உலகத்தைக் காப்பாற்றும் வல்லமையும் பொருந்திய லோகபாலகர்கள் போன்ற புத்திரர்களையும் பெற்றுள்ளேன். ஆனால் எத்தனை காலம் உயிரோடிருந்தாலும் என்றைக்காவது ஒரு நாள் முடிசார்ந்த மன்னரும் ஒரு பிடி சாம்பராவ ரென்பது நிச்சயம். மேலும் இப்பிறவி விதிவழிச்சென்று பல வாதனைகளைத் தருவ தாகும். இவ்விதியின் வலிவால் வாழ்விற் கென்று மக்கள் குறித்து வைத்த நாள் தாழ்நாளாக மாறிவிடும். பதினான்குலகங்களையும் ஒருகுடைக் கீழ் ஆண்டாலும், விதிக்குத் தப்புவதரிது. ஆதலால் இவ்விதி வசப்பட்டுச் சுழல்கின்ற இப்பிறவி நோய் தீர்ந்து பேரின்பத்தைத் தருவதாகிய முத்திப் பேறு பெற விரும்புகிறேன். அதற்காக இவ்வரசைத் துறந்து தவசிகள் வசிக்கும் காட்டிற் சென்று அவர்கள் திருவடியைத் தலையில் தாங்கி அவர்களுக்கு சிஷ்ருஷை செய்து உய்யவேண்டு மென்றெண்ணியுள்ளேன்.

வசிஷ்டர்:- சக்கரவர்த்தீ, தாம் சொல்லுவ தனைத்தும் நியாயமே. ஆயினும் நம் நகர மாந்தர் தங்கள் மீதுள்ள அன்பினால் இன்னும் சிலகாலம் தாங்கள் அரசாட்சி செய்ய வேண்டுமென்றே விரும்புவார்கள்.

நகரமாந்தர்:-- ஆம், ஆம், எமது விருப்பம் அதுவே.

தசரதர்:-- ஐயன்மீர்! அறுபதினாயிர வருஷமாக நான் சுமந்து வந்த இப்பூபாரத்தை இன்னும் என்னையே சுமக்கச் சொல்வது நியாயமல்ல. எனக்கோ மூப்பு வந்து விட்டது. மூப்பு வந்தடைந்ததும் என் முன்னோர்கள் தங்கள் மக்களுக்கு முடிசூட்டித் தாங்கள் அயர்ந்திருந்தனர். அங்ஙனமே யானும் சிறிது அயர வேண்டுமன்றோ? அல்லாமலும் எத்தனையோ பகைவர்களை வென்ற நான் கபமாதி பகைவருக்கு அடங்கி எத்தனை நாள் வாழ்வது? கைகேசி சாரத்தியஞ் செய்ய எத்திக்கும் தேரைச் செலுத்திய நான், மனம் சாரத்தியஞ் செய்யும் ஐம்புலத்தேரைச் செலுத்தல் அருமையா? பிணி மூப்பற்று வாழ்தற்குரிய சொர்க்க பதவியை என் மனம் நாடுகிறது. யுத்தகளத்தில் உயிர் துறந்தோர், ஞான நெறி நின்று தவஞ் செய்தோர், உலக வாழ்க்கையில் மனம் பற்றாதவர் ஆகிய இவர்களுக்கே சொர்க்க பதவி சொந்தமாகும். ஆதலால் நான் ஞான நெறிநின்று தவஞ்செய்து சொர்க்கமுற வேண்டுமென்னும் விருப்புடையேன். மாந்தர்க்கு மரணம் இன்ன காலத்தில் எய்துமென்பது தெரியாது. “சென்ற நாளெல்லாம் சிறுவிரல் வைத்தெண்ணலாம்; நின்றநாள் யார்க்கும் உணர்வரிது’’ இந்த அநித்தியமாகிய பிறவிப் பெருங்கடலை நீந்தவேண்டுமானால், துறவாகிய தெப்பத்தைவிட வேறு கதியில்லை. பிறவியைக் கடக்கத் துறவு வேண்டும். தீவினை கடக்கச் செய்தவம் வேண்டும் என்பார்கள். அன்றியும்,

மைந்தரை யின்மையின் வரம்பில் காலமும்
நொந்தன னிராமனென் னோவை நீக்குவான்
வந்தன னினியவன் வருந்த யான்பிழைத்
துய்ந்தனன் போவதோருறுதி யெண்ணினேன்.

எனக்குக் கிரம காலத்தில் புத்திரப் பேறில்லாமையால் அளவிறந்த காலம் ஆயுளும் ஆட்சியும் வளர்ந்து விட்டது. இனி அவ்விதம் அவை வளர நியாயமில்லை. இராமன் பிறந்து என் மனக்குறையை மாற்றி விட்டான். ஆதலால் இனி இப்பூபாரத்தை அவன்மீது சுமத்தி நான் உய்யும் வழிதேடக் கருதியுள்ளேன். இவ்வகை செய்யத் தவறினால்,

இறந்திலன் செருக்களத் திராமன் றாதைதான்
அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும்
துறந்தில னென்பதோர் சொல்லுண் டானபின்
பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ?

இராமன் தந்தை யுத்தகளத்திலும் மாளவில்லை: மூப்படைந்த பிறகு உலகவாழ்வைத் துறந்து செல்லவுமில்லை என்றல்லோ மாந்தர் தூற்றுவர்? அவ்வாறான பழிச் சொல்லைத் தாங்கிய பிறகு என் பிறவி இருந்தாவதென்ன?

(சபையோரனைவரும் வசிட்டரைப் பார்க்கின்றனர்)

வசிஷ்டர்:-- சக்க்ரவர்த்தீ! இந்தச் சபையிலுள்ளவர்களின் கருத்தையெல்லாம் நான் சொல்லுகிறேன். நீர் இராமச்சந்திர னிடத்து மிகுந்த அன்புடையவர். உமக்கு மட்டுமல்ல, உலகத்தில் எல்லா ஜனங்களுக்கும் அவன் இனியவன். உம்முடைய முன்னோர்கள் அரசு செலுத்திப் பெருமை பெற்றனர் என்பது உண்மை. ஆனால் இராமனைப்போல ஒரு மகனைப் பெற பாக்கியஞ் செய்தவரெவர்? நீரோ மகா கல்விமான். நீர் எண்ணிய எண்ணம் ஒருவராலும் ஆக்ஷேபிக்கக் கூடியதல்ல. க்ஷத்திரிய தர்மமும் அதுவேயாகும்.

தசரதர்:-- முனிசிரேஷ்ட! என் எண்ணத்தைத் தாங்கள் உள்ளவாறு அறிந்து வெளியிட்டீர்கள், நகரமாந்தரும் இதை ஒப்புவார்களென் றெண்ணுகிறேன்.

பெருமக னென்வயிற் பிறக்கச் சீதையாந்
திருமகண் மணவினை தெரியக் கண்டயான்
அருமக ணிறைகுணத் தவனி மாதெனு
மொருமகண் மணமுங்கண்டு வப்ப தாயினேன்.

உலகமெல்லாம் புகழுதற்குரிய அரும் பெருங் குணவானாகிய ஸ்ரீராமனைப் புத்திரனாகப் பெறப் பெற்றேன். அவன் குணங் களுக்கேற்ற குலக்கொடியாகிய சீதையை அவனுக்கு மணம் புரிவித்தும் அதை என் கண்கள் கண்டு களிப்புறவும் பெற்றேன். அக்குல மகளை மணந்த அவனுக்கு இந்நில மகளையும் மணஞ் செய்து பார்த்து மகிழ மிகவும் விரும்புகிறேன்.

ஆதலா லிராமனுக் கரசை நல்கியிப்
பேதைமை தாய்வரு பிறப்பை நீக்குற
மாதவந் தொடங்குவான் வனத்தை நண்ணுவேற்
கியாதுநுங் கருத்தென அறிய வேண்டுவல்.

மகுடஞ் சூட்டிப்பார்த்து விட்டு நான், அறியாமையாற் சஞ்சலந் தருவதாகிய இப்பிறவிப் பிணிதீரக் காட்டிற் சென்று தவஞ்செய்யக் கருதியுள்ளேன். அதற்குச் சபையோர் சம்மதத்தை அறிய விரும்புகிறேன்.

நகரமாந்தர் -- (எல்லோரும் ஒரு குரலாய்) ஸ்ரீராமருக்கு மகுடாபிஷேகஞ் செய்வதில் எங்களனைவருக்கும் சந்தோஷமே! சக்கரவர்த்தி தமது விருப்பப்படி தவஞ் செய்யச் செல்லலாம்.

சுமந்திரர்:-- சக்கரவர்த்தீ! இராமச்சந்திரருக்கு முடி சூட்டுவதைக் கேட்டுச் சகல ஜனங்களும் பெருமகிழ்ச்சி யடைகின்றனர். கொஞ்சமும் தாமதியாமல் இராமச்சந்திரர் சந்திரவட்டக் குடையின் கீழ்த் தனியரசு செலுத்துங் காட்சியினை நாளையே எதிர்பார்க்கின்றனர். ஆனால் சக்கரவர்த்தியவர்கள் புத்திர சிகாமணிக்கு மணிமகுடஞ் சூட்டிக் கொஞ்சநாள் உடனிருந்தால் சகலருக்கும் திருப்தியா யிருக்கும்.

நகரமாந்தர்:-- (எல்லோரும் ஒரு குரலாய்) ஆம், ஆம், ஆம்.

தசரதர் :-- நான் பேசி வாய் மூடுமுன்னே யோசியாமல் எல்லோரும் ஒருமிக்க இராமனுடைய அரசாட்சியை விரும்புகிறீர்கள். இதனால் என் மனத்தில் பல சந்தேகங்கள் பிறக்கின்றன. நான் செவ்வையாய் அரசு செலுத்தி வந்திருக்க என் ஆளுகையில் உங்களுக்கு உண்டான அதிருப்தி என்ன? நன்றாக ஆலோசித்து நீங்கள் உங்கள் கருத்தை வெளியிட்டதாகப் புலப்படவில்லை. என் அரசாட்சியில் ஏதும் குறை கண்டிருந்தாலல்லவோ நீங்கள் இராமனுக்கு முடி சூட்டுவதில் துரிதமுள்ளவர்களா யிருக்கலாம். உண்மையை வெளியிடுங்கள்.

தொடரும்………………

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக