ஞாயிறு, 5 ஜூன், 2016

பாதுகா பட்டாபிஷேகம்

சில வருடங்களுக்கு முன் திருவல்லிக்கேணி நடைபாதையில் நான் கண்டெடுத்த ஒரு பழைய புத்தகம் “  இராம நாடகம் – பாதுகா பட்டாபிஷேகம்”. நூலின் அட்டையோ எழுதியவர், பதிப்பாளர் பற்றி அறிய உதவும் முகப்புப் பக்கங்களோ இல்லாமல் இருந்த அந்த நூல் நல்ல வேளையாக ஆரம்பம் முதல் கடைசிப் பக்கம் வரை இருந்தது. ஆனால் இராமனைப் பற்றிய நூல் என்பதாலோ என்னவோ இராம பாணப் பூச்சி ஒரு பக்கம் விடாமல் எல்லாப் பக்கங்களையும் “அழகாகச் சுவைத்த” அடையாளமாக நூல் முழுவதும் துளைகள்.
அந்த நாள் நடையென்று சொல்லிட முடியாதபடி நல்ல தமிழில் அங்கங்கே கம்பனின் பாடல்களைச் சொல்லி , தசரதன் இராமனுக்கு மகுடம் சூட்டத் தீர்மானிப்பதில் ஆரம்பித்து, இராமனை பரதன் காட்டில் சந்தித்து இராமனின் பாதுகைகளைப் பெற்று வந்து அவற்றுக்குப் பட்டாபிஷேகம் செய்யும்வரை கதாமாந்தரைக் கொண்டு அழகான நாடகமாக எழுதப்பட்ட அருமையான நூல் அது. எழுதியவர்தான் யாரென்று தெரியவில்லை என்றால், அவர் இராமாயணத்தை முழுவதுமே நாடகமாக எழுதி அதன் ஒரு பகுதிதான் இந்த பாதுகா பட்டாபிஷேகமா அல்லது இதை மட்டும்தான் எழுதினாரா என்பதும் தெரியவில்லை என்பது வருத்தமான ஒன்று.  இந்நூலின் தலைப்பு  இராமநாடகம் என்று மேலும் அதன்கீழ் பாதுகா பட்டாபிஷேகம் என்றிருப்பதும் என்னுடைய சந்தேகத்தின் காரணம்.
நான் மட்டுமே அனுபவித்ததை , என்னைப்போலவே பழைய நூல்களில் ஆர்வமுள்ள ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் ஸ்ரீ டி.ஸி. ஸ்ரீநிவாசனிடம் பகிர்ந்து கொண்டேன். சில மாதங்களாக அவர் இதழிலும் இந்நூல் இப்போது வந்துகொண்டிருக்கிறது.
ஸ்கான் செய்து பிடிஎப் ஆக இணையத்தில் ஏற்றலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், இராமபாணப் பூச்சிகள் “கைங்கர்ய”த்தால் அது சரியாக வரவில்லை. கூகுளின் ஓசிஆர் கூடக் கைகொடுக்கவில்லை. அதனால் நூலைத் தட்டச்சிட ஆரம்பித்து, இப்போது கிட்டத்தட்ட 80% முடித்திருக்கிறேன். ஸ்ரீஹயக்ரீவ சேவக இதழ் மூலம் படிப்பவர்கள் எண்ணிக்கை குறைவு, பல்வேறு காரணங்களால் அந்த இதழ் மாதாமாதம் வெளியாவதிலும் பல இடையூறுகள் என்ற நிலையில் பலரும் இந்த இனிமையான தமிழ் நாடகத்தை ரசிக்கலாம்  என்ற நம்பிக்கையுடன் இங்கு ஓரிரு நாள்களில் பகுதி பகுதியாகப் பதியலாம் என நினைக்கிறேன். சில சீன்கள் ஓரிரு பக்கங்களில் முடியும். வேறு சில 50 பக்கங்களுக்கு மேலும் நீளும். (ஸ்ரீரங்கநாத பாதுகா அளவில்). எனவே பிரித்துத்தான் பகிர வேண்டியிருக்கிறது. சிறிது சிறிதாகப் படிக்கப் பொறுமை உள்ளவர்கள் இங்கே படிக்கலாம். மொத்தமாகப் படிக்க நினைப்பவர்கள் முடிவில் பிடிஎப் ஆக இணையத்தில் இதை சேமிக்கும்போது படித்துக் கொள்ளலாம்.
எழுதியவர் யாரென்று தெரியாவிட்டாலும், அவர் முனித்ரய சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த வடகலை வைணவராயிருக்கலாம் என ஊகிக்கும் வகையில் இந்நூலில் உள்ள ஒரு படத்தில் அழகாக முனித்ரய திருமண்காப்பு விளங்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக